05 ஏப்ரல் 2012

மனிதா..நீ



மனிதா..நீ
பிறந்தபோது பெற்றோருக்கு
மகிழ்ச்சியளித்தாய்..

வளர்ந்தபோது சொந்தங்களுக்கு
உறவளித்தாய்..

கற்றபோது நண்பர்களுக்கு
அன்பளித்தாய்..

மணந்தபோது மனைவிக்கு
வாழ்வளித்தாய்..

உன்பி;ள்ளை மதிக்கும்படி
தந்தையானாய்..

உனது குடும்பம்
உனது உறவுகள்
உனது நண்பர்கள்
என
ஒரு வட்டத்திற்குள்
உனது வாழ்க்கை..
இதுமட்டுமா வாழ்க்கை..?.

நீ கேட்காமலே பிறந்ததும்
அழைக்காமலே இறப்பதும்
நிச்சயிக்கப்பட்டவை..!

இதுவரை நீ மனிதனாக
இருந்தாயா..அது கேள்வியல்ல.

இறப்பிற்குப் பின் நீ
மனிதனாக வாழ்ந்த
வரலாறுகள் உனக்காக
காத்திருக்கின்றன.
வாழ்த்தவும் வணங்கவும்
சிலர் காத்திருக்கின்றனர்.
என்ன ஆச்சரியமா..?

வாழும்போது யாருக்கு
என்ன கொடுத்தாயோ..
வாங்கியவர்களின் நினைவில்
அது உண்டோ இல்லையோ..

ஆனால்
உனக்குத் தெரியாமல்
உன்னிடம் இருக்கிறது
மற்றவர்களுக்கான உயிர்..
நீ இறந்தபின்னென எழுது
இன்றே ஒரு உயில்
என் உடலை
தானம் செய்வதாக..!

உனக்கு என் சிரம்தாழ்ந்த
வணக்கங்கள்...!

02 ஏப்ரல் 2012

கரெண்ட் நியூஸ்




எந்த தேசத்திலும்
இல்லாத வகையில்,
தமிழக ஊடகங்கள்
மிகவும் அதிர்ஷ்டம்
செய்தவை..!

எப்போதுமே அவற்றில்
கரெண்ட் நியூஸ்தான்.!

என் திமிர்..!

பெண்ணுரிமை..
பெண்சமத்துவம்..
பெண்விடுதலை..,
எப்போதும் பேசுகிறது மனம்.!
ஆனால்,
சாலையில் செல்லும்போது
முந்திச்செல்லும் பெண்ணை
ஜீரணிக்க மறுக்கிறது
இந்த ஆண்மனம்..!

வண்டியை முடுக்கி
அவளைக் கடந்து
செல்லும்போது,
துச்சமாய் ஒரு
பார்வை பார்த்து
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அவளை அடக்கியே வைத்த
என் திமிரை மீண்டும்
ஒருமுறை நிரூபித்து
செல்கிறேன் “நான்.”

குழந்தை விளையாட்டு.!

“எப்பப் பாத்தாலும்
உன்னைப் படிக்கச்
சொல்ல மாட்டேன்.!

உனக்குத் தெரியாமே
உன் டிரஸ் அழுக்காயிட்டா
நான் உன்னை திட்டமாட்டேன்.

நீ ஸ்கூல்லேருந்து
வந்தவுடன் டெஸ்ட்
பேப்பரைக் காட்டுன்னு
கேக்கமாட்டேன்..!

இன்னும் என்னடி
விளையாட்டுன்னு.?
ஆறுமணிக்கே நான்
மிரட்டமாட்டேன்..!”

பொம்மைகளோடு விளையாடும்
என் குழந்தை.,
பெரியவர்கள் எப்படி
நடந்து கொள்ளவேண்டுமென
கற்றுக் கொடுக்கிறது.!

உனக்கான கவிதை.!

உனக்கான கவிதையாய்
ஒன்றை எழுதிவிட முடியுமென்று
எப்போதும் முயற்சிக்கிறேன்..!

இதுவரை எழுதியதெல்லாம்
உனக்கான கவிதையென்றே
தொடங்கியும் இருக்கிறேன்..!

எழுதியதையெல்லாம் திரும்ப
வாசிக்கும்போது..இது
உனக்கானது அல்ல
என்றே நான் தீர்மானிக்கிறேன்..!

எப்போதுதான்..
உனக்கான கவிதையிதுவென்று
எழுதப்போகிறேன்..?
ஆசையில் துடிக்கும் மனம்.
அது மட்டும்
நடந்துவிடவே கூடாதென
இன்னொருபுறம்
எச்சரிக்கையும் விடுக்கிறது.

காரணம்..,
உனக்காக எழுதப்பட்ட
கவிதையென ஒன்று
நிலைத்துவிடுமானால்..,

பின்னர்
கவிஞர்களுக்கென்ன வேலை..?

ஏணிகள் ஏறுவதில்லை..!

படிப்படியாய் இருந்து
படிப்படியாய் உன்னை
ஏற்றும் ஏணி..!

நீ
செருப்புடன்
செருக்குடன்
விருப்புடன்
வன்மத்துடன்
கோபத்துடன்

மிதிக்கலாம்.
ஏறலாம்..

அது மட்டுமல்ல
எப்போதும் உன்னை
இறக்கியும் விடாது
நீயாய்..
இறங்கும் வரை..,

ஆனாலும்
எல்லோரையும் ஏற்றிவிடும்
ஏணிகள் எப்போதும்
தன்னிடத்தை விட்டு
மேலே ஏறுவதில்லை..!
ஏன்..?
ஏணிகள் என்றும்
ஏணிகளாகவே இருப்பதுதானே அழகு.!

அதனால் அன்பே..,

படம் பார்த்து கவிதை சொல்
என்றாய்..!
புடம் போட்ட மனமாவென்ற
சோதனையா.?
இடம் பார்த்து உனைவென்ற
சாதனைக்கு மகிழ்வில்லை.
உன்னிடம் எனக்கெப்போதும்
தோல்வியுமில்லை.!

அழிந்துவிடும் அழகிலெனக்கு
நம்பிக்கையுமில்லை.
நலிந்துவிடும் இதனால் நமதன்பு
என்ற பயமுமுpல்லை..

உன்முகவரிகள் சுருக்கங்களென
நினைக்கவில்லை.
வாழ்க்கை அனுபவச் சுருக்கங்களின்
முகவரிகள் அதுவென்பேன்.

பிறந்தநாள் பிறக்கும்போதெல்லாம்
கடக்கிறேன் வயதையென
கவலையெதற்கு உனக்கு
அன்றெல்லாம் பதிதாய்நீ
பிறக்கிறாய் என்பேள்.

நட்பென்பது காதலைவிட
பெரிய ஆலமரம்.
அந்தக்காதலுடன் கிடைத்த
நட்பு நீ..பெரிய வரம்..!

ஊடலுடன் கூடுவது நமக்கு
வழக்கமல்ல..
கூடலற்ற ஊடல்கள் நமக்கு
புதியதுமல்ல…!
அதனால் அன்பே..,

நீயாக இருக்கும் என்னை
நிழலாக நினைக்கமாட்டாயா..?

இதுதான் உனக்கு பதில்.!

கடையில் வாங்கினாலும்
கிடைக்காது..!
எடையில் நிறுத்தினாலும்
அளவிடமுடியாது..!

உடையின் பகட்டில் அது
விளையாது..!
இடையைக் கண்டும் அது
மயங்காது..!

மடையை உடைத்துப்
பொங்கும் அது..!
நினைக்கும்போதே மயக்கம்
தரும் மது.!

படையை நிறுத்தினாலும்
பயக்காது..
தடையே விதித்தாலும்
செழிக்கும் அது..!



அதனை
நீ காதலென்பாய்..நான்
கவிதை என்பேன்.!

எனது முகமூடிகள்.!

அதிகாலைப் பனித்துளியில்
தாகம் தீர்த்துக்கொள்ள-தன்
கோடிக் கைகளை நீட்டிக்
கொண்டிருந்தான் கதிரவன்.

புள்ளினங்கள் மெதுவே
மெதுவே சோம்பல்முறித்தபடி
தம் இறக்கைகளை விரித்தபடி
சிக்கெடுத்துக் கொண்டிருந்தன.

அவற்றின் அமைதியைக்
கெடுக்க மனமில்லாமல்
ஆடாமல் பார்த்துக் கொண்டன
தம் கிளைகளை,மரங்கள்.

உடல்இளைப்பதற்காக
சர்க்கரையைக் குறைப்பதற்காக
நடப்பதும்,சிலர் ஓடுவதுமாக
பூங்காவில் நிறைந்தது சந்தடி.

செய்தித்தாள்கள்,இன்று
எங்கும்குண்டு வெடிக்கவில்லை
என்றபடி தரைக்கும்,மாடிக்குமாக
பறந்து கொண்டிருந்தன.

எல்லாம் இயல்பான வகையில்
இன்னொரு நாளும் விடிகிறது.
வழக்கம்போல் எனது
முகமூடிகளைக் காட்டி
ஏமாற்றவும்,ஏமாறவும்
நானும் கிளம்பிவிட்டேன்

என்னிடம்
சிரிப்பு,கோபம்,ஆற்றாமை
அங்கலாய்ப்பு,வருத்தம்
பாசம்,வலி,கேலி,என
பலவித முகமூடிகள் உண்டு..,
என்ன ஒரு சிரமம்
நினைத்தால் உடனே
அதைக் கழட்டமுடியாது.
அது எப்போதும்
என் முகத்தோடுதான்
ஒட்டிக்கொண்டிருக்கிறது.

பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்
அதுதான் என் முகமென்று..!

சொல்ல வார்த்தையில்லை.!

இசைகேட்டு மயங்கும் உன் செவிகேட்கவே
மயக்கம்தரும் இசையொன்றை நான் பாடவா..
எழுதும் உன் கவிதைக்கு கருவாகவே..
என்வாழ்க்கை அனுபவத்தை நான் சொல்லவா..!

உன்போல்தான் பிறந்தேன்.உன்போல்தான் வாழ்ந்தேன்
உறங்கியெழுந்த ஒருபொழுதில் அதுகனவானது
வானிலிருந்து பொழிவது மழை மட்டுமேயென்ற
என்நினைப்பு அன்றேதான் தவிடுபொடியானது..!

குண்டுகள் பொழிந்த என்வீடு குப்பைமேடானது
குழந்தைகளுடன் ஓடினோம் புதர்களைநோக்கி
விதியின்கையில் விதி விலக்கில்லாததுபோல்
எங்களை கொடூர விமானம் துரத்தியது.

பாதுகாப்பிடம்தேடி அரசுகாட்டிய இடத்தில்
அனைவரும் எம்போல் புகுந்தோம் தஞ்சம்
அங்குநாங்கள் பட்டதுன்பம்..நரகமே கொஞ்சம்
மருந்தும் உணவுமில்லை உயிருக்கு மதிப்புமில்லை

இரவில் வந்தது ராணுவம் அரக்கர்போல
என்னையொருபுறம் மனைவியை அந்தப்புரம்
இழுத்துச் சென்றனர் இம்சைப்படுத்தி
விசாரணை துவங்கியது முன்னரெழுதிய தீர்ப்பின்படி

இருகால்களுக்கும் இடைவெளிவிட்டுக் கட்டி
கைகளைக் கட்டி,கண்களை கட்டி
ஈரம் உறைக்கும் நதியின் ஓரம்
மந்தைகள்போல சென்றனர் விரட்டி

இரவின் வருகைக்காக காத்திருப்பென்றே
எண்ணியிருந்தோம் நாங்கள் அவர்முன்
அரக்கர் சிலபேர் வந்தனர் சீருடையுடன்
சற்றுமுன் களைந்த ஆடை கலைந்து

என்னநடந்தது என்றே தெரிந்தது
எம் மனைவியர்,எம் சோதரிகள்
உயிருடனில்லை அவரினி எமக்கில்லை,
தசைபொசுங்கும் வாசம் உணர்ந்ததுசுவாசம்

போர்க்களமாயிருந்தது கொலைக்களமாய்
துப்பாக்கி முனையின் திகிலூட்டும்
சில்லிப்பை உணர்ந்தோமந்த விநாடியில்
உயிரும் பறந்தது வான்வெளியில்..

மூதாதையர் நாடென்ற பாசத்தில் முந்தி
வந்தோம் தமிழகத்திற்கு..வானில் வெளியில்
காற்றில் உலவும் எமதுயிர் கண்டதே
உம் செயல்களை அதைச்சொல்ல வார்த்தையில்லை

இங்கு புண்ணாக்குகள் விற்கப்படும்

எனது கடையில் ஏராளமான வகைப்
புண்ணாக்குகள் விற்பனைக்கு உண்டு.

சில உயர்ந்த பளபளப்பிலும்
சில கரடுமுரடாயும்..
சில உடைத்தால் பொடியாவதும்
சில உடைக்கமுடியாமல் போவதும்
இன்னும் சில புண்ணாக்குதானா..?
என்ற சந்தேகத்தைக் கிளப்பும் வகையிலும்
இப்படி எத்தனையெத்தனை வகையோ உண்டு.
வீதிக்குப் பொதுவான இடத்தில்
வைத்திருக்கும் இந்தக் கடையில்
வேறுவேறு மொத்த வியாபாரிகள்
கொண்டுவந்துபோடும் சரக்கு..
வாடிக்கையாளரின் வசதிகருதி
வாங்கி விற்கவேண்டியதாயிருக்கிறது.
வருத்தம்தான் அதிலெனக்கு..!
என்ன செய்ய..சுதந்திரமென்பது
பொதுவாய்ப் போயிற்றே..!

இது என்ன கவிதைப்புண்ணாக்கு என்று
கேட்டீர்களானால்…
அதற்கு நான் பதில் சொல்லமாட்டேன்.!

மாமா..என்னைப்பாரு மாமா..!

உன் குழந்தைபோல எனக்கும்
ஓடிவிளையாட ஆசைதான்..
அப்பா வீட்டுக்கு வந்தவுடன்
ஆசையாய் அணைக்க ஆசைதான்..
அம்மாவின் மடிசாய்ந்து
அற்புதக் கனவுகாண ஆசைதான்
என்வயதொத்த பிள்ளைகளோடு
கைகோர்த்து விளையாட ஆசைதான்..
மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆசைதான்..

ஆனால் என் ஆசை மாமா..
அப்பாவை இழுத்துச் சென்ற
இராணுவம் அவரையெங்கே
சுட்டுப் பொசுக்குச்சோ..
அம்மாவை தூக்கிச்சென்ற
அரக்கக்கூட்டம் அவளை
எந்தத் தீயில் வீசுச்சோ..
தம்பியையும் தங்கையையும்
எந்த ஈ,எறும்பு அரிச்சுச்சோ
குண்டுமழையிலே நனைஞ்ச
எங்கவீடு எங்கே கரைஞ்சுச்சோ
மாமா..பதுங்கு குழியைக் காண்பிச்சு
இதுதான் உங்கவீடுன்னு சொன்னாங்க..
எனக்கு இங்கேயிருக்க முடியலே மாமா..
உங்க ஊருக்கு என்னை
அழைச்சுட்டுப்போ மாமா..!
உன்குழந்தை போல
என்னையும் நினைச்சுப்பாரு மாமா..!
மாமா..மாமா..என் பசிமயக்கத்திலே
கத்திக்கூப்பிட முடியலே மாமா..!

இரண்டொரு நாள் மட்டும்.!

அன்புள்ள கவிஞனே..! இதுவரை
நீ எதை எழுதியிருந்தாலும்
அது யாருக்கான கவிதையோ..
எதற்கான கவிதையோ..
எதுவாய்வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப்போகட்டும்..!

இத்தனைநாளும் உன்னை..
உன் உணர்ச்சிகளை
உள்ளத்துக் கிளர்ச்சிகளை
விதவிதமாய் உன் எழுத்துக்கள்
வெளிப்படுத்தியிருக்கும்..!

வாசலில் வந்துநிற்கும்
பிச்சைக்காரனுக்குக்கூட
நீ மறுத்துவிட்டால் மற்ற வீடுண்டு.
உன் தாயும் தந்தையும்
இரத்த சொந்தங்களையும்
அடுத்தவீட்டு வாசலில்
நிற்பதாக உன் கற்பனை நீளுமா..?

ஆனால்..
உண்ணஉணவின்றி
உறங்க உறைவிடமின்றி
உறவுகளின்றி,இனி
உயிரிருக்குமாவென்ற நம்பிக்கையுமின்றி
ஒரு கூட்டம் இருப்பது
உனக்கும் தெரிந்திருக்கும்..!

அப்படியொரு நிலை
அதைவிட ஆயிரம்மடங்கு
நிதர்சனத்தில் இன்றுண்டு..
அதை மாற்றிட உனக்கும்
சக்தியுண்டு..!
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட
இனப் படுகொலைக்கு
காரணமான ராட்ஷசர்களை
தண்டிக்க உனக்கின்று
அதிகாரமுண்டு..!

இன்று ஒரு நாள் அல்ல
இன்னும் இரண்டுநாள்..மட்டும்
அந்த அதிகாரத்தை உனது
எழுத்தின் மூலம் வெளிப்படுத்து..
எங்கெல்லாம் எதிரொலிக்கமுடியுமோ
அங்கெல்லாம் எடுத்துச் செல்..
நமது காதலும்,காதல் தோல்வியும்
இன்னும்பல சங்கதிகளும்
அடுத்தவாரமும் நம்மோடுதானிருக்கும்
அடுத்து இந்த சந்தர்ப்பம்
எப்போதும் கிடைக்காது.

மத்தியஅரசே,இலங்கையில்
நிகழ்ந்தது போர்க்குற்றமே..என
அமெரிக்கா கொண்டுவந்த
தீர்மானத்தை ஆதரி என்று..!
ஒருவரி ஒரேயொருவரி எழுது
இத்தளத்தில் உன் எழுத்தால்
எழுதவும் தூண்டு...

இதிலாவது நாம் நிரூபிப்போம்..!

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு..!

உணர்வாய்த் தமிழைப் பேசிடுவார்
செயலி லென்றால் மறந்திடுவார்.
கருவில் வீரம் இருக்குதென்பார்.
உருவில் அதுவும் தெரியுதென்பார்.

இரவில் மதுவின் மயக்கத்திலே
இடையில் கொறிப்பது தமிழன்றோ..
ஈழம் ஈழம் என்றே முழங்கும்
வேழம்போலே வேசம்நாளும்

நேசம்கொண்ட மனிதரைப்போலே
நாட்கள் முழுதும் பேசுகின்றார்.
அரசியலுக்கான வழியாய் அதனை
ஆர்த்தே எங்கும் பொழிகின்றார்.

இன்னுயிர் இழந்த தமிழன் வாழ்வை
பார் முழுதும் சொல்லிப் பிதற்றுகிறார்.
பதவிகள் கிடைத்தே அமர்ந்திட்டால்
ஆரெவர் தமிழரென்றே கேட்கின்றார்..!

தமிழனென்றோ,இந்தியனென்றோ
நினைக்க மாட்டீர் நீரென்றால்
மனிதனென்றாவது நினைக்கிலையோ
தானாடாவிட்டாலும் சதையாடுதல் வழக்கமன்றோ..?

மறத்தமிழன் என்பதற்கு உதாரணமாய்
அனைத்தும் மறந்து வாழ்கின்றீரோ..?
இதுவே தமிழனின் தனிக்குணமென்று
உலகிற்கு எடுத்துக் காட்டுவீரோ.?

உலகம் முழுதும் கலகம் விளைக்கும்
பெரியண்ணன்..பெரிய போலீஸென்று
பிம்பம் பெற்றவன் அமெரிக்கன்
அவனே மனம்புழுங்குமொரு நிலை

இராஜபக்ஷே எனுமொரு இராட்ஷசன்
போர்க்குற்றவாளியென ஐநாவில் தீர்மானம்
அதனை ஆதரிக்கவேண்டுமென இந்தியாவை
ஆட்டிவைக்கவேண்டாமா நமதெழுத்துக்கள்..?

ஆங்கிலப் புலமை மிக்கோராய் நீரிருந்தால்
ஆளுக்கொரு கடிதம் மத்தியஅரசுக்கு
நீங்;கள் எழுதலாமே இ மெயிலில்
அதனைத் தடுக்க ஆருமில்லை

பாசம்மிக்க தமிழுணர்வைக் காட்டவொரு
துரும்பையாவது நீர் அசைத்தீரென
வரலாறு உங்களை நினைவு கூரட்டுமே..
வாருங்கள்,உணர்வுமிக்க தமிழெரென்று
இதிலாவது நாம் நிரூபிப்போம்..!

நீதான் நீதிபதி.!

இதுவரை நீ எழுதியதில்லை
எதற்காகவும் அசைந்ததில்லை.
அனுபவமுனக்கு வாய்க்கவில்லை
அதனால் நீ மனிதனில்லையா.?

அடுத்த தெருவில் பிடித்த தீ
அணைக்காமல் விட்டால் அது
தொடர்ந்து அண்டும் உன்வீட்டை
அதையும்நீ கேட்டதில்லையா.?

எட்டு மணிநேர வேலைக்காக சிக்காகோவில்
யாரோ சிலபேர் இரத்தம்சிந்திப் போராட
அதன்பயனை உரிமையென்று நீ
அனுபவிக்கவில்லையா..?

எத்தனையெத்தனை போராட்டம்
எங்கெங்கோ நடைபெற்றதில்
உலகம் தழுவிய உரிமைகளாய்
உன்வரை அதுவந்து சேரவில்லையா.?

ஆனால் தமிழா நீயும்தான் போராடி
எதையாவது எந்தநாட்டுக்காவது
பெற்றுத் தந்தேன் என்றே நீயும்
தோளுயர்த்தத் தயாரா.?

உனக்கொரு நல்ல சந்தர்ப்பம்
மடியில் வந்து வீழ்ந்தது பார்..
மனிதம்கொன்று,மனிதரைத் தின்ற
மரணவியாபாரி ராஜபக்ஷே..

மன்னிக்க முடியாத குற்றவாளியென
நீயும் இன்றே தீர்ப்பு எழுது..!
அதை மத்தியஅரசுக்கு அனுப்பிவிடு..
அது மகத்தான போராட்டம் கையிலெடு..!


-அன்புள்ள தோழர்களே..! வீதிக்கு சென்று போராட உங்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம்.
எல்லோர் முன்பும் கையுயர்த்த உங்களுக்கு வெட்கமாகக்கூட இருக்கலாம்.இதற்காக செலவழிக்க உங்களிடம் பணம் இல்லாமலிருக்கலாம்..இப்படி எதுவேண்டுமானாலும் இல்லாமல் போகட்டும்.
ஆனால்.இங்கு தொடர்பிலிருப்பவர்கள் எல்லாரும் எழுதும் திறமையை வைத்திருக்கிறீர்கள்.
இன்னும் ஆங்கிலப்புலமை பெற்றவராகவும் இருக்கிறீர்கள்..அதை நீங்கள் இல்லையென்று சொல்லிவிடமுடியாது.
இந்த நேரத்தில எனது வேண்டுகோள்..உலகப் பெரியண்ணன் என்றும்,மிகப்பெரும் போலீஸ் எனறும்,உலக அளவில் மிகப்பெரிய ரவுடியென்றும்,பெயர்பெற்ற அமெரிக்காவே இன்று இலங்கை அரசின் ராஜபக்ஷே போர்க்குற்றவாளி என்று ஐநா அவையில் தீர்மானம் கொண்டுவருகிறது.அதனை இந்தியா ஆதரிக்கவேண்டும் என,தெருவில் இறங்கி பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன.
ஈழத்தில் என்னவெல்லாம் நடந்ததென்று உங்களுக்கும் தெரியும்.அந்த ரத்த சொந்தங்களுக்கு,நமது மூதாதையரின் வழித்தோன்றல்களுக்கு இன்னும் எத்தனையோ நல்லது நடக்கவேண்டியதிருக்கிறது.
அதற்காக நாம் இந்த தீர்மானத்தை ஆதரிக்கவேண்டியதிருக்கிறது.
அதனால்தான் தோழர்களே..குடியரசுத்தலைவர்,பிரதமர்,இன்னும் மத்தியஅரசின் அதிகாரப்பூர்வ இமெயில்களுக்கு,நீ;ங்கள் உங்கள் கோரிக்கையாக-ஐநாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்-என ஒற்றைவரி..ஒரே வரி…எழுதுங்கள்.இதன் மூலம் நீங்களும் தங்கள் சொந்த நாட்டின் அடையாளத்தை இழக்கப்போகும் அச்சத்திலிருக்கும் நமது சொந்தங்களுக்கான போராட்டத்தில் பங்கேற்றவர்களாகி விடுவீர்கள்.அவர்களுக்கு எதிர்காலத்தில் அமையப்;போகும் நல்வாழ்வில் உங்கள் பங்கும் இருக்கிறது என்பது மிகப்பெருமையான விஷயம் அல்லவா..?.வாருங்கள் தோழர்களே..!-அன்புடன் பொள்ளாச்சி அபி-

சுடலைமாடா..

பத்துத் தலை ராவணணைப்
பார்த்தில்லை இங்கே யாரும்..
ஒத்தத்தலை ராஜபக்ஷேவை
பாத்துக்கோடா சுடலை மாடா..

சித்தம் எல்லாம் கலங்கவொரு
காரணமா ஆசையைத்தான்
சொல்லிப்போன புத்தனையே
பாத்ததில்லை இங்கே யாரும்..

புத்தன் வழி வந்தவன்னு
சொல்லி ரத்தம் கேட்குமொரு
பித்தனாத்தான் திரியுறானே
சுடலை மாடா..

கத்தும்குயிலா திரிஞ்ச பல
குழந்தைகளை கொத்துக்குண்டு
போட்டு ஒரு குத்தம் செஞ்சான்
சுடலை மாடா..

யுத்தமெனும் நெறிகளெல்லாம்
மனிதக்குழுவுக்குள்ளே
ரத்தம் சிந்தும் போர்களுக்கே
சுடலைமாடா..

இலங்கையில் எதிர்பார்க்காதே
இது மனிதனுக்கெதிராய்
அரக்கர்கள் செய்த போரடா
சுடலைமாடா..

பிஞ்சுக்குழந்தையாய் இருந்தாலும்
அதைப்பெற்ற பெண்ணாயிருந்தாலும்
கண்ணைநோண்டி வீசுவது
மட்டுமில்லேடா சுடலைமாடா..
தீயில் சுட்டுப் பொசுக்கி
மோந்துபார்த்தாண்டா சுடலைமாடா..

எண்ணிப்பார்த்தா நெஞ்சு வெடிக்குதடா
சுடலைமாடா..இந்தக் கேடுகெட்ட
அரசியல்வாதிகளெல்லாம்
அவங்க சாவு மேலே
லாபம் பாக்குறாங்கடா சுடலைமாடா..

கண்ணிருந்தும் பாக்கமுடியாமே
காலிருந்தும் நடக்கமுடியாமே
மனசிருந்தும் செய்ய முடியாமே
தவிக்கிறோமே சுடலைமாடா..

எனக்கு ஒருநாள்,ஒரேநாள்
இந்த நாட்டுக்கு பிரதம மந்திரியாகும்
வழியொன்னும் தெரியலையேடா
சுடலைமாடா..
அதுமட்டும் நடந்துச்சுன்னா
ஒரு மணிநேரம் எனக்குப்
போதுண்டா சுடலைமாடா..

ராஜபக்ஷேன்னு ஒருத்தன்
மட்டுமில்லேடா..
அவன் வம்சம்னு எவனுமே
இருக்கமாட்டாண்டா சுடலைமாடா..!

இந்தியனாப் பொறந்துட்டேன்னு
ஆத்திரமா வருதுடா சுடலைமாடா
இன்னும் எத்தனையோ
சொல்லத்துடிக்குதடா சுடலைமாடா

காட்டுப்பூ.!

கன்னியர் சூட,தெய்வக்
கருவறை சூட,
விழாநாயகன் சூட,
விண்ணேற தரையில்
வீழ்ந்தவனும் சூட,
மங்கல மங்கை சூட,
மலர்கிறது ஆயிரம் பூ

பிறப்பு முதல் இறப்பு வரை
மனிதனோடு இணைந்ததினால்
மதிப்பைத் தேடிக்கிடக்கிறது
சிலபோது அவர் தலையிலும்
மற்றபோது அவர் காலிலும்

ஆனால்,
யார் பறித்தாலென்ன.?
பறிக்காவிட்டாலென்ன.?
மதிப்பு தந்தால் என்ன.?
மறுத்தால் என்ன.?.

யாருக்காகவும் காத்திருக்காமல்
மலர்வதென் கடமையென
மணக்கிறது ஆயிரம் பூ.
வண்ண வண்ணமாய்
வனப்புக் காட்டும் காட்டுப்பூ.!

உன் நினைப்பு..!

உன்னைப் பார்த்த
முதல் நாளிலிருந்து
சில நாட்கள் வரை
மின்னல் வெட்டினைப்போல
உன் நினைப்பு..!

இப்போதெல்லாம்
எப்போதும் உன் நினைப்புத்தான்
மின் வெட்டினைப் போல..!

கண்டுபிடித்திருக்கிறோம்.

எத்தனை காலமாக சிந்தித்தாய்
என்னென்னவோ கண்டுபிடித்தாய்
மாற்றங்களைக் கொண்டுவந்தாய்
மகத்தான சாதனைகள் தந்தாய்

கம்பியில்லா தந்தி தந்தாய்
கம்பியில்லா தொலைபேசி தந்தாய்
ஆனால்..
மின்சாரமில்லாத கம்பி தந்தாயா.?
அதைத் கண்டுபிடித்திருக்கிறோம்.

இதனால் சில நன்மைகளும்
நடந்திருக்கின்றன..
சொன்னால் ஆச்சரியப்படுவாய்.
தொலைக்காட்சி தொல்லையின்றி,
பக்கத்துவீடுகளில் இப்போது
யார் இருக்கிறார்கள்
என்ன செய்கிறார்கள்
என்று பேசிக்கொள்ள முடிகிறது.!

இதோ பார் நிலா என்று
குழந்தைக்கு சோறூட்டமுடிகிறது.
மறந்துபோன கிராமியவிளையாட்டுகள்
மாலைநேர வீதிகளில்
குழந்தைகளால்
மறுஉருவாக்கம் பெறுகின்றன.

ஒரு விளக்கைச் சுற்றி அமர்ந்து
குடும்ப உறுப்பினர்களெல்லாம்
ஒன்றாய் சாப்பிடக்கூட முடிகிறது.
உறவுகள் புதுப்பிக்கப்படுகிறது.

மின்விசிறியில்,மின் குளிரில்
உறங்கிப்பழகிய வீட்டுமனிதர்கள்
உறக்கமின்றி விழித்திருப்பதால்
திருட்டுபயமும் அறவேயில்லை.!

ஆகா..எல்லாவற்றிலும்
ஏதொவொரு நன்மையிருக்கும்
என்பது இதுதானோ..?

தலைமுறைகள். சிறுகதை.!

சுப்ரமணியசாமிகோவில் வாசலில் நின்று,வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.கோவிலுக்குள்ளிருந்து,பட்டுப்புடவை,ஜரிகைவேட்டி,வைரஅட்டிகை, இரட்டை வடச்சங்கிலி சகிதம் வந்து கொண்டேயிருப்பவர்களை நோக்கி,அய்யா சாமி,ஆண்டவரே என்று பலஜோடிக் கைகள் இடைவிடாது நீண்டு கொண்டேயிருந்தன.அவற்றைக் கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்ளாத பலரும்,செருப்புவைக்கும் இடத்தில் தங்கள் ஜோடி பத்திரமாக இருக்கிறதா.? என்று சென்றுபார்ப்பதிலேயே குறியாக இருந்தனர்.
ஈஸ்வருக்கு இவற்றைப் பார்க்கும்போது,
“நடமாடும் ஆசாமிகளை,
சாமிகளாகப் பாவித்து
கைநீட்டுவோரிடம்,
தாங்கள் கடவுளாகமாறும்
சந்தர்ப்பத்தை
மறுதலித்து விட்டுப்போகும்
மனிதர்களைப்பார்த்து
சிரிப்புவருகிறது...!” என்று கவிதையாய் மனதுக்குள் ஓடியது.ஆனால் கோவிலுக்குள் சென்றுள்ள தனது தாத்தா சங்கரன்அய்யா அப்படியல்ல. அதுவும் அவனுக்குத் தெரியும்.
அவனது காத்திருப்பை அதிகப்படுத்தக்கூடாது என்று நினைத்தாரோ,என்னவோ வழக்கத்தைவிட,முன்னதாகவே வந்து கொண்டிருந்தார் சங்கரன்அய்யா.தன்னை நோக்கி நீண்ட கைகளில் சில்லறைகளை அவர் கொடுத்தபோது,அவரை நோக்கி கும்பிட்ட கைகளுக்கு,பதிலாக இவரும் கும்பிட்டுக் கொண்டே வந்தார்.
கொடுப்பதால் மட்டுமே தாங்கள் மிக உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு,தங்களுக்கு கும்பிடு போட்ட கைகளையோ,முகங்களையோ ஏறெடுத்தும் பார்க்கப் பிடிக்காதவர்களைப்போல அமர்த்தலாகத் தலையை ஆட்டிக் கொண்டு போகும் சிலரையும் இந்த இடைவெளியில் ஈஸ்வர் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
நெடுநெடுவென்று அண்ணாந்து பார்க்கும் உயரம்.எழுபத்தாறு வயது கடந்தும் ஆகிருதியான தேகம்.இன்னும் விடாப்பிடியாய்,ஜிப்பாவகை சட்டைகளையே போட்டுக்கொள்ளும் அவரது விருப்பம்.நெற்றியின் அகலத்தை நிறைத்துநின்ற சந்தனம்,விபூதியுடன்,அவர் கோவிலை விட்டு வெளியே வரும்போது, இந்தக்கோவிலைக் கட்டிவைத்த அரசன்,ஏதோ நவீனகாலத்து மனுசனாய் மாறி வெளியே வருவதுபோல தோன்றியது,ஈஸ்வருக்கு.
“ஏம்ப்பா..உனக்கு சாமி கும்பிடத்தான் பிடிக்காதுன்னாலும்,எனக்காக உள்ளே வந்திருக்கலாமில்லையா..? வெயில்லே இங்கியே இத்தனைநேரம் நின்னுகிட்டு இருக்கியே..?”தாத்தாவின் குரலில் பாசம் இழையோடியது.

ஈஸ்வருக்குத் தெரியும்.உள்ளேசென்று சாமி கும்பிடாமல்,சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால்,கோவில் குருக்கள் உட்பட தாத்தாவிற்கு தெரிந்தவர்களாக வருபவர்கள், தன்னை ஒருமாதிரிப் பார்க்கக்கூடும்.அது தாத்தாவிற்கு எவ்வித தர்ம சங்கடத்தையும் உண்டுபண்ணிவிடக்கூடாது என்பதால்,அந்த சந்தர்ப்பங்களை அவன் பெரும்பாலும் தவிர்த்துவிடுவதுண்டு.

ஆனால்,தனியாக வரும் சிலநேரங்களில்,கோவிலுக்குள் அவன் சுவாதீனமாகச் சென்று,கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் கல்சங்கிலி,யாழி,ராசிச்சக்கரம்,இறைவனுக்கு கண்இடந்து அப்பிய கண்ணப்பர், துவாரபாலகர்கள் என சிற்பவேலைப்பாடுகளை மணிக்கணக்கில் ரசிப்பதுண்டு.
“இல்லே தாத்தா..என்னைப்பத்தி உங்களுக்கு தெரியும்தானே.?”
“எனக்கு இது மட்டுமா தெரியும்.?.இன்னும் உன்னைப் பத்தி நிறையவே தெரியும்.அதுவுமில்லாம இப்ப இங்கே எதுக்கு வந்திருக்கேன்னும் தெரியும்..” சங்கரன்அய்யா சொல்லிக்கொண்டே செல்ல,ஈஸ்வருக்கு வெட்கம் கலந்த சிரிப்பு, “சும்மாயிருங்க தாத்தா..” என்றான்.
இவனைப்பற்றித் தெரியும் என்று சங்கரன்அய்யா சொன்னதிலும் விஷயம் இருக்கிறது.
“சரி.நீ வந்த விஷயத்தை இங்கியே பேசுறஅளவுக்கு ஒண்ணும் அவசரமில்லையே..நம்ம தோட்டத்துக்கு போயிடலாமில்லையா..?”
“ஒண்ணும் அவசரமில்லே,அங்கியே போயிடலாம் தாத்தா..”
சரி உன்னோட வண்டியை எடுத்துட்டு நீ பின்னாடியே வந்துடு”என்றபடி அவர் சென்று அவரது காரில் உட்கார்ந்ததும்,தயாராக இருந்த டிரைவர் வண்டியை எடுத்துக் கொண்டுபோனார்.
ஈஸ்வர் தனது பல்சரைக் கிளப்பினான்.தாத்தாவைப்பற்றி எப்போது நினைத்தாலும்,மனதுக்குள் பெருமையும்,பெருமிதமும் மிகும். கோட்டாம்பட்டியைப் பொறுத்தவரை,அந்த ஊர்மக்களுக்கு நல்லது கெட்டது எதுவென்றாலும் தாத்தாதான் எல்லாம்.அது திருமணமென்றாலும்,இழவு என்றாலும் தாத்தாவிற்குத்தான் முதல் தாக்கீது பறக்கும்.தாத்தாவின் ஆலோசனைகளைக் கேட்டு மோசம்போனவர்கள் இதுவரையில்லை என்பதே ஊரின் நம்பிக்கை.அதை ஒவ்வொரு விஷயத்திலும் தாத்தா நிரூபித்துக் கொண்டுதான் இருந்தார்.
அப்படித்தான் ஒருநாள்,தங்கராசுவின் வீட்டுக்குத் திருட வந்த,இளம்விதவைப் பெண் ஒருத்தியை ஊரின் நடுவில் உள்ள புளியமரத்தில் கட்டிவைத்துவிட்டு, சங்கரன்அய்யாவிடம் வந்து சொன்னார்கள் ஊர்மக்கள்.அய்யா சொன்னால் அப்புறமாகப் போலீசில் சொல்வதாகவும் ஏற்பாடு.
“பெண்ணை புளியமரத்தில் கட்டிவைத்து அடிப்பதா..? என்னடா இது அநியாயம்.யாருடா உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.?” என்று கொந்தளித்துப் போனார் சங்கரன்அய்யா. “தம்பி வண்டியை எடுப்பா..” என்று,காருக்குள் பாய்ந்தவரின் வேகத்திற்கு ஈடாய் விரைந்து சென்றது கார்.
கல்லூரி விடுமுறைக்காக வந்திருந்த ஈஸ்வர் இந்தக்காட்சிகளைப் பார்த்துவிட்டு,அங்கிருந்த மோட்டர் சைக்கிளை எடுத்துக்கொண்டு,தாத்தா சென்ற காரினை அவனும் விரட்டிச் சென்றான்.
அந்தப் புளியமரத்தின் அருகில் சென்ற கார் கிரீச்சிட்டு நின்றதும்,இறங்கிய தாத்தாவை,ஓடிவந்து மொத்த ஜனமும் சுற்றிக் கொண்டது.
“விலகுங்க..முதல்லே கயிறெல்லாம் அவுத்துவிடுங்கப்பா..” கூட்டம் பதறிச்சென்று ஓடிப்போய்,நிமிடத்தில் கட்டுகளிலிருந்து அந்தப்பெண்ணை விடுவித்து,சங்கரன் அய்யா முன்கொண்டுவந்து நிறுத்தியது. “யாரும்மா நீ..?”
ஊர்மக்கள் அவருக்கு கொடுத்த மரியாதையைப் பார்த்து மிரண்டுபோய், நின்றிருந்த அந்தப்பெண்,பேசுவதற்கு தைரியமில்லாதவள்போல சுற்றும்முற்றும் பார்த்தாள்.அவமானத்தால் சிறுத்திருந்த முகமும்,விழிகளில் வழியும் கண்ணீருமாக இருந்தாள்.
நேர்த்தியாய் அவள் உடை அணிந்திருந்த விதமும்,கட்டுகளை அவிழ்த்துவிட்டபின்,உடனடியாக முந்தானையால்,தனது உடலை அவள் போர்த்திக்கொண்ட வேகமும்,இவள் திருடுவதற்காய் வந்த பெண்ணல்ல என்று சங்கரன்அய்யாவிற்கு விநாடிகளில் புரிந்துபோனது.
“சொல்லும்மா.. என்னவிஷயமா இங்கே வந்தே..? திருட்டு,பெரட்டு பண்றதுக்கு நீ இங்கே வரலைன்னு தெரியுது.ஆனா எதுக்கு வந்தேங்கற உண்மையைச் சொன்னாத்தானே எங்களுக்குத் தெரியும்” சங்கரன்அய்யாவின் குரலில் இருந்த பரிவும்,தன்மீது கொண்ட நம்பிக்கையுமாக வார்த்தைகள் வந்து விழுந்ததில், அவள் தைரியம் பெற்றாள்போலும்.சங்கரன் அய்யாவை நோக்கிக் கும்பிட்ட அவள், “அய்யா உங்ககிட்டே,கொஞ்சம் தனியா பேசணும்..”என்று தயக்கமும்,பணிவுமாக தெரிவித்தாள்.
“ஊம்,இந்தாப்பா எல்லாரையும் கொஞ்சம் தள்ளி நிற்கச்சொல்லு.கூட்டம் சிதறி ஒதுங்கியது.சில நிமிடங்கள் அவள் பேசியபின்,சங்கரன் அய்யா,ஆழ்ந்த யோசனையில் இறங்கிவிட்டதாகத் தோன்றியது.

எல்லாரும் எம் பக்கத்திலே வாங்க,இந்தப் பொண்ணு,என்னோட மகள் முறையாகுது.இவளை எங்கவீட்டுக்கு இப்பநான் கூட்டிட்டுப்போறேன்.யாருக்காவது எதாவது சொல்லணுமா..?” தனக்கு முன் திரண்டிருந்த கூட்டத்தை,மையமாக நோக்கிக் கேட்டார் சங்கரன் அய்யா.
திருடவந்ததாய்,தங்கராசுவின் வீட்டிலிருந்து ஆட்கள் கொண்டுவந்து கட்டிவைத்த பெண்,சங்கரன் அய்யாவிற்கு மகள் முறையா..?.கூட்டம் ஆச்சரியத்தில் வாய் பிளந்தது.ஆனால்,சங்கரன் அய்யா சொன்னால்,அதில் ஏதோ நல்லவிஷயம் இருக்கும்.
“அய்யா,தெரியாம நடந்துருச்சுங்கய்யா.மன்னிச்சுக்குங்கய்யா”.ஜனங்களின் குரலில் நிஜமான வருத்தம்.
“வண்டியிலே ஏறும்மா..”என்று அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார் சங்கரன் அய்யா.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வருக்கு,சங்கரன் அய்யா என்னபேசினார்.? இங்கே என்ன நடக்கிறது.? என்று தலைகால் புரியவில்லை.
ஆனால் ஊர்மக்களின் முன்பாக,இதுகுறித்து தாத்தாவிடம் பேசுவதற்கும் தயக்கமாக இருந்தது.யோசித்தபடியே,வீடு வந்து சேர்ந்தான்.

இரு தினங்கள் கழித்து,தங்கராசுவின் அப்பா,அம்மா,தங்கராசு மூவர் மட்டும் வந்து தாத்தாவை சந்தித்து,சில மணிநேரம் ரகசியம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனார்கள்.அதற்கு மூன்றாம் நாள்,சுப்ரமணியசாமி கோவிலில்,மிகவும் எளிதாக,தாத்தாவின் தலைமையில்,தங்கராசுவுக்கும்,அந்தப்பெண்ணுக்கும் கல்யாணம் நடந்தது.ஆசிர்வாதம் வாங்கிய அந்தப்பெண்,தாத்தாவின் கால்களில் வெகுநீண்ட நேரம் விழுந்து சேவித்து,தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.
ஈஸ்வருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.திருடி என்று,ஊர்மக்களால் கட்டிவைத்து அடிக்கப்பட்ட பெண்,தங்கராசுவுக்கே எப்படி மனைவியானாள்..?
அன்று மதியம் அடக்கமுடியாமல்,தாத்தாவிடம் கேட்டே விட்டான்.தாத்தா அமர்த்தலாகச் சிரித்துக்கொண்டே சொன்னார். “ராஜா..” தாத்தா மிகுந்த செல்லமாகக் கூப்பிடுவதென்றால் அவனை அப்படித்தான் கூப்பிடுவார்.தனது தந்தையின் பெயரான தனிக்காட்டு ராஜா என்ற பெயரை,ஈஸ்வருக்கு வைத்திருந்தாலும்,அவ்வாறு முழுப்பெயரை உச்சரித்து விளிப்பது தாத்தாவிற்கு எப்போதும் சம்மதமில்லை.
“சொல்லுங்க தாத்தா..”சுவாரஸ்யமான கதை கேட்பதற்கு,ஆர்வம் மின்ன தாத்தாவின் முன்வந்து அமர்ந்து கொண்டான் ஈஸ்வர்.
நீ இப்ப காலேஜிலே படிக்கிறே.இந்தக் கதையைப் பத்தி இன்னொரு நாளைக்கு சொல்றேன்.என்று தாத்தா சொன்னதும்,பொசுக்கென்றாகி விட்டது ஈஸ்வருக்கு.
அதற்குப்பின்,மீண்டும் ஒருமுறை அதைப்பற்றி தாத்தாவிடம் கேட்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.சில மாதங்கள் கழித்து,அந்த மர்மத்தைப் பற்றி ஊரார் மூலம் தெரிந்தபின்,அவன் தாத்தாவிடம் கேட்கவுமில்லை.அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளவுமில்லை.ஆனால் தாத்தாவின் மீது வைத்திருந்த மதிப்பு,பல மடங்கு கூடிவிட்டது.


முன்னால் சென்று கொண்டிருந்த காரிலிருந்து,ஈஸ்வரைத் திரும்பிப் பார்த்தார் சங்கரன் அய்யா.சீரான வேகத்தில்,அலட்டல் இல்லாமல் தன்னைப் பின்தொடர்ந்து வருவது தெரிந்தது.
தனது அப்பாவைப்போலவே முகஜாடை கொண்டிருந்த ஈஸ்வரைப் பார்க்கும்போதெல்லாம்,அவரது அப்பாவைப் பார்த்ததுபோலவே மதிப்பு மிகும் சங்கரன் அய்யாவிற்கு.அப்பாவைப் போலவே,ஈஸ்வரும் தன்மீது பிரியமும்,மரியாதையும் வைத்திருப்பதை நினைக்கும்போதெல்லாம் சங்கரன் அய்யாவிற்கு,ஏதோ பூர்வஜென்ம புண்ணியம் நிறைவேறியது போல மகிழ்ந்துபோவார்.
தான் வாலிபனாய் இருந்தபோது,தனது விருப்பம் ஒன்றை அப்பாவிற்காக விட்டுக்கொடுக்க வேண்டிதிருந்தது என்ற ஒரேயொரு நெருடலைத்தவிர,வேறு எந்தக்குறையுமே இல்லை சங்கரன் அய்யாவிற்கு.






“ராஜா..இந்த உலகத்துலே நாம கண்ணுலே பாக்கறது,காதாலே கேட்கறது எல்லாவிஷயத்துக்கும் பின்னாடி,ஏதோ ஒரு உண்மை இருக்கும்.அதோட முழு உருவமும் நமக்கு உடனே தெரியாது.அதனாலே எதையும் சந்தேகப்படு.ஆராய்ச்சி பண்ணு.அதுலே கெடைக்கிற முடிவையும் பாரு.அப்புறம் அதுதான் இறுதியான முடிவுன்னும் நெனச்சுக்காதே..அந்த முடிவிலேயும் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை எப்போ வேணும்னாலும் வரலாம்.நாம எந்த ஒரு விஷயத்தை செஞ்சாலும்,அதுலே தேர்ச்சியானதை,முடிந்தவரை உண்மைக்குப் பக்கத்திலே நின்னு செய்யணும்.தெரியுதா..?”
தாத்தா ஏன் நீண்ட பீடிகை போடுகிறார்.? என்று ஈஸ்வருக்கு விளங்கவில்லை.
அவரே மற்றதையும் சொல்வாரென்று,அவன் மௌனமாய்க் காத்திருந்தான்.
இப்ப நடந்து முடிஞ்ச இந்தக் கல்யாணத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்தானே நீ ஆசைப்படறே..?.
ஆமாம்..தலையாட்டினான்.
ஒரு சுவாரஸ்யமான கதையை கேட்பதற்காக,அவன் விழிகளில் மின்னிய ஆர்வத்தைக் கண்டார்,சங்கரன் அய்யா.
தங்கராசுவும்,அந்தப் பெண்ணும் சிறு வயதிலேயே,காதலிச்சு,அது கைகூடாமே, அந்தப் பெண்ணுக்கு வேற இடத்திலே கல்யாணமாகி,அதோட புருஷன் அல்பாயுசுலே போய்ச் சேந்துட்டான்.பின்னாடி அவளை எங்கியோ பாத்த தங்கராசு நடந்ததையெல்லாம் கேட்டு,பரிதாபப்பட்டு,அவளை திரும்பியும் காதலிக்க ஆரம்பிச்சு,கணவன் மனைவியாகவே வாழ்ந்துட்டாங்க.

நாங்களே குற்றவாளி.!

அன்புள்ள மாணவனே.!
ஏனடா உன் நெஞ்சில்
இத்தனை ஆத்திரம்.?

கத்தியால் ஆசிரியரை
குத்திக் கொல்வதை-இதுவரை
கேட்டதில்லையடா தம்பி.!

நீ பிறந்ததிலிருந்து
ஐந்து வருடம்
மட்டுமே உனக்கு
பெற்றோரடா கண்ணே.!

பிறகெல்லாம் உனது
பெற்றோரெனப்படுவது
உனது ஆசிரியர்தானடா.!

கத்தியால் அவரைக்
குத்திக் கொல்லும்போது
நீ அவரது கண்களைப்
பார்த்தாயா தம்பி..?

அதிலுன்னை மன்னிக்கும்
அம்மாவின் கருணை
விழிகளைக் கண்டிருப்பாய்.!

அவர் சிந்திய இரத்தம்
தரையில் வழிந்தபோது
உன்மீது வைத்திருந்த
பாசமும்,அக்கறையும்
பரவிப் படர்ந்திருக்குமே..!

தான் அலறினால்கூட
அடுத்தவர் வந்துன்னை
அடித்திடுவாரென
மௌனமாய் வலிதாங்கி
மயங்கி விழுந்திருப்பாரே.
கண்ணே..!

குற்றம் புரிந்தது நீ
குற்றவாளியாக நீ
ஒரு நல்லவனாக
நீ உருவாவதற்கு
என் ஆசிரியப் பணி
உதவவில்லையே
என்று மறுகியிருப்பாரே..

தான் இறக்கும்போதும்
உன்னிடமுள்ள தவறை
இனி திருத்த உயிரில்லையே
என்று மனதில் கதறியிருப்பாரே..
அய்யோ கண்ணா..
என் நெஞ்சு வெடிக்கிறதே.!

சிறுவர் சிறையிலிட்டுன்னை
சித்திரவதை செய்வாரேயென
அவரது சித்தம் கலங்கி
அழுதிருப்பாரே..!

ஏனடா உனக்குப்
புரியவில்லை.?
மானிடனாய் வாழ
உனக்குத்தெரியவில்லை..!

எங்களுக்கு பணமும்
பங்களாவும்,
பகட்டான வாழ்க்கையுமே
லட்சியமாக இருக்கிறது..!

குழந்தைகளை,
குழந்தைகளாய் வளர்க்க
எங்களுக்கு தெரியவில்லை..!

சட்டத்தின் முன் நீ
குற்றவாளி..
சமூகத்தின் முன்
நாங்களே குற்றவாளி..!

-பொள்ளாச்சி அபி -

கொள்ளிக்கூடம்.!

இந்திப்பாடத்தில்
மதிப்பெண் குறைவாம்..!
குறைகூறிய ஆசிரியைமீது
குற்றம் கண்டான் மாணவன்.

குற்றம்தந்த அழுத்தத்திலிருந்து
விடுபடயோசித்த மனது..
புதுவழியொன்றை கண்டது.
புத்தியால் யோசித்தவன்-பின்
கத்தியை வாங்கினான்.
சக்தியெலாம் திரட்டி
குத்தினான்...!
ஒரு தலைமுறையின்
ஆல விருட்சம்
மண்ணில் ரத்தம் சிந்தி
மரித்ததே..கேட்டபோது
கண்ணீர் உதட்டைக் கரித்ததே..!

பள்ளியில் பிஞ்சு-அதன்
மனதில் என்ன நஞ்சு..?
கொஞ்சும் பெற்றோர்
முதல் ஆசிரியர்.

ஆசிரியரோ இரண்டாவது
பெற்றோர்..இப்படித்தான்
நாம் கற்றதும்,
கல்விபெற்றதும்...!

இதில் எங்கே வந்தது
குழப்பம்.?
பள்ளிக்கூடம் இன்று-தீக்
கொள்ளிக்கூடம் ஆனதேன்.?

புரிதல் இல்லாத
மண்ணாய் வருபவனை
பொன்னாய் மாற்றி,
பொன்னுலகம் படைக்கவொரு
போர்வீரனாய் அனுப்பும்
இடமல்லவா அது.

கல்விக்கூடம் வெறும்
மாணவர்களின்
காட்சிக்கூடமானதா..?
ஆசிரியர்களுக்கான
அட்சய பாத்திரமானதா..?

ஆசிரியப்பணி
அறப்பணியென்றுதான்
இருந்தது..-அது
அரைப்பணியாயிற்றோ..?

கேள்விக்கு விடையை
அந்த மாணவனே
சொன்னான்..
புதிய திரைப்படம்
பார்த்தேன்.அதில்
வந்த காட்சி
என்னை திட்டம்
தீட்ட வைத்ததென்று.

நெஞ்சம் பகீரென்கிறது.
நம்மைத் தொடரும்
இளம் தலைமுறைக்கு
நாம் கற்றுக் கொடுப்பது
இதைத்தானா..?

புதிதாய் படைக்கும்
இடத்திலிருப்பவரெல்லாம்
வெட்கப்பட வேண்டாமா.?.

இறந்தது ஒரு உயிர்
என்பதில் சுரந்தது
கண்ணீர்-ஆனால்
இதற்கு என்ன காரணம்.?
வளரும் தலைமுறைக்கு
வழிகாட்டும் பொறுப்பு
நமக்கில்லையா..?

நமது கலாச்சாரம்
பிரதிபலிப்பதே நம்
படைப்புகளின் சூத்திரம்.
நம் சூழ்நிலையே
சிந்தனைகளின் தாய்..!

உயிர்ச்சூழ்நிலையை
மாற்றுவோம்..!
உயர் சூழலை
உருவாக்குவோம்.!

-பொள்ளாச்சி அபி-

பெண்களே..ஓ..பெண்களே..!

குனிஞ்ச தலையை நிமிருங்க
விரிஞ்ச உலகைப் பாருங்க
உலகம் உருவம் பெற்றிட
உங்க பங்கு பாதிங்க..
பெண்களே..ஓ.பெண்களே..!

சீதையென்னும் தெய்வப்பெண்ணை
கதையினிலே சொல்வாங்க..
கற்பு என்னும் ஒருகோட்டை
கவனமாகப் போடுவாங்க..!
காலமெல்லாம் பெண்குலத்தை
அடிமையாக்கி வெச்சாங்க...
சாரமில்லா மதத்தைக் காட்டி
கட்டிப்போட்டு வெச்சாங்க..! -குனிஞ்ச

முறத்தாலே புலிவிரட்டும்
தமிழ்ப்பெண்ணின் வரலாறு
படிக்கமட்டுமில்லேம்மா
பயத்தை உதறித்தள்ளம்மா..!
தாய்நாட்டு விடுதலைக்கு
வெடிகுண்டு ஏந்தின..
கல்பனாவைப் பாரம்மா..
காதல்கொள்ளு கண்ணம்மா..!-குனிஞ்ச

அண்டமெல்லாம் சுத்திப்பாக்க
அனுப்பி வெச்சான் ராக்கெட்டு
அதுலேகூட பொண்ணுகளை
ஏத்திவுட்டான் சோவியத்து.!
ஆணுக்குப் பெண்ணிங்கே
இளைப்பில்லே கண்ணம்மா..
பாடிவெச்ச பாரதியின்
வழிநீயும் நில்லம்மா..! -குனிஞ்ச

இன்னும் அதிகம்தேவை.!

வாகனங்களின் வழிதோறும்
வரன்முறைப்படுத்த சிக்னல்கள்.!
வாகனங்களுக்குள் இருக்கும்
வசதிபடைத்தவர்களுக்கு சலிப்பு.!

வாழவகை அற்றவர்களுக்கோ
அவ்விடமே வாழ்வாதாரம்.!
இவர்களே நாட்டில் அதிகம்
என்பதால்..,
இன்னும் நிறைய சிக்னல்கள்
வேண்டுமென்றே நான் கேட்பேன்.!

நாம் மனிதர்களாம்.!

மனதால் சிந்திப்பதால்
நாம் மனிதர்களாம்..!

அடுத்தவனைக் கவிழ்த்து
சொத்து சேர்ப்பது
அம்மாவாயிருந்தாலும்
முதியோர் இல்லத்தில்
அடைத்து வைப்பது.
உறவுகளென்றாலும்
பணத்தால் அளவிடுவது
இன்னும் எத்தனைவிதமாய்
எத்தர்களாய் இருக்கிறோம்.?

..மனதால் சிந்திப்பதால்
நாம் மனிதர்களாம்..!..
ஆனால்..,
சொத்துக்களுக்கு ஆசையில்லை
சொந்தத்துக்கும் அளவீடில்லை.
அம்மாவெனிலும்,அப்பாவெனிலும்
ஆணெனிலும்,பெண்ணெனிலும்
இருபால் வித்தியாசமில்லை.
ஒருவரை ஒருவர்,
ஒருவருடையதை ஒருவர்,
கவர்ந்து கொள்ளும்
முயற்சிகள் இல்லை.
நாகரீகம்,இது நாகரீகமில்லை
என்ற பண்பாட்டுப் பேத்தல்களும்
இங்கே இல்லை..
இப்படியொரு உலகமும்
இங்கே உண்டு
அவர்கள்..
மனதால் சிந்திப்பதில்லை.
உடலின் தேவையை மட்டுமே
உணர்த்துக்கிறார்கள்..!

ஆனால் இங்கே
அவர்களுக்கும் பெயரிட்டு
ஒதுக்கி வைத்திருக்கிறோம்..
பைத்தியங்கள் என்று...!

“மனதால் சிந்திப்பதால்
நாம் மனிதர்களாம்.”

பிறையாய் தெரிவதால்..!

பிறையாய் தெரிவதால்
நிலவில் குறையிருக்காது.!
மனதில் மெய்யில்லாவிடில்
எழுத்தில் சத்தியம் மிளிராது..

கயமை மிக்க மனதில்
கவிதை பிறக்காது..!
காலத்தை கிரகிக்காமல்
சரித்திரம் பிறக்காது.!

நீ போகும் பாதையில்
பதிந்துகிடக்கும் முட்களை
பரிசுத்தமாக்கிவிட்டுப்போ..
பின்வருபவர்கள் உன்னைத்
தொடர்கிறார்களாவென பார்க்காதே..!

கனியை உண்பவர்கள் குறித்த
கணக்கெதெற்கு.?
உனது பணியாய்
மரத்தை நட்டுவிட்டுப்போ.

உனதுதேவை எங்கோ
ஒரு இடத்தில் இருக்கிறது.
முடங்கிவிட நீ சாக்கடையல்ல,
காட்டாற்று வெள்ளம்.
இணைந்து வருவதை நீ
உருட்டிக் கொண்டு போ..
எதிர்ப்பதையும்..சேர்த்து.!