11 செப்டம்பர் 2024

பறையென அதிரும் சொற்கள்

 நன்றி தோழர்.கருக்கல் சுரேஷ்வரன்  

Sureshwaran Koothuppattarai 

----------

பறையென அதிரும் சொற்கள்

..........................


-சுரேஷ்வரன்-


அனைவருக்கும் வணக்கம். இது இரண்டாவது அமர்வு. முதல் அமர்வு முடிந்து மாதம் ஒன்றுகூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் அடுத்த அமர்வா? ஆம். கோவை மற்றும் பொள்ளாச்சியில் நிகழும் நமது தோழமை அமைப்புகளின் இலக்கியத் தொடர் அமர்வுகளைக் கருத்தில்கொண்டே, இரண்டாம் ஞாயிறை நமக்கான நாளாக நிச்சயித்திருக்கிறோம். வருகை தந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் மகிழ்வும். 

………………………………………………………………………

’’பாட்டையா!’’ நம் தோழர் பொள்ளாச்சி அபி அவர்களது சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பில் இடம்பெற்றிருக்கிற சிறுகதைகள் குறித்துப் பேசுவதற்கு வாய்ப்பளித்திருக்கிற, தீ இனிது இலக்கிய இயக்கத்தின் சோழநிலாவிற்கும், களிறு வெளியீட்டின் நிவேதிதா சுரேஷ்வரனிற்கும் எனது தனிப்பட்ட அன்பும் நன்றியும். இனி…

……………………………………………………………………

’’கதையின் மையக்கருத்துகள், வாசிப்பவரின் ஏற்புக்கும் மறுப்புக்கும் உரியது என்றாலும், கதாசிரியரின் சுதந்திரமான கண்ணோட்டத்திற்கு சிறுகதை எவ்வளவு பெரிய இடமானாலும் தருகிறது’’ என்று தனது முன்னுரையில், சிறுகதை குறித்தத் தனது புரிதலை தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.  மிக நன்று.

…………………………………………………………………

2023-ல், புதுச்சேரி ’’ஒரு துளிக் கவிதை’’-யின் வெளியீடாக, முதல் பதிப்பு கண்ட, ஆறு கதைகள் உள்ளடங்கியிருக்கிற ஒரு சிறுகதைத் தொகுப்பு… பாட்டையா ! 


நமது சூழலில், சிறுகதை என்கிற இவ்வடிவம் தனது நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டது. தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை எது? அதனை எழுதியது யார்? என்பதனை நாம் அறிவோம். அறிவோம்தானே?


1915-ம் ஆண்டு, விவேகபோதினியில் வ.வே.சு ஐயர், அவரது மனைவி பாக்கிய லட்சுமி அம்மாளின் பெயரில் எழுதி, வெளிவந்தது குளத்தங்கரை அரசமரம். அதுதான் முதலா? இல்லை…  ஷெல்லிதாஸ் என்கிற புனைப்பெயரில், சக்கரவர்த்தினியில், 1905-ம் ஆண்டிலேயே பாரதி எழுதிய ’துளசி பாயி எனும் ரஜபுத்ர கன்னிகையின் சரித்திரம்’ முதலா? என்கிற விவாதம், எது முதல் சிறுகதை என்கிறதொரு அறுதித் தீர்மானத்திற்கு வரும் முகமாக இருவேறு தரப்புகளில் இருக்கத்தான் செய்கிறது.

போலவே, எழுதலாம்… கவனம் பெற, பிரசுரிக்க, இதழ் வேண்டுமே? சிறுகதைக்கெனவே வெளிவந்த மணிக்கொடி துவங்கி, இன்றைய உயிர் எழுத்து வரைக்குமான சிற்றிதழ்களில் வெளிவந்திருக்கிற சிறுகதைப் படைப்புகளின் எண்ணிக்கை உள்ளபடி கணக்கிடமுடியாதவொன்று. 


’நல்ல சிறுகதை எழுத்து அரிதாகிவருகிறது. இப்படியேபோனால், இதழை நிறுத்திவிடுவதைத்தவிர வேறுவழியில்லை’ என்று அறிவித்திருக்கிறது உயிர் எழுத்து. ஓரிரு நாட்களுக்குமுன் அப்படியானதொரு பதிவை முகநூலில் பார்த்தேன். நூற்றாண்டுக் கொண்டாட்டம் முடிந்துவிட்டிருக்கிற இவ்வேளையில், இப்படியான ஒரு நிலவரம்… என்ன சொல்ல? 


’பாட்டையா’ போன்ற சிறுகதையொன்றைப் பார்க்க, சற்று கலக்கம் குறைகிறது தோழர்களே! பாட்டையா… கொண்டாடப்பட வேண்டிய ஒரு சிறுகதை. சந்தேகமேயில்லை. உருவ, உள்ளடக்க ஓர்மை பாட்டையாவில் கைகூடியிருக்கிறது. அபி நம் பொள்ளாச்சிக்காரர் என்பதில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். 


’’லேய் முத்துவீரா, உங்க ஆளுங்களைக் கூட்டிக்கிட்டு, பெரிய பன்னாடி வீட்டுக்கு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வந்துடு. ஆட்டத்துக்கு நம்ம பெருசு பாட்டையாகிட்டேயும் சொல்லிட்டு வந்துட்டேன். இப்ப மணி அஞ்சாச்சு. ஏழு மணிக்கெல்லாம் எழவு விசாரிக்க ஆளுக வந்துடுவாங்கடே… அதுக்கு முன்னாடி துடும்பு, ஜமாப்பு செட்டு எல்லாம் வந்து சேந்தாகனும். அங்க வந்ததுக்கப்புறம் மத்த சமாச்சாரமெல்லாம் பாத்துக்கலாம். என்ன புரிஞ்சுதா…?’’


நமக்கும் புரிகிறது. முத்துவீரன் யார்? பாட்டையா யார்? என்று. சாவுக்கொட்டு அடிப்பவன் முத்துவீரன். கொட்டுக்கு ஆடுபவர் பாட்டையா! அநேகமாக அவ்விருவரும்தான் கதையின் பிரதானமான பாத்திரங்களாக இருக்கவேண்டும். கொட்டும் ஆட்டமும் ஒருசேர இருக்க, அப்படி நம்மை எண்ணவைக்கிறது. முதல் பத்தியிலேயே பிரதானமான கதாபாத்திரங்களின் அறிமுகம். பிரமாதம்!


பாத்திரங்கள் அறிமுகத்தை அடுத்து, பாத்திரங்களுக்கிடையிலான உறவு என்ன என்பது விளக்கமாகவேண்டும். திரைக்கதை வடிவமைப்பு அப்படித்தான் உருக்கொள்ளும். பாட்டையா… சிறுகதை என்கிற வடிவத்திற்கும் சரி, குறும்படம் என்கிற வடிவத்திற்கும் சரி, மிகச்சிறப்பாகப் பொருந்திவருகிற ஒரு சிறுகதை. 


’’ஏம்பா, எத்தினி ஆளு வந்திருக்கீங்க?’’ 


’’பத்து பேரு சாமி’’


கணேசன் சொன்னதும்… (கணேசன்… முத்துவீரனின் நண்பன்)


’’சரி இருங்க. காப்பித் தண்ணி எடுத்துட்டு வரேன். குடிச்சுப்புட்டு சட்டுபுட்டுன்னு ஆரம்பியுங்க’’ என்கிறார் மருத்துவர் கருப்பன். 


அந்த கேப்புலெ, காய்ந்த தென்னங்கீற்றுகளையும் மட்டைகளையும் எடுத்துத் தீ மூட்டி, அவரவர் இசைக் கருவிகளைச் சூடுபடும்படிப் பிடித்து வாட்டத்துவங்குகிறார்கள்… முத்துவீரனும்தான்!


முத்துவீரன் வந்தாச்சு. கொட்டு ரெடியாகிட்டு இருக்கு. பாட்டையா…? இன்னும் வரலெ. பாட்டையாவைப் பற்றி நமக்கு வேறெதும் குறிப்பும் இல்லெ. 


’பாட்டையாவின் தலை எங்காவது தென்படுகிறதா? என நோட்டம் போட்டவாறே…’ இருக்கிறான் முத்துவீரன். 


நாமும் அவனோடு சேர்ந்து பாட்டையாவின் வருகையை எதிர்நோக்குகிறோம். 


இந்த இடத்துலெ ஒரு வாக்கியத்தெப் போடறார் அபி… 


’முத்துவீரனும் தனது பறையை வாட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு உள்ளேயும் வெஞ்சினம் கனன்று கொண்டுதான் இருந்தது.’


என்னது வெஞ்சினமா? இதென்னடா இது…! திக்குங்குது நமக்கு. அவங்க ரெண்டு பேருக்கும் இடையிலெ, என்ன பிரச்சனை? சினமல்ல… அது வெஞ்சினம்! ஏன் இந்த கொலெ வெறி? கேள்வி பொறியாப் பறக்கிறது நமக்குள். கதைக்குள் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறார் அபி. கதை சூடு பிடிக்கிறது.

இப்ப, ஒரு ப்ளாஸ் பேக்! 


சில மாதங்களுக்கு முன்பு பாட்டையாவின் பேத்தி செல்வியை ஒரு விஷேச வீட்டில்வைத்துப் பார்க்கிறான் முத்துவீரன். ’கட்டுனா அவளத்தான் கட்டனும்’-னு அவனுக்கு. 


இட்டேரிலெ ஆடு மேய்த்துக் கொண்டிருக்கா செல்வி. நேராப் போயி கேட்டர்றான். ’’கட்டிக்க சம்மதமா?’-’ன்னு. 


குறும்படம்னு இல்லெ, ப்யூட்சர் ப்லிம்லயே வெக்கலாம் அந்த சீனெ. 


’’நீ குடிப்பியா?’’


எடுத்த எடுப்புலயே அவள் அப்படித்தான் கேக்கறா. நம்மாளு வெலவெலுத்துப்போறான். 


’’வழக்கமா குடிக்கறதில்லெ. எப்பவாவதுதான்…’’ 


இழுக்கறான்… 


’’நீ இவ்ளோ தயங்குனா எப்படி… நல்லா பொய் சொல்லுவேன்னு தோணுது… எப்பவாவது குடிக்கறதெ, எப்பவுமே குடிக்காமெ இருந்தா என்னவாம்…?’’ 


அப்படீங்கறா. அதற்குப்புறமா சொல்றா பாருங்க, அதுதான் டச்!


’’கல்யாணத்துக்கு அப்புறம் குடிக்கறேன்னு தெரிஞ்சுது… அப்பவே அத்து வீசிட்டு வந்துருவேன்’’


கையில்  வைத்திருந்த கருக்கருவாளை கழுத்துக்கு நேரே வைத்து இடமிருந்து வலமாக அவள் அசைக்க, அவளுடைய தாலியை அறுத்து வீசுவதைவிட, இவன் கழுத்தை அறுத்து வீசி விடுவாள் என்றே தோன்றியது. 


படக்கென்று தனது இரு கைகளாலும் அவனது கழுத்தைப் பொத்திக்கொண்ட முத்துவீரன், 


’’அய்யோ… ஆத்தா..அப்படியெல்லாம் தப்புக்குப் போகமாட்டேன். நம்பு..’’ என்று அப்பாவியாய்ச் சொல்ல, செல்விக்கும் சிரிப்பு வந்துவிட்டது. 


ப்ரெஸ்சான சீன்! ஒர்க்கவுட் ஆகும். நேடியான கேள்விக்குத் திகைக்காமெ, கேள்வி கேட்டவனை திகைக்கவைக்கிறமாதிரி, அதேசமயம், சம்தத்தையும் மறைமுகமா சொல்லுகிற பவிசு… செல்வி நிக்கறா! அதுக்கப்பறம் அவ சொல்றா…


’’எங்க பாட்டையாதான் வூட்லெ பெரிய ஆளு. எதுவானாலும் அவருகிட்டே போயிப் பேசு’’


செல்வி மனசுக்குள்ள சம்மணம்போட்டு உக்கார்ந்துகொள்கிறாள். மரியாதை தெரிந்தவள். மனம்போற போக்குலெ போற ஆட்டை கட்டுக்குள் கொண்டுவருகிற செல்விக்கு, அவளது மனதின்மீதும் கட்டுப்பாடு இருக்கிறது. துணிச்சல் மிக்கவளாக, அதேவேளை, முறைமை அறிந்தவளாக, பக்குவமாகச் சூழலை எதிர்கொள்பவளாக  இருக்கிறாள் செல்வி. நச்சுன்னு நாலு பேச்சுலெ, ஓர் ஆளுமைகொண்டவளாக அவளை நம்முள் படியவிடுகிறார் அபி. 


ரைட்டு… பாட்டையாகிட்ட பேசி இருக்கான்… அவரு ஒத்துக்கலெ. அதான் இந்த வெஞ்சினம். நமக்கு இப்படித்தான் தோணும். ஆனா, அது அப்படியில்லெ. பின்னெ…?


சம்பவமே வேறெ… பக்கத்து ஊருலெ ஒரு பெரிய காரியம். ’’நல்ல காசு தருவாங்க, கிளம்புடா’’-ன்னு கணேசன் முத்துவீரனெக் கூட்டீட்டுப் போறான். சகாக்கலெல்லாம் அவங்கவுங்க இசைக் கருவிகளோட தயாரா இருக்காங்க. பெரிய வட்டம். வட்டத்துக்கு நடுவுலெ… பாட்டையா! 


பாட்டையாவோட என்ட்ரி இங்கதான், அவரோட அறிமுகம் இங்குதான் நிகழ்கிறது! 


’நடுவுலெ ஆறடி உயரத்தில் முண்டாசு பனியனுடனும், தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுடனும் பாட்டையா நின்றுகொண்டிருந்தார். எழுபத்தி ஆறு வயதுக்கேற்ப அவரது தலையும், அடர்ந்திருந்த மீசையும் தாடியும் தும்பைப் பூவாக நரைத்திருந்தது.’  


தோற்றத்தின் வர்ணனை. கதாபாத்திரம் நச்சுன்னு மனசுலெ போய் நிக்குது. 


’கால்களில் கனமான காற்சதங்கைகள். கையிலே ஒரு வெள்ளை ஈரிழைத் துண்டை இரண்டாக மடித்து, அதன் நடுவே பிடித்துக்கொண்டு, 


’’வட்டத்தை இன்னும் பெருசு பண்ணுங்க. நகாரி அடிக்கறவங்கெல்லாம் இக்கட்டாலெ வாங்க. தப்பு, பகலை அடிக்கறவங்கெல்லாம் இன்னும் மேக்கே போங்க. ஜால்ராவும் தமுறும் எங்கேப்பா? நீங்க ரெண்டு ஆளும் வந்து, இவங்களுக்கு நடுவாலே நில்லுங்க. உருட்டுக் குண்டா யாருப்பா அடிக்கறது? இங்க வா. இங்க நில்லு. ஊம்.. சீக்கிரம்.’’ ’


என்று கட்டளையிட்டுக் கொண்டிருக்காரு பாட்டையா. அவரது கட்டளைக் கேற்ப, அவரது வலது கையில் பிடித்திருந்த வெள்ளைத்துண்டு ஆடிக்கொண்டிருந்தது.


யோகி முதன் முறையாக கலீம் தாத்தாவெப் பாக்கறப்போ, பாகன் மணி அவரோட கையிலிருந்த துண்டாலெ, நிலத்துலெ, மண்ணுலெ படுத்துக்கிடந்த கும்கி கலீம் மேலெ ஒட்டிக்கிட்டிருந்த மண்ணே தட்டிக்கிட்டுருப்பாரு. அவரோட துண்டை கலீம் தன்னோட துதிக்கையாலெ பிடிக்கப் பார்க்கும். கலீமெ அதட்டிக்கிட்டே மண்ணைத் தட்டிவிட்டிக்கிட்டிருப்பாரு மணி அப்புப்பா. அவரை யோகி அப்படித்தான் அழைப்பான். கும்கி கலீம் யானையும் சரி, அதோட பாகன் மணி அவர்களும் சரி, இருவருமே யோகியைப் பொருத்தவரை தாத்தா முறைதான்! பாட்டையாவோட வெள்ளைத் துண்டு ஆடிக்கொண்டிருந்ததுங்கறெ வரிய வாசிக்கறப்ப… யோகி தன்னோட புத்தகத்துலெ பதிவு செய்திருந்த அந்தக் காட்சி எனக்கு நினைவுக்கு வருது.


பாட்டையாவை வட்டத்துக்கு நடுவுலெ நிறுத்திட்டு வந்திருக்கோம். மறுபடியும் அங்கபோவோம்…


’’பாட்டையா கையிலிருந்த வெள்ளைத் துண்டை தலைக்குமேல் தூக்கி அசைக்க, குழுவிலிருந்த அனைவரும் தங்கள் இசைக்கருவியின் நடுவில், வலதுகையிலிருந்த உருட்டுக் குச்சியால் அடிக்க ஒண்ணாம் அடி துவங்கிது. டன்டனுக்கு.. டன்டனுக்கு…


பாட்டையா தனது இடுப்பில் இடது கையை வைத்துக்கொண்டு, வலது கையால் வெள்ளைத் துண்டைத் தூக்கிச் சுழற்றியபடியே, மெதுவாக தாளத்திற்கேற்ப முன்னும் பின்னும் எட்டுவைத்து உடல் குலுங்காமல் ஆடத்துவங்கினார். அவரது அசைவிற்கேற்ப கால் சதங்கைகளும் பேசிக்கொண்டிருந்தன. பாட்டையாவின் அசைத்த துண்டுக்கேற்ப, ஒரேசமயத்தில், இரண்டானடிக்கு அனைவரும் தங்கள் அடியை மாற்றிக்கொண்டனர். 


துண்டின் அசைவு… நாவின் அசைவுபோல! அங்கவொரு கம்யூனிகேசன் நிகழுது. அசைவு வெறும் அசைவாயில்லை. அதில் அர்த்தம் இருக்கிறது. கட்டளை இருக்கிறது.   அடி மாற, அடிவைப்பும் மாறுகிறது. தாளம், தாளத்திற்கேற்ற ஆட்டம்! 


படன் டன் டன் டன்டனுக்கு… 


உற்சாகமாக இரண்டானடிக்கு தாளத்திற்கேற்ப ஆடத் துவங்கிய பாட்டையா, மெதுவாகத் தன்னைச் சுற்றி இசைத்துக்கொண்டிருந்தவர்களை நோட்டம்விட்டார். தான் தேடியதைக் கண்டுகொண்டவரைப்போல சட்டென்று ஆட்டத்தை நிறுத்தியவர், அனைவரையும் இசைப்பதை நிறுத்துமாறு சைகை காட்டிவிட்டு, நேராக முத்துவீரனிடம் சென்றார்.’’


ரைட்டு… ப்ரிக்ஸன்! ஏதோவொரு கான்ஃப்ளிக்ட் உருவாகப்போகுது… முரண் இல்லாமெ கதை எப்படி முன்னகரும்? கதை இன்னும் சூடு பிடிக்கிறது…


‘’அவனது கையிலிருந்த பறையை லேசாகத் தட்டிப்பார்த்தார். அது தொப் தொப்பென்று ஈனசுரத்தில் அரற்றியது. டேய்.. பலகையைக் காய்ச்சி வெக்கலையா? இங்க வந்தாவது காய்ச்சி வெச்சிருக்கலாமல்லெ. சும்மா கடனேன்னு அடிச்சுட்டு காசு வாங்கிட்டுப் போலாமின்னு வந்தாயா…?’’


பத்தாது…? வார்த்தை வந்துருச்சு. ’அடுத்து என்ன?’ மனம் சற்றே பதறுகிறது. 


‘’பறை இசைக்கும் ஓசை திடீரென்று நின்றுபோனவுடன் அனைவரின் கவனமும் பாட்டையாவின் மீது திரும்பியிருந்தது. சப்தமாகக் கேட்ட  அவரது கேள்வியால் முத்துவீரனுக்கு அவமானம் பிடுங்கித்தின்றது.’’


முத்துவீரன் இன்னும் வெடிக்கலெ. ஆனால், நெருப்பு, திரிக்குக் கிட்ட நெருங்கிடுச்சு… 


’’பாட்டையா இன்னும் அவரது வாயை மூடவில்லை. டேய், ‘பறை’-ன்னா, பேசுன்னு ஒரு அர்த்தமும். சொல்லுன்னு ஒரு அர்த்தமும் இருக்கு. உங்கிட்ட இருக்குற சேதியை ஊருக்கெல்லாம் ஒரே சமயத்துலெ சொல்றதுக்குதான் இந்தப் பறை அடிக்கிறது. அதைப்போயி சும்மா கடனேனு தொப்பு தொப்புன்னு அடிச்சுகிட்டு இருந்தியானா, அட முட்டாப்பயலே, உங்கிட்ட இருக்குற சேதியை உனக்கே ஒழுங்கா சொல்லத் தெரியலைன்னுதான் அர்த்தம். வெளங்குச்சா?’’


தோழர்களே, இங்க நமக்கான ஒரு செய்தியும் இருக்கு. சொல் ஒவ்வொன்றையும் உற்றுக் கவனியுங்க. ’’கடனேன்னு, தொப்பு தொப்புன்னு அடிச்சுகிட்டு இருந்தியானா, அட முட்டாப் பயலே, உங்கிட்ட இருக்கற சேதியை உனக்கே ஒழுங்கா சொல்லத் தெரியலைன்னுதான் அர்த்தம். வெளங்குச்சா?’’ 


’’மந்திரம்போல் சொல் வேண்டும்’’ என்று ஏன் பாரதி கேட்டான் ? சொல் ஒரு பெயர்ச்சொல்லாக… ’வார்த்தை’ என்று அர்த்தம். அதுவே, ஒரு வினைச் சொல்லாக… ’ஒன்றைச் சொல்’, ’சொல்லவேண்டியதைச் சொல்’ என்று அர்த்தம். உள்ளபடி, சொல் மந்திரமாவது அதை சொல்லும் விதத்தால்தான்! 


சொல்லும், அதை எப்படிச் சொல்லவேண்டும் என்பதும் எழுத்தைச் சார்ந்து இயங்கும் இலக்கியப் படைப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. கடனே என்று சொல்லைப் பிரயோகிப்பது, தொப்பு, தொப்புன்னு சத்தம் வர்றாப்லெதான்! சொல்லத் தெரியாதவனெ, சொல்லின் பதம் அறிந்தவன் கழுத்தோட பிடிச்சு தூக்கி நிறுத்திடுவான், பாட்டையாவைப்போல. விளங்கவேண்டியது விளங்கவேண்டும்தான் தோழர்களே! 


ஒரு சிறு ஒலிப் பிசகையும் கண்டறிந்துவிடக் கூடியவை பாட்டையாவின் செவிகள். அவ்வளவு நுட்பம்! என்ன சொல்றெ, அதெ எப்படிச் சொல்றெ ரெண்டும் முக்கியம்! பாட்டையா பட்டையெக் கிளப்பறார். 


’’அதற்குள் அவனது கையிலிருந்த சுண்டுக்குச்சிகளைப் பிடுங்கி நோட்டமிட்டவர், அதையும் தூர வீசிவிட்டார். ’இதென்னடா குச்சி..? வேப்ப மரத்திலே செஞ்ச பறையைத்தானே வெச்சிருக்க? அதுக்கு மூங்கில்லெ செஞ்ச சிம்புக் குச்சியும் சுண்டுக்குச்சியும் தான் நல்ல ஜோடி. அதேமாதிரி, அடிக்குச்சி பூவரம் மரத்திலே இருக்கணும். என்ன புரிஞ்சுதா…?


எல்லாக்கல்லும் சிற்பமாகாது. சிற்பம் செதுக்கத் தோதான கல் எதுவென்று சிற்பியே அறிவான். அனுபவம் வழி திரளும் அறிவு அது. இசைக்கருவிக்கு ஏற்ற மரம் எது? தோல் எதனுடையது? அதன் பக்குவம் எப்படி? அடிக்குச்சி எது? அந்தச் சேர்மானத்தில் எழும் சப்தம் இசையாகும் நுட்பம்… என்று ஒவ்வொன்றும்… தோழர்களே, கலை… காலத்தில் புரண்டு அனுபவத்தில் திளைத்து கண்டடையப்பட்டிருக்கிற ஒரு தேர்ச்சி!  


முழிக்காதே. போ. போயி… பகலையைக் காய்ச்சி சுதி பாத்துட்டு அப்புறமா வரிசைக்கு வா.’ என்று சொல்லியபடியே, அவனது தோளைத்தொட்டு வரிசையிலிருந்து லேசாக விலக்கிவிட்டார். மீண்டும் அடியும் ஆட்டமும் துவங்கியது.


லேசாக விலக்கிவிட்டார். சொல்ல வேண்டியதைச் சொல்லி, பொறுப்பற்றத்தனத்தைச் சுட்டிக்காட்டி, செய்யவேண்டியதை செய்துவிட்டு, திரும்ப வாவென்று பாட்டையா முத்துவீரனை வரிசையிலிருந்து லேசாக விலக்கிவிட்டார். 


லேசுப்பட்ட ஆளில்லை, பாட்டையா. எதனையும் லேசாக எடுத்துக்கொள்பவரும் அல்ல, பாட்டையா. அவர் ஓர் அசலான கலைஞன்!


அங்கிருந்த கூட்டம் மொத்தமும் தன்னைக் கேலியாகப் பார்க்கும்படி தன்னைக் குழுவிலிருந்து விலக்கிவிட்டது பெரும் அவமானமாக இருந்தது. பாட்டையாவை அவமானப்படுத்திவிடுவதென்றால் ஒரே நொடியில் தன்னால் செய்துவிட முடியும்தான். ஆனால், மனதிற்குள் செல்வி வந்து நின்று கொண்டு, ‘ஜாக்கிரதை’ என்று மிரட்டிக் கொண்டே இருந்தாள். அவளைக் காயப்படுத்தாமல் பாட்டையாவை பழிவாங்கவேண்டும். சரியான சந்தர்ப்பத்திற்காய் காத்திருக்கத்தான்வேண்டும்.’’


எதிரியைச் சம்பாதிக்க ஒன்னும் செய்யவேண்டும். நல்லதச் சொன்னாப்போதும். வெஞ்சினம் கொண்டு காத்திருக்கும் முத்துவீரனுக்கு அவன் எதிர் பார்த்த சந்தர்ப்பம் இதோ கிடைத்துவிட்டது. என்ன செய்யப்போகிறான்…?


வாசியுங்கள். முழுவதுமாக நானே சொல்லிவிட்டால், நீங்கள் வாசிப்பது எப்போது? புத்தகத்தை வாங்கி வாசிப்பது என்பதும், ஒருவகையில், எழுத்தாளனைக் கொண்டாடுவதுதான். பாட்டையா விற்பனைக்கு இருக்கிறது. அவசியம் வாங்கி வாசியுங்கள். இந்த ஒரு கதைக்காகவே இந்த புத்தகத்தை நீங்கள் வாங்கலாம். 


வெட்டு குத்து இல்லை… கத்தி கப்படா இல்லை… இரத்தமில்லை. கலை, கலை மட்டுமே இருக்கிறது! 


முத்துவீரன் அவமானப்பட்டான்தான். வெஞ்சினம் கொண்டான்தான். பாட்டையாவை அறைந்தல்ல, பறை அறைந்து… தான் பட்ட அவமானத்திற்குப் பதில்சொல்லத் தீர்மானிக்கிறான். தன்னோட அவமானத்தை அவன் க்ரியேட்டிவ்வா சேலன்ஞ் பண்ணுகிறான். அவனுள் ஒரு கலைஞன் கனிகிறான். அந்தக் கனிதல் அற்புதமான எழுத்தாகியிருக்கிறது. 


பட்ட அவமானம், ஒருவனை அசலான கலைஞனாக்குகிறது. போலவே, பாட்டையாவைக் கொண்டாட நம் மனமும் தவியோ தவியென்று தவிக்கிறது. சொல் தேடுகிறது. சரியான சொல் இல்லையென்றால், பாட்டையா நம் கழுத்தையும் பிடித்துவிடுவார். 


பறை இசைக்கலையை, ஒரு க்ளாசிக் என்று சொல்லவைக்கிற இடம் இந்த சிறுகதைக்குள் இருக்கிறது. நம்மையும் தலையாட்டவைக்கிற, தாளம்போடவைக்கிற, போலவே, அதற்கும் மீறி இறங்கி நம்மை ஆட்டம்போடவைக்கிற இடம் இந்தச் சிறுகதைக்குள் இருக்கிறது. 


பறை, வெறும் சாவுக்கொட்டு மட்டுமல்ல. அதன் தாளகதியைக்கொண்டே கணித்துவிடலாம், வாசிக்கப்படும் இடம் கோவில் திருவிழாவா? முளைப்பாரியா? பால்குடமா? காதுகுத்தா? பொழுதுபோக்கா? நடப்பது நல்லதா, கெட்டதா? என்று. வாழ்வோடு இணைந்திருக்கிற ஒரு கலை இங்கு எழுத்துப் பதிவாகியிருக்கிறது. முடிப்பதற்குமுன் ஒன்று….


ஆதிக்கத்திற்கு எதிராக, பண்பாட்டுத் தளம் என்பதோடு மட்டுமல்லாமல், இன்று பரந்துபட்ட அளவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் எதிர்வினைகளில் தொழிற்படும் இரு விடயங்களைக் குறித்தும் சில சொற்களைச் சொல்ல இக்கதை என்னைத் தூண்டுகிறது. அதையும் சொல்லவிழைகிறேன். வாசிப்போடு, மறுவாசிப்பும் நிகழ்வதாகவே நீங்கள் இதைக் கொள்ளலாம்.  


பறை, ஓர் இசைக் கருவியாக மட்டுமல்ல, ஓர் அடையாளமாகவும் இன்று எழுச்சிகொண்டிருக்கிறது. ஒரு கலை வடிவம் என்பதோடு, பறையின் அதிர்வு, ஒரு கலகக் குரலாக, ஓர் ஆயுதமாகக் கூர்மைப்பட்டிருக்கிறது. பறை சொல்லும் சேதியில், அடக்குமுறைக்கு எதிரான அரசியலோடு, அடங்க மறுத்துத் தன்சுய அடையாளத்தை உயர்த்திப்பிடிக்கும் விழிப்பும் இன்று திரண்டிருக்கிறது.  அந்தக் குரலை,  அந்த அதிர்வை, இந்தச் சிறுகதையின் துவக்கச் சொல்லான, அந்த ’’ஏலேய்…’’-க்கு எதிராக உரக்கக் கேட்கவும் மனம் துடிக்கிறது. 


கலை இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி மட்டுமல்ல, காலத்தைச் செதுக்கும் உளியும்கூட! நான் எப்போதும் சொல்வதுதான். ’கலை’ என்கிற சொல்லிற்கு ’கலைத்துப்போடு’ என்கிற அர்த்தமும் உண்டு. 


சாவுக்கொட்டு மட்டுமல்ல, அது போர்ப்பறை என்று அதிரச் சொல்லுகிற எழுத்தும் பொள்ளாச்சி அபியிடமிருந்து எதிர்வரும் காலத்தில் நிச்சயம் வரும் என்கிற எதிர்பார்ப்பு, அவரது எழுத்தின் வீரயம் உணர்ந்த யாவருள்ளும், திடமாகத் திரள்வுகொள்வது இயல்பு. அதுவும் அவரால் முடியும். அது நிகழவேண்டும். 


ஒன்றாம் அடி, இரண்டாம் அடி, மூன்றாம் அடி என மாறும் தாளகதிக்கு ஏற்ப ஆட்டத்தின் அடிவைப்பும் வேகமும் இணைவுகொண்டு நம்முள் சுதியேற்றும் ஒரு படைப்பு… போலவே,  மனதின் அக அசைவுகளை நுட்பமாய் அவதானித்து,  எழுத்துள் பொதிந்துவைத்திருக்கிற ஒரு படைப்பு... பாட்டையா!


அதிரும் பறையின் சத்தத்தை அபியின் சொற்கள் ஒலிக்கின்றன.  சதங்கை கட்டிய பாதங்களென அபியின் சொற்கள் நடனிக்கின்றன. நிச்சயம் கொண்டாடத்தக்க ஓர் எழுத்தையும், ஓர் எழுத்துக் கலைஞனையும் இச்சிறுகதைத் தொகுப்பு நமக்கு இனங்காட்டியிருக்கிறது. இத்தொகுப்பை அறிமுகப்படுத்தியதில் பெருமைகொள்கிறேன். தீ இனிது சோழநிலாவுக்கும், களிறு வெளியீடு நிவேதிதாவுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்ததையும் நன்றியையும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். 


ஓர் அடையாளத்தைக் கொண்டாடி இருக்கிறீர்கள் தோழர். பெருமகிழ்ச்சி.  முத்துவீரனின் பறையும், பாட்டையாவின் ஆட்டமும்தான் பொள்ளாச்சி அபி என்றால் இனியென் நினைவிற்கு வரும். நன்றி தோழர். இசைவோடு செவிகொடுத்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி.  வணக்கம்.


@highlight 

#களிறுவெளியீடு 

#பாட்டையா

#கருக்கல்சுரேஷ்வரன்

#பொள்ளாச்சிஅபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக