21 அக்டோபர் 2014

ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி - சிறுகதை - பொள்ளாச்சி அபி

“ஏய்..,சரசு..மின்னல் வெட்டறாப்புலே இருக்குது..கொடியிலே காயப்போட்ட துணியெல்லாத்தையும் எடு..” சிவகாமிதான் இரைந்தாள்.அவளது கனத்த சரீரம் போலவே சாரீரமும் சற்று கனம்தான். ‘விலுக்’கென்று,அதிர்ந்து நிமிர்ந்த சரசு,கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, “தள்ளுங்க..தள்ளுங்க..கொஞ்சம் வழி விடுங்க..” என்றபடி, அவசரமாய் கைகளால் விலக்கிவிட்டு,சிறு பெண்போல எழுந்தோடினாள்.

 சரசு அத்தை எங்கள் வீட்டிற்கு வந்தபிறகு,அந்த ஊரிலேயே,எங்கள் வீட்டில் மட்டுமே இருந்த ரேடியோப் பெட்டி மீது எனக்கிருந்த கவர்ச்சி குறைந்துபோனது.காரணம்,அத்தை சொல்லும் கதைகளைப் போல,ரேடியோவில் வரும் நிகழ்ச்சிகளோ,பாட்டுகளோ எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வப்போது அம்மா கேட்கும் நாடகமும்,அப்பா கேட்கும் செய்திகளும் பெரியவர்களுக்கானதாக இருந்தது.

 சரசு அத்தைக்கு ஏறக்குறைய முப்பது வயதிருக்கும்.வீட்டின் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு,செய்து கொண்டிருப்பதால், அவளுக்கு எங்கும் ஊளைச் சதைகள் தொங்கவில்லை.படக்கென்று உட்காருவதும், நிமிர்வதும்.. அப்படியே அம்மாவிற்கு நேர் எதிராக இருந்தாள். என்ன..? அம்மாவைவிட கொஞ்சம் நிறம் கம்மி அவ்வளவுதான். பள்ளி விட்டதும் வீட்டில் ஓடியாடி விளையாடினாலும்,இரவு உணவுக்குப் பின்,சரசு அத்தையிடம் கதை கேட்காமல் நானும்,அண்ணனும் உறங்கச் செல்வதில்லை. அம்மாவும்,சில சமயம் அப்பாவும் “இது என்ன கெட்ட பழக்கம், சாப்பிட்டாச்சுன்னா போய்ப் படுத்துத் தூங்க வேண்டியதுதானே..? தெனமும் அவகிட்டே போய் கதை கேக்குறதே ஒரு பொழப்பாப் போச்சு உங்களுக்கு..” என்று சலிப்பாகவும்,சில சமயம் கோபமாகவும் சொல்லிக் கொண்டே இருந்தாலும்,நாங்கள் அதனை பொருட்படுத்தவேயில்லை.. “தூக்கம் வர்ற வரைக்கும்..,கொஞ்ச நேரம்தாம்மா..அப்புறம் போய் படுத்துக்கிறோம்..” என்று கெஞ்சலாகவும்,கொஞ்சலாகவும் சொல்லிவிடுவோம்..!

 சரசு அத்தை,அப்பாவுடன் பிறந்தவளில்லை.சில வருடங்களுக்கு முன்பு,ஏதோவொரு தூரத்து உறவின் மூலம்,எங்கள் வீட்டுக்கு வேலைக்காரியாய் வந்தவள்தான். “அவளைக் கட்டுன புருசன், எனக்கொரு வாரிசைப் பெத்துக் குடுக்க வக்கில்லாத இவளைப் போய்க் கட்டினேன் பாரு..ன்னு அடிக்கடி தகராறு செஞ்சுட்டே இருப்பான். இப்ப ஒரு வருஷத்துக்கு முன்னாலே,பொழப்புக்குன்னு வேற ஏதோ ஊருக்குப் போனவன், இன்னவரைக்கும் ஊடு திரும்பலை, அவன் உசுரோடுதான் இருக்கானான்னும் தெரியலைம்மா.., அவன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டு,ஈரோடு பக்கத்தாலே இருக்கான்னும் சொல்றாங்க..! இதுலே, உண்மையெது.,பொய் எதுன்னும் தெரியலை..அப்படியே போலீசுலே சொல்லி,அவனை பொள்ளாச்சிக்கு இழுத்துட்டு வந்து சேத்து வெச்சாலும், திரும்பியும் ஓடிப் போக மாட்டான்னோ,இவளைக் கொடுமைப் படுத்தாம நல்லா வெச்சுக் காப்பாத்துவான்னோ என்னம்மா உறுதி இருக்கு.?

பெத்தவங்களுமில்லாம,இப்ப புருசனுமில்லாமே இவ அநாதையா நிக்குறா. ஏதோவொரு நல்ல குடும்பத்தை அண்டிப் பிழைச்சுகிட்டுமேன்னுதான் இவளைக் கொண்டு வந்து இங்க விடுறேன் தாயி..” என்று சரசு அத்தையை முதல்முதலாக வீட்டுக்கு கூட்டி வந்த கிழவி சொல்லிவிட்டு;ப் போனாள். அம்மாவைவிட எட்டு வயது குறைந்தவளாக இருந்ததால்,அத்தை என்று கூப்பிட்டுப் பழகிவிட்டோம்.அதற்குக்கூட முதலில்,ஆட்சேபம் தெரிவித்தவள்தான் அம்மா. “பின்னே எப்படிக் கூப்பிடுவதாம்..?” ஐந்தாம் வகுப்பு படிக்கும் நானும்,ஆறாம் வகுப்பில் படிக்கும் அண்ணனும்,அம்மாவிடம் எதிர்த்துக் கேட்டபோது, “ஏய்..சரசு..” என்று அவளைப் போலவே கூப்பிடச்சொல்ல,அவளுக்கும் மனம் வரவில்லை போல.! அப்புறம் அவள் ஒன்றும் சொல்லவில்லை.அப்பா இது குறித்து ஒன்றும் கண்டுகொள்ளவில்லை.

 துணிகளை எடுத்துப் போட்ட சரசுவிற்கு,மீண்டும் ஏதோ வேலை கொடுத்திருந்தாள் அம்மா.! அத்தை திரும்ப வருவதற்காக காத்துக் கொண்டிருந்தோம்.வெளவால் ஒன்று வழிதெரியாமல் வீட்டின் முன்வழியாக நுழைந்து,நேராகப் பறந்து போய்,பின் வாசல் வழியாக வெளியேறியது. ஒருவேளை வழக்கமாய் இந்த வழியாய்த்தான் அது போய்க் கொண்டிருக்கிறதோ..? இதுவரை நான்தான் கவனிக்கவில்லையோ..? ‘இருக்கும்..,இருக்கும்..வீட்டின் பின்புறம் மா,கொய்யா,சீத்தா என பழமரங்கள் நிறைய இருக்கின்றதே..! அவற்றிலிருந்து அத்தை பறித்துத் தரும் பழங்கள் மட்டும் எப்போதும் இனிப்பாகவே இருந்தன.எப்படித்தான் அவளுக்கு அந்தப் பக்குவம் தெரிகிறதோ என்று எனக்கும் தெரியவில்லை. சில நிமிடங்களில் வந்து சேர்ந்தாள் அத்தை. “மீனாட்சி.., உனக்குத் தூக்கம் வரலையா..? டேய் ராமு..உனக்குமா தூக்கம் வரலை..?” “தூக்கம் வர்றமாதிரிதான் இருக்கு அத்தே..நீ சின்ன கதையா ஒண்ணு சொல்லு..அப்புறமாப் போய்ப் படுத்துக்கிறோம்..” ராமுதான் பதில் சொன்னான். நானும் அதனை ஆமோதித்தேன். ராமு இதனைச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.சிலசமயம் அத்தை கதை சொல்லத் துவங்கினால்,அது வெகு நீளமாக இருக்கும்.

அப்படித்தான் முதல் முதலாக,அவள் சொன்ன ஒரு கதை., “முன்ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்ததால் கடவுளால் சபிக்கப்பட்டு,இந்த ஜென்மத்தில் அரண்மனையில் பிறந்த இளவரசி ஒருத்தி,குழந்தையாக இருந்தபோதே கயவர்கள் சிலரால் கடத்தப்பட்டபோது,துரத்தி வந்த காவலர்களுக்கு பயந்து ஒரு ஏகாலியின் குடிசைக்குள்,குழந்தையைப் போட்டுவிட்டுச் சென்று விட்டனர். அங்கு வளர்ந்து வந்தவள், குமரியாக மாறியபோது,ஒரு இளவரசன் பெண்கேட்டு வந்து,கல்யாணம் செய்து கொண்டு போனான். சில நாட்கள் அவளுடன் சந்தோஷமாக இருந்த இளவரசன்,பின்னர் அவளை ஒதுக்கி வைத்துவிட்டு,வேறொரு நாட்டு இளவரசியைக் கல்யாணம் செய்து கொண்டான்.இதனால் ஆத்திரமுற்ற இளவரசி,அவனைப் பழிவாங்க திட்டமிட்டபோது,அவளைப்பிடித்து சிறையில் போட்டுவிட்டான்.

 சிலநாள் கழித்து,சிறையிலிருந்து தப்பியவள்,இளவரசனை நெருங்க முடியாத அளவில் இருந்த காவல்களைத் தாண்டவே முடியவில்லை.அவன்தான் சகல அதிகாரங்களும் மிகுந்தவனாயிற்றே. அதனால்,எப்போதாவது இவனைப் பழிவாங்கியே தீரவேண்டும் என்பதற்காக அவள் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகிறாளாம்.எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற அச்சத்தோடு அவன் இன்றைக்கும் வாழ்ந்து வருகிறானாம்..”, இரண்டு இரவுகளில் நீண்ட தொடர்கதையாக இருந்த இந்தக் கதையில்,ராஜாக்கள் காலத்தில் இருந்த இளவரசி,இன்னுமா உயிரோடு இருப்பாள்..? என்று எனக்கு கேள்வியே எழவில்லை. எப்போதாவது ஒரு நாள் அந்த இளவரசனை, இளவரசி பழிவாங்கிவிட்டாள் என்று சீக்கிரமே தகவல் தெரிந்தால் சந்தோஷமாக இருக்கும் என்றே எனக்கு அன்று தோன்றியது.

 ஆனால்,இரண்டுநாளும் ராமு இந்தக்கதையை முழுதாகக் கேட்காமல், இடையிலேயே தூங்கிவிட்டிருந்தான்.சரசு அத்தை சம்பவங்களை விவரிக்கும் போது, சந்தோஷம்,துக்கம், கோபம்,ஆத்திரம் என கதைக்கேற்றபடி,தனது குரலிலும்,முகபாவத்திலும் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களைப் பார்க்க,எனக்கு இறுதிவரையும் மிகுந்த உற்சாகமாகவே இருந்தது. சொல்லப்போனால் அவளின் அந்தப் பாவனைகளே,அவளுடைய கதைகளின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பை உண்டாக்கியிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அதற்குப் பின் வந்த நாட்களிலும், அத்தை எப்போது கதை சொன்னாலும்,அதில் கட்டாயம் ஒரு ராஜகுமாரி இருப்பாள்.அவளின் கட்டளைக்குப் பணியாற்ற ஏராளமான வேலையாட்கள் காத்துக் கொண்டே இருப்பார்கள்.

தனது அடிமைகளை அவ்வப்போது சவுக்கால்,விளாசுவதும் உண்டு. ராஜகுமாரியின் உடைகள் ஒவ்வொரு கதையிலும் மிக உயர்ந்த விலையுள்ள,பத்து யானை அல்லது ஐம்பது குதிரை அல்லது நூறு பசுக்கள் அல்லது இவற்றுக்கு ஈடானதாக எதையேனும் கொடுத்து பெறப்பட்ட உடைகளாகவே இருக்கும். எப்போதும் அரண்மணையில் அல்லது மாளிகையில்,நடைபெறவேண்டிய காரியங்களுக்கு அவள்தான் முடிவு எடுப்பாள். என்ன சமைக்க வேண்டும் என்பது உட்பட.! அவளை நாங்கள் எல்லாம் பிரியமாக அத்தை என்று அழைத்தாலும் அவள் எங்கள் வீட்டு வேலைக்காரி என்றும்,அவளுடன் ஒட்டி உறவாட வேண்டாம் என்றும் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பாள்.!

 ஆனால்,அம்மா கழித்துப்போட்ட பழைய சேலைகளையே உடுத்திக் கொண்டு, கிழிந்த கோரைப் பாயை விரித்து உறங்கிக் கொண்டிருக்கும் அவளிடம் எப்போதும் கதைகள் கேட்க நாங்கள் கொண்டிருந்த ஆவல் மட்டும் தீரவேயில்லை. அவளிடமிருந்த கதைகளும் தீரவேயில்லை. நான் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று,அடுத்து எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று அப்பா அலைந்து கொண்டிருந்த நேரம்.,அண்ணனின் ரசனைகளும் இப்போது மாறி விட்டது. முன்புபோல அவன்,அத்தையின் கதைகளைக் கேட்க பிரியப் படுவதில்லை. இந்த நேரத்தில்,சற்றே விபரம் தெரிந்தவளாக நான் வளர்ந்துவிட்டதால்,எனக்காக மட்டும் சில கதைகளையும் அத்தை சொல்லியிருக்கிறாள். அந்தக் கதைகளில் ஒன்றை,நான் இன்னும் மறக்கவேயில்லை. “ ஒரு ராஜகுமாரி,தன்னுடைய நாட்டை மீட்பதற்காக,மற்றொரு நாட்டு ராஜாவிடம் உதவிகேட்டு, அடைக்கலமாய்ப் போய்ச் சேருகிறாள்.அது அங்கிருந்த ராணிக்குப் பிடிக்கவேயில்லை என்றாலும்,சகல அதிகாரங்களும் மிகுந்த ராஜாவை எதிர்த்துப் பேசமுடியவில்லை. இதனை தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்ட ராஜா,ராஜகுமாரிக்கு சீக்கிரமே உதவி செய்கிறேன் எனச்சொல்லியே,அவளையும் பலவந்தப்படுத்திக் கெடுத்து ஒரு மனைவியைப் போல,வைத்துக் கொண்டானாம். அந்த ராஜாவையும் பழி வாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த ராஜகுமாரி, நாளடைவில் பல சந்தர்ப்பம் கிடைத்தும்,பழி வாங்க முடியவில்லையாம். காரணம், அந்த ராஜாவின் குழந்தைகள்,ஒரு தாயைப் போல எண்ணி,ராஜகுமாரியிடம் பாசமாக இருந்தனவாம்.சரி.. எதிர்காலத்தில் என்ன நடக்குமோ அப்படி நடக்கட்டும் என்று விதியை எண்ணி நொந்தபடியே அந்த ராஜகுமாரி,இன்னும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறாளாம்.

 அத்தையின் கதைகளில் சில இப்படித்தான் முடிவுகளற்றுப் போய் நின்றுவிடும். “கதைகள் என்றால் அதற்கொரு முடிவு இருந்துதான் தீரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை மீனாட்சி..” என்றொரு முறை அவள் சொன்னதை நானும் ஏற்றுக் கொண்டேன். ஆமாம்..,மனித வாழ்க்கையில்,ஒரு கதையின் சம்பவம்போலத் துவங்கும் எத்தனையோ நிகழ்வுகள் முடிவற்ற வகையில் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது.? நான் கல்லூரிப் படிப்பை முடித்து தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்ந்தபின்,மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கணேசனுடன் காதல் ஏற்பட்டது.அது தெரிந்தவுடன்,இரு பக்கத்து பெற்றோர்களின் வசையுடனும், சாபத்துடனும் எங்கள் காதல் திருமணத்தில் முடிந்தது.கணவன் வேலை செய்த கணிப்பொறி நிறுவனம், அமெரிக்காவிலிருந்த அதன் தலைமை அலுவலகத்துக்கு பதவி உயர்வில் அனுப்ப,அங்கேயே வசிக்கத் துவங்கினோம். இடையே பத்தாண்டுகளும் ஓடிவிட்டது. கடந்த ஆண்டு அப்பா இறந்துவிட்டார்.சொத்துக்குப் போட்டியில்லாத வீட்டு நிர்வாகம்,தோட்டம், வியாபாரம் எல்லாம் அண்ணன்தான் பார்த்துக் கொள்கிறான்.

இப்போது சொந்தம் இறுகியிருந்தது.வயதின் மூப்பால் மிகவும் தளர்ந்து போன அம்மா,மூட்டுவலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். கட்டிலைவிட்டு அவள் இறங்குவதில்லை.அவளுக்கு துணையாக,சரசு அத்தையும்,வேலைக்காரர்கள் புடைசூழ,வீட்டில்தான் இருக்கிறாள்.இப்போதெல்லாம், அம்மாவிற்கும் அவள் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ.? எனது இரண்டு குழந்தைகளுடன்,அம்மாவைப் பார்த்துவருவதாகச் சொல்லி, அமெரிக்காவிலிருந்து கிளம்பி வந்தாயிற்று. வீட்டின் முன்பாக,வாடகைக் காரிலிருந்து இறங்கும்போதே,அண்ணனும்,அண்ணியும் ஓடிவந்து வரவேற்றனர். அம்மாவிடம் நலம் விசாரித்தபோது,அப்பாவின் பிரிவு,அவளது இயலாமை, அங்கலாய்ப்பு என அரைமணிநேரம் மூச்சுவிடாமல், அழுகையினூடே பேசித்தீர்த்தாள். அம்மாவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறும் போது, அதுநேரம் வரை அருகாமையில் நின்று கொண்டிருந்த சரசு அத்தையின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.இருவரும் மெதுவாய் வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்திற்கு சென்றோம்.

அங்கிருந்த பழ மரங்கள் முன்னைக் காட்டிலும் நன்றாகவும்,அடர்த்தியாகவும் வளர்ந்திருந்தன. சரசு அத்தைக்கும் வயதாகியிருந்தது.அவளின் முகத்தில் முன்புபோல,எப்போதும் நிலவும் விரக்தியோ,சோகமோ இல்லை.பூரண அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அது,அவளை இன்னும் அழகாக்கியிருந்தது. “அத்தை..,எப்படி இருக்கீங்க..?”

 “நீதான் பாக்குறீயே மீனாட்சி..,நான் நல்லாயிருக்கேன்..!” குரல்கூட,மிக நிதானமாய் அவளிடமிருந்து வெளிப்பட்டது.

 “இன்னைக்கு ராத்திரியும் ஏதாவது ராஜகுமாரியின் கதைசொல்றீங்களா..?” சிரித்துக் கொண்டே கேட்டேன்.எனது சிரிப்பில்,சரசு அத்தையின் உள்மனசு தெரியும்..என்ற அர்த்தமும் இருந்தது.

 “இப்போவெல்லாம்,எனக்கு எந்த வேலையும் கொடுக்காம,உங்க அம்மாவும், அண்ணணும்,என்னை நல்லாப் பார்த்துக்கிறாங்க மீனாட்சி..,.இந்த வீட்டுலே என்ன செய்யணும்னாலும்,என்னையும் கேட்டு,சம்மதம் வாங்கிட்டுத்தான் செய்யுறாங்க.ஒரு ராணி மாதிரி சொந்த வாழ்க்கை போயிட்டு இருக்கு. மனசுக்கு நிம்மதியாவும் இருக்கு. சொல்லப்போனா.. இப்பல்லாம் எனக்கு அந்தமாதிரி கதையே தோணுறது இல்லே. கோபத்தோட,ஆவேசத்தோட,பழி உணர்ச்சியோட எனக்குள்ளே இருந்த அந்த ராஜகுமாரியும் எப்பவோ செத்துப் போயிட்டா..! என்றாள் அத்தை.! அவளின் பதில் என்னை ஆச்சரியப் படுத்தவில்லை.! ---------- --------- -------- நன்றி - ஆனந்த விகடன் -10/09/2014

நீயே சொல்லு சார்..! - சிறுகதை- பொள்ளாச்சி அபி

நேத்து சாயங்காலம்,நான் ரெண்டுபேரைக் கொன்னுட்டேன்னு சொன்னா உனக்கு ஆச்சரியமா இருக்கும் சார்..,அதுவும் எனக்குத் தெரிஞ்ச வழியிலே ரொம்பக் கொடூரமாத்தான் கொன்னேன்னு உங்கிட்டே சொல்றதுலே எனக்கொண்னும் சங்கடமில்லே சார்.., இன்னைக்கு காலையிலே, நீ கூட பேப்பரிலே பாத்திருப்பே.., ஆனா..நான் அவங்களைக் கொன்னது சரியா, தப்பா..ன்னு நீதான் ஒரு நியாயத்தைச் சொல்லணும் சார்..! கண்டிப்பா சொல்லுவியா சார்..? இந்த மருதாச்சலம் பயலுக்கு அடியாளா இருந்த ரெண்டுபேரைத்தான் நான் கொன்னுட்டேன்.இப்ப அதுக்கு பதிலா என்னைப் புடிச்சு பழிவாங்குற துக்காக,ஆளும்,படையும் போட்டு என்னைத் தேடீட்டு இருக்கானுங்க சார்..,அவனுக கையிலே மாட்டுனா என்னைக் கொன்னே போட்டாலும் போடுவாங்க..அவனுங்ககிட்டே அதுக்கான வசதியிருக்கு. ஆனா,அதுக்கு முந்தி நியாயம் என்னான்னு நான் தெரிஞ்சுகிட்டா.. சாகறதாவே இருந்தாலும் சந்தோஷமா செத்துருவேன் சார்.., நீயே சொல்லு சார்..இதுவரை பொது வழியா இருந்ததை,எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்திலேயிருந்து நாங்க போய்,வந்து பொழங்கிட்டிருந்த வழியை,திடுதிப்புன்னு அடைச்சுப் போட்டான் இந்த மருதாச்சலம் பய.., சரி எதுக்குடா அடைச்சே..ன்னு யாராவது கேட்டா,மக்களுக்கு அமைதியும்,மோட்சமும் வழங்கப் போறானாம். எனக்கு சிரிப்பு,சிரிப்பா வருது சார்..கஞ்சா கடத்துனது,மலைவாசிப் பொண்ணைக் கெடுத்ததுன்னு இவம்மேலே ஏற்கனவே பல கேசுக இருக்கு.இந்த லட்சணத்துலே, இவங்கிட்ட மோட்சம் வாங்க எவன் வரப்போறான்னு தெரியலை..! அவனோட வலதுகையிலே இருக்குற அஞ்சு வெரலையும் விரிச்சு,டாட்டா காட்டுற மாதிரி,ஜடா முடியும் தாடியுமா நின்னபடி,போட்டோ புடிச்சு வெச்சுருக்கறான்.பத்தாக்குறைக்கு, ரெண்டு தோள்பக்கத்துலேயும் ரெண்டு வெள்ளக்காரிக வேற..ஈ..ன்னு இளிச்சுகிட்டு,கும்பிட்டுகிட்டு நிக்குறாளுக. அவளுகளுக்கு எப்ப, என்னத்தை ‘வழங்கப்’போறான்னு தெரியலை.., இவன் என்ன எழவோ வழங்கிட்டுப் போகட்டும் சார்..அவம் பொழைக்க எதுவோ தகிடுதத்தம் பண்றான்.அதை நம்புற ஆளுக காசு,பணம் கொடுத்துட்டுப் போவாங்க போல..,அதுலே எனக்கொன்னும் பிரச்சினை இல்லே சார்..இப்பவே,அவங்கிட்டே காசு,பணம் நெறய இருக்குன்னு தெரியுது. இல்லேன்னா..ஒரே ராத்திரியிலே, அவ்வளவு பெரிய வேலியைப் போட்டு,செவுரு கட்ட அஸ்திவாரம் எழுப்பி,வழியை அடைக்க முடியாது சார்..!. அது போக,வேலிக்கு அந்தப்பக்கமா பத்துப் பதினைஞ்சு பேரு என்னன்னவோ வேலை பாத்துகிட்டு இருந்தாங்க..பெரிய,பெரிய மெஷினெல்லாம் கல்லையும்,மண்ணையும் தள்ளிகிட்டு இருந்துச்சு. இப்ப இவனைத் தேடிட்டு,கலெக்டரு, பெரிய பெரிய அதிகாரிக..மந்திரிங்க..கூட வந்துட்டுப் போறாங்க சார்..சரி,இவன் அந்த அளவுக்கு செல்வாக்கு சம்பாதிச்சு வெச்சுருக்காங்கிறதுக்காக,,நாங்க நடக்குற பொதுவழியை இவன் எப்படி சார் அடைக்கலாம்..? அதுவும் வழக்கம்போல,நான் தூர தேசத்துக்குப் போயிட்டு,மூணு மாசம் கழிச்சு,திரும்பி வந்து பாக்கும்போதுதான் இந்தக் கூத்தெல்லாம் நடந்திருக்குன்னே தெரிஞ்சது.வழக்கமா,நானும் எங்குடும்பமும் புழங்கற இடத்துக்கு போகவும் முடியாம,வந்த வழியே திரும்பவும் முடியாம ஒரே அல்லாட்டமாப் போச்சு சார்..!. ஆனா..ஒரு மலையைச் சுத்திப் போனா,எங்க இடத்துக்குப் போக வழியிருக்குன்னு எங்க ஆளுக சொல்றாங்க,அப்படியொரு வழியே இருந்தாலும் நாங்க ஏன் சார் சுத்திப் போகணும்..? எவனோ வந்து திடீர்னு வழியை அடைச்சு வெச்சிருவான்.நாங்க எங்க உரிமையை வுட்டுக் குடுத்துட்டு,சுத்திப் போகணுமா சார்..? அது சம்பந்தமே இல்லாம ஒருத்தனுக்குப் பயந்துகிட்டு ஓடுற மாதிரி இல்லையா..,அது மாதிரி ஒரு வெட்கக் கேடு இருக்கான்னு நீயே சொல்லு சார்..? அந்த வெக்கக்கேட்டையும் சமாளிச்சுகிட்டு, அந்தப் பக்கம் சுத்திப்போனா..இங்க மருதாச்சலம் மாதிரி, அங்கியும் எவனாவது சோணாச்சலம் வேலி கட்டி வெச்சிருந்தா என்ன பண்ண முடியும்..? இப்படியே.. நாங்க சுத்தி சுத்திப் போயிகிட்டேயிருந்தா.. இதுக்கு ஒரு முடிவுதான் என்னா சார்..? சரி சார்..,இந்த மருதாசலம் பய, இங்கியே ஏதாவது ஒரு சந்து அளவுக்காவது வழி உட்டுருக்கானான்னு தேடிட்டு, இருக்கும்போதுதான்..,கத்தி,கடப்பாறை,வேல்கம்புன்னு தூக்கிட்டு,அடியாளுக பத்துப் பன்ணென்டு பேரு எதுக்க ஓடிவந்து,எங்களை நெருங்கவும் வுடாமே,தப்பிச்சுக்க அவகாசமும் தராம.., நாய்,பேயை அடிச்சு விரட்டுறமாதிரி கண்டபடி அடிச்சு விரட்டுறானுங்க சார்.., ஆம்பளை,பொம்புளை,குழந்தை குட்டி, கெழடுகன்னு எல்லாமே..,வயித்துப் பாட்டுக்காக, நடையா நடந்து போய் பொழக்கிற பொழப்பு சார் எங்களுது.அவனுக அடிச்ச அடியிலே இங்க பாருங்க சார்,எங் கால் முட்டியை எப்படிப் பேத்துருக்கானுங்கன்னு.. எனக்குகூட பரவாயில்லே சார்..சின்னக் குழந்தைன்னு கூடப் பாக்காம,அவனுக வீசுன வேல்கம்பு..ஒரு குழந்தையோட முதுகிலே ஏறி,கீழே வுழுந்துச்சு சார்..பச்ச மண்ணு..அது எப்புடி துடிச்சு,துடிச்சு அழுகுதுன்னு தெரியுமா சார்..? அந்த இடத்துலே உங் குழந்தைய நிறுத்தி,ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு சார்..எங்க வேதனை எந்த அளவுக்கு இருக்குன்னு புரியும்..!. கொஞ்சம் இரு சார்..எனக்கு இப்ப நினைச்சாலும் அழுகை, அழுகையா வருது..கண்ணைத் தொடச்சுக்கிறேன்..! இந்தக் காட்டுலே இருக்குற விலங்குகளோட விலங்கா சுத்துற எங்களாலே,உடனே அதிகாரிகளை சந்திச்சு உங்களை மாதிரி..,‘பிராது’ கொடுக்க முடியுமா,இல்லே கூட்டம் போட்டு கோஷம் போட முடியுமா சார்..? எங்களுக்கு அதுக்கெல்லாம் வக்கும் இல்லே..அறிவுமில்லே..! நீங்க இருக்குற வீட்டுக்கு,நாங்க வந்து தொந்தரவு குடுத்தா உங்களுக்கு எப்படியிருக்கும்..?, இப்ப எங்க வீடு இருக்குற இடத்துக்கு நீங்கல்லாம் வந்துட்டு., தப்பா நெனக்காதீங்க சார்..நான் உங்களைச் சொல்லலை..உங்களை மாதிரி நல்லாப் படிச்ச, நாலு நல்லது கெட்டது இவங்களுக்கும் தெரியும்னு நாங்க நம்பிகிட்டு இருக்கற உங்க ஊர்க்காரனுங்க ளைத்தான் பொதுவாச் சொல்றேன்.., பாமரங்களா இருக்குற எங்களை நீங்க தொந்தரவு பண்ண லாமா..,அதுலே என்னசார் நியாயம் இருக்கு..? நீயே சொல்லு சார்..! சும்மா எங்க இடம்,எங்க இடமுன்னு நான் சொல்லிகிட்டே இருக்கறது உனக்கு சலிப்பா இருக்குமா சார்..?,ஆனா நீயும் அதப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும் சார்.., அது ஒண்ணும் சாதாரண இடமில்லே சார்..பசேல்னு இருக்குற மலையும், காடும்..,அதுலே வெள்ளியை உருக்கி ஊத்துன மாதிரி அருவியும்,ஆறும்..சொர்க்கம்னா அதுதான் சார்..சொர்க்கம்..எங்க பயலுவ,கொமரிகளெல்லாம்.. ஆத்துலேயும்,அருவியிலேயும் போயி ஆட ஆரம்பிச்சதுகன்னா.. மணிக்கணக்கிலே ஆடிகிட்டு இருக்கும்..இதுமாதிரி வசதியெல்லாம் ஊருக்குள்ளே கிடைக்குமா சார்..? அப்புறம்,ஊருன்னு சொன்னதும்தான் முக்கியமா ஒரு விஷயம் நியாபகத்துக்கு வருது..,கிண்டல் பண்றதா நினைச்சுக்காதீங்க..உண்மையத்தான் சொல்றேன்.., உங்க ஊர்லே,நாட்டுலே,ஒட்டுக் கோமணமாட்டம் இருக்குற இடத்தை,பத்துப் பேருக்கு பங்கு பிரிச்சுக் குடுக்குற பஞ்சாயத்தெல்லாம் இங்க எப்பவுமே கிடையாது சார்..,எங்க பொழங்குறதுக்கு வசதியா இருக்கோ..அங்க இருந்துக்கலாம் சார்..ஆனாலும்,வயித்துப் பொழப்புக்காக எங்கியாவது போகணும்னா.. அப்பப்பக் கூடிக்குவோம்..போவோம்,வருவோம்.. எங்களுக்குள்ளே சண்டையே வராது..எப்பவாச்சும் இந்தக் கொமரிப் புள்ளைங்களாலே,விடலைப் பசங்களுக்குள்ளே எதுனாலும் சண்டை வந்தாலும் அது நீடிக்காது சார்..கொஞ்ச நேரத்திலே ராசியாயிடு வோம்..! இப்படித்தான் சார் எங்க பொழப்பு ஓடிக்கிட்டுருக்கு.., இந்த மாதிரி நெலைமைல,எங்க குடும்பத்துலே இருக்கறவங்கெல்லாம்,அவங்க பொழப்புக்கு ஏதாவது வழிசெய்யணுமின்னு கெஞ்சுறாங்க..,எங்க கூட்டத்துக்கு நான் மூப்பனா இருந்துகிட்டு ஒண்ணும் பண்ணாம இருந்தா எப்படி சார்..?....அது பெரிய அவமானம் சார்..ஆனா..இப்ப என்னாலேயும் ஒண்ணும் பண்ண முடியலியே..என்னசெய்யுறது..? யோசிச்சு, யோசிச்சு, மண்டைதான் காயுது.கோபம் கோபமா வருது. இன்னைக்கு கொஞ்சம் வெளிச்சமா இருக்கும் போதே.. நம்ம இடத்துக்கு போக ஏதாவதொரு வழியோ..,சந்தோ இருக்குமான்னு பாக்குறதுக்கு, அந்தப் பக்கமா நான் மட்டும் போனேன் சார்.அப்பப் பாத்து,அந்த மூங்கில் பள்ளத்தோரமா, அடியாளுகள்ள ரெண்டுபேர்,நெறய ஒயர்களைத் தோள்லே போட்டுகிட்டு,அவனுக போட்டு வெச்சுருந்த வேலியோட அதுகளை சேத்தி,சேத்தி கட்டிகிட்டு இருந்தானுங்க.., அதுலே ஒருத்தன் நல்ல குண்டன்..நேத்து இவந்தான் வேல் கம்பை குழந்தை மேல எறிஞ்சவன்.., எனக்கு நல்லா அடையாளம் தெரிஞ்சது.அவனைப் பாத்ததும் எனக்கு அதுவரை இருந்த கோபமெல்லாம் சேர்ந்து,பத்திகிட்டு வந்துச்சு சார். விறுவிறுன்னு அவனுககிட்டேயே போயிட்டேன். நான் பக்கமாப் போற வரைக்கும்,அந்த நாயிக என்னைக் கவனிக்காம,என்னவோ பேசிகிட்டே வேலை செஞ்சுட்டு இருந்தானுங்க..!. இன்னும் பக்கமாப் போகும்போது,ஏதோ சருகை மிதிச்சுட்டேன் போலிருக்கு..சத்தம் கேட்டு திரும்பிப் பாத்தானுங்க..திடுதிப்புன்னு என்னைப் பாத்ததும் அவனுக கண்ணுலே செம பீதி சார்.. மூங்கில் பள்ளத்து வழியா அவனுக தப்பிச்சு ஓடவே முடியாது.இருந்த ஒரே வழியையும் அடைச்சுகிட்டு இப்ப நான் நிக்குறேன்..அவனுக கையிலிருந்த ஒயர்களையும் கம்பிகளையும் சுழட்டிகிட்டு என்னவோ கத்துனானுக சார்..ஆனா நான் அதப்பத்தியெல்லாம் கண்டுக்கலே..நான் வெறும் கையிலேயே பத்துபேரை சமாளிப்பேன்னு உனக்கு நல்லாவேத் தெரியுமில்லே சார்.. இப்ப,சட்டுன்னு எட்டிப் புடிக்குற தூரத்திலேதான் அவனுக இருந்தானுங்க..அந்த குண்டனை முதல்லே புடிச்சு,காலோட சேத்தி அமுத்திகிட்- -டேன், தப்பிச்சு ஓடப்பாத்த இன்னொருத்தனையும் வளைச்சுப் புடிச்சேன்..! ஹூம்ம்.., அதுக்கப்புறம்..நான் எப்படியெல்லாம் அவனுகளை சித்திரவதை பண்ணிக் கொன்னேன்னு பேப்பரிலே, இல்லாததும், பொல்லாததுமா..விலாவாரியா நீதான் படிச்சுருப்பியே சார். இப்ப சொல்லு சார்..எம்மேலே எதுவும் தப்பிருக்கா சார்..? நீ பேசாம இருக்குறதைப் பாத்தா..நான் என்னான்னு நினைக்குறது..சரி..நீ என்னைப் பத்தி என்னவேன்னாலும் நினைச்சுக்க சார்.., ஆனா..நாளைக்கோ..நாளன்னைக்கோ.. அட்டகாசம் செய்த ஆண்யானை மர்ம மரணம்,வனத்துறை அதிகாரிகள் விசாரணைன்னு ஏதாவது செய்தி வந்தா.அது என்னைப்பத்தித்தான் இருக்கும்னு தெரிஞ்சுக்கோ சார்..என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச நீ,எனக்காக ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டியானா..எனக்கு அதுபோதும் சார்..! ---- நன்றி -தினமணிக் கதிர் --11/05/2014---- http://www.dinamani.com/weekly_supplements/kadhir/2014/05/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.../article2218778.ece --------------------------------------------------

சனம் –சிறுகதை- பொள்ளாச்சி அபி

சனம் –சிறுகதை- பொள்ளாச்சி அபி பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரும், இயக்குனருமான பொங்குசாமி,தலையில் முக்காட்டைப் போட்டுக் கொண்டு,தனது இருக்கையில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார்.உட்காரும் இடம் முதல் உச்சந்தலை வரை அவருக்கு வேர்த்துக் கொண்டிருந்தது வேறு பெரும் அவஸ்தையாக இருந்தது. தனது மேல் சட்டைப்பையில் இருந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாலும், எதிரில்,மேசையின் மீது இருந்த லேண்ட்லைன் போனை என்ன செய்வது..? என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.ரிசீவரை எடுத்துக் கீழே வைத்துவிடுவதைக் காட்டிலும்,அதன் இணைப்பு ஒயரைப் பிடுங்கிவிடலாமா..? ..லாமா…என்ன.. பிடுங்கியே விடலாம்..என்று தோன்றிய விநாடியில்,படக் கென்று, பிடுங்கி வீசினார்.மீண்டும் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டார். இந்தச் சனியன் பிடித்த,பந்தோஷ்சிவன் வேறு எங்கே போய்த் தொலைந்தான்.? பத்துமணிக்கு வருகிறேன் என்று சொன்னவன்,மணி பத்து இருபது ஆகியும் இன்னும் வந்து தொலைக்கவில்லையே..? தூத்தெறி..இவம் பேச்சையெல்லாம் நம்பி படம் எடுக்க ஒத்துகிட்டேன் பாரு..என்னை மொதல்லே ஜோட்டாலே அடிச்சுக்கணும்..! தமிழ்நாட்டு மக்களைப் பத்திக் கவலைப்படாமே,அவனோட ப்ரெண்டுன்னு ஒருத்தன் ‘தொல்லைப் பெரியாறு’ன்னு படம் எடுத்தப்பவே தமிழ்நாட்டுலே பெரிய பிரச்சினையாச்சு..! அதை நெனச்சுட்டாவது நான் மூடிகிட்டு இருந்துருக்கணும். ஹ{ம்..காசு,பணம்,துட்டு, மணி மணி..ன்னு நாக்கைத் தொங்கப்போட்டுகிட்டு,நாயா நாமளும்தானே அலைஞ்சோம்..அதுக்கு இப்ப நல்லா வேணும்..!’ பொங்கு சாமியின் மனசுக்குள்,சுயபரிசோதனை இப்போ பொங்கி பொங்கி வழிஞ்சது.பந்தோஷ் சிவன் இப்பவாவது வந்து தொலைச்சாப் பரவாயில்லையே..ன்னு அவரு வாசப்படியவே பாத்து,காத்துகிட்டுருக்காரு. நல்லவேளை,பந்தோஷ்சிவனோட இன்னோவா காரு,அப்படியிப்படின்னு ஆடிகிட்டு,பொங்குசாமியோட ஆபிசு டேக்டுக்குள்ளே நுழையறது தெரிஞ்சது.அட இதென்ன,போன மாசம்தான் வாங்குன புது இன்னோவா காருலே,முன்னாடிப் பக்கம் கண்ணாடியக் காணோம்.ஏகப்பட்ட ஒடுக்கு,பெயிண்டெல்லாம் போயி, வந்து நிக்குது. என்ன ஆச்சு..காருக்கும் ஏதாவது மறை கழண்டுபோய்,எங்காவது குப்புறக் கவுந்துபோச்சா..? காருக்குள்ளேருந்து,இறங்குன பந்தோஷ் சிவன்,கதவைக்கூட சாத்தாம,பொங்குசாமியப் பாத்து லொங்கு,லொங்குன்னு ஓடிவந்தாரு.வந்தவேகத்துலே நிக்க முடியாம,அவருமேலேயே சாய,இதை எதிர்பாக்காத பொங்குசாமியும்,பேலன்ஸ் இல்லாம தடுமாற,ரெண்டுபேரும் சேந்து தரையிலே உருண்டாங்க..! “யோவ்..என்னாய்யா..நீ,சூட்டிங் ஸ்பாட்டுலேதான் நிதானமில்லாம கண்டமாதிரி நடந்துக்குவே..இப்பவும் உனக்கென்னய்யா கேடு..?” பொங்குசாமி கோபத்தில் பொங்கினார். “அய்யய்யோ..நீங்க ஒடனே ஆபிசைவுட்டுக் கிளம்புங்க..நான் வர்ற வழியிலே கொஞ்சம் பொம்பளைங்ளும்,ஆம்பளைங்களும்,கையிலே சீமாருகளோட கூட்டமா எதிர்லே வந்தாங்க..! சரி எலக்சன் டைம் ஆச்சே..ஆம்ஆத்மிக்கு ஓட்டுக் கேக்றாங்கன்னு நெனச்சு,தெரியாம பக்கத்திலே போய் ஸ்லோ பண்ணேன்.என்னை குறுக்காட்டி நிறுத்தி,வெளியே இழுத்துப்போட்டு, மாத்திமாத்திப் போட்டாங்க..! எப்படியோ தப்பிச்சேன் பொழச்சேன்னு..அந்தக் களேபரத்திலேருந்து தப்பிச்சு ஓடிவந்துருக்கேன். அவங்களும் இப்ப நம்மளைத்தான் தொரத்திகிட்டு வந்துட்டுருக்காங்க..! உடனடியா..நாம இங்கேருந்து எஸ்கேப் ஆகலைன்னா..நம்மகதி என்னாகும்னே தெரியலைங்க..! பெரிய இனக்கலவரம் மாதிரி மக்கள் நம்மளை படுகொலை பண்ணிப் போடுவாங்க போல..!” நாக்கு வெளியே தள்ள,பந்தோஷ்சிவன் பதட்டத்துடன் சொல்லச் சொல்ல,பொங்குசாமிக்கும் பதட்டம் கூடிப்போனது. ‘காலையிலேருந்து போன் வழியா கண்டவனும் கூப்பிட்டு,பொங்குசாமி முதற்கொண்டு, அவரோட வம்சாவளி அத்தனைபேரையும் திட்டித் தீத்தானுங்க.., இப்ப இதுவேறயா..?’ “யோவ்..சனியன் புடிச்சவனே..நீ இனக்கலவரத்துக்கும்,இனப்படுகொலைக்கும் வித்தியாசம் தெரியாம படம் எடுத்துத் தொலைச்சதுனாலேத்தான்யா நமக்கு இப்ப இவ்வளவு தொல்லை.உன்னாலே நானும் கெடந்து அல்லாடுறேன்!” ஓகோ..இப்ப மொத்த தப்புக்கும் நான்தான் காரணமுன்னு சொல்லவர்றீங்களா..? நீயா அந்த சினிமாவைப் பண்ணுனா,சரியா வராது..நான் தயாரிச்சதா இருக்கட்டும்.அப்பத்தான் தமிழ்நாட்டு ஜனங்க நம்புவாங்கன்னு சொல்லி,நீ;ங்கதானே மொத்தப்பணத்தையும் வாங்குனீங்க..? நான் வாங்குனா என்னய்யா..? என்னோட ஷேர்போக மிச்சமெல்லாம் உனக்குத்தானே குடுத்தேன்..? “ஊம்..கிழிச்சீங்க..எவ்வளவு வாங்குனீங்க..எவ்வளவு குடுத்தீங்கன்னு..எனக்கும் தெரியும்..! அதுவுமில்லாம வேற மொழிலே இந்தப்படத்தை எடுத்துட்டு,தமிழிலே டப்பிங் பண்ணுனதா சொல்லிடலாம்னு சொன்னப்பவும் வேண்டாம்னு சொல்லிட்டு, இப்ப சிக்கல் வந்தபின்னாடி,எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு நீங்க மட்டும் தப்பிக்கப் பாக்காதீங்க..? அதுவுமில்லாம நான் ஏதோ வடஇந்தியப் படம் மாதிரி “ஜனம்”;னு பேர் வெக்கலாம்னு சொன்னேன்.நீங்கதான் பெரிய இவரைப் போல தமிழ்லே பேர் இருக்கட்டும்..ஒரு வேளை வரிவிலக்கு கிடைச்சா அந்தப்பணத்தையும் லாபக்கணக்குலே சேத்துக்கலாம்னு பிளான் போட்டு.., “சனம்” னு சுத்தத் தமிழ்லே வெச்சீங்க..இப்ப சனமெல்லாம் சேந்து ஒதைக்க வரும்போது..என்ன பண்றது,எங்க ஓடுறுதுன்னனு தெரியாம முழிக்க வேண்டியதிருக்கு..” பந்தோஷ் சிவன்,ஒரு அப்ரூவரைப் போல, தன் பங்குக்கு குரலை உயர்த்திப் பேச, பொங்குசாமி ஒரு அக்யூஸ்ட்டைப் போல திருதிருவென விழித்தார். “சரி..,இப்ப என்னய்யா செய்யுறது..?” “மொதல்லே,ஒரு லுங்கிய கட்டிகிட்டு வாங்க.. அப்படியே எனக்கும் ஒரு லுங்கி எடுத்துட்டு வாங்க..எங்கியாவது போய் எலக்சன் மீட்டிங்லே கூட்டத்தோட கூட்டமாய் போய் உக்காந்துக்குவோம்.மதிய சாப்பாடும்,குவாட்டரும் குடுத்துருவாங்க..எலக்சன் பிரச்சாரம் முடியறவரைக்கும் நமக்கும் கவலையில்லே.எஸ்கேப் ஆகறதுக்கும் நமக்கு பெரிய செலவுன்னு இருக்காது.” யோவ்..”சனம்”; படமெடுக்க நமக்கு பணம் குடுத்தவனோட ஆளுக எங்கியாவது அடையாளம் கண்டுபுடிச்சுட்டா..?” “என்னாங்க நீங்க பெரிய டைரக்டரு,தயாரிப்பாளருன்னு..விளம்பரம் பண்ணி வெச்சுகிட்டா மட்டும் போதுமா..எங்கே எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா..? யாராவது அடையாளம் கண்டுபிடிச்சுட்டா..நாம அப்ப எந்தக் கட்சி மீட்டிங்லே இருக்கறமோ..அந்த இடத்துக்கு தகுந்தமாதிரி,அம்மா வாழ்க..அய்யா வாழ்க..! ன்னு,சும்மா முழங்கிட்டோம்னா போதாது. அப்புறம் அது அவங்க கட்சிக்கும்,எதிர்க்கட்சிக்குமான பிரச்சினையாப் போயிரும்லே..!” திட்டம் பொங்குசாமிக்கும் ஏற்புடையாதாகவே இருந்தது.என்ன இருந்தாலும் கப்பக் கிழங்கும் கஞ்சியும் நல்லாத்தான் வேலைசெய்யுது.., எண்ணமிட்டபடியே லுங்கியை மாத்திக் கொண்ட பொங்குசாமி,யோவ் உனக்கு லுங்கியா,முண்டா..?” ஏதோவொரு எழவைக் கொண்டுவாங்க..எஸ்கேப் ஆகறதுக்கு எதுவாயிருந்தாத்தான் என்னா..? அவர்கள் கிளம்பி விட்டனர். இது சினிமாக்கரன் கதைங்கிறதுனாலே,இதுலே ஒரு பிளாஷ்பேக் இல்லேன்னா எப்படி..? சில மாதங்களுக்கு முன்பாக,தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் எடுபிடியோடு,பார்ப்பதற்கு தமிழனைப் போலவே இருந்த அவர்,தன்னை ஒரு கர்னல் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.தான் ஒரு சினிமா தயாரிக்கவிருப்பதாகவும், அதனை நீங்கள்தான் எடுக்கவேண்டும்” என்று அவர்களிடம் வந்தார் ஒருவர். கதை,திரைக்கதை,இசை,இன்னுமுள்ள லொட்டு லொசுக்கு எல்லாம் சேர்த்து, மொத்த சினிமாவிற்கான தயாரிப்பு செலவு குறித்து பந்தோஷ்சிவனும்,பொங்குசாமியும் சில கோடிகளில் கொஞ்சம் அதிகமாகவே கணக்கு சொல்லி,தங்களுக்கு அட்வான்சாக இவ்வளவு வேண்டும் என்றும் சொன்னார்கள். ஒருவேளை அவர் சம்மதித்து விட்டால்,உபரியாக நிறைய லாபம் கிடைக்கும் என்பதுதான் பொங்குசாமியின் கணக்கு.தயாரிப்பாளர் அல்லவா..? அந்த மனிதர் கூலாகச் சொன்னார்.ப்பூ..இவ்வளவுதானா..? நீங்கள் சொன்னதைவிட மூன்று மடங்கு தருகிறேன்.” பொங்குசாமியும்,பந்தோஷ{ம் வாய் பிளந்தனர். “ஆனால்..,கதை நான் சொல்வது போலத்தான் எடுக்கவேண்டும்..” மூன்று மடங்கு பணம் தருகிறேன்..என்பவரின் கதை எப்படியிருந்தால் என்ன..? எப்படியும் படத்தை உருவமாக்கிவிடலாம்..! பொங்குசாமிக்கு நிலை கொள்ளவில்லை. பந்தோஷ்சிவனின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. “சரி..உங்கள் கதையைச் சொல்லுங்கள்..” “கருத்தை மட்டும்தான் நான் சொல்லுவேன்.அதற்கேற்றாற்போல கதையை நீங்கள் செய்து கொள்ளவேண்டும்.” “தாராளமாய்..” கதையே இல்லாமல் எத்தனை படத்தை எடுத்திருக்கிறோம்.? நமக்கு இதெல்லாம் பெரியவேலையா..? கர்னல் கருத்து சொல்லத் தொடங்கினார்.எங்கள் நாட்டில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை வேண்டும் என்று அமெரிக்கா உட்பட சில நாடுகள்,ஐ.நா.சபையில், இன்னும் சில மாதங்களில் தீர்மானம் கொண்டுவர இருக்கின்றது.தேசநலன்தான் முக்கியம் என்ற ரீதியில்,உங்கள் நாடு அந்தத் தீர்;மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல்,புறக்கணிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால்,எங்களுக்கு தமிழகம் குறித்துத்தான் கவலையாக இருக்கிறது.ஏற்கனவே மாணவர்கள் நடத்திய போராட்டம்,உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அல்லாமல்,எங்களுக்கும் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.அந்த நிலை இப்போதும் வந்துவிடக்கூடாது. அதனால்,எங்கள் நாட்டில் நடைபெற்ற படுகொலைகள் எல்லாம்,சாதாரணமாக ஒரு போரில் நடப்பதுதான் என்பதுபோலவும்,இருந்தாலும் போரின்போது,இராணுவ வீரர்கள் சிலர்,தங்கள் சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாக,நடைமுறையை மீறியதற்காக,எங்கள் நாட்டு அதிபர் சீனாக்கூஜா பக்ஷே,வெளிப்படையான விசாரணைகள் நடத்தி,இராணுவ சட்டங்களின் படி,அவர்களுக்கு தண்டணை அளித்துவருவதாகவும் இருப்பது,இந்தக் கதையின் முக்கியஅம்சமாக இருக்கவேண்டும்.” “உங்கள் நாட்டில்,அப்படியெல்லாம் தண்டணை குடுத்தீங்களா..?” திடீரென இடையில் பொங்குசாமி பொங்கினார். கர்னல்,அமர்த்தலாகச் சிரித்தார்.அதன் அர்த்தத்தை பந்தோஷ்சிவன்தான் நன்கு புரிந்துகொண்டார். “ இல்லாததை இருப்பது மாதிரி எடுக்கறதுதானே சினிமா..? நம்ம குஜயைப் போட்டு “சலைவா..”ன்னு ஒரு படம் எடுத்தோமில்லே..?” வெரிகுட்..ஐ லைக் யூ..” என்றபடி பந்தோஷ்சிவனின் தோளில் கர்னல் தட்டிக் கொடுக்க,பந்தோஷ் சிவனுக்கு,அதுவரை மூத்திரம் போகுமிடத்தில் இருந்த எரிச்சல் நின்றுபோய் குளிர்ந்தது. கர்னல் தொடர்ந்தார்.எங்கள் நாட்டில் நடைபெற்ற கொலைகள்,கற்பழிப்புகள், ஆக்ரமிப்புகள், அடையாளமழித்தல் எல்லாமே சாதாரண இனக்கலவரம்தான். தமிழர்களும்,மற்ற நாடுகளும் சொல்வதுபோல இனப்படுகொலைகள் அல்லன்னு இந்தப்படத்துலே நீங்க தெளிவாக்கணும்..!” “இப்படியெல்லாம் படம் எடுத்தா..அதெல்லாம் உண்மையாயிடுமா..?” பொங்குசாமிதான் குறுக்கிட்டார். கர்னல் இப்போதும் அர்த்த புஷ்டியுடன் பந்தோஷ் சிவனைப்பார்க்க..அவர் பொங்குசாமியை முறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.’கூமுட்டையாட்டம் கேள்வியை இந்த ஆள் கேட்டுகிட்டு இருந்தான்னா,எங்கே புராஜக்ட் கையை விட்டுப் போயிடுமோன்னு..’ அவர் கவலை அவருக்கு. கர்னல் அதனைப் புரிந்துகொண்டு,பந்தோஷ் சிவனின் தோளில் ஆதரவாய் கையைப் போட்டுக் கொண்டார்.நடிக்க வந்த பொண்ணு..,கேக்காமயே தோளைக் கடிச்ச மாதிரி,பந்தோஷ்சிவனுக்கு “ஜிவ்” வென்றது. கர்னல் மீண்டும் தொடர்ந்தார். உண்மையாகுதோ பொய்யாகுதோ..அதெல்லாம் எனக்குத் தெரியாது.நீங்க எடுக்கற படம் கரெக்டா பார்லிமெண்ட் எலக்சன் பிரச்சாரம் ஆரம்பிக்குற சமயத்திலே வெளியாகணும்.இந்தப்படம் மக்கள் மத்தியிலே எங்களுக்கு ஆதரவா ஒரு கருத்தை உருவாக்கிடுச்சுன்னா..கட்சிக்காரங்களும் அதிகமா இந்தப் பிரச்சினையைப் பத்தி பேசமாட்டாங்க..எங்க நாட்டுக்கு வர்ற முதலீடுகளும் கொறயாமே வந்துட்டேயிருக்கும்.அதுக்கு மேலே உங்ககிட்டே இதைப்பத்தி பேசறதுக்கு ஒண்ணுமில்லே..” கர்னல் தன் பேச்சை முடித்துக் கொண்டார். அப்போதுதான் உள்ளே வந்த அசிஸ்டென்ட் டைரக்டரு ஒருத்தர், கர்னலையும், கைத்தடியையும் பார்த்துக் கொண்டே வந்து,பொங்குசாமியின் காதைக் கடித்தார்.அண்ணே..இவங்க நேத்து அந்த மனாலி பட டைரக்டரைப் பாக்கப் போயிருந்தாங்களாம்.அவரு வெரட்டியடிக்காத குறையாம்..னு ரகசியம் சொல்ல.., “அதைப்பத்தியெல்லாம் நமக்கு இப்ப ஆராய்ச்சி தேவையாடா..போ..போய்.. குடிக்கறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வா..”ன்னு அவசரகதியிலே தொரத்திட்டாரு பொங்குசாமி. அதுக்கப்புறம்..கர்னல் சொன்னபடியே படம் எடுத்ததும்,டைமுக்கு வெளியானதும் எல்லாமே திட்டமிட்டது போலத்தான் நடந்தது. ஆனா,இவங்க திட்டத்துலே முக்கியமான அம்சமா,மக்களோட உணர்வை கணக்கிலே எடுக்காம,அவங்களையெல்லாம் மாக்கானுங்கன்னு நெனச்சுகிட்டதுதான் ரொம்ப அபத்தமா முடிஞ்சது. -அப்புறம் இடைச்செருகலான,முக்கியமான ஒரு தகவல்,தமிழ்நாட்டுலேயிருக்குற வீடுகள்லே,சட்டிபானை இருக்கோ இல்லையோ..ஒரு சீமாரு கண்டிப்பா இருக்குங்கறதையும்,அதை தேவைக்கேத்த மாதிரி உபயோகப் படுத்துவோம்கிறதையும் சிலபேரு ஞாபகம் வெச்சுக்கோணும்..!- “அட சினிமாத் தந்தைகளே..உங்க பணத்தைப் போட்டு,ஏதோவொரு கதைன்னு சொல்லி,எதோவொரு எழவை நீங்க எடுத்துக் காமிச்சபோதெல்லாம், பொழுது போகணுமின்னு நாங்க வந்து பாத்தோம்..! விவாதிக்கத் தரமில்லாத படத்தையெல்லாம், இதையெல்லாம் விவாதிச்சு,நம்ம நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கணுமா..ன்னுதான் பேசாம இருந்தோம்.அதுக்காக இந்த “இனம்”..சாரி..”சனம்” சும்மா.. எப்பவுமே அமைதியாத்தான் இருப்போம்னு நீங்க கற்பனை பண்ணிகிட்டா எப்படிடா..? அந்த நெனப்புக்குத்தான் இப்ப வெச்சோம் வேட்டு..! அந்தப் படம் திருட்டு விசிடியா எடுக்கக் கூட, நேரமில்லாம தியேட்டரைவுட்டு தூக்கிட்டோம்லே..! ஜாக்கிரதை..! --------------- வணக்கம்..இந்தக் கற்பனைக் கதையை..நீங்க சமீபத்துலே ரிலீசான..?- இனம் படத்தோட போட்டுக் குழப்பிகிட்டீங்கன்னா..அதுக்கு நான் பொறுப்பில்லேன்னு சொல்லமாட்டேன் .. தாராளமாய் குழப்பிக்கீங்க..!

தல புராணம்..! சிறுகதை-பொள்ளாச்சி அபி.

தல புராணம்..! சிறுகதை-பொள்ளாச்சி அபி. ------- ---- ----- --- ------------ --------------------------- மே மாதத்தின் உக்கிரமான வெயில்,காலை பதினொரு மணிக்கே சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அனல் பறந்து கொண்டிருந்த சாலையில்,எதிரே வரும் வாகனங்கள் நீரில் மிதந்து வருவதுபோல நெளிசல்களுடன் வந்து, தம்மைக் கடப்பதை வேடிக்கை பார்த்தபடி,குளிரூட்டப்பட்ட காரின் முன் இருக்கையில், பவித்ராவும்,சீனுவும் அமர்ந்து கொண்டிருந்தனர். “அப்பா..பொள்ளாச்சிக்கு இன்னும் 12 கி.மீ..ன்னு போட்டிருக்கு..,அங்க போய் எனக்கு கூல்டிரிங்ஸ் வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கே..ஞாபகம் வெச்சுக்கோ..!” காரினை ஓட்டிக் கொண்டிருந்த வேல்முருகனை, சீனுவின் குரல் உசுப்பியது. பின்பாட்டு போல.. “எனக்கும் வேணும்..” மகள் பவித்ராவின் குரல். சாலையிலிருந்து கண்களை விலக்கி,இருவரையும் பார்த்த வேல்முருகன்,“கண்டிப்பா வாங்கித் தர்றேன்.ஆனா..கூல் டிரிங்ஸ் வேண்டாம்,இந்த ஊர்லே இளநிதான் நல்லா இருக்கும்.எல்லாரும் அதைக் குடிப்போம்..என்ன..?” “இளநி ஒண்ணும் வேணாம்..எனக்கு கூல்டிரிங்ஸ்தான் வேணும்..” சீனுவின் முகத்தைச்சுழித்துக் கொண்டு, செயற்கை அழுகையுடனான அவனது குரலில்,பிடிவாதம் தெரிந்தது. அவனிடத்தில்,மீண்டும் ஏதோ சொல்ல வேல்முருகன் எத்தனித்தபோது,பின் இருக்கையிலிருந்து,இந்துமதி சீறினாள். “சீனு..ஒரு தடவை சொன்னா கேக்கமாட்டே.., அதவும் அப்பா டிரைவிங் பண்ணும்போது, அவர்கிட்டே சும்மா,சும்மா பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கேன்ல..!” “இல்லம்மா..கூல் டிரிங்ஸ் வாங்கித்தர்றேன்னு அப்பாதான் முதல்லே சொன்னாரு..அதைத்தான்மா நான்..” அவன் வார்த்தைகளை முடிப்பதற்குள், “ஷட்டப்..,” ஓங்கிய குரலில் அவனை அடக்கினாள் இந்துமதி. சீனு,தனக்கு சாதகமாய் பவித்ராவும் ஏதாவது பேசினால் நன்றாயிருக்குமே..’ என்று எண்ணமிட்டபடி அவளைப் பார்த்தான். பவித்ராவோ, அவனை நட்டாற்றில் விடும் விதமாக, வெகு சீரியஸாக சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேல்முருகன் தனக்குள் சிரித்துக் கொண்டான். முள்ளுப்பாடி அருகில் வரும்போதே,சாலையின் இருமருங்கிலும் இருந்த புளியமரங்களின் நிழலில் இளநீர்க் கடைகளும், கொய்யாப் பழக் கடைகளும் இருந்தன.வசதியாய் இடமிருந்த ஒரு கடையின் முன்பாக தனது காரினை நிறுத்தினான் வேல்முருகன். எல்லோரும் இறங்கினர். இளநீர்க் கடைகளை விட,பிரமிட்கள் போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்,பசுமையும்,வெளிர் மஞ்சளுமாய் இருந்த கொய்யாப் பழங்கள்,இப்போது சீனுவின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. மெதுவாய் பவித்ராவிடம்,கிசுகிசுப்பான குரலில், “கொய்யாப்பழம் சூப்பரா இருக்கில்லே.. அம்மாகிட்டே கேக்கலாமா..?” “ஊம்..கேக்கலாம்..நீயே கேளு..” குழந்தைகளின் பேச்சு காதில் விழுந்தாலும், இந்துமதி அதனைக் கேட்காதவள் போல, “இப்படி வாங்க..” என்று கூறியபடியே,இளநீர் விற்கும் கடைக்கு அவர்களைத் தள்ளிச் சென்றாள். சீவிய இளநீரை,குழந்தைகளுக்கும்,இந்தமதிக்கும் ஆளுக்கொன்றாய் ஸ்ட்ரா போட்டுக் கொடுத்த கடைக்காரர், “உங்களுக்கு ஸ்ட்ரா வேணுமா சார்..?” வேணாம்..அப்படியே கொடுங்க..என்று வாங்கிக் கொண்ட வேல்முருகன்,அண்ணாந்து குடிக்கத் துவங்கினான். ‘அப்பா எப்படி துளியும் சிந்தாமல் அப்படியே குடிக்கிறார்..’ என குழந்தைகள் இருவரும் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். காரில் ஏறுமுன், “வாங்க..” என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டுபோய்,சில கொய்யாப் பழங்களையும் பேரம் பேசி வாங்கிக் கொண்டாள் இந்துமதி.நான்கு பெரிய பழங்களை மட்டும் துண்டுகளாக அறுத்து வாங்கி, தின்று கொண்டே வந்து காரில் ஏறினர்.கார் புறப்பட்டது. சாலையின் ஓரத்திலிருந்த மைல்கல், பொள்ளாச்சிக்கு இன்னும் ஐந்து கி.மீ இருப்பதாகக் காட்டியது.மிதமான வேகத்தில் கார் போய்க் கொண்டிருந்தது.திடீரென வேல்முருகன் கத்தினான், “இந்து..அங்கே லெப்ட் சைடுல பாரு..” துணுக்குற்றவளாய் இந்துமதியும்,குழந்தைகளும் குறிப்பிட்ட இடத்தைப் பார்க்க,சாலையின் ஓரத்தில் ஒரு கிழவி.. நடக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தாள்.கால்கள் பின்னிப் பின்னி விலகின.அவளது அக்குளில் வைத்திருந்த கந்தல் துணிமூட்டையொன்று கீழேவிழுந்த விநாடியிலிருந்து, ஏதோ பிடிமானம் தேடிக் கொண்டிருப்பது போல,கைகள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவள் இந்த விநாடியில் கீழே விழுந்துவிடுவாள்..என்று அவர்கள் நினைக்க..,நினைக்க..,கிழவி அப்படியே தரையில் சரிந்தாள்.அதே விநாடியில், வேல்முருகனும் பதறிப்போய் முப்பது அடி தூரத்திலேயே வண்டியை நிறுத்தி விட்டான். நல்லவேளை..அவள் வலப்புறமாக சாலையில் விழுந்திருந்தால்,தார்ச்சாலையின் கடுமை,அவள் மண்டையைப் பிளந்திருக்கும். இடப்புறமாக, தரையோடு இருந்த புதர்ச் செடியின் மீது விழுந்ததால் ஆபத்தில்லை. அவனுக்கு பின்,சாலையில் வந்த வாகனங்கள், கிழவியைக் கடந்து சென்றபோதும்,எதுவும் கிழவியின் அருகே நிற்கவில்லை.சொல்லப் போனால்,அப்படி ஒரு மனுஷி,தரையில் விழுந்து கிடக்கிறாள் என்று,வாகன ஓட்டிகள் உணர்ந்ததாகவும் தெரியவில்லை.வந்த வேகம் குறையாமல் பறந்து கொண்டிருந்தன. வேல்முருகனுக்கும் அப்படிப் போக மனமில்லை. அதே சமயம்,“ஏங்க..என்னாச்சுன்னு போய்ப் பாருங்க..” இந்துமதியின் குரலும் அவனை விரட்டியது. காரிலிருந்து இறங்கிய வேல்முருகன் கிழவியிடம் ஓடினான்.குழந்தைகளை இறங்கவேண்டாம் என்று சொல்லி விட்டு,தண்ணீர் குப்பியுடன் இந்துமதியும் தொடர்ந்தாள். கிழவி,லேசாக வாயைப் பிளந்தபடி மூர்ச்சித்துக் கிடந்தாள்.வியர்வையின் ஈரத்தோடு, மாநிறமாய் இருந்த அவளது முகத்தில்,பார்த்தீனியச் செடிகள் உராய்ந்ததில் சிவப்பாய் சில வரிகள்,அவளது முகச் சுருக்கங்களோடு இழைந்து கிடந்தன. ரவிக்கைகளற்ற தோள்பட்டையிலும், தோல் சுருங்கிக் கிடந்த கைகளிலும் அப்படியே. அம்மா..இங்க பாருங்க.. உடம்புக்கு என்ன பண்ணுது..? கொஞ்சம் கண்ணு முழிங்க..!” வேல்முருகனின் பதட்டமான குரல்,கிழவியை சற்றும் உசுப்பவில்லை.கண்களும் திறக்கவில்லை. இப்போது என்ன செய்வது.? கேள்வியுடன்,அவன் இந்துமதியிடம் திரும்பினான். குப்பியிலிருந்து,தனது கைகளில் வடித்த தண்ணீரை மெதுவாக,அவள் தெளிக்க.., கிழவியின் முகத்தில் சிறியதாய் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. ‘அப்பா..உயிருக்கு பயப்படும்படி எதுவும் இல்லை..’ இருவரிடமிருந்தும் ஆறுதலாய் ஒரு பெருமூச்சு.! கிழவி இப்போது லேசாய் ஏதோ முணங்குவது போலிருந்தது. “இந்து..கொஞ்சம் தண்ணி குடிக்க வை..,” என்றபடியே குத்துக் காலிட்டு,அமர்ந்த வேல்முருகன்,கிழவியின் தலையை லேசாகத் தூக்கி,தனது வலது தொடையின் மீது தாங்கிக் கொள்ள,பசியோ..தாகமோ..இந்து புகட்டிய தண்ணீரை எதிர்ப்பின்றி,கிழவி வேகமாகக் குடித்தாள்.இப்போது மிக பலவீனமான ஒரு ஏப்பம் அவளிடமிருந்து வெளிப்பட்டது. லேசாக கண்களைத் திறந்த கிழவி,சுட்டுக் கொண்டிருந்த வெயிலின் உக்கிரம் தாளாமல், மீண்டும் கண்களை சுருக்க..இந்துமதி அவள் முகத்திற்கு நிழல் விழும்வகையில் வந்து நின்று கொண்டாள். “அம்மா..இங்க பாருங்க..நீங்க எங்க போகணும்..?” என்று கேட்ட வேல்முருகனின் குரலைத் தொடர்ந்து,அவள் எழுந்திருக்க முனைவது உடலசைவிலிருந்து தெரிந்தது. கைத்தாங்கலாக அவளை எழுப்பி நிற்க வைத்தான் வேல்முருகன்.கிழவியின் முகம் ஓரளவு தெளிவடைந்திருந்தது. சராசரி உயரமிருந்த கிழவிக்கு ஏறக்குறைய எழுபது வயதிருக்கலாம்.வயதுக்காலத்தில் நல்ல திடகாத்திரமானவளாய் இருந்திருக்க வேண்டும். வயதின் முதிர்வால்,திருத்தமான முகவெட்டும், உடற்கட்டும்,இப்போது சற்றே தளர்ந்திருப்பதாகத் தோன்றியது.அவள் கட்டியிருந்த வெள்ளைச் சேலை,பழையதாகி,பழுப்பேறியிருந்தாலும்,அதில் அழுக்கெதுவும் இல்லை. வேல்முருகன் கேட்ட கேள்விக்கு,கிழவி இன்னும் பதில் சொல்லவில்லை.அவள் சற்றே ஆசுவாசப்படட்டும் என்று நினைத்தபடி, கைத்தாங்கலாக,காருக்கு அழைத்துவந்து,இந்துமதி உதவி செய்ய,பின் இருக்கையில் ஏற்றிவிட்டான் வேல்முருகன். இப்போது என்ன செய்வது..? கேள்வியுடன்,அவன் இந்துவைப் பார்க்க,“பொள்ளாச்சியில் இறக்கி விட்டுவிடலாம்” இந்துமதி சொல்ல, அவன் வண்டியைக் கிளப்பினான். ‘இந்து சொல்வது சரிதான்.தாங்கள் போய்க் கொண்டிருக்கும் திசையில்தான் கிழவியும்,போய்க் கொண்டிருந்தாள்,பொள்ளாச்சிக்கு முன்னதாக வேறு எதுவும் கிராமங்கள் இல்லை’. காரினுள் நிலவிய குளிர்ச்சி,கிழவிக்கு மிகுந்த ஆசுவாசத்தையும்,தெம்பையும் கொடுத்திருக்க வேண்டும்.இப்போது சற்றே பிரகாசமடைந்திருந்த முகத்திலிருந்து ஒரு நைந்த புன்னகை இந்துமதியை நோக்கி வெளிப்பட்டது.வண்டியின் உள்கூட்டினைச் சுற்றிப் பார்வையிட்ட கிழவி,முன்சீட்டிலிருந்து திரும்பி,தன்னையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளையும்,அவர்களின் கைகளிலிருந்த கொய்யாப் பழத்துண்டுகளையும் பார்த்துவிட்டு, மீண்டும் இந்துமதியிடமே பார்வையைத் திருப்ப, இந்துமதி அருகிலிருந்த பையிலிருந்து நறுக்கப்பட்ட பழத்துண்டு களை எடுத்து நீட்டினாள். மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்ட கிழவி, அவற்றை உண்ணத் தொடங்கினாள்.பலநாள் பட்டினியோ..? பொள்ளாச்சி நெருங்கிக் கொண்டிருந்தது. “ஏம்மா.. உங்க வீடு எங்க இருக்கு..? பொள்ளாச்சியிலே இறங்கிக்கிறீங்களா..?” இந்துமதியின் கேள்வியை மறுத்து,கிழவி வேகமாகத் தலையாட்டினாள். “நீங்க எங்க போறீங்க..?” ‘இதென்ன கிழவி எதிர்க் கேள்வி கேட்கிறாள். ஏதாவது மனநிலை பிறழ்ந்தவளா..? வம்பை விலை கொடுத்து வாங்கியது போலாகிவிடுமா..?’ இந்துமதிக்குள் கேள்விகள் குறுகுறுத்தன. இந்துமதியின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிழவியின் தீர்க்கமான பார்வை,அவள் தெளிவாகத்தான் இருக்கிறாள் என்று நம்பிக்கையூட்டியது. “நாங்க..பொள்ளாச்சியைத் தாண்டி, அங்கலக் குறிச்சியில் இருக்குற அம்மன் கோவிலுக்குப் போறோம்” கிழவியின் முகத்தில் மலர்ச்சியும்,கலவரமுமாக கலவையான உணர்ச்சிகள் தோன்றி,மறைந்தது. “என்னையத் தப்பா நெனக்காதீங்கம்மா..தயவு செஞ்சு என்னையும் அங்கியே இறக்கிவுட்டுடுங்க.., அதுதான் என்னோட சொந்த ஊரு..ரொம்ப வருஷம் கழிச்சு இப்பத்தான் அங்க போறேன்.!”என்ற படியே பின்னோக்கி சாய்ந்து,கண்களை மூடிக் கொண்டாள் கிழவி. ஆழியாறு செல்லும் பிரதான சாலையிலிருந்து, கிழக்குப் பக்கமாகப் பிரிந்து செல்ல,வழிகாட்டிக் கொண்டிருந்தது கைகாட்டி.வாகனத்தின் வேகத்தை மெதுவாகக் குறைத்த வேல்முருகன்,சாலையில் திரும்பி,சிறிது தூரம் சென்றவுடன்,சாலையின் இருபுறமும் புதியதும்,பழையதுமான வீடுகளும், கடைகளும் வந்தது. இன்னும் சற்று மேலே போக, இடதுபுறமாக ஒரு மண்சாலை பிரிந்தது.தூரத்தில் எங்கோ பறைகளும்,தப்புகளும் அடிக்கும் ஓசையும் கேட்டது.வேல்முருகன் வாகனத்தை நிறுத்தினான். உறங்கிக் கொண்டிருந்த கிழவியை மெதுவாக உசுப்பினாள் இந்துமதி,“ஏம்மா..நீங்க இறங்க வேண்டிய இடம் வந்தாச்சான்னு பாருங்க..!” அயர்ந்த தூக்கத்திலிருந்து கண்விழித்த கிழவி, சூழ்நிலை புரியாமல் சற்று தடுமாறுவது தெரிந்தது. காருக்குள் அமர்ந்தபடியே குனிந்து நிமிர்ந்து இடப்புறமும்,வலப்புறமும் பார்த்துக் கொண்டாள். மெதுவாய்ப் பின்பக்கமும் திரும்பிப் பார்த்தாள். பழக்கமான இடம்தான் என்று தோன்றியிருக்க வேண்டும். “இங்கதான்மா..இங்கியே எறங்கிக்கிறேன்..,இந்த ரோட்டுலேயே கொஞ்ச தூரம் போனா,நீங்க கேட்ட கோயில் வந்துடும்.நல்லபடியாப் போயிட்டு வாங்கம்மா..!,” இந்துமதி கதவைத் திறந்துவிட, காரிலிருந்து இறங்கிய கிழவி,நால்வரையும் பார்த்து கைகூப்பினாள்.வேல்முருகன் சிரித்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினான்.ஊரிலிருந்து வடகிழக்காக,இடப்புறம் பிரிந்து செல்லும் அந்த மண்சாலையில்,கிழவி இறங்கி நடந்துபோவது தெரிந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து, மழைக் காலத்தில் அதிகமாகவும்,மற்ற காலங்களில் குறைவாகவும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிற ஒரு காட்டாற்றின் கரையில் அமைந்திருந்தது அந்த அம்மன் கோவில்.பிரகார மண்டபங்களும்,வேலைப் பாடமைந்த தூண்களும் சிலநூற்றாண்டுப் பழமையை பறை சாற்றிக் கொண்டிருந்தன. கோவிலைச் சுற்றிலும் பரந்த அளவில் இருந்த இடத்தில்,சிறு மண்டபம்,பலவிதமான சிலைகள், வேலைப்பாடுடன் கூடிய விளக்குத்தூண்கள், பாம்புப் புற்று, அதன் முன்னால் குத்திவைக்கப்பட்ட விதவிதமான உயரத்தில் வேல்கம்புகள்,நீண்ட மைதானத்தை நோக்கியபடி கல்லினால் ஆன இருக்கைகள், சுமைதாங்கிகளைப் போன்ற அமைப்பிலிருந்தவற்றில் இருபுறமும் தொங்கிக் கொண்டிருந்த சங்கிலிகள்..,மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னனியில் தெரிகின்ற கோவிலின் கோபுரம்;;..,செதுக்கி,முழுமைப்படுத்தப் படாமல் ஆங்காங்கே புழுதியும் மண்ணும் மூடிக்கிடந்த ஏராளமான சிற்பங்கள்.., கோவில் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள்,அலங்கார மின்விளக்குகள், கோபுரத்திற்கும்,சுற்றிலுமுள்ள பகுதிக்கும் இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்கோபுர விளக்குகள், குறுக்கும் நெடுக்குமாய் சென்று கொண்டிருந்த மின்சாரவயர்கள், நகரப்பேருந்திலிருந்து இறங்கி, கோவிலுக்கு வந்து கொண்டிருந்தவர்களின் கைபேசியிலிருந்து ஒலித்த விதவிதமான ரிங்டோன்கள்.., என பழமையும்,புதுமையும் கலந்து காட்சியளித்துக் கொண்டிருந்த அந்தக் கோவில், வேல்முருகனுக்கு பிரமிப்பைத் தந்தது கையிலிருந்த கேமராவில், கோவிலில் இருந்தவற்றை விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுக்கத் துவங்கிவிட்டான். “ஏங்க..முதல்லே போய் சாமியைக் கும்பிட்டு வந்துட்டு,அப்புறமா போட்டோ எடுங்க,வந்தவுடனே உங்க வேலையைக் காட்டணுமா..?” இந்துமதியின் குரலில் லேசான கண்டிப்பும்,கிண்டலும். “சரி தாயே..அப்படியே செய்வோம்..” வேல்முருகனும் அதே தொனியில் பதிலிறுத்துவிட்டு,கேமராவை பைக்குள் போட்டுக் கொண்டான். எல்லோரும் உள்ளே சென்று தரிசனம் செய்தனர்.கர்ப்பக் கிரகத்திலிருந்த அம்மனை புகைப்படம் எடுக்கலாமா..? என்று கேட்டபோது, பூசாரி அனுமதிக்க மறுத்துவிட்டார். கோவில் மண்டபத்தை விட்டு வெளியே வந்த பக்தர்கள் நேராக,கோவிலின் வலப்புறம் ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையிலிருந்த மண்டபத்திற்கு சென்றனர்.இவர்களும் பின்னாலேயே செல்ல,அவ்வளவாக சிற்ப வேலைப்பாடுகள் இல்லாமல்,ஏதோ பழைய வீடு போலத் தோற்றமளித்துக் கொண்டிருந்த,அந்த மண்டபத்தினுள் தனிப்பிரகாரம், கருவறை என்றில்லாமல்,மண்டபத்தின் நட்ட நடுவில், ஆளுயரத்தில் நின்றுகொண்டிருந்தது ஒரு அம்மன் சிலை..!, ‘ஒரே கோவிலில் இரண்டு அம்மன் சிலைகளா..? இருட்டில் பார்த்தால் அங்கே ஒரு இளம்பெண்தான் நிற்கிறாள் என யாரும் ஏமாறக் கூடும்..!. பெரும்பாலும் கோவில்களில் இதுபோன்று சிலைகள் இருப்பதும்,அதற்கு பூசைகள் நடப்பதும் வழக்கத்தில் இல்லையே..!’ வேல்முருகனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. தரிசனத்திற்காக நின்ற மக்களுக்கு,பூசைகளை முடித்து வெளியே வந்த சற்றே வயதான பூசாரி, அனைவருக்கும் பிரசாதங்களைக் கொடுத்தார். தனக்கு முன்னே நீட்டப்பட்ட விபூதித் தட்டில், முழுதாய் ஒரு ஐம்பது ரூபாயைப் போட்டான் வேல்முருகன்.பூசாரி துணுக்குற்று நிமிர்வது தெரிந்தது.அவன் நேசமாய் சிரிக்க,இப்போது பூசாரிக்கும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். தரிசனத்திற்கு வந்தவர்கள் எல்லாம் யந்திரகதியில் வெளியே நகர,வேல்முருகன் அங்கேயே நின்றிருந்தான். அவனுக்காக இந்துமதியும், குழந்தைகளும் நின்றனர். தட்டினை,சிலையின் காலடியில் வைத்துவிட்டு, பணத்தையும், சில்லறைகளையும் இடுப்புவேட்டியில் கட்டிக் கொண்டு பூசாரி திரும்பினார்.இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கும் வேல்முருகனைப் பார்த்து அவர் லேசாக அதிர்ச்சியடைவது தெரிந்தது. “சாமி..ஒண்ணுமில்லே..இந்த அம்மனைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னுதான் நிக்கிறேன். எல்லா கோவிலுக்கும்,சாமிக்கும் தலபுராணம்னு ஏதாவது இருக்குமில்லையா..? அதுவும் இந்தமாதிரி நான் எந்தக் கோவில்லேயும் பார்த்ததில்லே.” ‘அப்பாடி..நாம்; நினைத்தபடி..இந்த ஆள், அறநிலையத் துறை அதிகாரியெல்லாம் இல்லை..’ என்ற நம்பிக்கை அவருக்கு வந்திருக்க வேண்டும். அவர் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். முகத்தில் லேசாக புன்னகை பரவியது.அடுத்து இன்னும் அரைமணி கழித்துத்தான் நகரப்பேருந்து வரும் என்பதால்,அதுவரை கூட்டமிருக்காது என்றும் அறிந்திருந்த பூசாரி,வேல்முருகனுக்கு “தலபுராணம்” சொல்லத் துவங்கினார். “ஒரு ஐநூறு வருஷங்களுக்கு முன்னாலே..”, இந்துமதியும் கதை கேட்கும் ஆவலில் வேல்முருகனை நெருங்கி நின்று கொண்டாள். குழந்தைகள் இருவரும் ஆற்றில் லேசாக ஓடிக் கொண்டிருந்த முழங்காலளவு தண்ணீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். “இந்த ஊருக்குன்னு இருந்த ராசா ரொம்ப கொடுமைக்காரனா இருந்தானாம்.அவன் ராசாவாகிப் போனதாலே அவன் வெச்சதுதான் சட்டம்.யாரும் கேள்வி கேப்பாரு இல்லையாம்.., எல்லா நெலமும் ராசாவுக்குத்தான் சொந்தம். அதிலே வேலை செய்யறதுக்கு இருந்த ஜனக் கூட்டத்துக்கு அவங் குடுக்கறதுதான் கூலி. அரைப்பட்டினி,கொலப் பட்டினின்னுதான் ஜனக் கூட்டம் அடிமையா இருந்துச்சாம்.எல்லை தாண்டிப் போனா தலையை சீவிடுவான் இல்லாட்டி அதா தெரியுதுபாரு சங்கிலி தொங்கற கல்லு. அதுலே கட்டிவெச்சு மனுசன் உயிரோட இருக்கும்போதே அவங்க தோலை உரிப்பாங்க. அப்படியுமில்லாட்டி மாறுகால் மாறு கை வாங்கிப் போடுவாங்க. சாகவும் முடியாம,பொழைக்கவும் முடியாம பொணமாட்டம்தான் இருக்கோணும். இந்த மாதிரி தண்டணைக்கு பயந்துகிட்டு,இங்கியே கிடந்து பொழச்சாங்க..! என்னைக்காவது ஒரு நல்ல கதி கெடைக்கும்னு நம்பிக்கையும் அவங்களுக்கு இருந்துச்சு. அப்படித்தான் ஒரு நாளு,கீழத்தெருவிலிருந்த ஒரு கூலிக்காரனுக்கு ஒடம்பு முடியாமப் போனதினாலே,அவனோட மக,பதினெட்டு வயசுக்காரியான மகேசுவரி கதிர் அறுப்புக்கு வந்தா.அந்நேரம் பாத்து,காலங்காத்தாலே எங்கியோ போயிக்கிட்டிருந்த ராசா கண்ணுலே அவ பட்டுத் தொலைக்க,அப்படியே தூக்கிட்டுப் போயி அரமணையிலே போடுங்கடான்னு உத்தரவு போட்டுட்டான்.ராசாவோட வாழ்க்கைலே இதெல்லாம் இல்லாம இருக்குமா என்ன..? மகேசுவரியோட அப்பனுக்கு சேதி தெரிஞ்சு,நாயம் கேக்க அரமணைக்கு போனவன்,உச்சிவெயிலு ஏறுறதுக்குள்ளே அரமணை வாசலுலே பொணமாத்தான் கெடந்தான்.போலீசுக்காரங்க வந்து,வெஷம் குடிச்சு தானா செத்துப் போயிட்டான்னு கேசு எழுதிட்டுப் போயிடடாங்க..!. ராசா போட்டு வெச்சுருக்குற உத்தரவு அப்படி..!, ஊரு ஜனமெல்லாம் வாயிலேயும், வவுத்துலேயும் அடிச்சிகிட்டு,ஆதரவில்லாம அழுது பொரண்டு, பொணத்தைக் கொண்டுபோய் அடக்கம் பண்ணிட்டாங்க..!” இந்தமதிக்கு ‘திக்’கென்றிருந்தது. “ஐநூறு வருஷத்துக்கு முன்பு நடைபெற்றதாகச் சொல்லப்படும் வரலாற்றில், ‘போலீசுக்காரங்க’ எப்படி வந்தாங்க..?” பூசாரியிடம் கேட்டே விட்டாள். இப்போது விழிப்பது பூசாரியின் முறையாகப் போயிற்று. ‘பலபேருக்கு இந்தத் தலபுராணத்தை சொல்லியிருந்த போதும்,யாரும் இப்படியொரு கேள்வியைக் கேட்டதில்லையே..!’ பதிலாக எதைச் சொல்வது யோசிக்க அவகாசமில்லை. “எனக்குத் தெரியாது சாமி,எங்கப்பா எனக்கு சொன்னதைத் தான் இப்ப ஒங்களுக்கு சொல்றேன்.”நம்பினால் நம்பு,நம்பாவிட்டால் போ..என்பதுபோல பூசாரியின் குரலில் ஒரு சலிப்பு., இந்துமதியை நோக்கிய வேல்முருகன், குறுக்கிடாதே’ என்பதுபோல தலையசைத்து சைகை காட்ட,அவள் ஓரடி பின்சென்றாள். தொடர்ந்து “சரிங்க சாமி,அரண்மணைன்னு சொல்றீங்க..,அது இங்க எங்க இருக்கு..நாம போயி அதையெல்லாம் பாக்க முடியுமா..?” தனதுமேல் சட்டைப் பையில் கைவைத்துக் கொண்டே வேல்முருகன் கேட்க,இந்துமதியின் கண்களிலும் ஆவல் மிகுந்தது. பூசாரியின் கண்களில் இப்போது லேசான ஏமாற்றம்.,“அது இந்தக் கோயிலுக்கு பின்னாடிதான் இருந்துச்சு.அது அழிஞ்சு நிறையக் காலமும் ஆச்சு...” “சரி..அப்புறம்..” கதையைத் தொடர்ந்தார் பூசாரி, பொழுது சாயும் போது அரமணைக்கு திரும்பி வந்த ராசா,மொந்தை மொந்தையாக் கள்ளைக் குடிச்சுகிட்டான்.நல்ல போதையேறிகிச்சு.காவக்காரங்க,சேவைக்காரங்களைக் கூப்பிட்டு,மகேசுவரியக் கொண்டு வாங்கடான்னான். வரமுடியாதுன்னு மொரண்டு புடிச்சு நின்ன அவளை பத்து ஆளுக சேந்துதான் இழுத்துகிட்டு வர முடிஞ்சது., சண்டைக் கோழி மாதிரி வெறச்சுகிட்டு,பத்ரகாளி மாதிரி மொறைச்சுகிட்டு அவ நிக்கறதைப் பாக்க,ராசாவுக்கே கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு.இருந்தாலும்,ஒரு ராசாகிட்டே, கூலிக்காரி பலம் காட்டுறதா,இவளுக்கு பயந்து போய் உட்டுட்டா அப்புறம் ராசாவை எவன் மதிப்பான்னும் ராசாக்கு தோணிப்போச்சு. “எல்லாம் அவளை விட்டு வெலகுங்கடா..”ன்னு ராசா உத்தரவு போட,எல்லாம் தள்ளிப் போயி நின்னுகிட்டாங்க. சிம்மாசனத்துலேயிருந்து இறங்கின ராசா பக்கம் வரவர,மகேசுவரி வெலகி,வெலகிப் போயிகிட்டே இருந்தா.., எலியை ஓடவிட்டு வெளையாடுற கடுவன் பூனை மாதிரி,ராசா தொரத்திகிட்டே ஓட,அவ நந்தவனத்துக்குள்ளே ஓடிப் போயிட்டா. பின்னாலேயே ஓடிப்போன ராசா,அவமேலே பாயுறதை எல்லாரும் பாத்தாங்க..,அதுக்கப்புறம் ராசாகிட்டேயும் சரி,மகேசுவரிகிட்டேயும் சரி எந்த சத்தமும் வரலே. இருட்டு மெதுவா இறங்கி,நெலாவும் மேல வந்துருச்சு. “அவ பொணத்தை எடுத்து எரிங்கடான்னு..”எப்பவும் உத்தரவு போடற ராசா,ரொம்ப நேரமா திரும்பி வரலேன்னதும், எல்லாருக்கும் சந்தேகம் வந்திருச்சு.மூத்த காவக்காரன் ஒருத்தன்,பந்தத்தைப் பத்த வெச்சுகிட்டு,மெதுவா நந்தவனத்துக்குள்ளே போயிப் பாக்க..,தலை நசுங்கிப் போயி செத்துக் கெடந்தாரு ராசா.., பக்கத்துலேயே ரத்தம் வழியுற முகத்தோட,விரிச்சுப் போட்ட தலையோட, நெலா வெளிச்சத்துலே மின்னிகிட்டு,ஓங்காரக் காளியாட்டம் உக்கிரமா ஒரு காலு தரையிலே ஊணிகிட்டு,அங்க கிடந்த பாறைமேலே உக்காந்துகிட்டு,இருந்தா மகேசுவரி. நெலகொலஞ்சு போன காவக்காரன்,ஒண்ணுக்கு ஒழுகுற வேட்டியோட..திரும்பி வந்து மூச்சு வாங்க, “மூஞ்சியிலே ஒழுகுற ரத்தத்தோட, காளியாத்தா.. மாதிரி நிக்குறா அவ..,பாக்கவே பயமா இருக்கு.. எல்லாரும் வாங்கடான்னு..” கூவ,எல்லாருமா சேந்து போனாங்க.., ராசா தலை ரத்தமும் சதையுமா நசுங்கிக் கிடந்தது.ஆனா,மகேசுவரியை இப்பக் காணோம். எல்லாப் பக்கமும் காவக்காரங்க தேடிகிட்டு இருக்கும்போது,திடீர்னு கருத்த வானத்துலேருந்து,சூரியனைக் கிள்ளிப்போட்ட மாதிரி ஒரு மின்னலும், ஓங்கார சத்தத்தோட இடியொண்ணும் நந்தவனத்துலே இறங்க,பாதிப்பேருக்கு கண்ணுபோச்சு.எல்லாரும் பயந்துகிட்டு தேடறதை நிறுத்திபுட்டாங்க.., காளியாத்தாதான் மகேசுவரியா அவதாரமெடுத்து வந்து,கன்னிப் பொண்ணுகளை நாசாமாக்கிகிட்டு இருந்த ராசாவைத் தண்டிச்சுட்டதா மறுநாள் ஊர்பூராவும் பேச்சு.காவக்காரங்க சிலபேரு, “மகேசுவரி ஒரு வெளிச்சம் மாதிரி..” வானத்துலே பறந்து போனதைப் பாத்ததாகவும் சொன்னாங்க..,இதனாலே,மகேசுவரியாப் பொறந்து வளந்தது எல்லாமே அம்மன்தான்னு எல்லோருக்கும் தெரிஞ்சுபோச்சு.., அதுக்கப்புறம்,கொஞ்சநாள் கழிச்சு மகேசுவரி அம்மன் கனவுலே வந்து சொன்னதா..ஊருக்குள்ளே எந்நேரமும் அழுதுகிட்டிருந்த ஒரு கல்தச்சன்தான் இந்த விக்கிரகத்தை அச்சுஅசலாக அப்படியே செஞ்சு கொண்டுவந்து இந்தக் கோயிலுக்கு கொடுத்தான். ராசா வாரிசுக பரிகாரத்துக்காக கட்டிக் கொடுத்த இந்த தனி மண்டபத்துலே அம்மனை வெச்சு கும்புட்டுட்டு வர்றோம். இப்பவும் கன்னிப் பொண்ணுக எல்லாம் மகேசுவரிஅம்மனுக்கு பொங்கல் வெக்கறதுன்னு இங்க தனியா ஒரு நோம்பு இருக்குது தம்பி..!” பூசாரி முத்தாய்ப்பாக வார்த்தைகளோடு,தலபுராணம் முடிந்தது எனபதை உணர்த்தினார். “அப்ப அந்த அரண்மணை..?” “ராசாவோட வாரிசுகள்,தெய்வ வாக்குப்படி அதையெல்லாம் இடிச்சுட்டு,ஊருக்குள்ளே தார்சு வீடு கட்டிட்டு குடிபோயிட்டாங்க..!” பக்தர்கள் சிலர் கூட்டமாய் உள்ளே வர,பூசாரியின் கவனம் அவர்களிடம் திரும்பியது. இந்துமதியும்,வேல்முருகனும் வாயிலை நோக்கி நடக்கத்துவங்கினர். பூசாரியின் தலபுராணம் இந்துமதிக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. “ஏங்க..ஐநூறு வருஷத்துக்கு முன்பு போலீசுக்காரங்க.., தற்கொலைன்னு கேசு..இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையேங்க..!” “அட மண்டூ..,இன்னுமா உனக்குப் புரியலே..!,ஐநூறு வருஷம்கிறதை,ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்..னுங்கிற மாதிரி யோசிச்சு பாரு..எல்லாம் சரியா வரும். அம்பது வருஷத்துக்கு முன்னேன்னு தலபுராணம் சொன்னா,அது வெறும் சம்பவமாப் போயிடும்.ஐநூறு வருஷத்துக்கு முன்னே..ன்னு சொன்னாத்தான் அது தல வரலாறாகும். இவங்களுக்கு இப்படி சொன்னாத்தான் வசதி.மரியாதை..தெரிஞ்சுக்கோ..!” இந்துமதிக்கு இப்போது தெளிவானது. “அப்ப ராசான்னு அவரு சொன்னது..?” “அது இந்தப் பக்கமிருந்த பழைய ஜமீன்தாரோ,பண்ணையாரோவாக இருக்கும்.அவங்களையும் பழைய வழக்கப்படி ராசான்னுதான் ஜனங்க கூப்பிடுவாங்க..!” “அடடே..பேசிகிட்டே போட்டோ எதுவும் எடுக்காம வந்துட்டமே..இரு..பூசாரிகிட்டே சொல்லி ரெண்டு போட்டோ எடுத்துட்டு வர்றேன்..” இந்துமதியின் பதிலுக்கு காத்திராமல் கேமராவை,பையிலிருந்து எடுத்தபடியே உள்ளே சென்றான். பூசாரியிடம் அனுமதி பெற்று,போட்டோ எடுக்க வசதியான, சிலையின் முகத்தில் நல்ல வெளிச்சம் படும்படியான கோணத்தை,தேடிக் கொண்டிருந்தான்.பக்தர்கள் சிலர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பது இடையூறாக இருந்தது.கிடைக்கும் இடைவெளியில்,‘கிளிக்’கிவிட வேண்டும் என்று லென்ஸ் வழியாகப் பார்வையைப் பதித்தபடி காத்துக் கொண்டிருந்தான். பூசாரி,வேட்டியைத் தூக்கிக் கட்டியபடி அவசரமாய் வெளியேறிக் கொண்டிருந்தார். ஏதோவொரு உருவம்,மகேசுவரி அம்மனுக்கு மிக அருகில் நின்று சிலையின் முகத்தை,உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. லென்சை இன்னும் சற்று ஜும் செய்தபோது,சிலையின் முகமும்,அந்த உருவத்தின் முகமும் இப்போது மிக அருகாமையில் எதிரெதிராய் தெரிந்தது.கோணம் அழகாய் இருக்கிறதே என்று அவனுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்ட அதேவிநாடி,இரண்டு முகங்களும் ஏறக்குறைய ஒரேமாதிரியிருப்பதும் அப்போதுதான் அவனுக்கு உரைத்தது.., ‘கிளிக்’ கண்களிலிருந்து கேமராவை நகர்த்திக் கொண்டு நிமிர்ந்தான்.இப்போது மகேசுவரி அம்மன் முகத்தை தனது இருகைகளாலும்,சொட்டும் கண்ணீருடன் லேசாக வருடிக் கொண்டிருந்த, அந்த உருவத்தைப் பார்த்த வேல்முருகனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அது,இவர்களோடு காரில் வந்த அந்தக் கிழவிதான்..! --------------

அப்பா எப்ப வருவாரு - சிறுகதை -பொள்ளாச்சி அபி

அப்பா எப்ப வருவாரு - சிறுகதை -பொள்ளாச்சி அபி சேவல்கள் இன்னும் விழித்திராத காலை.., கவிந்திருந்த இருளை மெதுவாக ஆக்ரமித்துக் கொண்டிருந்தது வெளிச்சம்.ஊரின் கடைக் கோடியில், அடர்ந்திருந்த புதர்களின் இடையே சென்ற ஒற்றையடிப் பாதை முடிந்த இடத்தில், தனியாக இருந்த அந்தக் குடிசையில்.., “திடுக்”கென படுக்கையிலிருந்து,பரபரப்பாக விழித்து எழுந்து அமர்ந்தான் சண்முகம். இன்றைக்கு எப்படியும் அதிகாலையில் கண் விழித்து விட வேண்டும் என்று நேற்று இரவு படுக்கைக்கு போகும்போதே அவன் முடிவு செய்து வைத்திருந்தான். திட்டமிட்டபடி விழித்து விட்டான்.ஆனாலும், இன்றைக்கும் அப்பாவைப் பார்க்க முடியவில்லை.அம்மாவின் பக்கத்தில், அவர் எப்போதும் படுத்திருக்கும் இடம் இன்றைக்கும் காலியாகவே இருந்தது. சண்முகத்திற்கு தாங்கமுடியாத துக்கம் பீறிட்டது. படுக்கையில்‘தொப்’பென்று விழுந்தான். ‘அப்பாவை எப்போதுதான் பார்க்க முடியும்..?’ அம்மாவை இப்போதே எழுப்பிக் கேட்டு விடலா மா..?’ என்று யோசித்தபடியே அம்மாவைத் திரும்பிப் பார்த்தான் சண்முகம்.முந்தானை விலகிக் கிடக்க,மணிக்கட்டு வரை இல்லாதிருந்த இடதுகையை தலைக்கு அண்டக் கொடுத்து, வலதுகையை நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு, கால்களைப் பரப்பியபடி,லேசான குறட்டையொலி யோடும்,அடித்துப் போட்ட சலிப்போடும் ஆழ்ந்து போய்த் தூங்கிக் கொண்டிருந்தாள் வடிவு. ‘நேற்று இரவு அப்பா எப்போது வந்தாரோ..? பாவம்.. இவள் எப்போது தூங்கினாளோ..?..அம்மாவை எழுப்ப மனம் வரவில்லை. அப்படியே அவளை எழுப்பிக் கேட்டாலும் அவள் என்ன சொல்லிவிடப் போகிறாள்..?.. “போடா..அப்பா வர்றதுக்குள்ளே நீ எப்பவும் போலத் தூங்கிடுறே..அசந்து தூங்கற பையனை எதுக்கு எழுப்பணும்னுதான் உன்னைக் கூப்பிடலை..இன்னைக்கு அப்பா வரும்போது கண்டிப்பாக உன்னை எழுப்பிவிடறேன் என்னா..?” என்பாள். உக்கும்..அவள் எழுப்பியதுமில்லை. அவனாய் முழித்துக் கொண்டதுமில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த இந்த மூன்று மாதமாய் இதேதான் தொடர்கதை..! சண்முகம் புரண்டு,புரண்டு படுத்துப் பார்த்தான். தூக்கம் வரவில்லை.லேசாய் குளிரும் அடிப்பது போலிருந்தது.சிம்னி விளக்கின் மங்கிய ஒளிச் சுடர் மெதுவாய் நடுங்கிக் கொண்டிருந்தது. படுக்கையின் ஓரத்தில் கிடந்த போர்வையை கால்களாலேயே இழுத்து,பின் அதன் மடிப்புகளைப் பிரித்து போர்த்திக் கொண்டான்.விளக்கின் மங்கலான வெளிச்சம் ஊடுருவிய போர்வையிலிருந்த பல வடிவான கிழிசல்கள் வழியாக அடர்த்தியான இருட்டிலிருந்த ஓலைக்கூரை தெரிந்தது. அது ஏதோ நட்சத்திரங்களின் பின்னனியில் கறுப்பு வானத்தைப் பார்ப்பது போலிருந்தது சண்முகத்திற்கு. அங்கு இல்லாமல் போனது நிலா மட்டும்தான்,அப்பாவைப் போலவே..,பின்னே..? அம்மா இருக்கிறாள்,அவன் இருக்கிறான்.அப்பா மட்டும் கண்ணில் படுவதேயில்லையே..! அதற்காக அப்பா என்றொருவர் தனக்கு இல்லாமலே போய்விட்டாரா என்ன..? எத்தனையோ இரவுகளில் தூக்கத்திலேயே உணர்ந்த மதுவின் வாடை. அம்மாவும், அப்பாவும் கிசுகிசுவென ரகசியக் குரல்களில் பேசிக் கொள்வது. விடியும் முன்பாக “எனக்கு நேரமாச்சு.. கிளம்புறேன்..” என்றோ.., சரி..வர்றேன்..” என்றோ.. கேட்கும் அப்பாவின் குரல்..,தொடர்ந்து குடிசையின் தகரக் கதவை ‘’கிறீச்..” ஒலியுடன் திறந்து மூடும் சப்தம்.., என அப்பாவின் இருப்பை உணர்ந்த சந்தர்ப்பங்கள் ஏராளமாய் உள்ளதே..! ஆனால்..இதுவரை அப்பா தன்னைத் தூக்கிவைத்துக் கொஞ்சியதாகவோ,கடைகளுக்கோ திருவிழாவிற்கோ அழைத்துச் சென்றதாக அவனுக்கு எதுவுமே நினைவில் இல்லை. என்னதான் முயற்சி செய்துபார்த்தாலும் அப்படி யொரு காட்சி நிழலாகக் கூட வரமாட்டேன் என்கிறது. அவ்வளவு ஏன்..? அப்பாவின் முகம் எப்படியிருக்கும்..? என்பதுகூட தெரியவில்லை. தன்னுடன் படிக்கும் ரமேசின் அப்பா தினமும் ஸ்கூட்டரில் வந்து அவனை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு டாடா காட்டிவிட்டுப் போவார். பளீரென்று அடிக்கும் வண்ணங்களில் உடைகளை உடுத்திவரும் அவர் நல்ல சிவப்பும் உயரமுமாக இருப்பார்.நமது அப்பா இவரைப் போல இருப்பாரா..? என்று பல தினங்கள் கற்பனையில் திளைத்திருக்கி -றான் சண்முகம். அதேபோல,துளசியின் அப்பா சைக்கிளில்தான் வருவார். ஒடிசலான தேகம் கொண்ட அவர் முகத்தில் மீசை மட்டும் முகத்தில் பாதியை மறைத்திரூக்கும்.சிலபோது மீசையின் கணத்தில்தான் அவர் இன்னும் பறந்து போகாமல் இருக்கிறாரோ..?’ அதை நினைத்தாலே சண்முகத்திற்கு சிரிப்புத்தான் வரும்.அவர் மாதிரி தனது அப்பா இருக்கமாட்டார் என்றும் அவன் உறுதியாக இருந்தான்.ஆனால்..அந்தக் கற்பனை களுக்கெல்லாம் எப்போதுதான் முடிவு கிடைக்கும்..? மற்ற சில பையன்கள் வீட்டில் வைத்திருக்கும் குடும்பப் போட்டோ போல தனது வீட்டிலும் இருக்குமா..என்று அவன் தேடிக்கூடப் பார்த்துவிட்டான். ஊஹூம்..அப்படியொன்றும் கண்ணில் தட்டுப்படவேயில்லை. சண்முகத்திற்கு கவலையாக இருந்தது.அப்பா எப்படி இருப்பார்..? ‘அ’..அம்மா..என்று, வகுப்பில் டீச்சர் சொல்லிக் கொடுத்த போதுகூட,அவனுக்கு ‘அ’..அப்பா என்றே மனதுக்குள் பதிந்தது.அன்றைக்கு தன்னை பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்க்கும்போதும், அம்மா மட்டும்தான் வந்தாள்.அங்கிருந்த பெரிய வாத்தியாரிடம் தனது மொன்னைக் கையையும், வலது கையையும் குவித்துக் கும்பிட்டபடி,என்ன சொன்னாளோ தெரியவில்லை.அவர் தன்னை மேலும்,கீழுமாகப் பார்த்த பார்வை, அறுக்கப் போகும் ஆட்டுக்குட்டியை வளர்த்தவன் பார்ப்பது போலிருந்தது. “டேய்..சம்முவம்..நல்லாப் படிச்சுக்கோ கண்ணு..”, என்று தன்னை அணைத்துக் கொண்டு,வடிவு முத்தமிட்டபோது,அவள் கண்களில் கண்ணீர் திரண்டு நிற்பது தெரிந்தது. “ஏம்மா வடிவு..இது கவர்ன்மெண்ட் ஸ்கூலு இல்லே..பிரைவேட் ஸ்கூலுதான்..ஒண்ணாம் வகுப்பாயிருந்தாலும், இங்க மூணு மாசத்துக்கொரு தடவை பணம் வாங்குவாங்க.. உன்னாலே கட்டீற முடியுமா..?” “அய்யா..அது எனக்கும் தெரியுமுங்க..எப்பாடு பட்டாவது பணத்தைக் கட்டிடுறேங்க.. ஆனா, அவனோட படிப்பு நல்லமொறையிலே இருக்க, நீங்கதானுங்க ஒத்தாசையா இருக்கோணும். அய்யா..இவனாலத்தான் எங்க பாடெல்லாம் மேலே வரணும்யா..,உங்க உடம்பொறப்புக்கு செய்யற மாதிரி,இந்த உதவியைச் செய்யுங்கய்யா..!” வடிவு,பெரிய வாத்தியாரிடம் தனது விண்ணப்பத்தை வைத்துவிட்டு சென்று விட்டாள். அப்பாவைப் பற்றி அவரும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.ஏன்..அவனுக்கே அதுவரை தெரியாதே..தனக்கும் ஒரு அப்பா இருப்பார் என்று..! அதற்குப் பின்தானே..ரமேசு.துளசி,முரளி, பால கிட்ணன், ராமசாமி, பங்கஜம்..னு இவங்ககூட வர்ற அப்பாக்களைப் பார்த்தபின்தானே, “என்னோட அப்பா எங்கேம்மா..?” என்று முதன்முதலாய் வடிவிடம் அவன் கேட்டான். ஏதோ கைவேலையாய் இருந்த வடிவு அதைக் கவனிக்கவில்லையா.. என்று தெரியவில்லை.. அவன் மீண்டும் கேட்டான். வடிவு அப்போதும் அவனது பக்கமே திரும்பாமல், தனது வேலையைத் தொடர்ந்தபடியேதான் சொன்னாள், “போடா..அப்பா வர்றதுக்குள்ளே நீ எப்பவும் போலத் தூங்கிடுறே.. பள்ளிக்கோடத்துலே நல்லா ஆட்டம் ஆடிட்டு வந்து,அசந்து தூங்கற பையனை எதுக்கு எழுப்பணும்னுதான் உன்னைக் கூப்பிடலை.. இன்னைக்கு அப்பா வரும்போது கண்டிப்பாக உன்னை எழுப்பிவிடறேன் என்னா..?” புகைந்து கொண்டிருந்த அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது. சண்முகத்திற்கு சட்டென இப்போதுதான் உறைத்தது. பள்ளிக் கூடத்தில்,அதிகமாக ஓடியாடி விளையாடிக் கொண்டு வருவது மட்டுமின்றி, வீட்டுக்கு வந்தும், விளக்கு வைக்கும்வரை.மேலத் தெருவில் இருக்கும் பிள்ளைகளோடு விளையாடுவதால்தான் அசந்துபோய்த் தூங்கிவிடுகிறோமோ..? அட, இத்தனை நாள் இது புரியாமல் போய் விட்டதே..! எதனையோ சொந்த முயற்சியில் கண்டுபிடித்துவிட்டது போல, அவனுக்கு இப்போது ஒரு தெளிவு வந்துவிட்டது. இன்றைக்கு பள்ளியில் மட்டுமல்ல,மாலையில் வீட்டிற்கு வந்தும் விளையாடக் கூடாது.அப்போது அசந்துபோய் தூங்கிவிட முடியாதல்லவா..? இன்று இரவு அப்பா வரும்வரை கண்டிப்பாக விழித்தேதான் இருக்கவேண்டும்..! அப்பாவிடம் சொல்வதற்கு அவனிடம் நிறைய சேதிகள் இருக்கிறது. நேற்று இரவு அப்பா சொன்ன கதை என்று ராசுக்குட்டி தினமும் ஏதாவதொன்றைச் சொல்வதைப் போல, நானும் சொல்ல வேண்டும்.அதற்காக அவரிடம் ஒரு கதையைக் கேட்டுச் செல்லவேண்டும்..! சண்முகம் முடிவு செய்து கொண்டான். படுக்கையிலிருந்து சுறுசுறுப்பாக எழுந்து கொண்ட சண்முகம்,பள்ளிக்கு புறப்பட ஆயத்தமானான். வடிவும் எழுந்து குளித்து மார்க்கெட்டுக்கு போகத் தயாரானாள்.அங்கு ஏதோ வெங்காய மண்டியில் வேலையாம்.அதுவும் மூணுமணி வரைக்கும் தானாம்.அப்புறம் அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள். அம்மாவிற்கு இப்போதுதான் பரவாயில்லை. முதலில் அவள் ஒரு துணிக்கடைக்குத்தான் வேலைக்குப் போனாள்.அங்கு இரவு எட்டுமணி வரைதான் வேலை என்றாலும்;,தான் போகச் சொல்லும்வரை அவள் இருக்கவேண்டும் என்று முதலாளி சொன்னாராம்.சில வாரங்கள் போய் விட்டு நின்று விட்டாள். அதற்குப் பின் ஒரு வீட்டில்,பாத்திரம் கழுவ, துடைக்க,கடைக்குப் போக என்று போய்க் கொண்டிருந்தாள்.அந்த வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போகிறவர்கள். கணவன் முதலில் வந்துவிடுவார். அதற்குப் பிறகு இரண்டு மணிநேரம் கழித்துத்தான் அவரது மனைவி வரமுடியும். என்னவோ தெரியவில்லை. அங்கிருந்தும் பத்துப் பதினைஞ்சு நாளிலேயே நின்று விட்டாள். அப்புறம் ஒரு ஓட்டலில் பாத்திரம் கழுவ.., இன்னொரு துணிக்கடை.., கட்டிட வேலை.., பிளாஸ்டிக் கம்பெனி..,இப்படி நிறைய இடத்திற்கு வேலைக்குப் போன வடிவு,எங்கேயும் தொடர்ந்து ஒரு மாசம்கூட தரிக்கவில்லை.அவள் ஏன் இப்படி வேலை செய்யும் இடத்தை மாற்றிக் கொண்டே யிருக்கிறாள் என்று அவனுக்கும் தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்..வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் தின்பதற்கு எதுவும் கிடைக்காத விரக்தியில் தவித்தபடியிருந்த சண்முகம், தாமதமாய் வந்துசேர்ந்த அம்மாவிடம், ஏம்மா இவ்ளோவ் நேரம்.., எனக்கு ரொம்பப் பசிக்குதுமா..! என்றபோது,அச்சச்சோ..இன்னைக்கு சந்தையிலேயிருக்கற வெங்காய மண்டியிலே வேலைக்கு சேர்ந்துட்டேன்.முதநாள் இல்லையா.. முதலாளியைப் பாத்துட்டு வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிடுச்சு..நாளையிலிருந்து மூணு மணிக்கெல்லாம் வந்துருவேன்.நீ பள்ளிக்கோடத்து லேயிருந்து வரும்போது,நான் வீட்டுலேயிருப்பேன்.. என்னா..சரியா..? என்றபடியே கையோடு கொண்டு வந்திருந்த சில அதிரசங்களை அவனுக்குத் தந்தாள். பரபரவென்று பொட்டலத்தைப் பிரித்து,ஒன்றை எடுத்துக் கடித்தபடி, “ஏம்மா.., வேறவேற இடத்துக்கு வேலைக்குப் போயிட்டேயிருக்கறே..?”என்று கேட்ட சண்முகத்தைப் பார்த்தவளுக்கு, மளுக்கென்று கண்ணீர் திரண்டது. எத்தனையோ இடத்துக்கு வேலைக்குப் போன, இந்தப் பாவிமகளுக்கு இருக்கற ஒத்தைக் கையோட செஞ்சுதர்ற வேலை யாருக்கும் புடிக்கலைடா கண்ணு..,ஆனா..”அவள் அழுது கொண்டே அன்றைக்கு என்னவோ சொன்னாள். சண்முகத் திற்கு அது சரியாகப் புரியவில்லை.‘வேலையைப் பற்றிக் கேட்டதால்தான் அம்மா அழுகிறாளோ..? இனி கேட்கக்கூடாது..,’முடிவு செய்தபடி,அவன் வேகமாக அதிரசங்களைக் காலிபண்ணிக் கொண்டிருந்தான். வடிவு சொன்னதுபோலவே,இப்போதெல்லாம் அவன் பள்ளி முடிந்து வரும்போதே அவள் வீட்டில்தான் இருக்கிறாள்.ஆனால்,அவன் அப்பாவைத்தான் பார்க்கவே முடிவதில்லை. இன்றைக்கு இரவு அப்பாவை எப்படியும் அவன் பார்த்துவிடுவான்.அந்த நினைப்பே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. பள்ளியில் மதியநேர வகுப்பில் தூங்கிக் கொண்டிருந்த மாரிமுத்துவை, “நல்லா அண்டா மாதிரி,குண்டாவிலே சோத்தைக் கொண்டு வந்து திங்கவேண்டியது..அப்புறம் கிளாசைக் கவனிக்காமல் தூங்கவேணடியது..எந்திரி..போய் கிரவுண்டை ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வா..”என்று கணக்கு டீச்சர் விரட்டியபோதுதான் சண்முகத்திற்கு இன்னொரு உண்மையும் புரிந்தது.வயிறு நிறைய சாப்பிட்டு விட்டால் நல்லாத் தூக்கம் வந்து விடுமோ..?, அன்று அவன் எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளவுமில்லை. அன்றைக்கு இரவு, அவனுக்கு மிகவும் பிடித்த உருளைக் கிழங்கு குழம்பு இருந்தபோதும்,பாதிச் சாப்பாட்டை வைத்துவிட்டு எழுந்தவனை வடிவு ஆச்சரியமாகப் பார்த்தாள்,“சம்முவம்.. ஏண்டா.. பாதிச் சோத்தை அப்படியே வெச்சிட்டே..என்ன புடிக்கலே உனக்கு..?” அவன் ஒன்றும் சொல்லாமல் போய்க் கைகழுவி விட்டு வந்தான்.டேய்..நான் கேட்டுகிட்டே இருக்கேன்..ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறே..?” “போம்மா..வயிறு நிறைய சாப்பிட்டா ரொம்பத் தூக்கம் வந்துடும்.அப்புறம் இன்னைக்கும் அப்பாவைப் பாக்காமயே நான் தூங்கிடுவேன்.நீ எப்பவும் போல என்னையும் எழுப்பமாட்டே..!” சண்முகம் சொல்லிக் கொண்டே போய், திண்ணை யில் உட்கார,வடிவின் முகத்தில் கலவரம் துளிர்த்தது. சில விநாடிகள் யோசனைக்குப் பிறகு.“சரி..கண்ணு.. வந்து படுத்துகிட்டே முழிச்சுட்டு இரு..எதுக்குப் போயி திண்ணையிலே உக்காந்துகிட்டு..? பூச்சி பொட்டு எதுனா வந்தாக்கூட தெரியாது.உள்ளாற வா சாமி..எங்கண்ணில்லே..” வடிவு கொஞ்சலான குரலில் கெஞ்சினாள். “சரிம்மா..” என்றபடி உள்ளே வந்த சண்முகம் தனது படுக்கையில் படுத்துக் கொண்டான்.அவன் மிச்சம் வைத்திருந்த சாப்பாட்டிலேயே மேலும் கொஞ்சம் சோற்றைப் போட்டுக் கொண்டு மெதுவாக உண்ணத் தொடங்கியிருந்தாள் வடிவு. இரவு மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. சுவர்க் கோழிகளின் சத்தத்தை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் வழக்கம்போல எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை. காலையில்,ஏதோ வழக்கத்துக்கு மாறான சப்தத்தைக் கேட்டு,திடுமென அவனுக்கு விழிப்பு தட்டியபோது, “சத்தியமாய் நான் எடுக்கலைய்யா..,நீ குடுத்த பணத்தைத் தவிர எங்கிட்டே வேற சல்லிப் பைசா இல்லை.நீ வேணா வந்து வீடு முச்சூடும் தேடிக்கோ.., வரும்போதே போதையிலேத்தானே வந்தே,பணத்தை எங்க போட்டீயோ..,போய் மத்த இடத்துலே தேடிப்பாரு.., ஈனப் பொழப்பு நான் பொழச்சாலும்,எவங்கிட்டேயும் திருடுற பொழப்பு எனக்கில்லே..,இதுவரைக்கும் எவனும் எம்மேல இப்படி பழியும் போட்டதில்லே..!” வடிவுதான், வாசப்படியில் நின்றிருந்த அந்த மனிதனிடம் கத்திக் கொண்டிருந்தாள். அவன் சில விநாடிகள் அவளையே பார்த்தபடி நின்றிருந்துவிட்டு.ஏதோ முனகியபடியே மெதுவாய் நகர்ந்து போவது தெரிந்தது. அதற்குப் பிறகு சண்முகம் ஏனோ அப்பாவைக் கேட்கவுமில்லை,பார்க்கவும் ஆசை தோன்றவில்லை..! -------------------------

பிறந்த நாள் –சிறு கதை-பொள்ளாச்சி அபி

பிறந்த நாள் –சிறு கதை-பொள்ளாச்சி அபி நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..! கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது. பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட்டியின் பிறந்தநாளை இந்த வருடம் அமர்க்களப் படுத்திவிட வேண்டுமென்று எனக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே தோன்றிவிட்டது. மனைவி அகிலா விடமும் சொல்லியிருந்தேன். “உங்களுக்கு சிரமமில்லாத பட்ஜெட்டுனா.., எனக்கென்ன ஆட்சேபனை..?” என்றாள் அகிலா. வழக்கத்துக்கு மாறாக ஷாலினிக்கு மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிய உடைகள் வாங்க,சில ஆயிரங்களை தாராளமாக மனைவியின் கைகளில் திணித்துவிட்டு, மாலையில் கேக் வெட்டியபின் நடைபெறும் விருந்தில்,நண்பர்களின் வசதிக்காக சைவம், அசைவம் என இரண்டு வகைக்கான மெனுவையும் சொல்லி விட்டேன். அகிலாவிடம் திட்டத்தை மட்டும் சொல்லி விட்டால் போதும்..கச்சிதமாக நமது கையைக் கடிக்காமல்,முடிந்தவரை சிறப்பாக எதனையும் செய்யக் கூடியவள்.இல்லாவிட்டால் நான் சம்பாதிப்பதை வைத்துக் கொண்டு,ஏழு பேர் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தை சமாளிக்க முடியுமா என்ன..? மாலையில் அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது, அகிலா போன் செய்தாள்.எல்லாருக்கும் புது டிரஸ், விருந்துக்கு வேணும்கிற காய்கறிகள், சாக்லேட்.. எல்லாம் வாங்கிட்டேன், சிக்கனும்,பர்த்டே கேக்கும் ப்ரெஷ்ஷாக,காலையில் நீங்க போய் வாங்கிருங்க.., அப்புறம்,வீட்டிற்கு வரும்போது அந்த பேக்கரியில், நல்ல கலர் க்ரீம்லே,ஹேப்பி பர்த் டே டூ ஷாலினி என்று மறக்காமல் எழுதச் சொல்லுங்க..!” “சரி..சரி..”என்று அவளுக்கு பதில் சொல்லிவிட்டு, தொடர்பை துண்டித்தேன். எப்படியிருந்தாலும் எனது நண்பர்கள்,ஷாலினிக்கு பரிசாக பொம்மைகள் மற்றும் விளையாடடுப் பொருட்களை வாங்கி வருவார்கள். ஆனால்,நான் ஏதாவது அவளுக்கு வித்தியாசமாக வாங்கித்தரவேண்டும்.என்ன வாங்கலாம்..? ஷாலினிக்கு என்ன பிடிக்கும்..?’ சில நிமிடங்கள் யோசித்தபின்னும் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அகிலாவைக் கேட்கலாமா..? ஒரு தாயாய் இருக்கும் அவளுக்கு,குழந்தையின் விருப்பு, வெறுப்பு எல்லாம் தெரியும்தான்..,தந்தையாக இருக்கும் எனக்கு..?’ நினைத்தபோதே வெட்கமாக இருந்தது. அடக் கஷ்டமே..இதென்ன சோதனை..? தனது குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்று அவளுடைய தந்தைக்கு தெரியவில்லை என்பது எவ்வளவு பெரிய அவமானம்..! வரும் தேர்தலில்,எந்தக் கட்சி,எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்.? மோடி பிரதமராகி விடமுடியுமா..? ராகுல் இதுவரை என்னவெல்லாம் செய்தார்.? ஜெனிவா மாநாடு வெற்றி பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்..? ராஜபக்ஷே வின் இறுமாப்பிற்கு என்ன காரணம்..? உலகம் வெப்பமயமாகி வருவதை எப்படியெல்லாம் தடுப்பது..? என்று அலுவலக நண்பர்களுடன் சகட்டுமேனிக்கு விவாதிக்க முடிகிறது.., ஆனால்,குழந்தைக்கு என்ன பிடிக்கும்..என பட் டென்று ஒரு முடிவிற்கு வரமுடியவில்லையே..? சே..என் மீதே எனக்கு சற்று வெறுப்பாய்த்தான் இருந்தது.இதன் மூலம் நமது குடும்பத்திலிருந்து வெகுதூரம் விலகி இருக்கிறோமோ.., என்று வருத்தமாயும் இருந்தது. ஏதோவொரு வெறுப்பு மனதைக் கவ்வ, ஓட்டிக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை பேசாமல் ஓரங்கட்டி நிறுத்திவிட்டேன்.சில விநாடிகளில் சலசலவென்று பேச்சுக் குரல்கள் மிக சமீபமாய்க் கேட்டது.திரும்பிப் பார்த்தேன்.பொள்ளாச்சி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் கூட்டம் ஒன்று என்னைக் கடந்து கொண்டிருந்தது. அதிலொருவர் தனது பெண் குழந்தையை தோளில் தூக்கி அமரவைத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்.குழந்தை குனிந்து தந்தையின் காதில் ஏதோ சொல்வதும், பதிலுக்கு வெடிச்சிரிப்புடன் அவர் ஏதோ பதில் சொல்லிவிட்டு, தனக்கு அருகாமையில் நடந்து வரும் ஆண்கள்,பெண்களிடமும், “கேட்டியா..எம் பொண்ணு சொல்லுறதை..? என்று அவர் ஏதோ சொல்ல,மற்றவர்களும் பலத்த ஓசையுடன் சிரித்துக் கொண்டே நடந்தனர்.அவர்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பொறாமையாக இருந்தது. என்றைக்காவது இப்படியொரு நெருக்கமான நேரத்தை எனது குழந்தையுடன் செலவிட்டிருக்கிறேனா..? இருள் லேசாகக் கவியத்துவங்கியிருந்தது. வாகனத்தின் பெட்ரொல் டேங்க் கவர் மீது, ஏதோவொரு பறவையின் எச்சம் விழுந்து தெறித்தது. அனிச்சையாக மேலே பார்த்தேன். பறவைகள் கூட்டமாகவும்,தனியாகவும் தங்கள் கூடுகளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன. பறவைகள்..ஆகா..பறவைகள்..,சட்டென்று எனக்குள் ஏதோ பொறி தட்டியது. அகிலாவின் அம்மா கொடுத்த மரத்தொட்டிலில்,ஷாலினியை முதன் முதலாக போடும்போது,அவள் பார்வையில் படும்படியாக,பச்சையும் சிகப்புமான வண்ணங்களில் கிளிகளும்,புறாக்களுமாயிருந்த ஒரு பிளாஸ்டிக் பொம்மை ராட்டினத்தை தொட்டிலின் குறுக்காய் சென்ற விட்டத்தில் கட்டிவிட்டது நினைவுக்கு வந்தது.சலசலவென்று சப்தமிட்டுக் கொண்டு அவை காற்றில் சுழன்று கொண்டும்,ஆடிக் கொண்டும் இருப்பதைப் பார்த்தால் போதும்,எதற்காக அழுது கொண்டிருந்தாலும், நிறுத்திவிடுவாள் குழந்தை. முகத்தில் சிரிப்பும் குதூகலமும் வந்துவிடும். அவள் சற்றே வளர்ந்த பிறகும் கூட,வீட்டிற்கு நான் வாங்கிச் செல்லும் வாராந்திர பத்திரிகைகள் சிலவற்றில் வரும் பறவைகளின் படங்களைச் சுட்டிக்காட்டி,அகிலாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பாள்.அகிலாவும் காக்கா.. புறா..குருவி..கொக்கு..கிளி..என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பாளே..! பின்னாளில் கையில் கிடைத்த பென்சிலைக் கொண்டு,அவள் முதன்முதலில் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கூட, காக்காவும்,குருவியுமாக இருக்கிறதென்றே தனது மழலை மொழியில்,கூறிக் கொண்டிருப்பாள். அகிலாவும் "ஆமாம் சாமி" போட்டுக் கொண்டிருப்பாள்.இவற்றையெல்லாம் ஒரு வேடிக்கையாக மட்டுமே பார்த்துப் பழகியிருந்த நான்,அவளுக்கு பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை இத்தனை நாளாகக் கவனத்தில் கொள்ளாமலேயே போயிருக்கிறேனே..! எனக்குள் இப்போது ஒரு தெளிவு பிறந்துவிட்டது போல இருந்தது.அகிலா சொல்லியிருந்த வேலை களை முடித்துவிட்டு,வாகனத்தை அபார உற்சாகத்துடன் வீட்டிற்கு விரட்டினேன்.அனிமல் பிளானெட் சேனலில்,ஏதோ ஒரு அழகான வெளிநாட்டுப் பறவையின் கதை ஓடிக் கொண்டிருந்தது.ஷாலு மிகவும் உன்னிப்பாக அதனைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். மறுநாள் காலை,எனக்குள் பரபரப்பு மிகுந்திருந்தது. சிக்கனை வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு,பர்த்டே கேக்கை மாலை நான்கு மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள் என்று அகிலாவிற்கு தகவலைச் சொல்லிவிட்டு,உடனடியாக வெளியே கிளம்பினேன். “என்ன திரும்பியும் கிளம்பிட்டீங்க.., ஏதாவது அவசர வேலையா..?”அகிலா கேட்டாள். “முக்கியமாக ஒன்றும் இல்லை.இதோ இப்போது வந்துவிடுகிறேன்..,”வேகமாக வாகனத்துடன் வெளியேறினேன். பத்து நிமிடங்களுக்குள் பொள்ளாச்சி சந்தையை எட்டினேன்.“லவ் பேர்ட்ஸ் விக்குற கடை எங்கிருக்கு..?” இரும்பு வியாபாரி ஒருவரைக் கேட்டபோது, ஒரு சந்துக்குள் கையைக் காட்டினார்.குறிப்பிட்ட கடைக்கு சென்றபோது,அது பூட்டப்ட்டிருந்தது.இந்தக் கடையை எப்போ திறப்பாங்க..? அருகிலிருந்தவரைக் கேட்டேன். அவர் மேலும்,கீழுமாக என்னைப் பார்த்தார். அவருக்கு என்மேல் என்ன சந்தேகமோ..? “நீங்க ஃபாரஸ்ட் டிபார்;ட்மெண்டா..?” “இல்லே..வீட்லே வளக்கறதக்கு லவ் பேர்ட்ஸ் வாங்கலாமின்னு வந்தேன்” மேலும் சில விநாடிகள் அவர் என்னை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, “லவ் பேர்ட்ஸ் எல்லாம் விக்கக் கூடாதுன்னு, ஃபாரஸ்ட்காரங்க,அன்னைக்கு ரெய்டு பண்ணி அவருக்கு ஃபைன் போட்டுட்டாங்க தம்பி, அதுலேருந்து இந்தக் கடையை சாத்திட்டு, வீட்டுலேதான் வெச்சு ரகசியமா விக்குறார். மயில்சாமி அண்ணன் சொல்லி விட்டாருன்னு, போய் சொல்லி வாங்கிக்குங்க..”என்றபடியே ஒரு முகவரியையும்,செல் நம்பரையும் அவர் கொடுத்தார்.அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினேன். குறிப்பிட்ட முகவரிக்கு சென்று அங்கிருந்தவரிடம் விபரங்களைச் சொன்னேன்.அவரும் தனது வீட்டிற்குப் பின்புறம் அழைத்துச் சென்றார். அங்கு சிறிதும் பெரிதுமாக நான்கு கூண்டுகள் இருந்தன.அவற்றில் என் வீட்டு சமையலறையின் அளவில்,ஒரு மிகப் பெரிய கூண்டு இருந்தது. அதற்குள் சிறிய அளவிலான ஓட்டைப் பானை களும், செயற்கையான மரக்கிளைகளும் அமைக்கப் பட்டிருந்தன.சிறு தானியங்கள் ஏராளமாய் சிதறிக் கிடந்தன.விதவிதமான வண்ணங்களில், தோற்றங் களில்,நூற்றுக்கும் மேற்பட்ட லவ்பேர்ட்ஸ்கள், இணையாகவும், தனியாகவும் அதற்குள்ளேயே பறந்து பறந்து அமர்ந்து கொண்டிருந்தன. சில ஜோடிகள் ஒன்றையொன்று அலகால் கோதிக் கொண்டிருந்தன.பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது. மற்ற கூண்டுகளில், வெள்ளை,கறுப்பு, சாம்பல் நிறங்களில் ஏராளமான புறாக்கள், குடுகுடுவென்று விநோதமாக சப்தமெழுப்பிக் கொண்டிருந்தன. லவ் பேர்ட்ஸில் இரண்டு இணைகளும், புறாக்களில் ஒரு ஜோடியையும் சுட்டிக்காட்டி, விலையைக் கேட்டேன்.அதற்கான கம்பிக் கூண்டுகளையும் சேர்த்து அவர் சொன்ன விலை, நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. வீட்டுக்கு சென்றபின் இதனைப் பிரித்துக் கொள்ளுங்கள் என்றபடியே,அந்த இரண்டு கூண்டுகளையும், காகிதங்களால் மறைத்துக் கட்டிக் கொடுத்தார்.எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.’பறவைகள் விற்பனை என்பது இவ்வளவு ரகசியமானதா..?’ வாகனத்தின் முன்புறம் அந்தக் கூண்டுகளை வைத்தபோது,அவற்றின் உயரமும்,அகலமும் சற்று அதிகப்படியாக தெரிந்தது. இருந்தாலும் சமாளித்து ஓட்டிக் கொண்டு சென்று விடலாம் என்று தோன்ற.., அதனை பத்திரமாக எடுத்துக் கொண்டு,கிளம்பினேன். இதுவரை வெறும் படங்களாகவே பார்த்துக் கொண்டிருந்த பறவைகளை,உயிருடன் பார்க்கும்போது,ஷாலுக்குட்டியின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை,மனதார ரசிக்க வேண்டும். தனது குழந்தைக்கு பிடிப்பதை,ஒரு தந்தையாய் செய்துவிட்ட மகிழ்ச்சியை பூரணமாக அனுபவிக்க வேண்டும்.வழியெல்லாம் எனது யோசனை இப்படித்தான் ஓடிக் கொண்டிருந்தது. ஒருவழியாக பத்திரமாக அவற்றை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டேன்.அகிலாவிற்கு ஒரே ஆச்சரியம்.. “இது என்ன இவ்ளோவ் பெரிய பார்சல்..? என்று கேட்டபடியே,அவற்றை இறக்கிவைக்க உதவி செய்தாள். “இரு சொல்றேன்..ஷாலுவைக் கூப்பிடு.இது அவளுக்கு,என்னோட பர்த் டே பிரசண்ட்..” அதனுள்ளிருந்து எழுந்த லவ்பேர்ட்ஸின் கீச்..கீச்..ஒலியை வைத்து..,“என்னங்க இது பேர்ட்ஸா..?” என்றாள். ஆமா..ஆனா பாப்பாகிட்டே சொல்லாதே..அவளைக் கூப்பிட்டு வெச்சு,இதை திறந்து காட்டலாம்..” என்றபடியே..ஷாலு..ஷாலு..என்று கூப்பிட்ட குரலுக்கு,வாசல்படிக்கு ஓடிவந்தாள் குழந்தை. “இங்க வா..உன்னோட பர்த்டேக்கு,டாடி என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..!” “என்னப்பா..இது இவ்ளோவ் பெருசா..? எங்கே காட்டு..” குழந்தையின் கண்களில் ஆவல் மின்னியது. அவளைப் பார்த்துக் கொண்டே,கூண்டுகளைச் சுற்றியிருந்த காகிதங்களை பரபரவென்று பிரித்தேன். உள்ளே,மஞ்சளும்,கறுப்பும்,பச்சையுமாக வண்ணங்களைக் காட்டிக் கொண்டிருந்த பறவைகள் புதிய இடத்தை மிரட்சியுடன் பார்த்தபடி முன்னிலும் அதிகமாக ஒலியெழுப்பின. அதே போல் புறாக்களும் தங்கள் கூண்டுக்குள் வேகமாக குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தன. நான் ஷாலுக்குட்டியைப் பார்த்தேன்.அவள் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ”அப்பா..இது லவ் பேர்ட்ஸ்தானே..? இது புறா தானே..? பறவைகளை இனம் கண்டு கொண்ட மகிழ்ச்சி அவளது குரலில் இருந்தது.மிக அருகாமை யில் பறவைகளை உயிருடன் பார்க்கின்ற ஆச்சரியமும் அதில் தொனித்தது. “உனக்குப் பிடிச்சுருக்கா..?. “ பேர்ட்ஸ்ஸெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப்பா..!” சொல்லியபடியே வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். அப்பாடா..இப்போது எனக்குள் அளவுகடந்த மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. இன்னும் அவள் பார்வை,பறவைகளின் மீதே இருந்தது. “அப்பா..அதையெல்லாம் திறந்து விடுப்பா..!” “அச்சச்சோ..திறந்துவிட்டா எல்லாம் பறந்து போயிடும்..நம்ம வீட்டுக்குப் பின்னாடியே, கூண்டுகளையெல்லாம் வெச்சு இதுகளை வளர்க்கலாம்.” கைகளைக் கட்டியபடி, ஒய்யாரமாய் நின்று நாங்கள் பேசிக் கொண்டிருப்பதை,அகிலா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஷாலுக்குட்டி,இன்னும் கூண்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் கழிந்தது. கட்டிக் கொண்டிருந்த எனது தோளிலிருந்து,மெதுவாய் தனது கைகளை விடுவித்துக் கொண்டாள் ஷாலு. நேராக லவ்பேர்ட்ஸ் இருக்கும் கூண்டுக்கு அருகில் சென்று,என்னைத் திரும்பிப் பார்த்தாள். “அப்பா..நீ பக்கத்துலே வரக்கூடாது.அங்கியேதான் நிக்கணும்..”என்றபடியே சடாரென்று அதன் கூண்டுகளைத் திறந்துவிட்டாள். இதற்காகவே காத்திருந்தது போல லவ்பேர்ட்ஸ்கள் விருட்டென்று கூண்டைவிட்டு வரிசையாக வெளியே பறந்தன.அதே விநாடியில் புறாக்கள் இருந்த கூண்டுகளையும் திறந்து விட்டாள்.இவள் என்ன செய்யப் போகிறாள் என்று எனக்கு உறைக்கும் முன்பே,அது நிகழ்ந்து போனது. “டேய்..டேய்..என்ன செய்யுறே..அதை ஏம்பா..திறந்துவிட்டே..? இப்ப லவ் பேர்ட்ஸ் எல்லாம் பறந்து போயிடுச்சு பாரு..!” என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போதே, கூண்டை விட்டு,வெளியில் வந்து தயங்கி நின்று கொண்டிருந்த புறாக்களையெல்லாம், ச்சூ..ச்சூ. . என்று அவள் விரட்டிவிட அவையும் பறந்து சென்று,சில விநாடிகளில்.கண்களுக்கு தெரியாமல் மறைந்து போனது. அவள் திட்டமிட்டுத்தான்,பறவைகளையெல்லாம் திறந்துவிட்டிருக்கிறாள் என்று எனக்கு இப்போது நன்றாகவே உரைத்தது. “ஏம்மா..உனக்கு பேர்ட்ஸ்கள் ரொம்பப் பிடிக்குமே..!” “ஆமாம்ப்பா..எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலத்தான் திறந்துவிட்டேன்.”அவள் சொன்னதை இன்னொருமுறை எனக்குள் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டேன்.அந்த வார்த்தைகளில் நிறைய அர்த்தம் இருப்பது, இப்போது தெரிந்தது. ஒன்றுமே நடவாதது போல சாதாரணமாக வீட்டுக்குள் சென்று,சிலவிநாடிகளில் திரும்பிய ஷாலுவின் கைகளில்,ஒரு சிறிய வேப்பமரக் கன்று இருந்தது. “அப்பா..ஒண்ணும் கவலைப்படாதேப்பா.. இந்த மரத்தை நம்ம வீட்டுக்குப் பின்னாலே நட்டுவோம்.இது கொஞ்சம் பெருசாயிடுச்சுனா.., இப்போ பறந்துபோன புறா மாதிரி,நிறையப் பேர்ட்ஸ் இதிலே வந்து கூடுகட்டும்.அப்ப உனக்கு காட்டுறேன் என்னப்பா..!”என்று என்னை சமாதானப் படுத்தும் குரலில் அவள் சொன்னதைக் கேட்டு,நான் விக்கித்துப் போனேன்.அகிலாவின் முகத்தில் பெருமிதத்தால் பொங்கும் புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. எல்லா நேரங்களிலும் குழந்தைகள் குழந்தைகளா கவும், பெரியவர்கள் பெரியவர்களாகவும் இருப்பதில்லை..என்று புரிந்து கொண்டு, அன்றைக்கு நானும் புதிதாய்ப் பிறந்திருந்தேன்..!

அவரது சொந்தங்கள்..! சிறுகதை- பொள்ளாச்சி அபி

சூரியன் மறைந்து கொண்டிருந்த நேரம்.., “இதோ அழுதுவிடுவேன்..” என்பதைப்போல,வானம் தன் முகம் கறுத்து நின்றிருந்தது. அதனை உறுதிப் படுத்துவது போல,மேற்குத்திசையிலிருந்து ஈரத்தை சுமந்து வந்துகொண்டிருந்தது காற்று. பிரதான சாலையைவிட்டு சற்றே உள்ளொடுங்கி, வாசலில் மயங்கும் வெளிச்சத்துடன் நின்றிருந்த அந்தப் பெரிய வீட்டுக்கு முன்பாக,பல வண்ணங்களில் பூத்து சிரித்துக் கொண்டிருந்த மலர்கள்,இப்போது தரையில் உதிரப் போகும் நேரத்தையெண்ணி திகிலில் உறைந்திருந்தன. இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர் களும் கைவிட்ட நிலையில் தனது மரணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கும் பிரபல சிறுகதை எழுத்தாளர் ஞானபாரதியை வைத்த கண் மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா.., அந்த அறையில்,அரைமயக்கத்தில் கிடந்த அவரிடமிருந்து அவ்வப்போது எழும் முனகல்களுக்கு செவி சாய்த்தபடி,அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான் மாரியப்பன். பொங்குகின்ற துக்கத்தை அடக்க முடியாமல், தோளில் கிடந்த துண்டால் வாயைப் பொத்தியபடி சத்தமின்றி அழுதுகொண்டிருந்த அவன்.., ஞானபாரதிக்குசகோதரனாகவும்,சமையல்கார னாகவும்,வேலைக்காரனாகவும்.., சில சமயம் தாயுமானவனாகவும் இருப்பவன். அந்த அறையின் வாசலில் நிழலாடியது.கௌசி திரும்பிப் பார்த்தாள்.மஞ்சுளா உள்ளே வந்து கொண்டிருந்தாள்.ஞானபாரதி கிடந்த கட்டிலின் அருகே சென்று நின்றவளுக்கு,இளைத்துக் கருத்துக் கிடந்த அவரின் கோலம் மனதை மிகவும் துயரப் படுத்தியிருக்க வேண்டும்..,மளுக்கென்று அவள் கண்களில் நீர் திரண்டு,கன்னங்களில் வழிவது தெரிந்தது. முதுமை தன்னை அண்டிவிடக்கூடாதென இவருக்குத்தான் எவ்வளவு ஆசையிருந்தது. தினமும் முகத்தை மழித்துக் கொண்டு, இளைஞர் களைப் போல உடைகளை அணிந்து கொள்வதும், அதிகாலையிலும்,மாலையிலும் நடைப்பயிற்சி, லேசான உடற்பயிற்சியென நாட்களைக் கடத்தியதும், எப்போதும் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள பயிற்சிகள் பயன்படுகிறது என்றும் சொல்லிவந்தவர்,அவை எதுவுமே பயனளிக்காத நிலையில்,இப்போது அசைவற்றுப் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க.., மஞ்சுளாவுக்கு கண்ணீரை அடக்கவே முடியவில்லை. ‘அறுபது வயதில் அகால மரணத்தின் கைகளில்,தன்னை ஒப்படைத்துக் கொள்ள அப்படியென்ன அவசரம் இவருக்கு..? மஞ்சுளாவின் மனதிற்குள் ஞானபாரதியின் கடந்த காலங்கள் கோலமிட்டன. மஞ்சுளாவின் கேள்விகளுக்கான பதில்கள், கௌசியின் மனதிற்குள்ளும் ஓடின. ‘அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாமே அவசர அவசரமாய்த்தான் நடந்தேறியுள்ளது. மணவாழ்க்கை, புகழ்,பணம்..அந்த வரிசையில் மரணமும்..?’ அவர் எழுதிய முதல் சிறுகதையில் அவள்தானே கதாநாயகியாக இருந்தாள்.அவளுடைய வாழ்க்கையில் சுழன்றாடிய சமூகசிக்கல் ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்தச் சிறுகதை, பிரபலமான வாரப் பத்திரிகையொன்றில் வெளிவந்தபோது அவருக்கு வயது இருபத்தைந்து.அந்த ஒரே கதையின் மூலம் தமிழகஅளவில் அவருக்கு பரவலான அறிமுகம் கிடைத்தது. அதற்குப் பின் பல்வேறு இதழ்களிலும் அவரது சிறுகதைகள் ஏராளமான அளவில் வெளியிடப்பட்டதும்,பல பதிப்பகங்கள் அவரது சிறுகதைத் தொகுப்புகளை போட்டி போட்டுக் கொண்டு பதிப்பித்ததும், தமிழகத்தின் பரபரப்பான இலக்கிய வரலாறாகவே அமைந்துவிட்டது. தொடர்ந்த அவரது எழுத்துக்களில் பாத்திரங்கள் உயிர்பெற்று எழுந்துவந்து சமூகத்தோடும், தனிமனிதர்களோடும் உறவாடின.அந்தப் பாத்திரங்கள், தங்களுக்கிருந்த இயல்புகளை வெளிப்படுத்தியதன் மூலம், ஞானபாரதியையும் பிரபல எழுத்தாளர்களில் ஒருவராக மாற்றின. அவரது முப்பத்தைந்து வயதுக்குள்,புதுமைப் பித்தன்,கு.அழகிரிசாமி,கு.ப.ரா,ஜெயகாந்தன்,மேலாண்மை பொன்னுச்சாமி..., என்று இலக்கிய உலகம் கொண்டாடும் கதாசிரியர்களின் வரிசையில் ஞானபாரதியின் பெயரும் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது.அதற்கு சாட்சியாக இதுவரை இரண்டுமுறை சாகித்ய அகாடமி விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன. இதனிடையே,ஒரு கல்லூரியில் நடைபெற்ற இலக்கியவிழாவில் அவனோடு அறிமுகமாகி, காதலை வளர்த்துக் கொண்டு,கைப்பிடித்து மனைவியான வித்யா.., முதல் பிரசவத்தின்போதே தாயும்,பிள்ளையுமாகப் போய்ச்சேர்ந்தாள். தனது சிறுகதைகளில்,எத்தனையோ பாத்திரங்களை பிறப்பித்து மக்கள் நடுவே வாழவைத்தவர்..தனது மனைவியையும்,பிள்ளையையும் பிழைக்கவைக்க முடியாத சோகம் அவர் நெஞ்சை ஓயாமல் அறுத்துக் கொண்டிருந்தது.அதற்குப் பின் அவர் வேறு திருமணமும் செய்து கொள்ளவில்லை. முப்பதாண்டுகள் ஓடிவிட்டன.அவருக்கு வெளியிலிருந்த புகழைப்போலவே, உடலுக்குள்ளும் வளர்ந்துவந்த இரத்தப் புற்று நோய்.. இதோ உச்சத்தை எட்டிவிட்டது. மருந்துகளும், மாத்திரைகளும் இதுவரை மரணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தனவே தவிர,அவரை அதிலிருந்து விடுவிக்கத் தயாராயில்லை. இயற்கையை வெல்ல யாரால் முடியும்..?’ கௌசியின் மனதை ஆயாசமே நிரப்பியது. ஊர்க்கவுண்டர் ராமசாமியும்,பறையடிக்கும் சின்னானும் ஒன்றாக அந்த அறையினுள் நுழைந்தனர்.அவர்களுக்குப் பின்னே..,ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டாலும், பரஸ்பரம் இருவரின் நலனுக்காகவும் அக்கறை கொள்ளும் தம்பதிகள் சுமித்ராவும்,ஜெயபாலனும்.., போராட்டமே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் சங்கரய்யா..,பதவியில் இருந்தாலும் இல்லா விட்டாலும்,மக்களின் நலனை மட்டுமே சிந்திக்கும் அதிசயமான அரசியல்வாதி கணேசலிங்கம், இப்போது ஒழுங்காகப் பள்ளிக் கூடம் போகும் சிறுமி கல்பனா, ஆசிரியரிடம் ஓயாமல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ரவி, இன்னும்.., பாதிரியார் ஓசேப்பு,கோபக்காரன் மனோகரன், கோடங்கி சிவனான்டி, பாலியல் தொழிலாளி காமாட்சி, வாத்தியார் அப்துல்லா, என தொடர்ந்து நூற்றுக் கணக்கில் வந்து கொண்டேயிருந்தவர்களால் அந்த அறையும் மெதுவே நிரம்பிக் கொண்டிருந்தது. வெவ்வேறு இடத்தில் நின்று கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் பார்வையும் ஒட்டு மொத்தமாய் ஞானபாரதியின் மீதே குவிந்திருந்தது. தங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புகுந்து ஞானபாரதி செய்திருந்த மாற்றங்கள்.., முன்னேற்றங்கள்.., அதன் மூலம் தங்களது வாழ்க்கை,நிலைபெற்றது.., தாங்கள் செய்த தவறுக்காக அவர் சில சமயம் தண்டித்தது, மன்னித்தது என..பலவற்றையும் எண்ணி, சிலர் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பதும்,சிலர் கேவிக் கொண்டு இருப்பதும்,அதனைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருப்பதும் தெரிந்தது. ஆனால்..,எல்லோர் மனதிலும் ஞானபாரதியின் நிலை குறித்த துக்கமும்,கவலையும் மேலோங்கி இருந்தாலும், ‘ஒரு அதிசயம் போல திடுமென்று எழுந்து அவர் அமர்ந்து விடக்கூடாதா..? "எனக்கொன்றும் இல்லை..எதற்காகக் கவலைப் படுகிறீர்கள்..,!" என்று அவர் கேட்டுவிட மாட்டாரா.?’ என்ற ஆசையும் ஒருபுறம் இருந்ததை மறுக்கமுடியாது. ஞானபாரதி எழுதும் கதைகளிலும் அப்படித்தான்…வாசகனின் யூகத்தை எப்போதும் பொய்யாக்கும் வகையில்தான் அவரது கதைகள் திடுமென முடியும்.அது திடீர் திருப்பமாக இருக்கலாம்.இன்பக் கிளர்ச்சியாக இருக்கலாம். வாழ்வின் புதிய கோணமாக இருக்கலாம். சிலசமயம் அது அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கலாம். நிமிடங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. ஞானபாரதி, தனது வறண்டுபோன குரலில்,மெலிதாக முனகுவது கேட்டது,“தண்ணீர்..தண்ணீர்..”. ஞானபாரதியின் நிலை குறித்து பலருக்கும் தனது அலைபேசியில் தகவல் சொல்லிக் கொண்டிருந்த மாரியப்பன்,பாய்ந்து அவரருகில் வந்தான். ஞானபாரதியின் இடுப்புக்கும்,தோளுக்கும் கைலாகு கொடுத்தபடி மெதுவாய் அவரை சற்று உயர்த்தி தனது மடிமீது கிடத்திக் கொண்டான். அருகில் டீப்பாய் மீது இருந்த ஜாடியிலிருந்து தண்ணீரை கொஞ்சம்,கொஞ்சமாய்ப் புகட்ட..,மடக்..மடக்.., இரண்டு வாய்த் தண்ணீர் உள்ளே இறங்கியது. அதற்குப்பிறகு..,ஊட்டப்பட்ட தண்ணீர் வாயிலிருந்து வழிந்து,மாரியப்பனின் மடியை நனைத்தது..!.. “அய்யா...” மாரியப்பனின் குரல்,அதிர்ச்சியை வெளிப்படுத்தும் பேரோலமாய்.. இடியென அந்தப்பிரதேசத்தையே தாக்கியது. சூரியன் முழுதாக மறைந்து,கறுத்துப் போன மேற்குத் திசையிலிருந்து மழை வேகமெடுத்தது. அங்கிருந்த மலர்களும் இப்போது உதிர்ந்து விட்டன.அதுவரை அந்த அறையிலிருந்த மற்ற அனைவரும் சட்டெனக் காணாமல் போயினர்.! இனி அவர்கள் எந்தப் பாத்திரமாக,எந்தக் கதையில் வாழ்ந்து வந்தார்களோ..அங்கேயே மீண்டும் சென்றிருக்கலாம்..! ---------