02 ஏப்ரல் 2012

சொல்ல வார்த்தையில்லை.!

இசைகேட்டு மயங்கும் உன் செவிகேட்கவே
மயக்கம்தரும் இசையொன்றை நான் பாடவா..
எழுதும் உன் கவிதைக்கு கருவாகவே..
என்வாழ்க்கை அனுபவத்தை நான் சொல்லவா..!

உன்போல்தான் பிறந்தேன்.உன்போல்தான் வாழ்ந்தேன்
உறங்கியெழுந்த ஒருபொழுதில் அதுகனவானது
வானிலிருந்து பொழிவது மழை மட்டுமேயென்ற
என்நினைப்பு அன்றேதான் தவிடுபொடியானது..!

குண்டுகள் பொழிந்த என்வீடு குப்பைமேடானது
குழந்தைகளுடன் ஓடினோம் புதர்களைநோக்கி
விதியின்கையில் விதி விலக்கில்லாததுபோல்
எங்களை கொடூர விமானம் துரத்தியது.

பாதுகாப்பிடம்தேடி அரசுகாட்டிய இடத்தில்
அனைவரும் எம்போல் புகுந்தோம் தஞ்சம்
அங்குநாங்கள் பட்டதுன்பம்..நரகமே கொஞ்சம்
மருந்தும் உணவுமில்லை உயிருக்கு மதிப்புமில்லை

இரவில் வந்தது ராணுவம் அரக்கர்போல
என்னையொருபுறம் மனைவியை அந்தப்புரம்
இழுத்துச் சென்றனர் இம்சைப்படுத்தி
விசாரணை துவங்கியது முன்னரெழுதிய தீர்ப்பின்படி

இருகால்களுக்கும் இடைவெளிவிட்டுக் கட்டி
கைகளைக் கட்டி,கண்களை கட்டி
ஈரம் உறைக்கும் நதியின் ஓரம்
மந்தைகள்போல சென்றனர் விரட்டி

இரவின் வருகைக்காக காத்திருப்பென்றே
எண்ணியிருந்தோம் நாங்கள் அவர்முன்
அரக்கர் சிலபேர் வந்தனர் சீருடையுடன்
சற்றுமுன் களைந்த ஆடை கலைந்து

என்னநடந்தது என்றே தெரிந்தது
எம் மனைவியர்,எம் சோதரிகள்
உயிருடனில்லை அவரினி எமக்கில்லை,
தசைபொசுங்கும் வாசம் உணர்ந்ததுசுவாசம்

போர்க்களமாயிருந்தது கொலைக்களமாய்
துப்பாக்கி முனையின் திகிலூட்டும்
சில்லிப்பை உணர்ந்தோமந்த விநாடியில்
உயிரும் பறந்தது வான்வெளியில்..

மூதாதையர் நாடென்ற பாசத்தில் முந்தி
வந்தோம் தமிழகத்திற்கு..வானில் வெளியில்
காற்றில் உலவும் எமதுயிர் கண்டதே
உம் செயல்களை அதைச்சொல்ல வார்த்தையில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக