30 அக்டோபர் 2023

கவிஞர் பிரியா பாஸ்கரன் பார்வையில் பாட்டையா

 ஒவ்வொரு ஆன்மாவும் சமத்துவத்திற்குத் தகுதியான ஆன்மா!

**************************************************


சிறுகதைகள் இலக்கிய நிலப்பரப்பில் சிதறிக்கிடக்கும் ரத்தினக் கற்கள் போன்றவை. கண்டுபிடிக்கக் காத்திருக்கும் 

ஒவ்வொன்றும் தனித்தனியான மற்றும் மெருகூட்டப்பட்ட நகைகள்.  சுருக்கமான கதைகள் இலக்கியப் பொக்கிஷங்கள். அவை ஒரு தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகின்றன. இது மனித உணர்ச்சிகள் மற்றும் கற்பனையின் பகுதிகள் மூலம் புதையல் வேட்டையில் இறங்குவதைப் போன்றது.


ரத்தினக் கற்களைப் போலவே, சிறுகதைகளும் பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன.  சிலர் நகைச்சுவையுடன் மிளிர்கிறார்கள். சிலர் மர்மத்துடன் மிளிர்கிறார்கள். சிலர் ஆழ்ந்த ஞானத்துடன் பிரகாசிக்கிறார்கள். இன்னும் சிலர் யதார்த்தத்தை உணர்வுகளில் வடிக்கிறார்கள். 


ஒரு ரத்தின சேகரிப்பாளர் மிகவும் அரிதான மற்றும் மிக நேர்த்தியான கற்களை உன்னிப்பாகத் தேடுவது போல, வாசகர்கள் தங்கள் இதயங்களையும் மனதையும் எதிரொலிக்கும் சிறுகதைகளைத் தேடுகிறார்கள்.


அவ்வாறான தேடலில் கண்டடைந்த தொகுப்பு சமீபத்தில் வாசித்த, ஒருதுளிக்கவிதை வெளியீடான #பாட்டையா என்ற சிறுகதைத் தொகுப்பு எனச் சொல்லலாம். 


சிறுகதையானது ஒரு நுட்பமான பதக்கத்தை உருவாக்கும் கலைக்கு ஒப்பானது. ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும், உன்னிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கச்சிதமாக வைக்கப்பட வேண்டும். ஒரு திறமையான நகைக்கடைக்காரர் போல, எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்கள் கதையை வடிவமைத்திருக்கிறார். அதன் உள் அம்சங்களையும் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.


ஆறு சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த இரண்டு கதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். 


ஒன்று.. “ஒப்பனைக்காரன்” என்ற கதை. 14 வயதான ஒரு இளைஞன் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தினால், அதாவது ஆணாகப் பிறந்தவனின் உடல் கூறுகள் ஒரு பெண்ணின் உடல் கூறுகளாக மாறுவதால் ஏற்படும் அவமானங்களையும், தன் தாய் தந்தையரே ஏளனப்படுத்தியதால் தற்கொலைச் செய்து கொள்ள நினைக்கிறான். 


அப்பொழுது ஊர்த்திருவிழாவில் நடக்கும் கூத்தில் அர்த்தநாரீஸ்வரராக வேடம் அணிந்தவரைப் பார்த்த பொழுதில், தானும் அது போல ஒப்பனையிட்டுக்கொள்ள, கூத்துப்பட்டறையின் ஒப்பனைக்காரனைச் சந்திக்கிறான். 50 வயதுக்கும் மேலான அந்த ஒப்பனைக்காரனும் அவனுக்கு ஒப்பனை செய்யச் சம்மதிக்கிறான்.  ஹரிகிருஷ்ணன் என்ற தன் பெயரை இராதாகிருஷ்ணன் என மாற்றிக்கொண்ட அந்தச் சிறுவனும் 

அன்று தன் அம்மாவே தன்னை அடித்ததினாலும், அப்பாவும் விளாசித் தள்ளிய அயர்ச்சியில் கண் மூடி அமர்ந்திருக்கிறான். 


ஒப்பனை வேலையை முடிந்தபிறகு, 

திடீரென தனது மார்பகத்தில் அழுத்தமாக ஊறிக்கொண்டிருக்கும் ஒப்பனைக்காரனின் கைகளில் திடுக்கிட்ட எழுந்த அச்சிறுவன் அவனைத் தள்ளி விட்டு தனது தந்தை, தாய் தன்னை அடித்தது போல அடித்து மிதிக்கிறான்.


“உங்களை மாதிரிதான் நாங்களும் மனுஷங்கன்னு மதிக்கமாட்டீங்களா..? எல்லோரையும் எப்படி மதிக்க வைக்கணும் எனக்குத் தெரியும்டா.. தூ.. நாய்களா!” 


எனச் சொல்லிவிட்டுச் செல்பவன், தனது ஊர் எல்லையின் அரசமரத்தடியில் வேல் கம்பு ஊன்ற அரளி விதையை அரைத்துவிழுங்கி, நின்ற நிலையில் நீலம் பாரித்து இறந்துகிடப்பான். சில மாதங்கள் கழித்து அவன் இறந்த இடத்தில் 6 வேளையும் பூஜை நடக்கும் கோயிலொன்று எழும்பி இருக்கும் என முடித்திருப்பார் ஆசிரியர்.


கதைக்களத்தைச் சொற்களின் இலாகவத்தால் நகர்த்திய விதத்தில் கண்முன்னே காட்சிகளாய்

விரிந்ததில் நீர்த்திரையிட்டு மிதக்க, வாசித்தக் கண்களும் மனதும் கனத்து போனது வெகு உண்மை. 


திருநங்கைகள் அடையாளம் என்பது மரபுக்குக் கட்டுப்பட்டதல்ல.  மாறாக, சுய கண்டுபிடிப்புக்கான ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் தைரியமான பயணமாக இருக்க வேண்டும் என நினைப்பவள். ஆனால் இந்தச் சமூகம் அதற்கு பெரும்பாலும் ஒத்துழைப்பதில்லை. வெகு சிலரே அதனைக் கடந்து நல்ல முறையில் இச்சமுதாயத்தில் ஜொலிக்கிறார்கள்.  ஹரிகிருஷ்ணனை அவனது குடும்பம், அவனை இராதாகிருஷ்ணனாக ஏற்றுக் கொண்டிருந்தால் கல்லாகச் சமைந்து தெய்வமாக நிற்க வேண்டிய அவசியமில்லை. ஆகத் திருநங்கைகளுக்கு, இச்சமுதாயம் கொடுத்திருக்கும் தகுதி உயிரற்ற கல்லாக இரு.. இரு கரம் குவித்து உடல் பணிந்து  தெய்வமாகக் கூட வணங்குவோம் ஆனால் 

சதையும் இரத்தமும் கொண்ட மனிதராக மட்டும் இருக்கத் தகுதியில்லை என்பதா..? என்ற கேள்வியை எழுப்பி மனதில் பெரிய துறுகலை ஏற்றி வைத்தது என்றால் மிகையல்ல..


அடுத்த கதை.. “வினைப்பயன்”.  இந்தக் கதைக்களத்தில், திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகள். கணவனுக்கு விந்து பரிசோதனை செய்ததில், விந்தின் counts கம்பியாக உள்ளன எனத் தெரியவருகிறது. விந்து donor மூலம் கருத்தரிக்கும் optionயை பழமைவாதியான பெரிய ஊர்தனக்காரரான மாமனாருக்கு முழு விவரமும் சொல்லாமல் தம்பதிகள் treatmentக்குச் செல்ல ஆண் மகவு ஒன்று பிறக்கிறது. 


இரண்டு வருடங்கள் கழித்து பேரனுக்கு பிறந்த நாள் கொண்டாட மாமனார் அழைத்ததின் பேரில் கிராமம் செல்கிறார்கள். அங்குச் சேரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், சேரியில் தண்ணீர் வரவில்லை என ஊர்கோவியில் நீர் சேந்தி அனைவருக்கும் தர, ஊர்க்காரர்கள் கொதித்தெழுகிறார்கள். பஞ்சாயத்தில் வாய்ச்சண்டை எழ, இடது கைப்பழக்கம் உள்ள இளைஞன் தன்னை அடிக்க வருபவர்களை இடது கையால் வீழ்த்துகிறான். ஊர்த்தனக்காரர், எச்சரித்து சண்டையை நிறுத்த, இளைஞனின் அப்பா அவரின் காலில் வீழ்ந்து,


“சரிங்க சாமி உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்..” என மன்னிப்பு கேட்டுக்கொள்ள, இளைஞன், “தனது தாயை இடது கையில் தாங்கியபடி சேரியை நோக்கிச் செல்கிறான்..”


இந்தக் களேபரங்கள் எதுவும் தெரியாது

தனது மகளின் மடியில் படுத்துறங்கும் பேரக்குழந்தை ஒரு பொம்மையைத் தனது இடது கையால் பிடித்துக்கொண்டு உறங்குகிறது என்பதை அறியாத ஊர்தனக்காரர் காரை நோக்கி வருகிறார். அவனுக்கும் அதே இடது கைப்பழக்கம்.. 


இதனை வாசித்த பொழுது, மகள், மருமகனின் மொத்த சந்தோஷத்திற்கும் காரணமான அந்த முகமறியா Sperm donor அதே இளைஞன் தான் எனத் தெரிந்தால் என்ன செய்வார் பெரிய தனக்காரர்..? 


இந்தக் காலத்திலும் இன்னும் சாதி வேறுபாடுகள் ஊறிப்போய்க்கிடக்கின்றன. சாதிவெறி என்பது மனிதக்குலத்தைப் பிளவுபடுத்தும் ஒரு கொடிய நோய். ஒரு மனிதனின் தகுதியை அவனது குணத்தால் அளக்கப்படும் உலகத்திற்காக நாம் பாடுபட வேண்டும் என்பதையும், இதனை இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதனையும் சிந்திக்க வைத்த கதை.


கதைக்களங்கள் சாதாரணமாக இருந்தாலும், கதை நகர்தலும், கதை மாந்தர்களின் வட்டார வழக்கிலிருந்த உரையாடல்களும், ஒவ்வொரு கதையின் இறுதி முடிவும் வித்தியாசமாக அமைந்திருந்த விதமும் தொகுப்பை ஒரே மூச்சில் உட்கார்ந்து வாசிக்க உந்தின.   


தொகுப்பின் தலைப்பான “பாட்டையா” என்ற சிறுகதை தான் தொகுப்பின் முதல் கதை. எனக்கு மிகவும் பிடித்த பறை இசையையும், நாட்டுப்புற நடனத்தையும் வெகு சிறப்பான சொற்களில் இசைக்கவும், ஆடவும் வைத்துள்ளார். மிகவும் இரசித்து வாசித்தேன்.  


ரத்தினக் கற்கள் நமது கிரகத்தின் புவியியல் வரலாற்றைப் பற்றிய பார்வைகளை வழங்குவது போல, சிறுகதைகள் பெரும்பாலும் மனித அனுபவத்திற்கான சாளரங்களாகச் செயல்படுகின்றன. இந்த கதைகளின் மூலம், வாசகர்கள் மனித உணர்வுகளின் ஆழம், உறவுகளின் சிக்கலான தன்மை மற்றும் வாழ்க்கையின் ஆழமான மர்மங்களை ஆராய முடியும். சில பக்கங்களுக்குள் பல்வேறு அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் வழங்கின இச்சிறுகதைத் தொகுப்பு.


See a human being as a human being, a soul deserving of respect, love, and equality, regardless of the labels we create என்ற எண்ணத்தை ஒவ்வொரு கதையும் வலியுறுத்துவதாகக் கருதுகிறேன்.


யதார்த்தமான கதைக்களத்தில் நிறையச் சிந்தனைகளைத் தூண்டிய எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். 


நூல் வாங்க: agan123@gmail.com

விலை: ரூ. 125/-


பிரியா பாஸ்கரன் I 10.29.23.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக