20 செப்டம்பர் 2011

புதியபாலிசி..!

எதிர்பாராத இழப்புகள் ஏற்பட்டால்,அது பொருளாக இருந்தாலும் சரி,உயிராக இருந்தாலும் சரி..,மிகக் குறைந்த பிரீமியத்தில் அதிகமான பலன்களை நமது நிறுவனம்தான் அளிக்கிறது.ஆனாலும் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு கிட்டவில்லையே..ஏன்.? என்ற கேள்வியை தலைமை நிர்வாகியான சரத்சக்சேனா கேட்டபோது என்ன பதில் சொல்லலாம் என்று மற்ற அதிகாரிகள் யோசித்துக் கொண்டிருந்தனர்.

புதடில்லியின் மையப்பகுதியில் இயங்கிவந்த அந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின்,மாநில நிர்வாகிகளுக்கான அவசரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.குழந்தைகள் முதல் ஓய்வூதியம் பெறுவோர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் மட்டுமின்றி,வாகனங்களுக்கான இன்சூரன்ஸையும் நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்தி ஒரு ஆண்டு ஆகியும் எதிர்பார்த்த இலக்கை எட்டமுடியாமல் போனதன் காரணத்தை அறிந்து கொள்ளவே இந்த அவசரக்கூட்டம்.

அறிவிக்கப்பட்ட கவர்ச்சிகரமான சலுகைகள் போதவில்லை..,அல்லது ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லை..மக்களின் வருவாய் குறைந்து விட்டது..
இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தை மக்கள் உணரவில்லை.இவற்றில் எதைச் சொல்வது..?,மாநில நிர்வாகிகள் ஆளுக்கொரு காரணத்தை சொல்லியும்,அந்த தலைமை நிர்வாகி ஏற்றுக் கொள்வதாயில்லை..

ஒருவர் மட்டும் புதியதாக பாலிஸி ஒன்றை அறிமுகப்படுத்தலாம் என்று சொன்னபோது,தலைமை நிர்வாகி முகம் சுழித்தார். ஏற்கனவே இருப்பவை போதாதா..?.
போதாது இதுபற்றி முதலில் நாம் தனியாகப் பேசவேண்டும்..என்ற அவரின் கோரிக்கையை,தட்டமுடியவில்லை.எப்படியாவது இலக்கை எட்டவேண்டுமே..!

பின்னர் இருதினங்கள் கழித்து,இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலங்கள்,
வுணிகவளாகங்கள் என ஐந்து இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில்,இருபதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.ஏராளமான வாகனங்களும் பொருட்களும் நாசமாயின.
அடுத்த நாள் அனைத்து செய்தித்தாள்களிலும் முழுப்பக்கமாக இது குறித்து வந்த செய்திகளின் அருகிலேயே,பயங்கரவாத இன்சூரன்ஸ் என்ற அடைமொழியோடு புதியபாலிசி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்ட செய்தியும் பிரசுரமாயிருந்தது.இதில் கட்டப்படும் தொகைக்கு ஏற்ப உயிரிழப்பு,ஊனம்,வாகன சேதத்தின் அளவுக்கேற்ப தொகை வழங்கப்படும் என்று உபரித்தகவல் வேறு.

-பொள்ளாச்சி அபி-