08 ஜனவரி 2012

விபத்து..! - சிறுகதை-பொள்ளாச்சி அபி

“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒருவாரமா மேட்டுத்தோப்பு பன்னாடிக்கு கண்ணு தெரியறதில்லையாமா..?”
“யாரு சொன்னா..? முந்தாநேத்து அவரு காட்டுலே டிராக்டரு ஓட்டிக்கிட்டு இருந்தாரே..?”

“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒரு வாரமா மேட்டுத்தோப்பு பன்னாடிக்கு பைத்தியம் புடிச்சிச்ருச்சுன்னு சொல்றாங்க அப்படியா..?”

“ஆமாமா..வீட்லேயும் எப்பப் பார்த்தாலும் பொண்டாட்டி,புள்ளைகளோட மல்லுக்கட்டிகிட்டே திரியறாராம்..”

“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒரு வாரமா மேட்டுத்தோப்பு பன்னாடி,ஊருக்குள்ளே வந்தாலும் முக்காடு போட்டுகிட்டுதான் போறாராமா..?

“இல்லையே,நம்ம ஊரைத் தாண்டி,நான் பாக்கும்போது,முக்காடு எதுவம் போடலியே..!”
கடந்த ஒருவாரமாக,அந்தச்சேரி முழுக்க இப்படித்தான் பரபரப்பான பேச்சு நிலவிக் கொண்டிருக்கிறது.நூறு ஏக்கராவிற்கு சொந்தக்காரரான மேட்டுத்தோப்பு பன்னாடியின்,திடீர் மாற்றத்திற்கான காரணம் குறித்து,அந்தச்சேரியில் யாருக்கும் .
உண்மையான தகவல் எதுவும் தெரியவில்லை.ஆளாளுக்கு தெரிந்த காரணங்களைச் சொல்லிக் கொண்டு,வியப்பிலாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறான பேச்சுக்கள் மாரிமுத்துவின் காதுக்கும் வந்தது.
அப்போதெல்லாம்,மாரிமுத்து தனக்குள்ளும்,சில சமயம் தள்ளிப்போய் நின்று வாய்விட்டும் சிரித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவான்.
இப்போதும் அப்படித்தான்,தன்னாசிக் கிழவனும்,முருகேசனும்,இந்த விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே,தன்னைக் கடந்ததில்,அன்றைய தினம் நடந்ததை மீண்டும் ஒரு முறை மனதுக்குள் அசைபோட்டான்.

அன்றைக்கு,உச்சி வெயில் மண்டையைப் பிளந்ததில்,மாரிமுத்துவிற்கு எரிச்சலாய் வந்தது.நிற்க நிழலில்லாத இந்த பஸ் ஸ்டாப்பிற்கு ஒரு கூரையைப் போட்டுக் கொடுக்கச் சொல்லி ஒவ்வொரு திங்கள் கிழமையும் சப்கலெக்டருக்கு மனு கொடுத்து ஓய்ந்ததுதான் மிச்சம்.இதுவே நகர்ப்புறமாய் இருந்தால் தனியார் கம்பெனிகளின் விளம்பரங்களோடு,இரவிலும் எரியும் விளக்குகளோடு எப்போதோ கூரை அமைக்கப்பட்டிருக்கும்.
வெறும் முப்பது குடிசைகள் மட்டுமே உள்ள இந்த ஊரில் வசிப்பவர்களும், எதையும் படிக்காத அன்றாடங்காய்ச்சிகள்..இவர்களை வைத்து,எதை விற்று லாபம் பார்க்கமுடியும்.?
அதனால்,இந்தப்பட்டிக்காட்டுக்கு தனியார் கம்பெனிகளும் வரத்தயாரில்லை.

மாரிமுத்துவின் செருப்பில்லாத கால்களில் சூடு ஏறியது.கால்களை சிலநிமிடங்கள் மாற்றிமாற்றிவைத்து,சமாளிக்கப் பார்த்தும்,வெப்பம் குறையவில்லை..,நல்லவேளை,பத்தாம் நம்பர் தனியார் பஸ், தூரத்தில் வருவது தெரிந்தது.மாரிமுத்து உடனே,தனது ஊருக்குச் செல்லும் அந்த எட்டடி இட்டேரிப் பாதையைத் திரும்பிப் பார்த்தான்.யாரேனும் ஊர்க்காரர்கள் வந்தால் சீக்கிரம் வரச்சொல்லிவிட்டு,பஸ்ஸை நிற்கச்சொல்லலாமே..! யாரும் வரவில்லை.

பேருந்து அவனுக்கு அருகாமையில் வந்தபோது,அதனை நிறுத்தச் சொல்லி கைகாட்ட,நிற்பதற்காக வேகத்தைக் குறைப்பதுபோல் வந்து,விர்..ரென்று, நிற்காமலேயே சென்றது. இத்தனைக்கும் அந்த பஸ்ஸின் கண்டக்டர் படிக்கு அருகாமையில் நின்று தன்னைக் கண்டிப்பாக பார்த்திருக்க முடியும்.ஆனாலும் அந்த பஸ் நிற்கவில்லை.அப்படிப்போகும்போது அந்த டிரைவரின் முகத்தில் ஏதோ கிண்டலான சிரிப்பு இருந்தது போல மாரிமுத்துவிற்கு தோன்றியது.

‘சனியன் பிடிச்சவங்க..ஒத்த மனுசன் நின்னா,பஸ்ஸை நிறுத்தறதுக்குக் கூட சங்கடமா..?.இதுக்கு டீசல் அதிகமாயிடுமா.?..இல்லை.., இவனுகளுக்கு நம்மை ஏத்திட்டுப்போறதுக்கு மனசு இல்ல..அதான்.இவனுகளை...’ எண்ணமிட்ட மாரிமுத்துவிற்கு,வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.இது அவ்வப்போது வழக்கமாய் நடப்பதுதான் என்பதும் அவனுக்கு தெரிந்தே இருந்தது.

‘போச்சு..இந்த வெயில்ல இன்னும் கால்மணிநேரம் நிக்கணும்.பின்னாலே கவர்மெண்ட்டு வண்டி வந்தாதான் உண்டு.அந்த வண்டியில் ஏறினால் அதுபோடும் சப்தத்தில்,எது எப்ப கழண்டு உழுகுமோன்னு தெரியாது.போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு போக முடியுமான்னும் தெரியாது..
உக்கும்.. அந்த வண்டி மொதல்லே வருமான்னே சந்தேகம் அப்புறம்தானே போகுமான்னு பார்;க்கணும்’ மாரிமுத்துவிற்கு பல விதமாய் எண்ணங்கள் ஓடின.வெயிலின் கொடுமை தெரியாமலிருப்பதற்கு,இப்படி யோசித்துக் கொண்டு இருப்பதும் நல்லதாகவே பட்டது.
ஆனாலும்,வெயில் அவனை வறுத்து எடுத்ததில்,உடலெங்கும் வியர்வை பொங்கி,சட்டையின் பின்புறம் முதுகோடு ஒட்டிக்கொண்டது.நெற்றியிலும் முத்துமுத்தாக அரும்பி நின்றன வியர்வைத்துளிகள்.உழைப்பால் கறுத்துத் திரண்டிருந்த உடலில்,நல்ல சதைப்பிடிப்புடன் கூடிய கைகளும்.கால்களும் அவனது ஆரோக்கியத்தை உலகுக்கு அறிவிப்பதாகவே இருந்தன.
இந்த ஊரைச்சுற்றியுள்ள பன்னாடிகளின் காடுகள்,தோட்டங்களில்,அவசரம் கருதி,வெயிலின் உக்கிரத்தை பொருட்படுத்தாமல்,அவன் பலமுறை வேலை செய்திருக்கிறான்.அப்போதெல்லாம் வேலை செய்யும் வேகத்திற்கு,வெயிலின் சூடு உறைத்ததேயில்லை.இப்போது வெறுமனே வெயில் காய்வதுதான் கடுப்பாயிருக்கிறது.
அப்பாடா..மாரிமுத்துவின் நல்லநேரம்.தூரத்தில்,சாலையின் தார்க் கறுப்பில்,கானல்நீருடன் கலந்து உறவாடி ஓவியம்போல அசைந்து வந்துகொண்டிருந்தது கவர்ண்மென்ட் பஸ்.
அருகே வந்ததும் எதற்கும் இருக்கட்டுமே என்று முன்னெச்சரிக்கையாக கைகாட்டினான் மாரிமுத்து.நின்ற பேருந்தில் பின்கேட் வழியாக ஏறிக் கொண்டான்.கண்டக்டர் முன்கேட்டருகே நின்று கொண்டு டபுள் விசிலடித்ததும், திடீரென்று ஒரு தொழிற்சாலையின் கனரக எந்திரங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இயங்குவது போன்று சப்தம் எழும்பியது.டிரைவர் அந்தப்பேருந்தின் கியரைப் போடுகிறாரா..?,அதன்மீது தொங்குகிறாரா..? என்றே தெரியவில்லை.ஆனால் டிரைவர்,“தா..ளிக வேற வண்டியைக்கொடுங்கடான்னா..இந்த ரூட்டுக்கு இதுவே போதும்னு சொல்றானுக..தே…மகனுக” என்று கெட்டவார்த்தையில் திட்டுவதும் தெளிவாகத் தெரிந்தது.அதற்கப்புறமும் சிலவிநாடிகள் கழித்துதான் அந்தப்பேருந்து அங்கிருந்து மெதுவாக நகர்ந்தது.
பேருந்தில் ஏறியவுடன்,மேல் சட்டைப்பபையிலிருந்து,பொள்ளாச்சி போவதற்கான சரியான சில்லறையைப் பொறுக்கி கையில் வைத்துக்கொண்டான். இல்லாவிட்டால்,எரிச்சல் ஊட்டுவதற்காகவே,இந்த வெயிலில்,தான் வீட்டில் உட்காராமல் வந்ததுபோல கத்துவார் கண்டக்டர்.
டிக்கெட் வாங்குவதற்குள்,உட்காருவதற்கான இடத்தை,தேர்வு செய்துவிடலாம் என்று பேருந்தினுள் பார்வையை ஓடவிட்டான்.பேருந்தில் எக்கச்சக்கமாக கூட்டம் இருக்கும்போது,கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொள்ளப் பறக்கும் ஜனங்கள், அதுகாலியாக இருக்கும்போது மட்டும்,எல்லா சீட்டுகளிலும் தனித்தனியாக உட்காருவதைத்தான் விரும்புகிறார்கள்.இப்போதும் அப்படித்தான்.எல்லா சீட்டுகளிலும் ஒவ்வொரு ஆளாக உட்கார்ந்து இருந்தார்கள்.
மிகவும் தாட்டியாக இல்லாமல்,நடுத்தர உடம்புடனிருந்த ஒருவர் அமர்ந்து இருந்த சீட்டினைத் தேர்வு செய்து அமர்ந்து கொண்டான்.பேருந்து நகரத் துவங்கி,சற்று வேகம் கூடியவுடன்,முகத்தின் மீது மோதிய காற்றில் சற்றே ஆசுவாசம் ஏற்பட்டது.இதுவரை வெயிலில் காய்ந்ததற்கு,இப்போது தன்மீது படும் லேசான வெப்பக்காற்று எவ்வளவோ பரவாயில்லை என்றிருந்தது மாரிமுத்துவிற்கு.
வலப்பக்கம் உட்காந்திருந்த ஆள் அதுநேரம் வரை,முன்சீட்டின் கம்பிகள் மீது கைகளைவைத்துக்கொண்டு,தலையை அதன்மீது சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.பேருந்தின் சீரான ஓட்டத்தின் காரணமாக,மெதுவாக தன்பக்கம் சரிந்த அந்தஆளை சற்றே அவன்பக்கமாக நகர்த்திவிட்டான் மாரிமுத்து.அது அவனை விழிக்கவைத்துவிட்டது போலும்.சடக்கென்று விழித்த அவன் முதலில் தனது மேல்சட்டைப்பாக்கெட்டைத் தொட்டுக்கொண்டு,யாரோ அவனிடமிருந்து பணத்தை திருட வந்திருப்பது போன்று,அதன்மீதே தன் இடதுகையை வைத்துக் கொண்டுதான்,மாரிமுத்துவைப் பார்த்தான்.அப்போதுதான் மாரிமுத்துவிற்கும் தெரிந்தது.அது மேட்டுத் தோப்பு பன்னாடி என்பது.

உடனே மாரிமுத்துவின்,மயிர்க்கால்கள் எல்லாம் எச்சரிக்கை உணர்வால்,ஏற்பட்ட பயத்தால் நிமிர்ந்து கொண்டது. ‘இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல், தூங்கிவிட்ட மனுசன் பக்கத்திலே நாம் உட்கார்ந்துவிட்டோமே..! இங்கேயே உட்காரலாமா..? வேண்டாம்,எழுந்து கொள்ளலாம்.’ மாரிமுத்துவின் மூளை செய்த முடிவின்வேகத்திற்கு உடல் கட்டுப்படும் முன்பே..,பளார் என்று விழுந்தது ஒருஅறை.மேட்டுத் தோப்பு பன்னாடிதான் கண்களில் ஆத்திரம் கொப்பளிக்க, “சின்னசாதி நாயி,என்ன தெகிரியமிருந்தா,எனக்கு சமதையா உக்காருவே..?.” எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து விட்டான் மாரிமுத்து.படக்கென்று சீட்டினை விட்டு எழுந்தவன், ‘இப்போது என்ன செய்வது.?’ என்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
பன்னாடிக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லை. “வெள்ளையும்,சொள்ளையுமா எங்களை மாதிரி துணிபோட்டுகிட்டா,நீ எங்காளு ஆயிடுவியாக்கும்..இமருவாதை தெரியாத நாயி..” அவரது வார்த்தைகளில் பலநூற்றாண்டுக் கால, எஜமானத்தனம் தெரித்தது.மாரிமுத்துவின் உடல்வலுவிற்கு,ஓங்கி ஒரேயொரு அறைவிட்டால்கூட போதும்,பன்னாடியின் முகம் முதுகுப்புறமாகத் திரும்பிக் கொள்ளும்தான்.
ஆனால்,தனது தந்தையின் காலத்து அடிமைத்தனம்,அப்படியே ஊறிப் போனதிலும்,கடவுளுக்கு நிகரானவர்கள் எஜமானர்கள் என்று கற்பிக்கப்பட்டிருந்ததையும் விட்டு வெளிவர முடியாமல், அவரது ஏச்சுக்களை வாங்கிக்கொண்டு,மாரிமுத்து இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

பேருந்தில் உள்ளவர்களின் பார்வையெல்லாமே இவர்கள் இருவர் மீதே இருந்தது.மாரிமுத்துவிற்கு அவமானம் பிடுங்கித்தின்றாலும்,அங்கிருந்து நகர்ந்தால் அது எஜமானரை அசட்டை செய்வதுபோல..,அப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதால் வேறுவழியின்றி,தாங்கிக் கொண்டான்.அப்போதுதான் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில்,வழக்கத்திற்கு மாறாக,“கட்ர,கட்ர”என்று விநோதமான,ஏதோ வலுவான ஒன்று உடைவதுபோல ஒரு சப்தம்.. அவ்வளவுதான்.பேருந்து,டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது,சாலையின் இருபுறமும் வேகமாக அலைபாய்ந்தத்pல் பயந்துபோய் பேருந்துக்குள் இருந்த ஆண்களும்,பெண்களும் அலறினர்.பெண்களின் குரலை மீறி பன்னாடியும் ஏதோ பயத்தில் கத்தினார்.
சிலவிநாடிகள் மட்டுமே நீண்ட இந்த களேபரம்,சாலையின் ஓரத்திலிருந்த புளியமரத்தின் மீது, “டொம்”;என்று மிகப்பெரிய சப்தத்துடன் மோதி நின்றதில்,முடிவுக்கு வந்தது.டிரைவர் ஸ்டியரிங்கின் மீதே கவிழ்ந்து விட்டார். முன்புறத்திலிருந்த கண்ணாடி சுக்குநூறாக உடைந்து தெறித்ததில்,ஏராளமான துண்டுகள் டிரைவரின் தலையில் மோதி,ரத்தத்தில் நனைந்து நின்றிருந்தது.
பேருந்துக்குள் இருந்த பலருக்கும் மண்டை உடைந்தது முதல் எலும்பு முறிவு வரை ஏற்பட்டதில்,கூச்சலும்,அழுகையும் மிகுந்தது.மாரிமுத்து ஏற்கனவே நின்று கொண்டிருந்ததால் பேருந்து நிலைதடுமாறத் துவங்கும்போதே,அனிச்சைச் செயலாக,இருபறத்திலுமிருந்த கம்பிகளைப் பிடித்துக்கொண்டு,காயம் படாமல் சமாளித்துக் கொள்ளமுடிந்தது.பன்னாடி,சீட்டின் முன்புறக் கம்பியில் மோதியதில், மண்டை பிளந்துவிட்டது போலிருக்கிறது.முகமெல்லாம் ரத்தம் வழிய மயக்கமாகிக் கிடந்தார்.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை நிறுத்திய சிலர்,பரபரப்புடன் உடனடியாக கையில் கிடைத்தவர்களை எடுத்து பேருந்துக்கு வெளியே படுக்கவைத்தனர். சிலர் போலீசுக்கும்,ஆம்புலன்சுக்கும் போன் செய்தனர்.சில நிமிடங்களில் அங்கு வந்த இரண்டு ஆம்புலன்ஸ்கள்,பன்னாடி உட்பட அனைவரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு,அரசுமருத்துவமனையை நோக்கி விரைந்தன.காயம் பட்டவர்களை ஆம்புலன்சில் ஏற்றிவிட்ட கையோடு, இறக்குவதற்கான உதவிகள் செய்வதற்காக மாரிமுத்துவும் அதில் ஏறியிருந்தான்.

கிடைத்த அறைகளில்,இருந்த பெட்டுகளில் அட்மிட் செய்யப்பட்ட பயணிகளுக்கு, பல டாக்டர்களும் இணைந்து அவசர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். பன்னாடிக்கு முன்மண்டையில் பிளவு ஏற்பட்டதில்,ஒன்பது தையல்கள் போட வேண்டியிருந்தது.கையில் பிராக்சர் வேறு.ஆபரேசனும் தேவையாயிருந்தது. மேலும் ஏராளமான இரத்தம் சேதமாகிவிட்டதால்,அவருக்கு உடனடியாக ஒருயூனிட் ரத்தமாவது ஏற்றவேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட, “இந்த ரூமிலே இருக்கறவரோட வந்தது யாருப்பா..?.”ஒரு குண்டு நர்ஸ் கூவிக்கொண்டே வெளியே வந்தாள்.
அறையின் வாசலருகே நின்றிருந்த மாரிமுத்துவை நோக்கி,யாரோ கைகாட்ட, “இங்க வாங்க..இவருக்கு ஓ.பாசிட்டிவ் ரத்தம் கொடுக்கணும்.இப்போதைக்கு ஸ்டாக் இல்லே.உங்களது என்ன குரூப்னு தெரியுமா..?.”
“தெரியாதுங்க..”
“சரி வாங்க டெஸ்ட் பண்ணிரலாம்..”என்று அவசரமாக மாரிமுத்துவை அழைத்துக் கொண்டு,மருத்துவமனையின் மற்றொரு அறைக்குச் சென்றாள்.
மாரிமுத்துவின் ரத்தம் எடுக்கப்பட்டு,சோதனை செய்யப்பட்டதில்..என்ன ஒரு அதிசயம்.ஓ.பாசிட்டிவ்.
“ஹோ..ஐயாம் லக்கி..”கூவிய நர்ஸ்,அடுத்தபடியாக ஒரு யூனிட் ரத்தம் எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தாள்.அவள் கத்தியதைக் கேட்ட மாரிமுத்து, “ஏங்க,எனக்கு ரத்தம் எடுக்கப்போறீங்களா..? அதுசேருமா..?”

“ஆமாப்பா உன்னோடதும்,அவரோடதும் ஒரே ரத்தம்தான்..”
“நிசமாங்களா..?”
“உனக்கென்ன இப்ப அதிலே சந்தேகம்..?”
“சந்தேகமில்லீங்க..ஒரே ரத்தம்னு சொன்னீங்கல்ல,அத நெனச்சுக்கிட்டேன்.”
“ஏம்ப்பா நீயும் மனுசன்தானே..!” நர்ஸ் கேட்டபோது,பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டான் மாரிமுத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக