01 ஜூன் 2012

கடவுளுக்குத் தெரியுமா.?

எப்படித்தொடங்குகிறது..?
எங்கிருந்து தொடங்குகிறது.?
எல்லாம் ‘அவர்களுக்குத்’ தெரியும்..!
ஆனால்..
எதுவுமே தெரியாத அப்பாவிகள்
உயிர்பிழைக்க தெருவில்
ஓடிக்கொண்டிருக்கின்றனர்..

முன்பின் பார்த்தறியாத
முன்பகை எதுவுமில்லாத
சிக்கிய ஒருவனை நோக்கி
உயர்ந்தன ஆயுதங்கள்..

அவன் கைகூப்பியபடி
உயிருக்கு மன்றாடினான்..
“மதஅடையாளங்கள்
மட்டுமல்ல
மதம்கூட எனக்கு வேண்டாம்.
நீங்கள்தான் என் கடவுள்..
உயிர்ப்பிச்சை தாருங்கள்..!”

“நாங்கள் உன் மதத்துக் கடவுளல்ல”
உன்மத்தமாய் உயர்ந்த
ஆயுதங்களில் படிந்த இரத்தத்துடன்
கடவுள்கள் திரும்பிச் செல்கின்றனர்..

கடவுளரால்
கொல்லப்பட்டதை எண்ணியபடி
இறக்கிறான் அவன்..
இனி அவன் செல்லுமிடம்
சொர்க்கமா நரகமா..?
அது எதுவென்று
கடவுளுக்குத் தெரியுமா.?

நட்பென்னும் வானவில்.!

வாழ்க்கையில் வந்துபோகும்
அனைவருக்கும் நிறமுண்டு.

அம்மா பசுமை அப்பா சிவப்பு

இரண்டும் கலந்த குடும்பம் ஊதா

நன்றும்தீPதும் கலந்திருக்கும் காதல் நீலம்

உறவுகளாய் அமைவது எப்போதும்

மங்கலம் சொல்லும் மஞ்சள்

சிவப்பா மஞ்சளா எனத்தெரியாத

வண்ணம் காட்டும் ஆரஞ்ச் மனைவி

ஆனால்..அத்தனைகுணத்தையும்

தனக்குள் அடக்கியிருக்கும்

நட்பு மட்டுமே வானவில்

வாழ்க்கையில் வந்துபோகும்
அனைவருக்கும் நிறமுண்டு

நிறங்கள் எப்போதும்
தொடராவிடினும்

வானவில் என்றும் உடனிருக்கும்..!

எதைத் தேடுகிறாய்.?

மலையளவு குப்பைகளுக்குள்
தேடுவதென்ன குழந்தைகளே..?

அரசியல்வாதிகள் கொடுத்த
வாக்குறுதிகளையா.?

கட்டாயக் கல்வி எனும்
சட்டங்களையா..?

தேகம் வலுப்பெறவுதவும்
சத்தான உணவுகளையா.?

இளமையில் மரணிக்கும்
நோயிலிருந்து விடுதலையா.?

எப்படியும் வாழந்துவிடலாமெனும்
எதிர்காலத்தையா.?

மறுஜென்மம் அயல்நாட்டிலாவெனும்
தலைவிதியையா.?

அல்லது
மானுடம் தொலைத்த
மனிதநேயத்தையா.?

ஏதோ ஒன்றைத் தேடினோம்
எதுவோ ஒன்று கிடைத்ததென்று மட்டும்
சொல்லிவிடாதீர்கள் குழந்தைகளே
அதுவும் லாபம்தான் என்று
குப்பைபொறுக்குவதையும்
தேசியத்தொழிலாக மாற்றுவதற்கு
வெட்கமேயில்லாத அரசியல்வாதிகள்
இங்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.!

எனக்கு வேண்டாமடா.!

கல்லால் செய்த சிலைகள் கூட
வேளைக்கு உண்ணுதடா..!
சிலைகள் செய்த மனிதனின்
வயிற்றில் அமிலம் கொல்லுதடா..!

முன்னர் எடுத்த ஜென்மப் பலனே
இந்தத் துன்பமடா..,
என்றாலெம்மைத் துன்பப் படுத்துவதில்
உனக்கென்ன இன்பமடா..?

மற்றவர் துன்பம் பார்த்து ரசிப்பவன்
மனிதனே இல்லையடா.!
அதனினுமுயர்ந்த கடவுள் என்றால்
எனக்கு வேண்டாமடா.!

நாங்கள் ஒருநாள் உன்னைதண்டிக்கும்
காலம் வருமடா.!
நாங்களமர்ந்த இடத்திலுன்னை இருத்தி
வைப்போம் உண்மையடா.!

பழிக்குப்பழியென பொங்கும் உணர்வில்
சாபம் இல்லையடா..இது
காலம் சொல்லும் சேதியான
தீர்க்க தரிசனமடா..!

கட்டளையிட்டாள் கவிதையெழுத..!

இரவின் அமைதியில்
நிலவின் ஒளியில்
நட்சத்திரங்களின் சிமிட்டலில்
மனம் பறிகொடுத்தொரு
வலசை வந்தால்
கவிதை தானாய் வரும்
என்றுதான் என்னைநான்
பழக்கிவைத்திருந்தேன்
நடைக்காக கூட்டிச் செல்லும்
நாய்க் குட்டிபோல..,

நிலவும் மலரும்
காற்றும் வானவில்லும்
இன்னபிற சங்கதிகளும்
இன்பமென்றே,கவிதையென்றே
எழுதியும் வந்தேன்
கற்பனையாக எழுதியதெல்லாம்
பிச்சைக்காக சாமிவேடம்
போட்டவன்போல
பல்லிளித்தது..!

அப்போதெல்லாம் கவிதை
தன்னை எழுதச்சொல்லி
என்னிடம் கேட்டதேயில்லை..!
அடிமை மனைவிபோல
எழும்பிய குரலையும்
அடக்கியே வைத்திருந்தேன்
ஆணவக் கணவன் உருவில்.!


எனது திமிர்க்குதிரையினோடு
ஒருநாள் மதியம்
நகர்ப்புறப் பகுதியில்
உலா வந்தபோது..,

குடியிருப்புக்கு குடிநீர்
வேண்டுமென..
தெறிக்கும் வெயிலில்
சாலையில் நூறுபெண்கள்
எழுப்பிய முழக்கமெலாம்
கவிதையாகவே இருந்தது.
ஒரு நூறு பெண்கள்
ஒரே சமயத்தில்
வாழ்வியல் உண்மைசொல்லும்
கவிஞர்களாக முடியுமெனில்

இதுவரை கவிதையென
எழுதிய பொய்களுக்காக
வெட்கப்படுகிறேன்.!

அடிமை மனைவியாய்
இருந்த கவிதைப்பெண்
சுதந்திரமான தன்சொந்தக்
குரலிலெனக்கு கட்டளையிட்டாள்
இனியாவது எழுதுவது
கவிதையாக இருக்கட்டும்..!

இதுவா இந்தியா..!

எதிர்கால வாழ்க்கைக்காக
ஏங்கி ஏங்கி..
வாழ்வின் எல்லைகளையும்
வாழ்விடங்களின் எல்லைகளையும்
விட்டு நீங்கி..அல்ல நீக்கப்பட்டு
குப்பைமேடுகளின் ஒருபகுதியாக
குழந்தைகள் மாறிநிற்பதும்
இங்கு சாதாரணம்.!

முப்பத்திரண்டு ரத்தினங்கள்
பதித்த கிரீடங்களை
தலையில் தாங்கும்
முற்றும்துறந்த முனிவர்கள்..
கோடிகள் கொடுத்து
பதவிகள் வாங்குவதும்
இங்கு சாதாரணம்..!

முற்றும் துறந்தவனுக்கு
எல்லாம் இருக்கிறது.!
எல்லாம் வேண்டுபவர்க்கு
எதுவும் இல்லாதிருக்கிறது.!

இந்தியாவில் மட்டுமே
வேற்றுமையிலும் ஒற்றுமையென
இறந்தகாலச் சரித்திரம் எழுதியவர்களே..!
இந்த நிகழ்காலத்தை எதுவாய் எழுதுவீர்கள்.?

எப்போது வருவாய்.?

தேவகுமாரன் முதல்
மனுஷ்ய குமாரி வரை..
மனிதனின் பாவக்குப்பைகளை
யாரோ சிலர் இவர்போல்
சுமப்பது மட்டும்
இன்னும் தீரவில்லை.
இனி தீர்வும் இல்லையோ.?

மனித உள்ளங்கள் சுத்தமானால்
மலையளவு குப்பைகளும்
மாய்ந்து போகுமே..!
மானிடா கேள்..
உனது பாவங்கள்
கோபங்கள்,ஆசைகள்
வக்கிரங்கள் என
எல்லா அழுக்குகளையும்
அடுத்தவர் சுமக்கவே விட்டுப்போகிறாய்.
அடுத்தவருக்காக அதனைச் சுமக்க
நீ முன்வருவது எந்நாளோ..,
அன்றே மாயும் அனைத்தும்
இவ்வுலகைவிட்டு.!

போதைகளில்லாத உலகம்.!

கசடனுக்கு மதுவில்..
கவிஞனுக்கு புகழில்..
அரசியல்வாதிக்கு பதவியில்..
மனைவியை அடிமைப்படுத்துவதில்
கணவணைக் கொடுமைப்படுத்துவதில்
போதை...!

அது
எல்லோருக்கும் ஏதோவொன்றில்
எப்போதும் மயங்கிக் கிடக்க
தேவைப் படுகிறது..!

போதையில்
பேசுவதும்,சிந்திப்பதும்
நிந்திப்பதும் தண்டிப்பதும்
நியாயம் வழங்குவதும்கூட
மானுட வழக்கமாய்
மாறிப்போனது..!

போதைகளில்லாத உலகம்
எங்கேனும் இருக்கிறதா.?
தேடலின் முடிவில் கண்டேன்
இன்னும் மனிதனாக வளராத
பேதையாகவே உள்ள
ஒரு குழந்தையின் சிரிப்பில்..!

ஒரு மனக்குமுறல்.!

இயற்கையின் உந்துதல்களுக்கேற்ற
வடிகால்கள் எத்தனைவிதமாய்..

செல்வத்தின் மதிப்பைக் காட்டும்
பளிங்குக் கற்கள்..
சென்றவுடன் இயங்கும் தானியங்கி
தண்ணீர்க்குழாய்..
நின்ற இடம் தெரியும்
பரந்த கண்ணாடி..
ஈரக்கைகளை உலர்த்த
வெப்ப யந்திரம்..
அங்கும் மேனி வியர்க்காமல்
மையக் குளிரூட்டியென..

இயற்கையின் உந்துதல்களுக்கேற்ற
வடிகால்கள் எத்தனைவிதமாய்..,
அரசு அலுவலகங்கள்..
தனியார் அலுவலகங்கள்..
திரையரங்கங்கள்,
பேருந்து நிலையங்கள் என
எல்லா இடங்களிலும்
உங்களுக்கான வகையில்
எல்லாம் அமைத்தீர்கள்..நன்று.!

ஆனால்..,
தவழ்ந்தநிலையில் படியேறும்..
படிகளிலேறத் தடுமாறும்..,
சக்கரநாற்காலிகளில் உலாவரும்
நாங்கள் உங்கள் கணக்கில்
மனிதராய் இல்லையோ..?

உமது உடை
உமது உணவு
உமது இருப்பிடமும் கூட
எங்களுக்குப் பொருந்தும்.
ஆனால்..உமது கழிப்பிடம்
எமக்குப் பொருந்துமா.?

கழிப்பிடம் என்றால்
முகம் சுளிக்காதீர்கள்..!
அந்தரங்கங்களை
வெளியே சொல்வது
அசிங்கமென எமக்கும் தெரியும்..
இது அந்தரங்கமல்ல..
எம்வாழ்வின் ஜீவாதாரப் பிரச்சினை..!
நீ இதில் அசூயைப்பட
எதுவும் இல்லை..!
எல்லோரும் மலக்குடலை
உடலில் சுமந்தே திரிகிறோம்
என்பதே யதார்த்தம்.!

மொண்டிக்கு முந்நூறு குறும்பு
முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்பட்டது போல
என்று பழமொழிகளையடுக்கி
எதுகையும் மோனையுமாய் எழுதி
உங்கள் மனவக்கிரங்களை
நிறைவேற்றிக் கொண்டவர்களே..!

மாற்றுத் ‘திறன்’ உடையவர்களென
பெயரால் எங்களை
உயர்த்தி வைத்தீர்கள்..!

ஆனால்
உங்கள் கழிப்பிடங்களை
உபயோகப்படுத்தும் திறன்
எங்களுக்கில்லை என்பதை
எப்போதுதான் உணர்வீர்கள்..?

எங்களிடமும் கெஞ்சி
ஓட்டுவாங்கிப் போனவர்களே..!
எங்களின் உழைப்பையும்
லாபமாக்கிப் பார்த்தவர்களே..!

நீங்கள் எங்களை
குடும்பஅட்டைக்கு
அடையாள அட்டைக்கு
ஓட்டுரிமை அட்டைக்கு
அரசு உதவித் தொகைக்கு
என எதற்கெடுத்தாலும்
பொறுக்கச் சொன்னீர்கள்..!
இயற்கை உபாதைக்கும்
எப்படி அய்யா பொறுப்பது.?

முட்டாளாகிப் போனேன்..!

அவன் பறம்பு நாட்டின் மன்னன்..
மலையும் காடும் அவனது நாடு
அவனது ஆட்சியின்கீழ் சிலநூறுவீடு
விலங்கும் மனிதனும் சேர்ந்து வாழ்ந்த
அழகிய இயற்கை இணைந்த வீடு..!

சேர்த்து வைக்க பெரும் பொருளில்லை
சேர்க்க வேண்டிய தேவையும் இல்லை.
சாலையில் செல்லும் வழியில் கிடந்த
முல்லைக் கொடிக்கு காலாய் தேரை
நிறுத்திச் சென்றான் மன்னன் பாரி.!

வள்ளல் பாரியென்றே வையம் வாழ்த்திட
வாழ்ந்தான்,இன்னும் வாழ்கிறான் மனதில்..
செல்லும் வழியில் கண்டதெற் கெல்லாம்
செங்கோல் தாழ்த்தி செய்தான் உதவி..!

வரலாறென அதனையும் நாம் படித்தோம்
வாழ்ந்தால் இப்படியென உறுதியும் பூண்டோம்.
மன்னன் வாழ்வை மனதில் இருத்தி
மழலைக்கெல்லாம் சொல்லியும் கொடுத்தோம்.!

மாநிலம் போற்றும் மன்னராகவே இருந்தாலும்
இருப்பதை எல்லாம் அடுத்தவர்க்கு கொடுத்த
மா மனிதர்கள் வாழ்ந்த நாட்டில்
மட அதிபதிகளுக்கு எதற்கப்பா சொத்து.?

முற்றும் துறந்த முனிவர்க் கெதற்கு
தங்க சிம்மாசனம், வைர கிரீடம்.?
பாரியென்று நீ சொன்னவரே முனிவர்
நீ முனிவரென்று சொன்னவர் மன்னர்.?

வரலாறு தெரியாத வாத்தியாராய் நினைத்து
மாற்றிச் சொல்லி விட்டாயே அப்பாவென
மழலைகள் பேசும் கேலியில் நான்
முழி பிதுங்கி முட்டாளாகிப் போனேன்..!
நான் மட்டுமல்ல என எப்படி சொல்வது.?

எவருமே கிடையாது..!

எனக்குத் தெரிந்த
எல்லா மனிதர்களையும்
ஒருமுறை மனதில் நிறுத்தி
அவர்கள் குறித்து அலசினேன்.
சிலருக்கு தாய் இல்லை
சிலருக்கு தந்தையில்லை.
சிலருக்கு சகோதர சகோதரிகள் இல்லை
சிலருக்கு மனைவி இல்லை
சிலருக்கு குழந்தைகளும் இல்லை..,
ஆனால்,
நண்பர்கள் இல்லாத எவருமே கிடையாது..!

நானொருவன் இருக்கிறேனென,
என்னிடம் நீங்கள் சொல்லவும் முடியாது.
அதைச் சொல்லும்போதே,
நீங்களும் என் நண்பராகிவிடுவீர்களே.!

என்னா நீ செய்யப்போறே.?

எங்க வேதனை
உனக்குப் புரியுமா.?
எடுத்துச் சொன்னாக்கா
எல்லாம் தெரியுமா.?


மீசைமுளைச்ச பருவத்திலிருந்து
தாடி வெச்ச தாகூர்போலவே
மாசக்கணக்கிலே திரிகின்றோம்.!
உழைச்ச காசுலே செரைக்கவேண்டியே
வெளியூர் போகற நெலமை தெரியுமா.?

கண்ணாடி அலமாரிலே
கண்ணைப் புடுங்குற
செருப்பு இருக்குது..
அதைவாங்கிப் போட
வக்கிருந்தாலும்
வீதியில்போட்டு நடக்கமுடியாத
விதியும் இருக்குது உனக்குத் தெரியுமா.?

சொதந்திரம் வாங்கி
ஆனது பல ஆண்டு..
அது இன்னும் வரலையேன்னு
ஏங்கித்தவிக்கிற பெருசுக
எல்லாம் எங்க ஊரிலே
இருக்குதென்பது உனக்குத் தெரியுமா.?

கார்ப்ரேட் கம்பெனி சம்பளம் வாங்குற..
நீ காரும் பைக்கும் ஓட்டிப்போறே..
உன்னோட தேவை எங்கோ முடியுது.
என்னோட பொழப்பெல்லாம்
எங்கே உனக்குப் புரியுது.?

நீ நல்லாப் படிச்சே
நல்லவேலைக்குப் போறே..
உன்னோட சொந்தம்
நாங்களும் முன்னேற
என்னா நீ செய்யப்போறே.?

அப்போது சிந்திப்போம்..!

நானும் நீயும்
ஒரே தமிழைப் படித்தோம்
ஒன்றாய் எழுதிப்பழகினோம்.!

உன்மீது எனக்கும்
என்மீது உனக்கும்
அளவற்ற அன்பு இருந்தது
அதை நானும் அறிவேன்.!

நாளடைவில்..
தமிழை நீ காதலித்தாய்.
ஆனாலது எனக்குத்தாய்.

தமிழ் ஒரு ஆயுதம்..
அதை வைத்திருப்பவன்
கைபோலவே உருமாறும்.

உன்கையிலது..
சிருங்காரமென்றால்
இங்கே அது சீற்றம்..

எனக்கு
கடவுள் நம்பிக்கையில்லை
அதனால் உன்பிரச்சாரத்துக்கு
கொடி பிடிக்கவில்லை.
காதலுக்கு நான் எதிரியுமில்லை.
எனக்கு
காதல்மட்டுமே பெரிதுமில்லை..!

தமிழால்தான் நீயும் நானும்
சிந்திக்கிறோம்..ஆனால்
உன் சிந்தனை வேறு
என் சிந்தனை வேறு

நட்பென்பது பழக்கத்தால் வருவது
அதனால் நிலை பெறுவது..
நட்புநீடிக்க அன்பு மட்டுமே
போதாது..!
இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்..!

இணைந்த புள்ளியிலிருந்து,நாம்
இருதுருவங்களாய் மாறியது
சதியல்ல அது
இயக்கவியல் விதி..!

உனது பாதைக்கு நானும்
எனது பாதைக்கு நீயும்
எப்போதாவது திரும்பினால்
எங்கேனும் ஒரு புள்ளியில்
சந்திப்போம்..! அப்போது
மேற்கொண்டு சிந்திப்போம்.!