30 அக்டோபர் 2023

ஓவியர் தயானியின் பார்வையில் பாட்டையா

 #பட்டாம்பூச்சிநூல்அறிமுகம்


அன்பு பட்டாம்பூச்சி உறவுகளுக்கு வணக்கம் நமது பட்டாம்பூச்சி தளத்தின் எழுத்துப் பயணத்தில் தொடர்ந்து பதிவேற்றி வரும் நம் சககால படைப்பாளிகளின் நூல் குறித்த அறிமுகத்தில் ...

இன்று அன்பிற்கினிய எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் சமீபத்தில் வெளிவந்த பாட்டையா சிறுகதை தொகுப்பு குறித்து அழகிய பார்வையில் அழகிய வாசிப்பில் கவிஞரும் ஓவியருமான தயானி அவர்கள் சிறப்பாக பதிவேற்றம் செய்கிறார்....


வாழ்த்துக்களும் அன்பும்......


நூல் : பாட்டையா

********************

நூலாசிரியர்: பொள்ளாச்சி அபி அவர்கள்.

*******************"

ஆறு சிறுகதைகள்

 அடங்கிய இந்நூல்... மிகவும்

சிறப்பானது.

வாழ்வியலின்

மகிழ்வும்

வலியும்

நம்மை கடந்து செல்லும் மாந்தரின் வாழ்வியலை

கூர்நோக்கிய

அறிவு...தன்

செவ்வியலை

எழுத்தாக்கி

ஆறு நட்சத்திரங்களை நம் கைகளில் மின்ன வைத்திருக்கும்

ஒளிப் பூக்களை

படைத்த...

பொள்ளாச்சி அபி அவர்களை

பாராட்ட வார்த்தைகள் இல்லை.

கதை சொல்லும்

பாங்கில்-எது

எடுத்துக்கொள்ள

வேண்டுமோ

அதையே

கதையின்

முக்கிய சாரமாக

அது... மானுட நீதி.

அவரின் கதைகளில் உலவும் மாந்தர்கள்...நுட்பமான மானுட

தீபங்கள்.அது காற்றில் அசைந்தாடும்

போதும்

மனது அமைதிபெறும்.

இருளையும் விரட்டும்.

மூடநம்பிக்கையை கொளுத்தும் தீப்பந்தத்தின்

தொடக்கப் புள்ளியாக

மின்னும் கதைகள் -அபி அவர்களின்....

நுட்பமான பார்வையை

வாழ்வியலின் மீதும் தீராத நம்பிக்கையையும்... முரண்களின் எதிர்ப்பில் நீதியை கைவிடாத மனமும் சுடர்விடுகிறது.

இந்த நூலின் தலைப்பே... ஆறடி உயரமும் முண்டாசுபனியனும், தார்பாய்ச்சிய வேட்டியும் தும்பைப்பூ தாடியும் மீசையும் அகலமான மார்பும், நீளமான கைகளும் கொண்ட , எழுபத்தாறு வயது, உழைப்பாளி

பாட்டையா தான்.

முத்து வீரன் ஒரு இளைய தலைமுறை ஆண் மகன்.

ஒரே காட்சியில்

ஒரே நேரத்தில்

வாழ்வின் மேடையில்.. சந்தித்தாலும்

பாட்டையாவின்

நடனமும், நுட்பமும், முத்து வீரனுக்கு பொறாமையும்

எரிச்சலையும் ஏற்படுத்தினாலும் தன் காதலி செல்விக்காக

பொறுமை காக்கிறான்.

பெரியவர் பாட்டையாவின் ஜமாப்பு செட்டு ஆட்டத்திற்கு

எல்லோருமே அடிமை. அத்தனை நுட்பமும் நளினமும் அவரை தலைமையாக ஏற்கத்துணிகிறது .இசைக்கலைஞர்களின் குழுவுக்கு.

நடுநாயகமாக....எல்லா இசைக் கருவிகளையும் வரிசைப்படுத்தியுள்ள பேரழகு.

எளிய மானுடவாழ்வின் இசை தான்

எல்லாவற்றிற்கும் ஆதாரம்.

பறை என்பது பேசும்.

அந்த மொழியை

உரக்கப் பேசு.

முதலில் உனக்கு அந்த மொழி புரியாவிட்டால்

அதை... மக்களுக்கு

எப்படி மொழிபெயர்ப்பாய்? செய்தியை ... என்பது

பாட்டையாவின் கேள்வி.

அவமானம்தான்

ஒருவனை செதுக்கும் என்பதற்கு முத்து வீரன் ஒரு உதாரணம்.

கனமான காற்சதங்கை-வெள்ளை ஈரிதழ் துண்டு என காட்சிபடுத்தும்போது- பாட்டையா கெம்பீரம்.முத்து வீரனும் செல்வியை

கை பிடித்தானா

என நீங்கள்

கதையை படித்து அறிந்தால்

சுவராஸ்யம்.

சஹாபி - போன்ற கதையை எழுத துணிவு அவசியம். அது

அபி அவர்களின்

எழுத்துசாதித்துவிட்டது. நாம்

அறியாத ஒரு விடயம் - அதுவும்

முகமதிய வாழ்வியல் - அவர் நுட்பமாக

நகர்த்தும் கதை இந்த புத்தகத்தின்

மகுடம்.

பாத்திமா என்ற தாய் - தன்

நேர்மையான கேள்வியால்

ஜமாத்து மக்களை வாயடைக்க வைக்கிறாள்.

தன் மருமகளை

திருமணம் செய்ய

வழக்கமாக எழுதும்

500 - 50,000

என எழுதச் சொல்லும் அவளின் கணவனின் சேமிப்பாக அதை தன் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு வைப்புதொகையாக அறிவிக்கத் தயங்கும்

பெரிய தலைகளுக்கு

மஹர் (வரதட்சணை வாங்குவது குற்றம் என அல்லாவின் வார்த்தையை) முன்வைத்து

5 பவுன் - ஐய்யாயிரம்

10 - பவுன் - பத்தாயிரம் என வாங்கும் திருமண பந்தங்கள் - பதிவு செய்வது வழக்கமாக - 500 தான்.

அதை உடைக்கும் பெண்ணின் நீதியை

ஏற்கத்தயங்கும்

மனிதர்கள்.

தன் தாய் அதிகமாக பேசியே பார்க்காத

மகன் - மணமகன் முகமது அலி சாதாரண பழைய இரும்பு சேகரிப்பு-லோடு பிடித்துக் கொடுக்கும் வேலை. வருமானம் நிரந்தரம் கிடையாது.

தன் மருமகள்

இறை பக்தியில்

நிறைந்து இருப்பதால்

அவளையே தன் மருமகளாக்க துணிகிறாள் பாத்திமா.

தன் குழந்தைக்கு

தன் மாமியார்

பெயரையே

சூட்டத் துணியும் அவள் சொல்லும் காரணம்,

புதிய தலைப்பு கதையின் தலைப்பாக

மிளிருகிறது,

நவரத்தினக்கல்லாக.

மூன்றாவது சிறுகதை

ஒப்பனைக்காரன்.

இந்த உலகமே

வெறுத்தாலும்

தாய் வெறுத்து

ஒரு பார்வை

பார்வை பார்த்துவிட்டால்

ஒரு மனம்

என்ன விலை தந்தாலும்

அதைஏற்காது.

தன் உயிரையே

பரிசாகத் தரும்

அந்த உள்ளம்

ராதாகிருஷ்ணன்.- எனும்

அன்புக்கு ஏங்கிய உள்ளம்.

பொன்னரளிக்காய்களோடு

முடியும் ஓசைகளும்...

வாழ்வும்.

அர்த்தநாரீஸ்வரராக அரிதாரம்

பூசும் உயர்ந்த

இடத்தில் இருக்கும் பெரிய மனிதனுக்கும்

காமம் எனும் பாம்பை

தலைவிரித்தாட விட்டு

அல்பமாய் அலையும்

அற்ப மனிதர்களால்

தான் வாழ்வு

தன் கடைசித் துளியை

தேடுகிறது.

இறைவனேயானாலும்...

தொட்டுப்பார்க்கும் புத்தி மனிதன் ஒரு சல்லிப் பயல் என்பதை

உலகம் நிரூபிக்கும்

கணம்

கொடூரமானவை. இந்த உலகத்தில் நடமாடும் ஒப்பனைக்காரர்களின் முகமூடிகளில்

ஒளிந்திருக்கும்

விஷம் ஒரு துளிதான்.அது

பொன்னரளிக்காய்களை விட

கசப்பானது.

டி.எம்.எஸ் குரலில் பாடினால் சுசீலாவின் குரல்

அல்லவா வருகிறது.- என்பவனின் வாழ்வியல் துயரம் என்பது

நாம் அறியாதது.

ஒருவரின் மரணத்தில்தான்

தெய்வங்கள்

உயிர்த்தெழுகின்றன.

மறந்துவிடுவதற்காகவே

இறைவனை

பற்றிக்கொள்ளும் இலாவகம்

ஒரு மாய உறவின் உலகம். பொய்மைகளை

மண் கொண்டு

மூடாது

மூடர்கள்... அதையும்

இறைவனாக்கி

மண்மூடும் இலாவகம்

மானுட வேஷம்.

கண்ணீரை வரவழைத்த கதையிது.

மகிழம்பூ கதையில்

வரும் கணேசன்

நம் நண்பனாகவும்

இருக்கலாம். கமலம் பைனான்ஸ்

அழைப்புகள்

ஒரு மனிதனை

என்ன பாடுபடுத்துகிறது. ஒரு மரணம்

முற்றுபெறும் தருணம்

கடன்கள்

உயிர்த்தெழுகின்ன்றன.  இது சத்தியமான

வார்த்தை. பொள்ளாச்சி அபி அவர்கள்

எழுத்து கற்சிற்பமாக

எழுந்து நிற்கிறது. மானுட உலகம்

எதையும் கண்டுகொள்ளாமல் கடந்துவிட

பழக்கப்படுத்தப்படுகிறது - பிரேமா - ரவி - கணேசன் நட்பில்... திட்டுக்கள்

வாங்கினாலும்

உதவுவதை நிறுத்த முடியாத

வெள்ளந்தி தனமே தன்னியல்பு

மாறாத கணேசன்.

நட்பு - கைவிடாத

நட்பு - புரிதல் -

அற்புதம்.

குடும்பம் நிராகரிக்கும்

நிமிடம் ,நட்பு

மகிழம்பூவாக

மலர்ந்து மணம் வீசுகிறது.

அற்புதமான திருப்பம் நிறைந்த கதை.

நெருப்புக்கு திசையில்லை-.அருமையான அடுத்த சிறுகதை தலைப்பு.

அற்புதமான இளைய தலைமுறையின்

மனநிலையை

மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் அபி

அவர்கள்.

பெண்கள் தவறுகளை

மன்னித்துவிடுவார்கள்.

பெண்மை எப்போதும்

கூட்டைவிட்டு பறந்த பறவை

நன்றாக இருக்கிறதா?- என்ற கவலை யோடு

நலம் விசாரிக்கும்.

ஆண் அப்படியல்ல.

குடும்ப கௌரவம் தலைகுனிய வைத்த காதலை

ஒருபோதும்

ஏற்பதில்லை. இப்போதும்

இது சாதீய கட்டமைப்பை மீறும்

இளம்பெண்

மீண்டும் தாய் வீட்டுக்கு வந்தபோதும்

பழைய நினைவுகளைத் தேடியே வருகிறாள்.

தன் வாப்பா அந்த கவலையில் இறந்துவிட்டதாக கவலைப்படும் ரஹீம் ,துவா பிள்ளைகளே செய்ய வேண்டும் எனும் வரை முறையில் உள்ளே நுழையும் தங்கை_யாஸ்மீன்-ஹஜ்ரத் வர

தாமதமானதும்

அவளே

கணீர் குரலில்

துவா - செய்வதை

வாயடைத்து பார்க்கும் ரஹீம் அண்ணன்-காதலுக்கு திசையில்லை-

நெருப்புக்கும்

திசையில்லை என்பதை

புரிந்திருப்பான்.

வினைப் பயன்- கடைசி சிறுகதை.

மனதை என்னவோ

செய்த அழுத்தமான கதை.

ஊருக்கு

ஒதுக்கு புறம்

ஒதுக்கிவைக்கப்பட்ட குடிசைகள்

எரிவதும்

காலில் விழும்படிக்காத ஜனம் - அதையும் மீறி

சென்னை வந்து

படித்து விட்ட

இளைஞன்

சாதீய கட்டமைப்பில்

எவ்வாறு நிர்பந்திகப்படுகிறான்.

கோர்ட் - போலீஸ்

எல்லாம்

ஊர் கட்டுப்பாடு

க்கு பிறகுதான். பெரிய மனிதர்கள்

தங்கள் அதிகாரத் தொனியையும்

மழிக்க வேண்டிய காலம்

வந்துவிட்டது. செவனோ க்ளாக் பிளேடால் அல்ல. அறிவால்.

எறும்பும் யானையும்

இந்த உலகத்தில் வாழ உரிமையுண்டு.

உருவம் பொருட்டல்ல.

செயல்களால் தான் உயரவேண்டும்.

பட்டங்களால்

தோற்றத்தால் அல்ல.

சமமாக தாகம் தீர்க்கும் குணத்தால்.

ஊனமான எண்ணங்களை சுமக்கும் ஆஜானுபாகுவான தோற்றம்தான்

உண்மையான ஊனம்..

உடல் ஊனம்

இதயத்தை

ஊனமாக்காது. கருப்பசாமியே

கடைசி தலைமுறை....ஊர் கட்டுப்பாட்டில். குழந்தை

அவினாஷ்...

இக்கதையின்

முடிச்சை அழகாக அவிழ்த்துவிடும்

தளிர் கைகள்.

வாழ்க அறிவியலின் முன்னேற்பாடுகள்.

ஒழியட்டும்

ஏற்றத்தாழ்வுகள். வாழ்க சமத்துவம்

வாழட்டும்

மானுட நீதி. -

#############

வெளியீடு: ஒரு துளிக்கவிதை....

############


- பட்டாம்பூச்சி குழுமம் 

பட்டாம்பூச்சி

கவிஞர் பிரியா பாஸ்கரன் பார்வையில் பாட்டையா

 ஒவ்வொரு ஆன்மாவும் சமத்துவத்திற்குத் தகுதியான ஆன்மா!

**************************************************


சிறுகதைகள் இலக்கிய நிலப்பரப்பில் சிதறிக்கிடக்கும் ரத்தினக் கற்கள் போன்றவை. கண்டுபிடிக்கக் காத்திருக்கும் 

ஒவ்வொன்றும் தனித்தனியான மற்றும் மெருகூட்டப்பட்ட நகைகள்.  சுருக்கமான கதைகள் இலக்கியப் பொக்கிஷங்கள். அவை ஒரு தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகின்றன. இது மனித உணர்ச்சிகள் மற்றும் கற்பனையின் பகுதிகள் மூலம் புதையல் வேட்டையில் இறங்குவதைப் போன்றது.


ரத்தினக் கற்களைப் போலவே, சிறுகதைகளும் பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன.  சிலர் நகைச்சுவையுடன் மிளிர்கிறார்கள். சிலர் மர்மத்துடன் மிளிர்கிறார்கள். சிலர் ஆழ்ந்த ஞானத்துடன் பிரகாசிக்கிறார்கள். இன்னும் சிலர் யதார்த்தத்தை உணர்வுகளில் வடிக்கிறார்கள். 


ஒரு ரத்தின சேகரிப்பாளர் மிகவும் அரிதான மற்றும் மிக நேர்த்தியான கற்களை உன்னிப்பாகத் தேடுவது போல, வாசகர்கள் தங்கள் இதயங்களையும் மனதையும் எதிரொலிக்கும் சிறுகதைகளைத் தேடுகிறார்கள்.


அவ்வாறான தேடலில் கண்டடைந்த தொகுப்பு சமீபத்தில் வாசித்த, ஒருதுளிக்கவிதை வெளியீடான #பாட்டையா என்ற சிறுகதைத் தொகுப்பு எனச் சொல்லலாம். 


சிறுகதையானது ஒரு நுட்பமான பதக்கத்தை உருவாக்கும் கலைக்கு ஒப்பானது. ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும், உன்னிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கச்சிதமாக வைக்கப்பட வேண்டும். ஒரு திறமையான நகைக்கடைக்காரர் போல, எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்கள் கதையை வடிவமைத்திருக்கிறார். அதன் உள் அம்சங்களையும் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.


ஆறு சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த இரண்டு கதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். 


ஒன்று.. “ஒப்பனைக்காரன்” என்ற கதை. 14 வயதான ஒரு இளைஞன் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தினால், அதாவது ஆணாகப் பிறந்தவனின் உடல் கூறுகள் ஒரு பெண்ணின் உடல் கூறுகளாக மாறுவதால் ஏற்படும் அவமானங்களையும், தன் தாய் தந்தையரே ஏளனப்படுத்தியதால் தற்கொலைச் செய்து கொள்ள நினைக்கிறான். 


அப்பொழுது ஊர்த்திருவிழாவில் நடக்கும் கூத்தில் அர்த்தநாரீஸ்வரராக வேடம் அணிந்தவரைப் பார்த்த பொழுதில், தானும் அது போல ஒப்பனையிட்டுக்கொள்ள, கூத்துப்பட்டறையின் ஒப்பனைக்காரனைச் சந்திக்கிறான். 50 வயதுக்கும் மேலான அந்த ஒப்பனைக்காரனும் அவனுக்கு ஒப்பனை செய்யச் சம்மதிக்கிறான்.  ஹரிகிருஷ்ணன் என்ற தன் பெயரை இராதாகிருஷ்ணன் என மாற்றிக்கொண்ட அந்தச் சிறுவனும் 

அன்று தன் அம்மாவே தன்னை அடித்ததினாலும், அப்பாவும் விளாசித் தள்ளிய அயர்ச்சியில் கண் மூடி அமர்ந்திருக்கிறான். 


ஒப்பனை வேலையை முடிந்தபிறகு, 

திடீரென தனது மார்பகத்தில் அழுத்தமாக ஊறிக்கொண்டிருக்கும் ஒப்பனைக்காரனின் கைகளில் திடுக்கிட்ட எழுந்த அச்சிறுவன் அவனைத் தள்ளி விட்டு தனது தந்தை, தாய் தன்னை அடித்தது போல அடித்து மிதிக்கிறான்.


“உங்களை மாதிரிதான் நாங்களும் மனுஷங்கன்னு மதிக்கமாட்டீங்களா..? எல்லோரையும் எப்படி மதிக்க வைக்கணும் எனக்குத் தெரியும்டா.. தூ.. நாய்களா!” 


எனச் சொல்லிவிட்டுச் செல்பவன், தனது ஊர் எல்லையின் அரசமரத்தடியில் வேல் கம்பு ஊன்ற அரளி விதையை அரைத்துவிழுங்கி, நின்ற நிலையில் நீலம் பாரித்து இறந்துகிடப்பான். சில மாதங்கள் கழித்து அவன் இறந்த இடத்தில் 6 வேளையும் பூஜை நடக்கும் கோயிலொன்று எழும்பி இருக்கும் என முடித்திருப்பார் ஆசிரியர்.


கதைக்களத்தைச் சொற்களின் இலாகவத்தால் நகர்த்திய விதத்தில் கண்முன்னே காட்சிகளாய்

விரிந்ததில் நீர்த்திரையிட்டு மிதக்க, வாசித்தக் கண்களும் மனதும் கனத்து போனது வெகு உண்மை. 


திருநங்கைகள் அடையாளம் என்பது மரபுக்குக் கட்டுப்பட்டதல்ல.  மாறாக, சுய கண்டுபிடிப்புக்கான ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் தைரியமான பயணமாக இருக்க வேண்டும் என நினைப்பவள். ஆனால் இந்தச் சமூகம் அதற்கு பெரும்பாலும் ஒத்துழைப்பதில்லை. வெகு சிலரே அதனைக் கடந்து நல்ல முறையில் இச்சமுதாயத்தில் ஜொலிக்கிறார்கள்.  ஹரிகிருஷ்ணனை அவனது குடும்பம், அவனை இராதாகிருஷ்ணனாக ஏற்றுக் கொண்டிருந்தால் கல்லாகச் சமைந்து தெய்வமாக நிற்க வேண்டிய அவசியமில்லை. ஆகத் திருநங்கைகளுக்கு, இச்சமுதாயம் கொடுத்திருக்கும் தகுதி உயிரற்ற கல்லாக இரு.. இரு கரம் குவித்து உடல் பணிந்து  தெய்வமாகக் கூட வணங்குவோம் ஆனால் 

சதையும் இரத்தமும் கொண்ட மனிதராக மட்டும் இருக்கத் தகுதியில்லை என்பதா..? என்ற கேள்வியை எழுப்பி மனதில் பெரிய துறுகலை ஏற்றி வைத்தது என்றால் மிகையல்ல..


அடுத்த கதை.. “வினைப்பயன்”.  இந்தக் கதைக்களத்தில், திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகள். கணவனுக்கு விந்து பரிசோதனை செய்ததில், விந்தின் counts கம்பியாக உள்ளன எனத் தெரியவருகிறது. விந்து donor மூலம் கருத்தரிக்கும் optionயை பழமைவாதியான பெரிய ஊர்தனக்காரரான மாமனாருக்கு முழு விவரமும் சொல்லாமல் தம்பதிகள் treatmentக்குச் செல்ல ஆண் மகவு ஒன்று பிறக்கிறது. 


இரண்டு வருடங்கள் கழித்து பேரனுக்கு பிறந்த நாள் கொண்டாட மாமனார் அழைத்ததின் பேரில் கிராமம் செல்கிறார்கள். அங்குச் சேரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், சேரியில் தண்ணீர் வரவில்லை என ஊர்கோவியில் நீர் சேந்தி அனைவருக்கும் தர, ஊர்க்காரர்கள் கொதித்தெழுகிறார்கள். பஞ்சாயத்தில் வாய்ச்சண்டை எழ, இடது கைப்பழக்கம் உள்ள இளைஞன் தன்னை அடிக்க வருபவர்களை இடது கையால் வீழ்த்துகிறான். ஊர்த்தனக்காரர், எச்சரித்து சண்டையை நிறுத்த, இளைஞனின் அப்பா அவரின் காலில் வீழ்ந்து,


“சரிங்க சாமி உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்..” என மன்னிப்பு கேட்டுக்கொள்ள, இளைஞன், “தனது தாயை இடது கையில் தாங்கியபடி சேரியை நோக்கிச் செல்கிறான்..”


இந்தக் களேபரங்கள் எதுவும் தெரியாது

தனது மகளின் மடியில் படுத்துறங்கும் பேரக்குழந்தை ஒரு பொம்மையைத் தனது இடது கையால் பிடித்துக்கொண்டு உறங்குகிறது என்பதை அறியாத ஊர்தனக்காரர் காரை நோக்கி வருகிறார். அவனுக்கும் அதே இடது கைப்பழக்கம்.. 


இதனை வாசித்த பொழுது, மகள், மருமகனின் மொத்த சந்தோஷத்திற்கும் காரணமான அந்த முகமறியா Sperm donor அதே இளைஞன் தான் எனத் தெரிந்தால் என்ன செய்வார் பெரிய தனக்காரர்..? 


இந்தக் காலத்திலும் இன்னும் சாதி வேறுபாடுகள் ஊறிப்போய்க்கிடக்கின்றன. சாதிவெறி என்பது மனிதக்குலத்தைப் பிளவுபடுத்தும் ஒரு கொடிய நோய். ஒரு மனிதனின் தகுதியை அவனது குணத்தால் அளக்கப்படும் உலகத்திற்காக நாம் பாடுபட வேண்டும் என்பதையும், இதனை இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதனையும் சிந்திக்க வைத்த கதை.


கதைக்களங்கள் சாதாரணமாக இருந்தாலும், கதை நகர்தலும், கதை மாந்தர்களின் வட்டார வழக்கிலிருந்த உரையாடல்களும், ஒவ்வொரு கதையின் இறுதி முடிவும் வித்தியாசமாக அமைந்திருந்த விதமும் தொகுப்பை ஒரே மூச்சில் உட்கார்ந்து வாசிக்க உந்தின.   


தொகுப்பின் தலைப்பான “பாட்டையா” என்ற சிறுகதை தான் தொகுப்பின் முதல் கதை. எனக்கு மிகவும் பிடித்த பறை இசையையும், நாட்டுப்புற நடனத்தையும் வெகு சிறப்பான சொற்களில் இசைக்கவும், ஆடவும் வைத்துள்ளார். மிகவும் இரசித்து வாசித்தேன்.  


ரத்தினக் கற்கள் நமது கிரகத்தின் புவியியல் வரலாற்றைப் பற்றிய பார்வைகளை வழங்குவது போல, சிறுகதைகள் பெரும்பாலும் மனித அனுபவத்திற்கான சாளரங்களாகச் செயல்படுகின்றன. இந்த கதைகளின் மூலம், வாசகர்கள் மனித உணர்வுகளின் ஆழம், உறவுகளின் சிக்கலான தன்மை மற்றும் வாழ்க்கையின் ஆழமான மர்மங்களை ஆராய முடியும். சில பக்கங்களுக்குள் பல்வேறு அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் வழங்கின இச்சிறுகதைத் தொகுப்பு.


See a human being as a human being, a soul deserving of respect, love, and equality, regardless of the labels we create என்ற எண்ணத்தை ஒவ்வொரு கதையும் வலியுறுத்துவதாகக் கருதுகிறேன்.


யதார்த்தமான கதைக்களத்தில் நிறையச் சிந்தனைகளைத் தூண்டிய எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். 


நூல் வாங்க: agan123@gmail.com

விலை: ரூ. 125/-


பிரியா பாஸ்கரன் I 10.29.23.

08 அக்டோபர் 2023

நிலாசூரியன் பார்வையில் பாட்டையா

 பாட்டையா சிறுகதை தொகுப்பு பற்றிய கவிஞர் நிலாசூரியன் -தச்சூர்   அவர்களின் 

கருத்து.

--------------------------------


முதலில், முனைவர் ஐயா அகன் அவர்களுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இது விமர்சனமல்ல, ஒரு வாசகனாக எனது கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். 


அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்களின் எழுத்துக்களை வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் நான், ஏனெனில், ஒப்பனை வார்த்தைகளால் கதையை அலங்கரிக்காமல், சாதாரண வார்த்தைகள் மூலம் யதார்த்தங்களை விளக்குவதில் அவருக்கு நிகர் அவரே...


ஒரு வாசகனை சிரமபடுத்துவதையோ, ஒரு வாசகன் அதிகப்படியான நேரத்தை தனக்காக செலவிடுவதையோ அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. அதுபோலவே தனது கதையை வாசிக்கும் யாரும் உறங்கிவிடக்கூடாது மாறாக உள்ளுணர்வில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்குமென்று நம்புகிறேன். அதற்கு இந்த பாட்டையா சிறுகதை தொகுப்பேச் சான்று. 


நூறு இருநூறு என்று பக்கங்கள் நீளாமல் ஆறு சிறுகதைகளை எழுபத்தைந்து பக்கங்களில் கச்சிதமாய் நிரப்பி வைத்து இருக்கிறார்கள். அதனால் உற்சாகம் குறையாமல் வாசிக்க முடிந்தது.


மனிதன் முதன்முதலில் கண்டுபிடித்த இசைக்கருவி பறை, அந்த பறையிலிருந்து இசைக்கப்படும் ஒத்த அடி, ரெட்ட அடி, மூன்றாம் அடி என்று மொத்த அடிகளைப் பற்றியும், அதற்கான நடனங்களைப் பற்றியும் எனக்கு தெரியாத நிறைய செய்திகளை பாட்டையா சிறுகதையில் அறியமுடிந்தது,  பறையிசை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் இசைக்கும் இசையாகவோ, குறிப்பிட்ட சடங்கிற்கு மட்டுமே இசைக்கும் இசையாகவோ இல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனைவராலும் முழங்கப்பட வேண்டிய இசையாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆவல். 


ஆடி ஆடி உடம்பெல்லாம் உரமேறி வைரம் பாய்ந்த கட்டையான பாட்டையாவை வீழ்த்துவதற்கு மூன்று மாதங்களாக ஊர் ஊராய் திறிந்து, பறையிசை முழங்கிய பல திறமைசாலிகளிடம் நிறைய நூணுக்கங்களை கற்று அந்த நுணுக்கங்களை எல்லாம் தனது பறையிசையில் புகுத்தி பாட்டையாவை வீழ்த்த முயற்சித்த முத்துவீரனின் எண்ணம் குறுகியதென்றாலும் அவனது முயற்சி மிகவும் போற்றதக்கது.  உண்மையிலேயே பறையிசையில் காலத்திற்கு தகுந்தாற்போல் பல நுணுக்கங்களை புகுத்தி அந்த இசையை மேலும் செம்மையடையச் செய்ய பறையிசை அறிந்த மேதாவிகள் முன்வர வேண்டியது அவசியமாகும்.


சஹாபி..


மணமகன் பெண்ணுக்கு வழங்க வேண்டிய மஹர் தொகையாக ஐம்பதாயிரம் தருகிறேன் என்று பாத்திமா சொன்னதை ஏற்க மறுத்த ஆணாதிக்க கூட்டம், அவளை பொருட்படுத்தாமல் போன அன்றுமுதலாகத்தான்  அவள் மெளனமாகிப் போயிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 


ஆணாதிக்கம் என்பது ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு சாதிகளிலும் வேரோடி விரவி கிடக்கிறது, அந்த வேரை அறுக்கும் ஆயுதமாக இக்கதையில் அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்களின் எழுதுகோல் வினையாற்றி இருகிகிறது, பெண்ணை அடிமைபடுத்துவது ஆணாதிக்கம் என்றாலும் அதே ஆண் சமூகம்தான் பெண் விடுதலைக்காகவும் போராடுகிறது என்பதை இங்கு நான் நினைத்துப் பார்கிறேன். 


சஹாபி கதையின் நாயகி பாத்திமாவின் செயல்பாடுகள் நெஞ்சில் நெகிழ்வை தருகிறது, கதையின் முடிவில் தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு நான்தான் பெயர் வைப்பேன் நீங்க சும்மா குதிக்காதீங்க என்று தன் கணவன் முகமது அலியை அடக்கிவிட்டு, தன் குழந்தைக்கு தனது மாமியார் பெயரான பாத்திமா என்ற பெயரை சூட்டி ஒரு நொடி பொழுதில் நெஞ்சில் ஆழமாக பதிவாகிவிடுகிறாள் ரகமத்துன்னிச்சா. 


முற்போக்கு சிந்தனையும் சமூக அக்கறையும் கொண்ட அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்களின், இந்த பாட்டையா சிறுகதை தொகுப்பு சமூக அவலங்களை தோலுரிப்பதோடு சமூக அக்கறையும், மனிதகுல மேன்மையையும் வெளிபடுத்துவனாக இருக்கிறது. 


சஹாபி கதையின் முலம் பெண்ணடிமை தனத்தை அம்பலபடுத்திய ஆசிரியர், ஒப்பனைக்காரன் சிறுகதை மூலம் திருநங்கையாக மாறிவரும் ஒரு இளம்வயது சிறுவனை அவனது பெற்றோர்களே இழிவாகப் பேசி அடித்து விரட்டுவதும், அதனால் அவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதும் என்று இந்த சமூக இழிவை கதையின் மூலம் தோலுரித்து காட்டுகிறார். 


மகிழம்பூ சிறுகதை மூலம் நட்பின் உன்னதத்தை உயர்த்தி பிடிக்கும் ஆசிரியர் அவர்கள், நெருப்புக்கு திசையில்லை என்ற சிறுகதையில் மனங்கள் இனைந்துவிட்டால் மதங்கள் (மார்க்கங்கள்) தடையில்லை என்ற சமத்துவ கோட்பாட்டை முழங்கி, கலப்பு திருமணம் தேசகுற்றமோ சமூக குற்றமோ அல்ல என்பதை யதார்த்த எழுத்தின் மூலம் அழுத்தமாக நிறுவுகிறார்.


மேலும் வினைப்பயன் என்ற கதையின்மூலம் சாதியலின் கோரமுகத்தில் கரியள்ளிப்பூசி சமத்துவப் பறையை நன்றாக ஓங்கி அறைந்து இருக்கிறார் ஆசிரியர். 


இன்னும் இதுபோன்ற பல நூல்களை அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்கள் இந்த சமூகதீதிற்கு படைத்தளிக்க வேண்டும், அதற்கு அவரது உடல்நலம் நல்ல வலிமைபெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். 


முற்போக்கு சிந்தனையும் சமூக அக்கறையும் உள்ள அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் பாட்டையா.