21 அக்டோபர் 2014

அப்பா எப்ப வருவாரு - சிறுகதை -பொள்ளாச்சி அபி

அப்பா எப்ப வருவாரு - சிறுகதை -பொள்ளாச்சி அபி சேவல்கள் இன்னும் விழித்திராத காலை.., கவிந்திருந்த இருளை மெதுவாக ஆக்ரமித்துக் கொண்டிருந்தது வெளிச்சம்.ஊரின் கடைக் கோடியில், அடர்ந்திருந்த புதர்களின் இடையே சென்ற ஒற்றையடிப் பாதை முடிந்த இடத்தில், தனியாக இருந்த அந்தக் குடிசையில்.., “திடுக்”கென படுக்கையிலிருந்து,பரபரப்பாக விழித்து எழுந்து அமர்ந்தான் சண்முகம். இன்றைக்கு எப்படியும் அதிகாலையில் கண் விழித்து விட வேண்டும் என்று நேற்று இரவு படுக்கைக்கு போகும்போதே அவன் முடிவு செய்து வைத்திருந்தான். திட்டமிட்டபடி விழித்து விட்டான்.ஆனாலும், இன்றைக்கும் அப்பாவைப் பார்க்க முடியவில்லை.அம்மாவின் பக்கத்தில், அவர் எப்போதும் படுத்திருக்கும் இடம் இன்றைக்கும் காலியாகவே இருந்தது. சண்முகத்திற்கு தாங்கமுடியாத துக்கம் பீறிட்டது. படுக்கையில்‘தொப்’பென்று விழுந்தான். ‘அப்பாவை எப்போதுதான் பார்க்க முடியும்..?’ அம்மாவை இப்போதே எழுப்பிக் கேட்டு விடலா மா..?’ என்று யோசித்தபடியே அம்மாவைத் திரும்பிப் பார்த்தான் சண்முகம்.முந்தானை விலகிக் கிடக்க,மணிக்கட்டு வரை இல்லாதிருந்த இடதுகையை தலைக்கு அண்டக் கொடுத்து, வலதுகையை நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு, கால்களைப் பரப்பியபடி,லேசான குறட்டையொலி யோடும்,அடித்துப் போட்ட சலிப்போடும் ஆழ்ந்து போய்த் தூங்கிக் கொண்டிருந்தாள் வடிவு. ‘நேற்று இரவு அப்பா எப்போது வந்தாரோ..? பாவம்.. இவள் எப்போது தூங்கினாளோ..?..அம்மாவை எழுப்ப மனம் வரவில்லை. அப்படியே அவளை எழுப்பிக் கேட்டாலும் அவள் என்ன சொல்லிவிடப் போகிறாள்..?.. “போடா..அப்பா வர்றதுக்குள்ளே நீ எப்பவும் போலத் தூங்கிடுறே..அசந்து தூங்கற பையனை எதுக்கு எழுப்பணும்னுதான் உன்னைக் கூப்பிடலை..இன்னைக்கு அப்பா வரும்போது கண்டிப்பாக உன்னை எழுப்பிவிடறேன் என்னா..?” என்பாள். உக்கும்..அவள் எழுப்பியதுமில்லை. அவனாய் முழித்துக் கொண்டதுமில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த இந்த மூன்று மாதமாய் இதேதான் தொடர்கதை..! சண்முகம் புரண்டு,புரண்டு படுத்துப் பார்த்தான். தூக்கம் வரவில்லை.லேசாய் குளிரும் அடிப்பது போலிருந்தது.சிம்னி விளக்கின் மங்கிய ஒளிச் சுடர் மெதுவாய் நடுங்கிக் கொண்டிருந்தது. படுக்கையின் ஓரத்தில் கிடந்த போர்வையை கால்களாலேயே இழுத்து,பின் அதன் மடிப்புகளைப் பிரித்து போர்த்திக் கொண்டான்.விளக்கின் மங்கலான வெளிச்சம் ஊடுருவிய போர்வையிலிருந்த பல வடிவான கிழிசல்கள் வழியாக அடர்த்தியான இருட்டிலிருந்த ஓலைக்கூரை தெரிந்தது. அது ஏதோ நட்சத்திரங்களின் பின்னனியில் கறுப்பு வானத்தைப் பார்ப்பது போலிருந்தது சண்முகத்திற்கு. அங்கு இல்லாமல் போனது நிலா மட்டும்தான்,அப்பாவைப் போலவே..,பின்னே..? அம்மா இருக்கிறாள்,அவன் இருக்கிறான்.அப்பா மட்டும் கண்ணில் படுவதேயில்லையே..! அதற்காக அப்பா என்றொருவர் தனக்கு இல்லாமலே போய்விட்டாரா என்ன..? எத்தனையோ இரவுகளில் தூக்கத்திலேயே உணர்ந்த மதுவின் வாடை. அம்மாவும், அப்பாவும் கிசுகிசுவென ரகசியக் குரல்களில் பேசிக் கொள்வது. விடியும் முன்பாக “எனக்கு நேரமாச்சு.. கிளம்புறேன்..” என்றோ.., சரி..வர்றேன்..” என்றோ.. கேட்கும் அப்பாவின் குரல்..,தொடர்ந்து குடிசையின் தகரக் கதவை ‘’கிறீச்..” ஒலியுடன் திறந்து மூடும் சப்தம்.., என அப்பாவின் இருப்பை உணர்ந்த சந்தர்ப்பங்கள் ஏராளமாய் உள்ளதே..! ஆனால்..இதுவரை அப்பா தன்னைத் தூக்கிவைத்துக் கொஞ்சியதாகவோ,கடைகளுக்கோ திருவிழாவிற்கோ அழைத்துச் சென்றதாக அவனுக்கு எதுவுமே நினைவில் இல்லை. என்னதான் முயற்சி செய்துபார்த்தாலும் அப்படி யொரு காட்சி நிழலாகக் கூட வரமாட்டேன் என்கிறது. அவ்வளவு ஏன்..? அப்பாவின் முகம் எப்படியிருக்கும்..? என்பதுகூட தெரியவில்லை. தன்னுடன் படிக்கும் ரமேசின் அப்பா தினமும் ஸ்கூட்டரில் வந்து அவனை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு டாடா காட்டிவிட்டுப் போவார். பளீரென்று அடிக்கும் வண்ணங்களில் உடைகளை உடுத்திவரும் அவர் நல்ல சிவப்பும் உயரமுமாக இருப்பார்.நமது அப்பா இவரைப் போல இருப்பாரா..? என்று பல தினங்கள் கற்பனையில் திளைத்திருக்கி -றான் சண்முகம். அதேபோல,துளசியின் அப்பா சைக்கிளில்தான் வருவார். ஒடிசலான தேகம் கொண்ட அவர் முகத்தில் மீசை மட்டும் முகத்தில் பாதியை மறைத்திரூக்கும்.சிலபோது மீசையின் கணத்தில்தான் அவர் இன்னும் பறந்து போகாமல் இருக்கிறாரோ..?’ அதை நினைத்தாலே சண்முகத்திற்கு சிரிப்புத்தான் வரும்.அவர் மாதிரி தனது அப்பா இருக்கமாட்டார் என்றும் அவன் உறுதியாக இருந்தான்.ஆனால்..அந்தக் கற்பனை களுக்கெல்லாம் எப்போதுதான் முடிவு கிடைக்கும்..? மற்ற சில பையன்கள் வீட்டில் வைத்திருக்கும் குடும்பப் போட்டோ போல தனது வீட்டிலும் இருக்குமா..என்று அவன் தேடிக்கூடப் பார்த்துவிட்டான். ஊஹூம்..அப்படியொன்றும் கண்ணில் தட்டுப்படவேயில்லை. சண்முகத்திற்கு கவலையாக இருந்தது.அப்பா எப்படி இருப்பார்..? ‘அ’..அம்மா..என்று, வகுப்பில் டீச்சர் சொல்லிக் கொடுத்த போதுகூட,அவனுக்கு ‘அ’..அப்பா என்றே மனதுக்குள் பதிந்தது.அன்றைக்கு தன்னை பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்க்கும்போதும், அம்மா மட்டும்தான் வந்தாள்.அங்கிருந்த பெரிய வாத்தியாரிடம் தனது மொன்னைக் கையையும், வலது கையையும் குவித்துக் கும்பிட்டபடி,என்ன சொன்னாளோ தெரியவில்லை.அவர் தன்னை மேலும்,கீழுமாகப் பார்த்த பார்வை, அறுக்கப் போகும் ஆட்டுக்குட்டியை வளர்த்தவன் பார்ப்பது போலிருந்தது. “டேய்..சம்முவம்..நல்லாப் படிச்சுக்கோ கண்ணு..”, என்று தன்னை அணைத்துக் கொண்டு,வடிவு முத்தமிட்டபோது,அவள் கண்களில் கண்ணீர் திரண்டு நிற்பது தெரிந்தது. “ஏம்மா வடிவு..இது கவர்ன்மெண்ட் ஸ்கூலு இல்லே..பிரைவேட் ஸ்கூலுதான்..ஒண்ணாம் வகுப்பாயிருந்தாலும், இங்க மூணு மாசத்துக்கொரு தடவை பணம் வாங்குவாங்க.. உன்னாலே கட்டீற முடியுமா..?” “அய்யா..அது எனக்கும் தெரியுமுங்க..எப்பாடு பட்டாவது பணத்தைக் கட்டிடுறேங்க.. ஆனா, அவனோட படிப்பு நல்லமொறையிலே இருக்க, நீங்கதானுங்க ஒத்தாசையா இருக்கோணும். அய்யா..இவனாலத்தான் எங்க பாடெல்லாம் மேலே வரணும்யா..,உங்க உடம்பொறப்புக்கு செய்யற மாதிரி,இந்த உதவியைச் செய்யுங்கய்யா..!” வடிவு,பெரிய வாத்தியாரிடம் தனது விண்ணப்பத்தை வைத்துவிட்டு சென்று விட்டாள். அப்பாவைப் பற்றி அவரும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.ஏன்..அவனுக்கே அதுவரை தெரியாதே..தனக்கும் ஒரு அப்பா இருப்பார் என்று..! அதற்குப் பின்தானே..ரமேசு.துளசி,முரளி, பால கிட்ணன், ராமசாமி, பங்கஜம்..னு இவங்ககூட வர்ற அப்பாக்களைப் பார்த்தபின்தானே, “என்னோட அப்பா எங்கேம்மா..?” என்று முதன்முதலாய் வடிவிடம் அவன் கேட்டான். ஏதோ கைவேலையாய் இருந்த வடிவு அதைக் கவனிக்கவில்லையா.. என்று தெரியவில்லை.. அவன் மீண்டும் கேட்டான். வடிவு அப்போதும் அவனது பக்கமே திரும்பாமல், தனது வேலையைத் தொடர்ந்தபடியேதான் சொன்னாள், “போடா..அப்பா வர்றதுக்குள்ளே நீ எப்பவும் போலத் தூங்கிடுறே.. பள்ளிக்கோடத்துலே நல்லா ஆட்டம் ஆடிட்டு வந்து,அசந்து தூங்கற பையனை எதுக்கு எழுப்பணும்னுதான் உன்னைக் கூப்பிடலை.. இன்னைக்கு அப்பா வரும்போது கண்டிப்பாக உன்னை எழுப்பிவிடறேன் என்னா..?” புகைந்து கொண்டிருந்த அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது. சண்முகத்திற்கு சட்டென இப்போதுதான் உறைத்தது. பள்ளிக் கூடத்தில்,அதிகமாக ஓடியாடி விளையாடிக் கொண்டு வருவது மட்டுமின்றி, வீட்டுக்கு வந்தும், விளக்கு வைக்கும்வரை.மேலத் தெருவில் இருக்கும் பிள்ளைகளோடு விளையாடுவதால்தான் அசந்துபோய்த் தூங்கிவிடுகிறோமோ..? அட, இத்தனை நாள் இது புரியாமல் போய் விட்டதே..! எதனையோ சொந்த முயற்சியில் கண்டுபிடித்துவிட்டது போல, அவனுக்கு இப்போது ஒரு தெளிவு வந்துவிட்டது. இன்றைக்கு பள்ளியில் மட்டுமல்ல,மாலையில் வீட்டிற்கு வந்தும் விளையாடக் கூடாது.அப்போது அசந்துபோய் தூங்கிவிட முடியாதல்லவா..? இன்று இரவு அப்பா வரும்வரை கண்டிப்பாக விழித்தேதான் இருக்கவேண்டும்..! அப்பாவிடம் சொல்வதற்கு அவனிடம் நிறைய சேதிகள் இருக்கிறது. நேற்று இரவு அப்பா சொன்ன கதை என்று ராசுக்குட்டி தினமும் ஏதாவதொன்றைச் சொல்வதைப் போல, நானும் சொல்ல வேண்டும்.அதற்காக அவரிடம் ஒரு கதையைக் கேட்டுச் செல்லவேண்டும்..! சண்முகம் முடிவு செய்து கொண்டான். படுக்கையிலிருந்து சுறுசுறுப்பாக எழுந்து கொண்ட சண்முகம்,பள்ளிக்கு புறப்பட ஆயத்தமானான். வடிவும் எழுந்து குளித்து மார்க்கெட்டுக்கு போகத் தயாரானாள்.அங்கு ஏதோ வெங்காய மண்டியில் வேலையாம்.அதுவும் மூணுமணி வரைக்கும் தானாம்.அப்புறம் அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள். அம்மாவிற்கு இப்போதுதான் பரவாயில்லை. முதலில் அவள் ஒரு துணிக்கடைக்குத்தான் வேலைக்குப் போனாள்.அங்கு இரவு எட்டுமணி வரைதான் வேலை என்றாலும்;,தான் போகச் சொல்லும்வரை அவள் இருக்கவேண்டும் என்று முதலாளி சொன்னாராம்.சில வாரங்கள் போய் விட்டு நின்று விட்டாள். அதற்குப் பின் ஒரு வீட்டில்,பாத்திரம் கழுவ, துடைக்க,கடைக்குப் போக என்று போய்க் கொண்டிருந்தாள்.அந்த வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போகிறவர்கள். கணவன் முதலில் வந்துவிடுவார். அதற்குப் பிறகு இரண்டு மணிநேரம் கழித்துத்தான் அவரது மனைவி வரமுடியும். என்னவோ தெரியவில்லை. அங்கிருந்தும் பத்துப் பதினைஞ்சு நாளிலேயே நின்று விட்டாள். அப்புறம் ஒரு ஓட்டலில் பாத்திரம் கழுவ.., இன்னொரு துணிக்கடை.., கட்டிட வேலை.., பிளாஸ்டிக் கம்பெனி..,இப்படி நிறைய இடத்திற்கு வேலைக்குப் போன வடிவு,எங்கேயும் தொடர்ந்து ஒரு மாசம்கூட தரிக்கவில்லை.அவள் ஏன் இப்படி வேலை செய்யும் இடத்தை மாற்றிக் கொண்டே யிருக்கிறாள் என்று அவனுக்கும் தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்..வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் தின்பதற்கு எதுவும் கிடைக்காத விரக்தியில் தவித்தபடியிருந்த சண்முகம், தாமதமாய் வந்துசேர்ந்த அம்மாவிடம், ஏம்மா இவ்ளோவ் நேரம்.., எனக்கு ரொம்பப் பசிக்குதுமா..! என்றபோது,அச்சச்சோ..இன்னைக்கு சந்தையிலேயிருக்கற வெங்காய மண்டியிலே வேலைக்கு சேர்ந்துட்டேன்.முதநாள் இல்லையா.. முதலாளியைப் பாத்துட்டு வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிடுச்சு..நாளையிலிருந்து மூணு மணிக்கெல்லாம் வந்துருவேன்.நீ பள்ளிக்கோடத்து லேயிருந்து வரும்போது,நான் வீட்டுலேயிருப்பேன்.. என்னா..சரியா..? என்றபடியே கையோடு கொண்டு வந்திருந்த சில அதிரசங்களை அவனுக்குத் தந்தாள். பரபரவென்று பொட்டலத்தைப் பிரித்து,ஒன்றை எடுத்துக் கடித்தபடி, “ஏம்மா.., வேறவேற இடத்துக்கு வேலைக்குப் போயிட்டேயிருக்கறே..?”என்று கேட்ட சண்முகத்தைப் பார்த்தவளுக்கு, மளுக்கென்று கண்ணீர் திரண்டது. எத்தனையோ இடத்துக்கு வேலைக்குப் போன, இந்தப் பாவிமகளுக்கு இருக்கற ஒத்தைக் கையோட செஞ்சுதர்ற வேலை யாருக்கும் புடிக்கலைடா கண்ணு..,ஆனா..”அவள் அழுது கொண்டே அன்றைக்கு என்னவோ சொன்னாள். சண்முகத் திற்கு அது சரியாகப் புரியவில்லை.‘வேலையைப் பற்றிக் கேட்டதால்தான் அம்மா அழுகிறாளோ..? இனி கேட்கக்கூடாது..,’முடிவு செய்தபடி,அவன் வேகமாக அதிரசங்களைக் காலிபண்ணிக் கொண்டிருந்தான். வடிவு சொன்னதுபோலவே,இப்போதெல்லாம் அவன் பள்ளி முடிந்து வரும்போதே அவள் வீட்டில்தான் இருக்கிறாள்.ஆனால்,அவன் அப்பாவைத்தான் பார்க்கவே முடிவதில்லை. இன்றைக்கு இரவு அப்பாவை எப்படியும் அவன் பார்த்துவிடுவான்.அந்த நினைப்பே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. பள்ளியில் மதியநேர வகுப்பில் தூங்கிக் கொண்டிருந்த மாரிமுத்துவை, “நல்லா அண்டா மாதிரி,குண்டாவிலே சோத்தைக் கொண்டு வந்து திங்கவேண்டியது..அப்புறம் கிளாசைக் கவனிக்காமல் தூங்கவேணடியது..எந்திரி..போய் கிரவுண்டை ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வா..”என்று கணக்கு டீச்சர் விரட்டியபோதுதான் சண்முகத்திற்கு இன்னொரு உண்மையும் புரிந்தது.வயிறு நிறைய சாப்பிட்டு விட்டால் நல்லாத் தூக்கம் வந்து விடுமோ..?, அன்று அவன் எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளவுமில்லை. அன்றைக்கு இரவு, அவனுக்கு மிகவும் பிடித்த உருளைக் கிழங்கு குழம்பு இருந்தபோதும்,பாதிச் சாப்பாட்டை வைத்துவிட்டு எழுந்தவனை வடிவு ஆச்சரியமாகப் பார்த்தாள்,“சம்முவம்.. ஏண்டா.. பாதிச் சோத்தை அப்படியே வெச்சிட்டே..என்ன புடிக்கலே உனக்கு..?” அவன் ஒன்றும் சொல்லாமல் போய்க் கைகழுவி விட்டு வந்தான்.டேய்..நான் கேட்டுகிட்டே இருக்கேன்..ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறே..?” “போம்மா..வயிறு நிறைய சாப்பிட்டா ரொம்பத் தூக்கம் வந்துடும்.அப்புறம் இன்னைக்கும் அப்பாவைப் பாக்காமயே நான் தூங்கிடுவேன்.நீ எப்பவும் போல என்னையும் எழுப்பமாட்டே..!” சண்முகம் சொல்லிக் கொண்டே போய், திண்ணை யில் உட்கார,வடிவின் முகத்தில் கலவரம் துளிர்த்தது. சில விநாடிகள் யோசனைக்குப் பிறகு.“சரி..கண்ணு.. வந்து படுத்துகிட்டே முழிச்சுட்டு இரு..எதுக்குப் போயி திண்ணையிலே உக்காந்துகிட்டு..? பூச்சி பொட்டு எதுனா வந்தாக்கூட தெரியாது.உள்ளாற வா சாமி..எங்கண்ணில்லே..” வடிவு கொஞ்சலான குரலில் கெஞ்சினாள். “சரிம்மா..” என்றபடி உள்ளே வந்த சண்முகம் தனது படுக்கையில் படுத்துக் கொண்டான்.அவன் மிச்சம் வைத்திருந்த சாப்பாட்டிலேயே மேலும் கொஞ்சம் சோற்றைப் போட்டுக் கொண்டு மெதுவாக உண்ணத் தொடங்கியிருந்தாள் வடிவு. இரவு மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. சுவர்க் கோழிகளின் சத்தத்தை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் வழக்கம்போல எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை. காலையில்,ஏதோ வழக்கத்துக்கு மாறான சப்தத்தைக் கேட்டு,திடுமென அவனுக்கு விழிப்பு தட்டியபோது, “சத்தியமாய் நான் எடுக்கலைய்யா..,நீ குடுத்த பணத்தைத் தவிர எங்கிட்டே வேற சல்லிப் பைசா இல்லை.நீ வேணா வந்து வீடு முச்சூடும் தேடிக்கோ.., வரும்போதே போதையிலேத்தானே வந்தே,பணத்தை எங்க போட்டீயோ..,போய் மத்த இடத்துலே தேடிப்பாரு.., ஈனப் பொழப்பு நான் பொழச்சாலும்,எவங்கிட்டேயும் திருடுற பொழப்பு எனக்கில்லே..,இதுவரைக்கும் எவனும் எம்மேல இப்படி பழியும் போட்டதில்லே..!” வடிவுதான், வாசப்படியில் நின்றிருந்த அந்த மனிதனிடம் கத்திக் கொண்டிருந்தாள். அவன் சில விநாடிகள் அவளையே பார்த்தபடி நின்றிருந்துவிட்டு.ஏதோ முனகியபடியே மெதுவாய் நகர்ந்து போவது தெரிந்தது. அதற்குப் பிறகு சண்முகம் ஏனோ அப்பாவைக் கேட்கவுமில்லை,பார்க்கவும் ஆசை தோன்றவில்லை..! -------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக