29 டிசம்பர் 2011

மரியாவின் மகன்..!




“நிறுத்துங்கள்..!” அவரின் கம்பீரக்குரலுக்கு கட்டுப்பட்ட கூட்டம்,அப்படியே உறைந்து நின்றது.கைகளில் இருந்த கற்களும்,குப்பைகளும்,சிறு தடிகளும் அப்படியே உறைந்து நின்றன.

அவர் குரல் கொடுத்த இடத்திலிருந்து.மெதுவாக நடந்து மக்கள் கூட்டத்தை நோக்கி வந்தார்.மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்களைப் போல கூட்டம் இரண்டாகப் பிளந்து அவருக்கு வழிவிட்டது. விலகிய கூட்டத்தின் வழியே நடந்து மையத்திற்கு வந்தவர்,அப்போதுதான் பார்த்தார் அவளை..,கண்ணீர் வழியும் கண்களில் மிரட்சியுடன்,கன்னத்தில் அறைபட்ட சிவப்புடன்,கூட்டத்தின் நடுவே கூனிக்குறுகி அமர்ந்திருந்தாள் அந்த இளம்பெண்.

“யார் இவள்..? எதற்காக அனைவரும் ஒன்றுகூடி அடிக்கிறீர்கள்.?”

“இவள் இப்பகுதியில் விபச்சராம் செய்துவருவதால்,இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கெட்டுப்போகிறார்கள்.” என்று நடுத்தர வயதுடைய ஒருவன் கூறினான்.
“அப்படியா..? என்று ஆச்சரியத்துடன் வினவிய அவர்,அந்தப் பெண்ணைச் சுற்றிலும் திரண்டு நின்றிருந்த அனைவரையும் பார்த்தார்.
சொல்லப்போகும் பதிலை எதிர்பார்த்து,சிலர் அவரின் முகத்தைப் பார்த்திருந்தபோதும், பலபேர்,அடிபட்ட பெண்ணின் கிழிந்த ஆடைகள் வழியே தெரிந்த அங்கங்களை பார்த்துக் கொண்டிருந்ததில் அவர்களின் கண்களில் வழிந்த காமமும்,எண்ணங்களிலிருந்த வக்கிரமும் தெளிவாகவே தெரிந்தது. மேலும் சிலரோ ஒரு உயிர் தங்கள் கண்முன்பாகவே பறிக்கப்படும் அரிதான காட்சியை,ரசித்து திருப்தி பட்டுக் கொள்வதற்காகக் கூடியிருந்தனர்.

“சரி,இப்போது என்ன செய்வதாக உத்தேசம்..?”

“இவளை இப்படியே விட்டால்,மிக அருமையான வழிபாட்டுத்தலம் அமைந்த மலைப்பகுதியான இந்த இடமே,நாசக்கேடாகும்.அதனால் இவளை கல்லாலேயே அடித்துக் கொல்லப்போகிறோம்.” கூட்டத்திலிருந்த அந்த மதகுருமார்களில் ஒருவர் ஆவேசத்துடன் கூறினார்.அவர் சொன்னதற்கு ஆதரவாய் கூட்டமும் ஆரவாரித்தது.
இதனைக்கேட்ட அந்தப் பெண்ணின் கண்களில்,கிலி தெரிந்தது.மரணபயம் அறைந்ததில் அவளின் முகம் வெளுத்துவிட்டது.உயிர் பிழைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்,இங்கிருந்து தப்பிவிடலாமே..என்ற தவிப்பும்,அவஸ்தையுமாக அவளுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

‘அனைவரும் மதிக்கும் வகையில் தோற்றம் கொண்ட இவர் என்ன சொல்லப்போகிறாரோ..?.இவர் சொல்லும் ஒரு வார்த்தையை வைத்துத்தான்
தான் உயிர் பிழைப்பதும்,உயிர் இழப்பதும் நடக்கப்போகிறது..,’அந்தப் பெண் கடைசி சந்தர்ப்பமாக,கருணையை எதிர்பார்த்து,அவரின் கண்களைப் பார்த்தாள்.

ஆனால் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்த கூட்டமோ,”சீக்கிரம் உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.”
“இங்கே இதுபோன்ற குற்றத்திற்கு,கல்லால் அடித்துக் கொல்வதுதான் சிறந்த தண்டணை.”
“உங்களுக்கு முன்பு இருந்தவர்களும் இதையேதான் தீர்ப்பாகக் கூறியுள்ளனர்..”

அந்தப் பெண்ணைக் கொல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவரை வற்புறுத்துவதுபோல, கூட்டத்தின் மனப்போக்கு இருப்பதும் அவருக்குப் புரிந்துவிட்டது.’நாட்டில் மனிதர்களுக்கு இருக்கவேண்டிய மன்னிக்கும் குணம் எங்கே போயிற்று..?’ அபலைகள் சிக்கிவிட்டால் அவர்களை தங்கள் இரையாக்கத் துடிப்பதும்,நிலைமை மீறினால் கொன்று விடுவதும்.. இதுமட்டும்தான் அபலைகளுக்கான விடுதலையா..?,வேறு வழியே இல்லையா..? அவருக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.
‘ இனி தாமதிக்க முடியாது,தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்,கூட்டத்தின் ஆத்திரம் அதிகமாகிவிடலாம்.’ என்று முடிவு செய்துகொண்ட அவர்,மிகவும் தீர்க்கமான தனது குரலில்,ஆரவாரத்துடன் கூடியிருந்த கூட்டத்தை நோக்கிக் கூறினார். “ பிறந்ததிலிருந்து,தங்கள் மனம் அறிய ஒரு பாவமும் செய்யாதவர் இந்தக் கூட்டத்தில் எவரோ..அவர் இந்தப் பெண்ணின் மீது முதல் தாக்குதல் தொடுக்கட்டும். கல் எறியட்டும்..”என்று கூறியபடி,கூட்டம் முடிவெடுக்க அவகாசம் கொடுப்பது போல,தனது தலையைக் குனிந்து கொண்டார்.

சில மணித்துளிகள் கடந்து அவர் நிமிர்ந்தபோது,அங்கிருந்த கூட்டத்தில் பெண்களைத் தவிர ஆண்கள் அனைவரும் சென்றிருந்தனர்.மனிதக் கூட்டத்தின் மனப்போக்கை அறிந்திருந்த அவர்,தனது தீர்ப்பு ஏற்படுத்திய மகிழ்ச்சியில் அப்பகுதியிலிருந்து,திரும்பிச் சென்றார்.
மனிதர்கள் செய்யும் பாவங்களிலிருந்து,மன்னிப்பு வழங்கவும்,மனம் திருந்தவும் செய்யவேண்டிய வேலைகள் அவருக்கு இன்னும் நிறைய இருக்கிறது. மிக எளிய ஆடைகள் அணிந்திருந்தாலும்,கம்பீரமாக அவ்விடத்திலிருந்து நகர்ந்து செல்லும் அந்த மனிதரைப் பார்த்து,இவர்தான் “ மரியாவின் புதல்வர் யேசு ” என்று பெண்கள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
இந்த உலகத்திற்கு புதியமாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு புரட்சிக்காரனாக, அவரது பயணம் மீண்டும் தொடர்ந்தது.

புதிய ஏற்பாடு-யோவான்-அதிகாரம.8.

2011-ல் கிழித்தவன் கணக்கு..!



ஆண்டொன்று முடிந்துவிட்டது.
இதுவரை கிழித்தது எனில்
தேதிகள் பதித்த காகிதம்
முன்னூற்று அறுபத்தைந்து.
கிழித்ததில் அதிக எண்ணிக்கை
இதுமட்டும்தான்..!

வேறென்ன கிழித்தோம்...

செய்தவேலைக்கு
சம்பளம் குறைவென்று
மேஸ்திரி கொடுத்த
ஷெட்யூல் பேப்பர்..

மாதம் இருமுறை
இல்லாத பணத்தை
அறிவித்த ஏடிஎம் ரசீது..

மார்க் குறைச்சலென்று
ஒருமுறை மகள் காட்டிய
புரோக்கிரஸ் கார்டு..

மனைவிதந்த காகிதத்தில்
எண்ணிக்கை அதிகமென்று
மாதாமாதம் கிழித்துப்போட்ட
மளிகை லிஸ்ட்..,

தண்ணீர் கலந்த பாலுக்கு
இத்தனை தொகையா..?
பால்காரன் கொடுத்த
கணக்குச் சீட்டு..

நாங்கள் இவ்வளவு
எரிக்கவேயில்லையென்று
பங்குகேட்ட,பக்கத்துவீட்டுக்காரன்
கொடுத்த கரெண்ட்பில் கணக்கு..

வாராவாரம் கிழித்தது
மாதமொருமுறை கிழித்தது
மூன்றுமாதத்திற்கொருமுறை
என,நான் கிழித்தது..

இன்னும் நினைவுக்கு
வராத எத்தனையோ
கிழித்துத்தானிருக்கிறேன்..

இத்தனையும் தொடர்ந்து
கிழிக்க என்ன காரணம்..?
யோசித்தேன்..யோசித்தேன்

வீட்டுக்குத் தெரியாமல்
குடித்த மதுவின் தொகையைக்
குறிப்பிட்ட பார்களின்
பில்களையெல்லாம்
கிழிக்கத்தொடங்கியதுதானோ..?

இப்போது புரிந்தது..
இனிமேல் அதைகிழிக்க
போகாமலிருந்தாலே
எதையும் கிழிக்கவேண்டியதில்லை
தேதிகள் பதித்த காகிதம் தவிர..!

இந்தபுத்தாண்டின் சபதம்
இதுவாகவே இருக்கட்டும்.!

காதலுக்கு எல்லையுண்டு..!




இருள் இன்னும் முழுமையாக விலகிவிடாத அதிகாலை நேரம்..,வெளிச்சம் ஊடுருவமுடியாமல் பாதையெங்கும் படர்ந்து பரந்திருந்தது பனி.நடுக்கும் குளிரைப் பொருட்படுத்தாமல் அந்தத் தெருவினை விட்டு,பேருந்து நிலையத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர் ராதாவும்,கிருஷ்ணனும்.
கோயம்புத்தூருக்குச் செல்லும் முதல் பேருந்தைப் பிடித்து ஏறி அமர்ந்தவுடன் ஜன்னல் வழியாக வெளியே தலைநீட்டிப் பார்த்துவிட்டு, “அப்பாடா.. தப்பித்தோம்..யாரும் பின்னாடி வரலை.” என்று முனகியபடியே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் கிருஷ்ணன்.ராதாவின் முகத்திலும் சற்றுநிம்மதி தெரிந்தது.

தங்கள் காதலை வீட்டில் சொல்லி,பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடிப்பதாக இருந்த அவர்களின் திட்டம்,ராதாவின் அப்பா ராகவனின் பிடிவாதத்தினால் ‘ஓடிப்போவதாக’ மாறிப்போனதில் கிருஷ்ணனுக்கு மிகவும் வருத்தம்.

தனியார் நிறுவனத்தில்,சேல்ஸ் ரெப்பாக,ஊர்,ஊராகச் சுற்றும் தனது வேலை, வருமானம்,ராதாவுக்கும்,தனக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பு,பெயர்ப் பொருத்தம், காதல்,தனது வீட்டின் நிலைமை,வசதி என அனைத்தையும் சொல்லி பெண் கேட்டபோது,ராகவன் பிடிவாதமாகச் சொன்ன ஒரே பதில்.“நோ..”

என் அப்பாவின் பூர்வீக வழியில் பார்த்தால் நீங்கள் எனது உறவினர்களாகக் கூட இருக்கலாம். மதம்,மொழி,ஜாதி அனைத்தும் ஒன்றாக இருக்கும்போதும் ஏன் மறுக்கிறீர்கள்.? கிருஷ்ணன் மன்றாடியபோதும்,அதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்.

அரசியல் கட்சி ஒன்றில்,அப்பகுதிக்கென குறிப்பிட்ட ஒரு நல்லபதவியில் இருந்த ராகவனை மீறி,அவரது பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதில் இருக்கும் பல சிக்கல்களையும் தனியே ஒரு சந்தர்ப்பத்தில் விவாதித்துக் கொண்டனர் ராதாவும்,கிருஷ்ணனும்.வேறு வழியின்றித்தான் ஓடிப்போய்விடலாம் என்ற முடிவை எடுத்து,நாள் குறித்து கிளம்பிவிட்டனர்.

கோவையை அடைவதற்கு இன்னும் அரை மணிநேரப் பயணம் இருந்தது. விழியோரம் கண்ணீர்க் கசிவுடன்,தனது தோளில் சாய்ந்து கிடந்த,ராதாவின் கன்னத்தில் தட்டிய கிருஷ்ணன் “ராதா..கவலைப்படாதே..எங்க வீட்டுக்குப் போயிட்டம்னா,அப்புறம் யாராலும் ஒண்ணும் செய்யமுடியாது.என்னோட கம்பெனி ப்ரெண்ட்ஸ்,சொந்தக்காரங்க..இன்னும் நிறையப்பேரு நமக்காக சப்போர்ட் பண்ணுவாங்க..அதனால..,
“இல்லைங்க,நான் அதுக்காக வருத்தப்படலை..அம்மா,அப்பாவைப் பிரிஞ்சுதான் நாம வாழவேணும்கிற சூழ்நிலை உருவாயிடுச்சுன்னுதான் சங்கடமாயிருக்கு..”

“சரி,ராதா..ஏன் உங்க அப்பா நம்ம சைடிலே இருக்கற நியாயத்தைப் புரிஞ்சுக்கவேயில்லை..,இன்னும் வசதியான மாப்பிள்ளையை எதிர்பார்த்திருப்பாரோ..”

“சே..சே..அவருக்கு பணம்,காசு மேலேயெல்லாம் பெரியபிடிப்பில்லை.ஆனா ரொம்ப கௌரவம் பார்ப்பாரு.அதுக்கு ஏதாவது பங்கம் வந்துச்சுன்னாதான் அவராலே தாங்கவே முடியாது.”
“சரி விடு எல்லாம் ஒரு நாளைக்கு சரியாகும்..”
“எனக்கும் அதுதான் நம்பிக்கை..” இருவருக்கும் இப்போது சற்று நிம்மதியாயிருந்தது.
பேருந்தின் சீரான ஓட்டத்தில்,கண்கள் தம்மை அறியாமலே மூடிக்கொண்டது.

‘விருந்து,கேளிக்கையென கல்யாண வீடு களைகட்டியிருக்pறது. அம்மா,அப்பா, உறவினர்கள் புடைசூழ திருமணம் நடைபெறுகிறது...’
இருவருக்கும் ஒரே கனவு..அதிகாலையில் காணும் கனவு நிறைவேறும் என்று சொல்வார்களே..! மனம் ஆசையில் தவித்தது.கனவு ஏற்படுத்திய பாதிப்பு, இருவரையும் உறக்கமும்,விழிப்புமற்ற,சந்தோஷமும்,துக்கமுமற்ற நிலையில் வைத்திருந்தது.

அப்போதுதான்,திடுமென்று பஸ்டிரைவர்,போட்ட பிரேக்கினால்,மொத்தமும் குலுங்கியது.தங்கள் சீட்டுகளுக்கு முன்னாலிருந்த கம்பிகளில்,சிலர் தலையை மோதிக்கொண்டனர்.பிறகு என்னவாயிற்று என்ற எதிர்பார்ப்புடன்,ஜன்னலுக்கு வெளியே தலையைநீட்டிப் பார்த்தனர்.பஸ்ஸை மறித்தபடி,கட்சிக் கொடிகளுடன் நான்கு கார்கள் நின்று கொண்டிருந்தன.அதிலிருந்து நிறையப்பேர் இறங்கி பஸ்ஸை நோக்கிஓடி வருவதும்,உள்ளே ஏறுவதும் தெரிந்தது.அதில் பிரதானமாக ராகவன் இருப்பதைக் கண்டு,திக்கென அதிர்ந்தனர் ராதாவும்,கிருஷ்ணனும்.

என்ன செய்வது..? என்று முடிவெடுக்கக்கூட அவகாசமில்லை.அதற்குள் அருகே வந்துவிட்டார் ராகவன்.ராதாவை இழுத்து,தனக்குப் பின்புறமாகத் தள்ளியவர்,நேராக கிருஷ்ணனின் சட்டையைக் கொத்தாகப் பற்றியிழுத்து, ராதாவின் அலறலை சிறிதும் பொருட்படுத்தாமல்,படிகளின் வழியாக வெளியே தள்ளிக் கொண்டுபோனார்.
சில விநாடிகளில் அரங்கேறிய,இந்தக் களேபரத்தை எதிர்த்து குரல்கொடுத்த சகபயணிகள்,ராகவனுடன் வந்த ஆட்களின் முறைப்புக்கு,அப்படியே அடங்கினர். பஸ்ஸின் முன்புறம் குண்டாந் தடிகளுடன்,இருவர் நின்றிருந்ததால் டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்ஸை எடுப்பதா,நிற்பதா..?என்று குழம்பிப்போயிருந்தனர்.
“சார் விடுங்க,பேசிக்கலாம்..”என்ற கிருஷ்ணனுக்கு‘பளீரென’ஒருஅறையும் விழுந்தது.வெளியே இறக்கிய ராகவன்,கிருஷ்ணனை,தனது ஆட்களைவிட்டு சிறிதுதூரம் தள்ளிக்கொண்டு போனார்.உதவிக்கு அருகாமையில் வரமுயன்ற இருவரையும்,கையசைத்து அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டார்.

“ஏண்டா..எனக்கு இஷ்டமில்லேன்னு அவ்வளவு சொல்லியும்,என்ன துணிச்சல் இருந்தா,என் மகளை இழுத்துட்டு ஓடுவே..”என்று சொன்னபடியே மீண்டும் ஒரு அறை..வெறும் வயிற்றில் ஓடிவந்த களைப்புடன் இருந்த கிருஷ்ணனுக்கு தலைசுற்றியது.கடைவாயில் பட்ட அடியால்,உதடுகளின் வழியே ரத்தம் வந்தது.

அப்பா வேண்டாம்..விட்டுடுங்க அப்பா..என்று ராதா இங்கிருந்து கதறிக் கொண்டிருந்தாள்.அருகாமையில் செல்லமுடியாதபடி அவளையும் இருவர் பிடித்துக் கொண்டிருந்ததால் தவித்தாள்.

கிருஷ்ணனை,அடித்தும் ஆவேசம் அடங்காமல் அப்பா ஏதோ பேசிக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருந்தது தெரிந்தது.சில நிமிடங்கள் கழித்து,அவனை அப்படியே மீண்டும் தள்ளிக் கொண்டுவந்து பஸ்ஸில் ஏற்றிவிட்டார் அப்பா.
அவன் பரிதாபமாக ராதாவைத் திரும்பிப் பார்த்து,அழுதுகொண்டே கையாட்டினான். “திரும்பியும் ஒருநாள் வருவேன் ராதா..உன்னைக் கைவிடமாட்டேன்” குரல் உடைந்து,வார்த்தைகள் வெளியேற முடியாதபடி அவனுக்கு அழுகை மேலிட்டது.
என்ன நடக்கிறது என்று விலகாத அதிர்ச்சியுடன் நின்றிருந்த ராதாவை, இழுத்துச்சென்று,தாங்கள் வந்த காருக்குள் தள்ளினர்.அடுத்த விநாடி கார்கள் வந்தவழியே திரும்பிச் சென்றன.
கிருஷ்ணனை சுமந்து கொண்டு,கோவையை நோக்கி,மீண்டும் புறப்பட்டது அந்தப் பேருந்து.கண்ணீரும்.இரத்தமும் வழிந்து கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு அருகில் வந்து அமர்ந்த ஒருவர்,தனது கைக்குட்டையால்,அவனது இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே கேட்டார்.“என்னப்பா..பிரச்சினை..ஏதேனும் காதல் விவகாரமா..?”
“காதலில் ஒண்ணும் விவகாரம் எதுவுமில்லீங்க..,முல்லைப் பெரியாறுதான் இப்ப எங்க பிரச்சினை..” அவன் அழுதுகொண்டே சொல்லிமுடித்த சில நிமிடங்களில்,கேரள எல்லையிலிருந்த,வாளையாறைக் கடந்து,தமிழக எல்லைக்குள் நுழைந்து அந்தப்பேருந்து.!.

21 டிசம்பர் 2011

யார் பெரியவன்..?

கல்லையும் மண்ணையும்
விண்ணையும்,ஒளியையும்
காற்றையும்,நீரையும்
கதிரவனையும்,நிலவையும்
அண்டமுடியாத அண்ட சராசரங்களையும்
படைத்த ஆண்டவன்தான் பெரியவன்..
எனில்..,
அந்த ஆண்டவனையும் படைத்த
மனிதன் அவனிலும் பெரியவனே..!

பிரிவின் எல்லைகள்..!

மதம் காக்க போர்,
மிளகுக்காக போர்,
தங்கத்திற்காக போர்,
எண்ணெய்க்காக போர்,
இப்போது தண்ணீருக்காகவும் போர்.!
இனி காற்றுக்காகவும் நடக்கலாம்.!

ஆரியன்-திராவிடன்
வடஇந்தியன்-தென் இந்தியன்
தமிழன்-கன்னடன்
தமிழகம்-கேரளம்
குறுகிக்கொண்டே போகும்
எல்லைகள்,காட்டுவதென்னவோ
பிரிவின் அகலங்களை..!

மதம்-இனம்,மொழி-நிறம்
நாடு-எல்லை,
அரசியல்-பொருளாதாரம்
எல்லாம் கடந்து
ஒரே வானம்,ஒரே பூமி
அனைவரும் மனிதர்களே..
எப்போது வரும்
அந்தக்காலம்..?

பெரியாறும்-பெரியாரும்.! - பொள்ளாச்சி அபி

இலங்கையிலிருந்து..
அகதிகளாய்..
இந்தியாவிற்குத் திரும்பிய
நம் ரத்த சொந்தங்கள்
எடுத்துவைத்த ஒவ்வொருஅடியிலும்
தாம்பட்ட துன்பத்தை
பகிர்ந்தனர்.
இளைஞர்கள் கொல்லப்பட்டதும்,
யுவதிகள் கற்பழிக்கப்பட்டதும்
குழந்தைகள்,முதியவர்கள்
என வேறுபாடின்றி..
இனம் அழிக்கும் போரின்
கொடூர அரசியலின்
ரத்தம் தெறித்த பக்கங்களை..!

இதோடு மட்டும் ஓயவில்லை.

மலேசியாவிலிருந்து..
ஆஸ்திரேலியாவிலிருந்து,
படிப்பதற்கும்,பிழைப்பதற்கும்
பட்டதுன்பங்கள் தாளாமல்
இந்தியாவிற்கு திரும்பிய
நம் ரத்த சொந்தங்கள்..,
எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும்
தாம்பட்ட துன்பத்தை
பகிர்ந்தனர்.
வெள்ளையன்,கறுப்பன்..என
பாகுபாடு காட்டி,
நம்நாட்டு இளைஞர்களுக்கு
கால்விலங்கிட்ட
நிறவெறி அரசியலின்
ரத்தம் தெறித்த பக்கங்களை..!

குடியரசுத் தலைவராக
இருந்தால் மட்டுமென்ன..?
தீவிரவாத அச்சுறுத்தலை
காரணம் காட்டி..
சோதனைகள் நடத்தியதும்
மன்னிப்புக்கேட்டதுமான
சந்தர்ப்பவாத அரசியலையும்
நாம் சந்தித்தோம்..!.

அடபோகட்டும்..இவையெல்லாம்
அந்நிய நாடுகள்..!-ஆனால்,
அருகாமையிலிருந்தும்-
எங்களை அந்நியப்படுத்துகிறாயே.
கேரளத்து சகோதரா..!
நீ இந்தியனில்லையா..?

முல்லைக்கு தேர் கொடுத்த
வரலாறு எங்களுக்குண்டு..!
முல்லைப் பெரியாறை மறுத்து
களங்கப்படாதே..!
அங்கு வரும் பக்தர்களை
அடித்து,உதைக்கவும்..
எமது பெண்களின் துகிலுரிக்கவும்
துணிந்தாயாமே..?

உனது தாயும்,சகோதரியும்
இன்று மேல்துண்டுபோட்டு
மானம் காத்துக்கொள்ளவும்,
நாத்திகம் பேசினாலும்
உனது ஆத்திக உரிமையை
மீட்டுக் கொடுத்ததும்..,எமது
ஈரோட்டுப் பெரியார்தான்
என்பதை மறந்தாயா..?

நீ உனது எல்லைக்குள்
கேரளத்துக்காரனாயிரு..!
எல்லையில்லா அன்பையும்
ஆதரவையும் வழங்குவதில்
நீ இந்தியனாயிரு..!

இப்போதாவது புரியுமா..?

கடலினை ஆவியாக்கி
திரளுது மேகம்..
திசைகளைத் தீர்மானித்து
வீசுது காற்று..,
இங்கே தேவையென
தடுக்குது மலை..,
உனது வசிப்பிடத்தை
குளிர்ச்சியாக்குது மழை..
நீ விதைத்ததெல்லாம்
செழிக்க பிறக்கிறது நதி..,
உனது தாகத்தை
தணிக்குது நீர்..,
உனது மூச்சினை
சுத்தப்படுத்துது மரம்..,

வானத்தின் பொழிவும்
வனத்தின் செழிப்பும்..
மானத்தோடு உன்னை
வாழவைக்க-ஓயாது
உழைக்குது..,-உனது
உழைப்பு தேவைப்படாமலே..!

ஆனால்..-மனிதா..!
நீ-ஏழையின் உழைப்பை
சுரண்டும் முதலாளிபோல

மரத்தை வெட்டுகிறாய்..!
மாரியைத் தடுக்கிறாய்..!
சுரங்கம் அமைக்கிறாய்..!
மலையைக் குடைகிறாய்..!
மணலைத் திருடுகிறாய்..!

அகழ்வாரை நிலம் தாங்கும்தான்..
ஆனால்
அதற்குமொரு எல்லையுண்டு..
தனது கோபத்தை-புவி
வெப்பமாக வெளிப்படுத்திய
பின்னும்- நீயுனது
போக்கை மாற்றிடவில்லை..!
எனில்...,
இனியுன் சந்ததிக்கு
எதிர்காலத்தில்
போக்கிடம் வேறெதுவுமில்லை..!

அவள் கேட்கிறாள்.!

காதல்,காதலி,முத்தம்
தென்றல்,மழை,நிலா
சுகம்,மலர்,இதழ்
உதடு,பனி,நேசம்
சிப்பி,முத்து,அலை..,
உனது கவிதையில்
இடம்பெற,
கிடைத்தது இவ்வளவுதானா..?

வியர்வை,உழைப்பு
அத்தக்கூலி,கொத்தடிமை,
குழந்தைத் தொழிலாளர்,
வரி,வட்டி.,கந்துவட்டி
விலைவாசி,தீண்டாமை,
அரசியல்,ஊழல்
இனம்,மொழி,நாடு
எதிரி,பகைமை..
இன்னும் எத்தனையெத்தனை..!

இதனையும் கவிதையாய்
படைக்க உனக்கு மனசில்லையா..?
இல்லை திறமையில்லையா..?

உன்னால் முடியவில்லையெனில்
பிறகு யாரால் முடியும்..?
தமிழன்னை கேட்கிறாள்..
பதிலிருந்தால் சொல்லுங்களேன்

- பொள்ளாச்சி அபி

ஐயோ..பாவம்..!

‘பிரேம்குமார்’என்று தனது நாய்க்கு பெயர் வைத்த ஆறுமுகத்தைப் பார்த்து அவரது மகன்,மகள்,மனைவி அனைவரும் பரிகசித்தனர்.ஆனால் அந்தப் பெயரை மாற்றமாட்டேன் என்று ஆறுமுகம் கண்டிப்பாக கூறிவிட்டார்.இதனால் எல்லோருக்கும் ஆச்சரியம்தான் என்றாலும்,அவரது வார்த்தைக்கு மறுப்பு சொல்ல யாருக்கும் தைரியமில்லை.

இதுவாவது பரவாயில்லை.அதற்குப் பிறகு,தினமும் அலுவலகத்திலிருந்து வந்து,சில நிமிடங்கள் கழிந்தவுடன் கட்டிப்போடப்பட்டிருக்கும் அந்த நாயின் அருகே, சில பிஸ்கெட்டுகளுடன் சென்று அமர்வார்.ஒரு பிஸ்கெட்டை போட்டவுடன்,அது வாலைக் குழைத்துக் கொண்டு,நன்றி என்பதுபோல முனகுவது போன்ற மெல்லிய ஒலியை எழுப்பியபடி,அந்தப் பிஸ்கெட்டை சாப்பிடும்..
அதை முழுவதுமாக மென்று தின்று முடிக்கும் முன்பே,ஆறுமுகம் தனது முதுகுக்கு பின் மறைத்துவைத்திருக்கும் பெருவிரல் தடிமனான பிரம்பை எடுத்து,நாயின் முதுகில்,சுளீர் என்று மின்னல் வேகத்தில் ஒரு அடி.உயிரை உருவிவிடும் வகையில் பட்ட அடியால்,துடிக்கும் அந்த நாயின் தீனமான அலறல்..

ஆறுமுகத்தின் மனைவி,மகள்,மகன் ஆகியோர்,தங்கள் அடிவயிற்றில் தீப்பற்ற வைத்ததுபோல துடித்துப்போவார்கள்.ஆனால் அது குறித்த எவ்வித சலனமும் இன்றி,அடுத்த பிஸ்கெட்டை அந்த நாய்க்கு போடுவார் ஆறுமுகம்.மீண்டும் அடி.தினமும் இதேபோல் குறைந்தது மூன்று பிஸ்கெட்டுகளையாவது போடுவார்.

வாயில்லா ஜீவனை வதைக்காதீர்கள் என்று அவரது குடும்பமே,பல முறை சொல்லியபோதும்,ஆறுமுகம் அதற்கு செவி கொடுப்பதில்லை என்பதில், அவர்களுக்கு மிகவும் வருத்தம்.இவரை எப்படியாவது ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்துவிடவேண்டும் என்று மகனும்.மகளும் திட்டமிட்டிருந்தனர்.

ஆறுமுகத்திற்கு எக்ஸ்போர்ட் கம்பெனியொன்றில் ஹெட்கிளார்க்காக வேலை. இப்போது இருக்கும் எம்டி.யின் அப்பா காலத்தில் உதவிக்கு என சேர்ந்தது. அவரால் நிறுவனம் வளர்ந்தது போலவே,ஆறுமுகத்தின் அனுபவமும் வளர்ந்தது.ஏறக்குறைய முதலாளியின் செக்ரட்டரி என்ற அளவிற்கு அவருக்கு முக்கியத்துவமும் கிடைத்தது.

இடையில் அவர் மாரடைப்பில் இறந்துவிட,அவரது எம்.பி.ஏ முடித்திருந்த மகன் எம்.டி பதவிக்கு வந்துவிட்டார்.ஆனால் ஆறுமுகத்தைக் கண்டாலே அவருக்கு ஏனோ பிடிக்கவில்லை.எந்த வேலை செய்தாலும் குறை சொல்வதும் திட்டுவதுமாகவே இருந்தார்.அப்பா காலத்துமனுஷன் என்று பார்க்கிறேன். இல்லையெனில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவேன் என்று அலுவலக சிப்பந்திகளின் முன்பாகவே இப்போதைய முதலாளி திட்டுவதுதான் அவரால் சகிக்க முடியவில்லை.அவமானமாக இருந்தாலும்,முதலாளியை எதிர்த்து என்ன செய்யமுடியும்.?

பழைய முதலாளியின் ஏற்பாட்டின்படி,அவரது சர்வீசிற்கு ஏற்ற நல்ல சம்பளம் வந்து கொண்டிருக்கிறது.இனி இரண்டு வருடம் கழித்து ரிட்டயர்ட் ஆகும்போது, நல்ல பணப்பலனும் கிடைக்கும்.இதை நம்பி குடும்பம்,இன்னொரு மகளின் திருமணம்,மகனின் படிப்பு என இருக்கும்போது,அவமானத்திற்கு பயந்து வேலையை விட்டுவிடவும் ஆறுமுகத்திற்கு மனசில்லை.

ஆனால்,சின்ன முதலாளி ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் காரணங்களுக்காக, கண்டபடி திட்டும்போது,அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அவருக்கு வேறு வழியும் தெரியவில்லை.

அன்று மாலையில்,சோர்வாக வீட்டுக்கு வந்த ஆறுமுகம் தனது வழக்கமான பிஸ்கெட் போடும் வேலையைச் செய்யவில்லை.அதிசயித்துப்போன மனைவியிடம் காய்ச்சல் அடிப்பதாகக் கூறினார்.டாக்டரிடம் போகலாமா..? என்று அவள் கேட்டபோது மறுப்பேதும் சொல்லவில்லை.

அழைத்து வரப்பட்ட டாக்சியில்,மனைவியும்,மகளும் இருபுறமும் கைத்தாங்கலாய்; பற்றியபடி,ஆறுமுகத்தை பின்சீட்டில் ஏற்றிக் கொள்ள,மகன் முன்சீட்டில் அமர்ந்தபடி,மருத்துவமனைக்கு கிளம்பினர்.

போகும் வழியெல்லாம் மெல்லியகுரலில் யாருடனோ செல்லில் பேசிக்கொண்டே வந்தான் மகன்.சில நிமிடங்களில் அந்த கிளினிக்கின் முன்பாக டாக்சி நின்றபோது,நகரின் பிரபலமான மனநல மருத்துவமனையின் பெயர்ப்பலகை அவர்களை வரவேற்றது.

சிறிது நேர காத்திருப்புக்குப் பின்,டாக்டரின் முன்னே அமரவைக்கப்பட்ட ஆறுமுகத்திற்கு பொதுவான சில பரிசோதனைகளை மேற்கொண்டார் டாக்டர்.பின்னர் ஆறுமுகத்திடம் ஏதேனும் பேசலாமே என்று கேட்க,ஆறுமுகம் ஆமோதிப்புடன் ஊம் கொட்டியபடி தலையாட்டினார்.

டாக்டர் “ எங்கே வேலை செய்றீங்க ஆறுமுகம்.?”
தனது நிறுவனத்தின் பெயரைச் சொன்னார்.
“ஓ..நம்ம பன்னீர் செல்வம் சாரோட கம்பெனிதானே..?

ஆமாம் என்று தலையாட்டியவர்,இப்போது அவரது மகன்தான் நிர்வாகி என்பதையும் சேர்த்து சொன்னார்.அப்போது ஏனோ அவர் தனது பற்களைக் கடித்துக் கொண்டதுபோல டாக்டருக்குத் தோன்றியது.

அப்படியா..? அவரோட பேரு..?

ஆறுமுகம் சொன்னார்.“பிரேம்குமார்.”.

09 டிசம்பர் 2011

நீரில் ஒரு தாமரை..!

கண்ணாடியில் இன்னொரு முறை தன் முகம் பார்த்துக் கொண்டாள் செண்பகம். ‘முகத்தில் பவுடர் அதிகமோ..?’ இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து அழுத்தாமல் துடைத்துக்கொண்டு,கண்ணாடியில் ஒட்டிவைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டையும் நெற்றியின் நடுவில் வைத்தபடி நிமிர்ந்தபோது,வெளியே கமலாவின் குரல் கேட்டது. “ஏய்..செம்பா..ரெடியா..? மணி ஒம்பது ஆயிருச்சுடி சீக்கிரம்..,”

“ஆனா என்னடி..? நாம என்ன ஆபீஸ{க்கா போறோம்..,கரெக்ட் டயத்துக்கு போறதுக்கு..?” கேட்ட செண்பகத்திற்கு இருபத்திரெண்டு வயது.வாளிப்பான உடல்கட்டும்,எப்போதும் புன்னகை இழையோடும் பிரகாசமான முகமுமாய், பார்த்தவர்கள் யாரும் பதினெட்டு வயதிற்கு மேல் அனுமானித்ததில்லை.

“ அதுக்கில்லேடி..லேட்டா போனா அந்த மேனேஜர் முசுடு கோவிச்சுக்கும்”
கமலாவும் செண்பகத்தின் வயதுடையவள்தான் என்றாலும் சற்றே பூசினாற் போன்ற உடல்வாகும் உயரமும் இரண்டு வயது கூடுதலாகவே காட்டியது.

“அவரென்ன நமக்கு சம்பளம் தர்றவரா..? ஏதோ நம்மகிட்டே கமிஷன் அடிக்கிற ஆளுதானே..”, சொல்லியபடியே வீட்டின் கதவைப் பூட்டினாள் செண்பகா.ஒருதரம் இழுத்துப்பார்த்துவிட்டு,கமலாவோடு படி இறங்கினாள்.

தெருவின் திருப்பத்தில் ஆட்டோ பிடித்து,இடம் சொல்லி,ஐந்து நிமிட பயணத்திற்குப்பின் அவர்கள் சென்று இறங்கியபோது மணி இரவு ஒன்பது பத்து.இறங்கிய இடம் ‘தங்கம் லாட்ஜ்’.

மானேஜர் குமாரசாமி,லாட்ஜ் வாசலிலேயே வெற்றிலையைக் குதப்பியபடி நின்றிருந்தார். “ ஏய் செண்பகா..செல்வத்துக்கிட்டே சொல்லிவிட்டேனில்லே.. எட்டரை மணிக்கெல்லாம் வந்துடணும்னு..மெட்ராஸ் பார்ட்டியொண்ணு காத்துக்கிட்டு இருக்கு..ஓடு..ஓடு..ரூம் நம்பர் பதினெட்டு..,கமலா நீ இருபத்தியொன்னுக்குப் போ..” அவருடைய குரலில் விட்டுப்போன அரைமணி நேரத்தை விரட்டிப்பிடித்துவிட வேண்டிய அவசரம் தெரிந்தது.
அண்ணே இன்னும் டிபன்கூட சாப்பிடலே..” கமலா சொல்லிமுடிக்கும்முன், “ஒரு மணி நேரம்தான் பேசியிருக்கு..நீ போ புள்ளே..எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” குமாரசாமியின் குரல் விரட்டியது.

இருவரும் உள்ளே போனார்கள்.படிகளில் ஏறும்போது கமலா கிசுகிசுத்தாள்.“ஏய் செம்பா..டிப்ஸ் கொஞ்சம் தேத்திக்கப் பாருடி..பொங்கல் வருதில்லே..புதுசா நகை வாங்கலாம்..” பேசிக்கொண்டே வந்ததில் பதினெட்டாம் நம்பர் ரூம் வந்திருந்தது.
“ம்..ம்..” என்று சிரித்தபடியே தலையாட்டிய செண்பகம் கதவை லேசாகத் தட்டினாள்.”யெஸ்..கமின்.”

நகரின் மத்தியில் இருந்த அந்த லாட்ஜ் ரயில்வே ஸ்டேஷனும்,சென்ட்ரல் பஸ் ஸ்டேண்டும் அருகருகே இருந்ததில் எப்போதும் லாட்ஜில் வெளியூர் ஆட்களின் கூட்டம் நிரம்பி வழியும்.
செண்பகத்திற்கும்,கமலாவிற்கும் எப்போதும் தொழில் கொடுப்பார் மேனேஜர் குமாசாமி.செண்பகாவின் கண்டிஷன் அப்படி.அவள்மூலம் நல்லவருமானம் இருந்ததால் குமாரசாமியும் அதற்கு ஒத்துக்கொண்டார்.ரேட்டெல்லாம் ஆளைப் பொறுத்து அவரே நிர்ணயித்துக் கொள்வார்.ஆனால் இவர்களுக்கு ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு காசு கொடுத்துவிடுவார்.வருமானம் சற்று வசதியாகத்தான் வந்து கொண்டிருந்தது.
மேலும் போலீஸ் ஸ்டேஷன் மாமூல்,அவ்வப்போது உருப்படிகள் சப்ளை, காணிக்கை தீர்த்தம் என்று எல்லாமே அவர் பார்த்துக் கொள்வார்.தனயிhக தொழில் நடத்தினால் இதெல்லாம் கொஞ்சம் சிக்கல்.எனவே அவர் அடிக்கும் கமிஷன் பற்றி இவர்களும ;கவலைப்படுவதில்லை.

தாளிடாத கதவை செண்பகா திறந்தபோது, “ வா செண்பகா..” பழக்கமான குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘ஓ இவரா..?’ மெட்ராஸ் பார்ட்டி என்றதும் வேறு யாராவதாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தாள்.சென்னையில் ஏதோ ஒரு தொழிற்சாலையின் உயர்அதிகாரி இவர்.அவர்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனை சம்பந்தமாக அடிக்கடி இந்த ஊருக்கு வருபவராம். போன மாதம்தான் இவளை இங்கு சந்தித்தார்.முதல் சந்திப்பிலேயே இவளை மிகவும் பிடித்துப் போயிற்றாம்.
“வாங்க சார்..சவுக்கியமா இருக்கீங்களா..?”,இவளுடைய விசாரிப்பில் அவர் முகம் மலர்ந்தார்.“இதான் செண்பகா..உன்னைப் பிடிச்சதுக்கு காரணம். கஸ்டமர் அப்படிங்கிற உறவு தாண்டி நலம் விசாரிக்கிறே பார்.அந்த குணம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது.அதான் இந்த முறையும் குமாரசாமிக்கிட்டே குறிப்பா உன்னயவே கேட்டேன்.”
அவரின் புகழ்ச்சியில் போலித்தனமில்லை.செண்பகத்திற்குகூட சற்று நாணம் வந்தது.
“அப்புறம் செண்பகா..நான் போனதடவை வந்தபோதே கேட்டதைப்பத்தி யோசிச்சயா..? சம்மதம்னு சொல்லமாட்டியா..?” அவருடைய கேள்வியில் நிறைய எதிர்பார்ப்பு..
சென்றமுறை அவர் வந்து சென்றது செண்பகாவின் நினைவிலாடியது.அன்றும் இப்படித்தான் உள்ளே நுழைந்தவளை சற்றுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு, தன்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார்.அவளுக்கு அதிசயமாக இருந்தது.
எப்போதும் அவள் அறைக்குள் நுழைந்தவுடன்,பசித்த மிருகங்கள் தன் இரையைப் கவ்விப்பிடிக்க தாவுவது போல் அவசரம் காட்டுவதைத்தான் அவள் கண்டிருக்கிறாள்.இப்படி நிதானமாக பழகும் ஒருஆளை இதுவரை,இந்தத் தொழிலில் சந்திகக்வில்லை.
“உன் பெயரை தெரிஞ்சுக்கலாமா..?”
“செண்பகம்”
“நெஜமான பேரே இதானா..?”
“ஆமா..”
“நீ இந்தத் தொழிலுக்கு வந்து எத்தனை வருமாச்சு.?”
“ஆறு மாசமிருக்கும்” என்றவளின் மனதில் எதற்காக இந்தக் விசாரணை என்ற கேள்வி எழுந்தது.அது முகத்திலும் பிரதிபலித்தது போலும்.
“நான் எதற்காக இதையெல்லாம் விசாரிக்கிறேன்னு தப்பாக எடுத்துக்காதேம்மா..” அவர் சட்டென்று வருத்தத்திலாழ்ந்தார். “என் மனைவியோட காலம்தள்ளி எனக்கு சலிச்சுப் போச்சு.என்னோட மனசுபுரிஞ்சு அவ எப்பவும் நடந்துக்கிறதில்லே.எதுக்கும் ஒத்துப்போறதுமில்லே.. விட்டுக்கொடுக்கிறதுமில்லே..” நாப்பது வயசுக்குள் இருந்த அவரின் பேச்சில் நூற்றாண்டு சலிப்பு.

“நீங்களாவது விட்டுக்கொடுக்க முயற்சிக்கலாமே..?”செண்பகா சட்டென்று சொல்லிவிட்டாலும்,அடுத்த நொடியே தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள். ‘நாம் அளவுக்கு மீறி அவருடைய உரிமைக்குள் தலையிடுகிறோமோ..?’ஆனால் அவர் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. ‘என்னோட விருப்பு,வெறுப்புகளை உங்கிட்டே சொல்றேன்.நீ விருப்பப்பட்டா..என்னோடயே மெட்ராஸ் வந்துடு. தனியாக வீடுஎடுத்துக் கொடுத்து,ஆயுசுபூராவும் வசதியாய் வெச்சுக்கிறேன்.”
“யாரோட ஆயுசு பூரா..?” செண்பகாவின் கேள்வியால்,சட்டென்று உறக்கத்திலிருந்து விழித்தவர்போல நிமிர்ந்தார். “என்னம்மா கேட்கிறே..?”

“நாளைக்கே நீங்களோ நானோ செத்துட்டா,இந்த ஏற்பாடெல்லாம் இன்னும் வருத்தத்தைத்தான் கொடுக்கும்.ஒண்ணை எதிர்பார்த்து ஏமாந்து போறதைவிட.., இன்னைக்கு என்னவோ அதைப் பார்த்துட்டுப் போயிடறதுதான் நல்லது.”
“உன்னைப்பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட நம்பிக்கை,உனக்கு வரலேன்னு தெரியுது.”செண்பகா பதிலேதும் சொல்லாமல் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவர் தனக்குள்ளேயே இப்போது முனகிக் கொண்டிருந்தார். ‘நான் அப்படி எதிர்பார்க்கிறதுலே நியாயமில்லைதான்...!’

“ஆமா சார்,இப்படித்தான் நியாயமில்லாத விஷயங்களை உங்க மனைவிகிட்டே எதிர்பார்க்கிறீங்களோன்னு தோணுது.தவறு உங்க பக்கமும் இருக்கலாம்.”

“பச்..ஊஹ{ம்..அவளை அட்ஜஸ்ட் பண்றது ரொம்ப சிரமம்.”

“அப்படின்னா இன்னொரு கல்யாணம் பண்ணிக்குங்களேன்.”

“ஐயோ..அது பெரிய சிக்கலிலெல்லாம் கொண்டுபோய் விட்ரும். வேண்டாம்மா.. வேண்டாம்..என்றதோடு அந்த விஷயத்தை அன்று அவர் நிறுத்திக்கொண்டார்.

அவளுடைய பேச்சும்,அணுகுமுறையும்,அனுசரணையும் அவருக்கு மிகவும் பிடித்துவிட,மறுநாளும் வந்து அதையே கேட்டார்.செண்பகாவிற்கு அந்த யோசனையே பிடிக்கவில்லை.
ஏற்கனவே ஒருவனை முழுவதுமாக நம்பி,பட்ட துன்பமே போதும்.இனியொரு முறை அவசர முடிவெடுத்து இப்போதிருக்கும் நிம்மதியும் பறிபோய் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.எனவே அப்போதே அவரிடம் “முடியாது” என சொல்லிவிட்டாள்.

“என்ன செண்பகா..திடீர்னு யோசனையிலே மூழ்;கிட்டே..என்னோட வர்றதுன்னு முடிவு பண்ணிட்டியா..?” செண்பகா சிந்தனையில் இருந்து மீண்டாள்.
“மன்னிச்சுக்குங்க சார்.அப்ப சொன்ன அதே பதில்தான் இப்பவும்”
அவர் முகம் சற்றே சுருங்கினாலும்,இரண்டே விநாடிகளில் இயல்புக்கு வந்தார்.
“நீ சம்மதிப்பேன்னு உறுதியா நானும் நினைக்கலே..இருந்தாலும் நப்பாசைதான்.வாய்விட்டுக் கேட்டுட்டேன்.”
“பரவாயில்லே சார்..”
“சரி லைட்டை அணைச்சுடலாமா..?”
“உம்” அவள் குரலைத் தொடர்ந்து அந்த அறை இருளில் மூழ்கியது.

மறுநாள் காலை,ஆட்டோவில் வீடு திரும்பும்போது,கமலா முனகிக் கொண்டே வந்தாள். “என்னடி..தானாப் பேசிக்கிட்டே வர்றே..?” செண்பகா கேட்டபோது, “கருமம்டி,நேத்து ராத்திரி ஒருத்தன் கிருமி மாதிரி அரிச்சுட்டான்.உடம்பெல்லாம் ஒரே வலி..போயி நல்லா தண்ணி கொதிக்கவெச்சு ஒரு குளியல் போட்டாதான் நல்லாருக்கும்.”என்றவள் திடீரென நினைவு வந்தவளாய் கேட்டாள், “ஆமா,அந்த மெட்ராஸ் பார்ட்டி இந்த தடவை ஒண்ணும் கேட்கலையா..?.
“கேட்டாரு..,நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.”
“அடிப்போடி இவளே..எவனாவது என்னை இப்படிக் கேட்டா,கும்பிடு போட்டுட்டு கூடப்போயிடுவேன்.நான் கொஞ்சம் குண்டா இருக்கங்காட்டியும்,பகல்லே எவனுக்கும் புடிக்காது போல..” அங்கலாய்த்தவள் தொடர்ந்து, “நீ போனா என்னவாம்..?” அக்கறையுடன் கேட்டாள்.
“வேண்டாம் கமலா..என்னோட கடந்த கால அனுபவத்தைத்தான் உங்கிட்டே சொல்லியிருக்கேன்ல,திரும்பியும் இன்னொருத்தன் பேச்சை நம்பிட்டு,மோசம் போக நான் தயாராயில்லே..,”

கமலாவிற்கு கூட அன்று செண்பகம் அனுபவித்த துன்பங்களை நினைத்தபோது,சிலிர்த்தது.

செண்பகாவின் மனதிலும் நிழல்சித்திரங்களாhய் காட்சிகள் தோன்றி மறைந்தன.
ஏதோ ஒரு ஆபீஸில் வேலை பார்ப்பதாக சொல்லிய முரளி தன்னைக் காதலித்தது,செண்பகாவின் பெற்றோருக்கு தெரியாமல் கோவையை விட்டு ஓடி வந்தது,இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு கோவிலில் தாலிகட்டிக் கொண்டது, ஒரு நவீன லாட்ஜில் ரூம் எடுத்து,முதலிரவைக் கழித்தது..,அதுவரை எல்லாம் ஒழுங்காகத்தான் இருந்தது.

ஒரு நண்பரைப் பார்த்து விட்டு வருகிறேன்.இங்கேயே இரு.நமக்கு ஒருவீட்டை ஏற்பாடு செய்யச்சொல்லியிருக்கிறேன்.அது சம்பந்தமாக விசாரித்து வருகிறேன் என்று சொல்லிப்போனவன்,இரவு திரும்பி வந்தான். உடலெங்கும் பணத்திமிரும், கண்களில் காமமும் வழிந்த மூன்றுபேருடன்.

தன் கண்முன்பாகவே அவர்களிடம் நூறு ரூபாய் கட்டு ஒன்றைப் பெற்றுக் கொண்டு,அவன் வெளியேறியபோதுதான்,அவளுக்கு அந்தப் பயங்கரமே உறைத்தது.அதுவரை அவனது முகஅழகிலும்,வார்த்தை ஜாலங்களிலும் ஏமாந்து விட்ட தன்புத்தியை நொந்து கொண்டவளாய்,தப்பிக்க அவகாசமின்றி, அலறக்கூட வழியின்றி,மிருகங்களாய் தன்னை ஆக்ரமித்துக் கொண்டவர்கள் வெளியேறும்போது காலை ஆறுமணி.அதற்குப் பிறகுதான் அவளால் ஓ..வென்று கதறியழ முடிந்தது.திரைப்படத்தின் காட்சிமாற்றம்போல,ஒரே இரவில் இன்பம்,துன்பம் எல்லாம் நிகழ்ந்துவிட்டது.

அப்போதுதான் பக்கத்து அறையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த கமலாவின் அறிமுகம் கிடைத்தது.இவளின் கதையைக் கேட்டு பரிதாபப்பட்டவள் தன்னுடனேயே அழைத்துச் சென்று ஆதரித்தாள்.ஊருக்குத் திரும்பிச் செல்ல மனமுமின்றி,தனது எட்டாங் கிளாஸ் படிப்புக்கு வேலையுமின்றி உழன்று கொண்டிருந்தபோதுதான் மேலும் ஒரு சோதனை வந்தது.

கமலா சேர்ந்தாற்போல நான்குநாட்கள் கண் விழிக்காமல் படுத்துக்கிடந்தாள். காய்ச்சல் கொதித்துக் கொண்டிருந்தது.கையிருப்பெல்லாம் மருந்துக்கு என தீர்ந்தபின்னும் குணமாகவில்லை.அன்று இரவு வந்து பார்த்த டாக்டரோ, “உடனடியாக இவளை அட்மிட் பண்ணும்மா” என்று அந்தப் பெரிய மருத்துவமனைக்கு லெட்டர் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.செண்பகா செய்வதறியாமல் திகைத்தாள்.தன்னை ஆதரித்த தோழியின் நிலையைப் பார்த்தபோது துக்கம் மண்டியது.முகம் அறியாத மனிதர் நடுவே யாரிடம் சென்று உதவி கேட்பது..?,அதுவும் எந்த நம்பிக்கையின் அடிப்படையில்..?
அப்போதுதான் கமலாவைத் ‘தேடி’ ஒருவன் வந்தான்.கமலாவிற்காக,உடனடி சிகிச்சைக்காக..என்று செண்பகாவும் ‘விலை’ போனாள்.பின் அவள் மேலும்
தேறும்வரை விலைபோவதும் நீடித்து..,மூழ்கியபின் முக்காடு என்னவென்று..?, இன்று செண்பகாவும் ஒரு ‘தொழில்காரியாக’ மாறி குமாரசாமியின் அறிமுகம் கிடைத்தபின் சற்று நிம்மதியாக வாழ்க்கைச் சக்கரம் உருண்டு கொண்டிருக்கிறது.
“என்னடி செம்பா..மெட்ராஸ் பார்ட்டி டிப்ஸ் நிறையக் கொடுத்திருப்பாரே..” கமலாவின் குரல் செண்பகாவை நிஜ உலகத்திற்கு இட்டுவந்தது.
“ஊம்..கொடுத்தார்..”
“வழக்கம்போல சர்ச் வாசலுக்குப்போயி,பாதியை தர்மம் பண்ணப்போறீயா..? இல்லே இனிமேலாவது..”அவள் முடிக்கும்முன்பே செண்பகா குறுக்கிட்டாள்.
“ஆமா கமலா என்னதான் நாம சம்பாரிச்சாலும் நமக்குன்னு யாரு இருக்கா..? நம்ம வாழ்க்கைலே பெரிசா குறிக்கோளுன்னு எதுவும் இல்லேன்னாலும்,நம்ம தேவைக்கு மீறி இருக்கறதை கொஞ்சம் தர்மம்தான் பண்ணுவோமே.. புண்ணியம்னு இல்லாட்டியும்,நமக்கு கிடைக்கிற மனசு ஆறுதல் பெரிசு இல்லையா..?”

ஆட்டோவை வீட்டிற்குமுன் நிறுத்தி இறங்கிக் கொண்டார்கள்.கமலா குளித்துவிட்டு தூங்கப்போவதாகச் சொல்லி விட்டாள்.

செண்பகாவும் குளித்து உடைமாற்றி ஒரு குடையையும் கையிலெடுத்துக் கொண்டு,நான்கு தெரு தள்ளி பிரதான சாலையில் இருக்கும் அந்த தேவாலயத்தை நோக்கி நடந்தாள்.

சர்ச் வாசலில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாயிருந்தது.இன்று வெள்ளிக்கிழமை.செண்பகா இதுவரை சர்ச்சிற்குள் சென்றதில்லை.வேறு மதம் என்பதற்காக அல்ல.கர்த்தர் எவ்வளவுதான் மன்னிக்கும் மனோபாவம் பெற்றிருந்தாலும் மாசுபட்ட உடம்போடு சென்று தேவனை வணங்குதல் நியாயமே இல்லையென தனக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந்தாள்.உள்ளே சென்று “பாவமன்னிப்பு” பெறலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.ஆனால் அதற்குப் பிறகு பாவம் செய்யாமல் இருக்கவேண்டுமே..தன்னால் அது முடியுமா..?
கைப்பையில் தான் சேர்த்துவைத்துக் கொண்டிருக்கிற ஐந்து ரூபாய் நாணயங்களை, கைநிறைய அள்ளிக் கொண்டாள்.இவள் வந்தாலே அங்கு பிச்சையெடுக்க அமர்ந்திருப்பவர்களின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி துள்ளுவதை அவளும் கண்டிருக்கிறாள்.
ஒவ்வொரு தலைக்கும் ஒரு நாணயத்தைக் கொடுத்துக் கொண்டே வந்தாள். பிச்சையெடுப்பவர்களின் அந்த நீண்ட இரண்டு பக்கவரிசையையும் முடித்துக் கொண்டபோது,பையில் இன்னும் சில நாணயங்கள் மீதமிருந்தன.

எல்லோருக்கும் கொடுத்துவிட்டோமா..? என்று நிமிர்ந்து பார்த்தவள்,திருப்தியுடன் தலையாட்டிக் கொண்டாள்.சர்ச்சின் கோபுரத்தைப் பார்த்து ஒரு முறை கும்பிட்டுக் கொண்டு திரும்பி நடந்தவளை, “மேடம்...” என்ற பிஞ்சுக்குரல் தடுத்து நிறுத்தியது.
செண்பகா திரும்பிப் பார்த்தாள்.எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் கருகருவென்று சுருண்டமுடி,சிவந்த நிறம்,சாந்தமான முகத்தோடு கண்களில் சோர்வு மின்ன,சட்டையும்,டிரவுசரும் அழுக்கும் புழுதியுமாக தன்னை நோக்கி,கையேந்தியபடி நின்றிருந்தான்.
பார்த்தால் வழக்கமாய் பிச்சையெடுப்பவன் போல இல்லை. “என்னப்பா..,” செண்பகா கேட்டபோது,”காசுவேணும் பசிக்குது..”அவனுடைய குரலில் தொனித்த பலவீனம் அவளைப் பரிதாபப்பட வைத்தது.”உன்னை இத்தனை நாள் இங்கே பார்த்ததில்லையே..?”
“நான் இன்னைக்குத்தான் இங்கே வந்தேன்..ரயிலிலே..”, ‘ரயிலிலே’ என்று அவன் சொல்லும்போது ஒருசின்ன சந்தோஷம் அவன் கண்களில் மின்னி மறைந்தது.
செண்பகாவிற்கு “பகீர்” என்றிருந்தது.விபரம் புரியாமல் ரயிலில் ஏறி வந்து விட்டானோ..,இவனைப் பெற்றவர்கள் எங்கே பரிதவித்துக் கொண்டிருக்கிறார் களோ..? “அய்யய்யோ..நீ அப்படி வரலாமா..? உங்க அம்மா அப்பா தேடுவாங்களே..”
அந்தப் பையனின் முகம் சூம்பிப் போனது.. “ப்ச்”;..தேடமாட்டாங்க..”
‘ஏன்..?’ என்ற கேள்வியோடு அவள்பார்க்க,”அவங்க ரெண்டுபேரும் போன மாசம் செத்துட்டாங்க..”ஸ்கூட்டர் ஆக்ஸிடென்ட்..”என்று சொல்லி நிறுத்தினான்.
பையனின் முகத்தில் பிச்சைக்காக பொய் சொல்லும் பாவமில்லை. செண்பகாவிற்கு அடிவயிற்றைப் பிசைந்தது. “உன் பேரென்னப்பா..?”
“பாபு….ஜி.பாபுகணேஷ்..”
“ஏன் பாபு..அம்மா அப்பாவோட சொந்தக்காரங்க ஊரிலே யாரும் இல்லையா..?” அவங்ககூட போய் இருக்கலாமில்லே..?”

“அம்மாவோட ஊரு எதுன்னு தெரியாது.நான் எங்க பெரியப்பா வீட்லேதான் இருந்தேன்.ஆனா பெரியம்மாதான் எப்பப் பார்த்தாலும் “எவளோ’’ பெத்ததை நான் கட்டீட்டு அழனுமா..எங்கியாவது போய்த் தொலை..ன்னு திட்டிட்டும் அடிச்சுட்டும் இருந்தாங்க.அதான் நான் வந்துட்டேன்”.பாபுவின்குரலில் மிகுந்த ரோஷம்.
அவளுக்கு ஐயோ பாவம் என்றிருந்தது. “சொந்த பெரியப்பா பெரியம்மாதானே.. எதுக்கு அப்படி சொல்றாங்க..நீ ரொம்ப குறும்பு பண்ணுவியா..?”

பாபு அந்தக் கேள்வியில் வருத்தமடைந்தது போல் தெரிந்தது.

“அதெல்லாமில்லீங்க எங்க அம்மா பேரு ஸ்டெல்லா..,அப்பா அம்மாக்கு கல்யாணம் ஆனதிலிருந்து பெரியம்மாவும்,பெரியப்பாவும் ஒட்டாத உறவு, வெட்டிக்கிட்டு வாடா..ன்னு,அப்பாகிட்டே சொல்லிகிட்டே இருப்பாங்களாம்..ஆனா அப்பாவும் அம்மாவும் சண்டையே போடமாட்டாங்க..ரொம்ப ஜாலியா நாங்க மூணுபேரும் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கும்,வெள்ளிக்கிழமை கோவிலுக்கும் போயிட்டு வருவோம்..அப்பா ஏசுவைப் பற்றி நிறையக் கதையெல்லாம் சொல்லுவாரு..” சொல்லிக்கொண்டே வந்தவனுக்கு கண்களில் நீர் கோர்த்து,வாய் கோணி,அழுகை எட்டிப்பார்த்தது.
செண்பகா பதறிவிட்டாள்.சட்டென்று அவன்கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டாள். “பாபு..அழக்கூடாது பாபு..வா உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கித்தாரேன்..” இவ்வளவு சின்னவயதில் தாய் தந்தையை இழந்து துன்பம் அனுபவிப்பது பெரிய கொடுமை.இரக்கத்தால் செண்பகாவின் மனம் கசிந்தது.

அவன் கையைப் பிடித்தபடி எதிரில் இருந்த ஹோட்டலுக்குச் செல்ல, சாலையைக் கடப்பதற்காக நின்றிருந்தபோது,சரியாக அவர்களுக்கு முன்னால் வழியை மறைத்தாற்போல் ஒரு கார் வந்து நின்றது.
அதிலிருந்து கோட்,சூட் போட்ட, ஆஜானுபாகுவாய் இறங்கிய பெரிய மனிதர்.பார்த்தால் வட இந்தியரைப் போலிருந்தது.நேராக செண்பகாவிடம்தான் வந்தார். “எக்ஸ்கியூஸ் மீ, மேடம்..வேர் இஸ் திஸ் அட்ரஸ்..?” அவர் நீட்டிய விசிட்டிங் கார்டை வாங்கிப்பார்த்தாள்.
அந்த ஆபீஸை அவளுக்குத் தெரியும்.அந்தக் கார்டிலிருந்த சின்னத்தை,அந்த ஆபீஸ்போர்டில் அவளும் பார்த்திருக்கிறாள். “இதே ரோட்டிலே போனீங்கன்னா இடது பக்கமா ஒரு ரோடு பிரியும்.அதிலே திரும்பினா,மூணாவது வீதியிலே.. இரண்டாவது மாடி..” செண்பகா சொல்லச் சொல்ல அவர் முகத்தில் சலிப்புக் காட்டினார்.
“ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் இட், டூ யூ நோ இங்கிலீஷ்..?”
செண்பகா விழித்தாள். ‘தனக்கு தெரிந்த அரை குறை ஆங்கில வார்த்தைகளால் இவருக்கு எப்படி விளக்க முடியும்.?’ வெட்கமாக இருந்தது.

“இப் யூ டோண்ட் மைண்ட், ஐ வில் எக்ஸ்பிளெய்ன் ட்டூ யூ சார்”.பாபு குறுக்கிட்டான்.செண்பகா வியப்போடு பார்க்க,அவள் தமிழில் சொல்லியதை, அவன் கோர்வையாய்,மரியாதையான ஆங்கிலத்தில் விளக்க அவர் ஓகே..ஓகே..என்று கேட்டுக்கொண்டு,தேங்க்யூ சொன்னார்.பின் செண்பகாவைப் பார்த்து, “இஸ் யுவர் பிரதர்.?” அவர் கேட்டதன் பொருள் அவளுக்குப் புரிந்தது.ஒரு விநாடி தடுமாற்றத்திற்குப் பின் குப்பென்று அவளுக்குள் சந்தோஷம் பூத்தது. “யெஸ்” பிரகாசமான முகத்தோடு சொன்னாள்.
“குட் பாய்” பாபுவின் கன்னத்தில் செல்லமாய் தட்டிவிட்டு அவர் சென்று விட்டார்.
பாபு ஆச்சரியத்தோடு செண்பகாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய்..படிக்கிறீயாடா..?”,செண்பகாவின் குரலில் அதீத உரிமை.கேள்வி விளங்காதவனைப் போல பார்த்தான் பாபு.
“ஸ்கூல்லே சேர்த்து விடறேன்,படிக்கிறியா..?” மீண்டும் கனிவாகக் கேட்டாள். பாபுவின் கண்களும்,முகமும் ஆசையில் சில விநாடிகள் மின்னிவிட்டு உடனே சுருங்கியது.

“சந்தேகப்படாதேடா..நானும் இப்ப அநாதை,உனக்கும் யாருமில்லே..எனக்குத் தம்பி ஒருத்தன் இருக்கிறான்னு நெனச்சு,உன்னைப் படிக்க வைக்கிறேன்டா..நீ பெரிய ஆளா வருவேன்னு எனக்கு தெரியும்..”. பாபுவின் தோளை அணைத்து இறுக்கிய செண்பகாவின் கைகளின் அழுத்தத்தில் பாசம் மிகுந்திருந்தது.

பாபு,சர்ச்சை திரும்பிப் பார்த்தான். “நல்லவர்கள் துன்பப் பட்டால் ஆண்டவன் எந்த உருவத்திலும் வந்து காப்பாற்றுவார்” அப்பா சொன்னது மனதுக்குள் ரீங்கரித்தது.
------







கரை கடந்த நதி…!

சாமிநாதய்யரின் விரல்கள் பரபரபவென்று இயங்கிக் கொண்டிருந்தன. இடதுகையில் பிடித்துக்கொண்டிருந்த நாரானது,வலது கையிலிருந்து வந்ந வண்ணவண்ண மலர்களால்,கண்கவரும் மாலையாகிக் கொண்டிருந்த்து.
தினசரி இந்த மதியநேரத்தில்தான்,காலையில் பறித்து வைத்த பூக்களை தொடுப்பார் சாமிநாதய்யர்.விசேஷ நாட்களைத்தவிர,காலை ஒன்பது மணிக்குள் சாமிகும்பிட கொஞ்சம் கூட்டம் வரும்.பிறகு மாலை ஆறுமணிக்கு மேல்தான் அதுவரை இடைப்பட்ட நேரத்தில் உச்சி பூஜைக்குப்பிறகு,வீட்டிற்குப் போய்,மதிய உணவும் முடித்துவிட்டு,நேரே கோயிலுக்கு வந்துவிடுவார்.

ஊரின் முகப்பில்,இந்த கோபாலகிருஷ்ணன் கோவில் அமைந்திருந்தாலும், அதையொட்டி வீடுகளோ,கடைகளோ எதுவும்,கூப்பிடு தூரத்தில் இல்லை. எனவே அவ்வப்போது கோபுரத்தைச்சுற்றி புறாக்கள் இறக்கை அடிக்கும் சப்தம் தவிர எப்போதும் அமைதியாகவே இருக்கும்.
கோவில்கணக்கில் டவுன்கடையிலிருந்து மாலைகள் எவ்வளவு வந்தாலும், கோவில் நந்தவனத்திலிருந்து மலர்களை தானே பறித்து மாலையாக்கி ஆண்டவனுக்கு தினப்படி சார்த்துவதை வெகுநாள் பழக்கமாக வைத்திருந்தார். அவர் மனைவிகூட,“உமக்கேன்னா இந்த அதிகப்படி வேலை..அந்த நேரத்தில் சித்த படுத்து தூங்கலாமே..,அர்ச்சகர் வேலைபோக அதுக்குத் தனியா, தர்மகர்த்தா உமக்கு படியளக்கிறாரோ..? எண்ணி எண்ணி அவர் தருவதை மளிகைக் கடையிலே கொடுத்தா பதினைஞ்சு நாளைக்கு காணமாட்டேங்குது.., கொஞ்சம் சம்பளம் கூட்டித்தரும்படி கேட்கிறதுதானே..?”
“அடி மண்டு..கூலிக்கு செய்யற வேலையா நான் செய்யறது..? தினப்படி மாலை கட்டிப்போடறதுங்கிறது என்னோட ஆத்மதிருப்திக்கு..,என்னாலே முடிஞ்சதை ஆண்டவனுக்கு செய்யறதிலே ஒரு சந்தோஷம்,அந்தக் கண்ணன் நமக்குன்னு என்ன உண்டோ அதைச் செய்யுறான்..,இதுலே என்னடி வேலைக்கும்,கூலிக்கும் கணக்கு..? அந்த நேரத்திலே தூங்கச் சொல்றே..மதியத்தூக்கம் சரீரக்கேடு தெரியுமோ..?.”

சாமிநாதய்யருக்கு,தன் வாழ்க்கை நலத்திற்காக,யாரையும்,எதையம் வேண்டாத மனசு.., “கிடைப்பதை வைத்துக் கொண்டு வாழக்கற்றுக் கொள்ளவேண்டும். அதுதான் பகவான் நமக்கு விதிச்சது.அதன்படிதான் எல்லாமே நடக்கும்” என்பார்.
அவர் மனைவி எவ்வளவோ முறை சொல்லியும்,சம்பளம் கூட்டித்தர வேண்டும் என்று தர்மகர்த்தாவிடம் அவராகக் கேட்டதேயில்லை.அவராக சம்பளம் ஏற்றித்தரும்போது,இது போதாது என்று சொன்னதும் இல்லை.
“உக்கும்..கோவில் குருக்களா இருக்கறவா எத்தனைபேரு வசதியோட இருக்கா,நீங்களும் இருக்கீங்களே..”அவளை இன்னும் பேசவிட்டால்,அது மனஸ்தாபத்திலதான் போய் முடியும் என்று சாமிநாதய்யருக்கு தெரியும்.“சித்த சும்மா இருக்கியா..?” என்பதோடு அவர் பேச்சை முடித்துக் கொள்வார்.

மாலையின் ஒருபக்க திண்டு பூர்த்தியாகி விட்டது.இனி மற்ற பக்கமும் சுற்றி,சின்னதாய் ஒரு குஞ்சம் வைத்துவிட்டால் முடிந்தது.வாகான நீளத்தில் தடியான ஒரு நாரெடுத்துக் கொண்டு,சுற்றத் தொடங்கினார்.கைகள் எப்போதும்போல் வேகவேகமாய் சுற்றத் தொடங்கினாலும்,மனம் என்னவோ மந்த கதியில் யோசித்துக் கொண்டிருந்தது.அவ்வப்போது தோன்றும் யோசனைகள் தான் என்றாலும்,இன்னும் அவரால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை.

நேற்று இரவில்கூட இதுகுறித்துத்தான் அவரது சகதர்மினியும் புலம்பித் தீர்த்தாள். “ஏன்னா..வருஷத்தை முழுங்கிட்டு காலம் ஓடிட்டிருக்கு.. நெகுநெகுன்னு பொண்ணு வளர்ந்து நிக்கிறா..நீங்க மனசிலே என்னதான் நெனச்சிண்டிருக்கேள்..?” இரவு உண்டுமுடித்துவிட்டு,படுக்கையில் உறக்கத்தை எதிர்பார்த்து கண்மூடிக் கிடந்தவரை உசுப்பிவிட்டாள்.
மூன்றுவருடமாகவே தன் ஒரேமகளுக்கு திருமணம் முடிக்க பணம் ஒரு தடங்கலாய்,அவருக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டேயிருந்தது. பொன் வைக்கும் இடத்தில்,பூ வைக்கலாம் என்றுதான் இருந்தார்.அதற்கும் இதுவரை வழியுண்டான படியில்லை.அதனாலேயே வரன்கள் தானாய் வந்ததுபோலவே, தட்டியும்போயிற்று.
“நான் என்னதான் பண்றது தர்மு,நம்ம கோவில் தர்மாகர்த்தா ஏதேனும் ஏற்பாடு பண்றேண்ணிருக்கார்.இந்த வருஷத்திலே காரியம் கைகூடிரும்னுதான் நெனக்கிறேன்..”

“ஆமா..முதல் வருஷம் விளைச்சல் சரியில்லேன்னு ஒன்னும் தர முடியாதுன்னார்.இரண்டாம் வருஷம் மனைவிக்கு ரோகம்வந்து இறந்து போயிட்டா,அடுத்த வருஷம் கும்பாபிஷேகத்திற்கு செலவு அதிகமாயிடுச்சுன்னு கைவிரிச்சார்.இப்படியே மூணு வருஷம் ஓடிடுச்சு..,நம்ம பொண்ணு காரியம் நமக்குதானே முக்கியம்.அவாளுக்கென்ன போச்சு..?”

“அப்படியில்லே தர்மு..இந்த வருஷம் கண்டிப்பா உதவறேன்னு வாக்கு கொடுத்திருக்கார்.”
“அதெப்படின்னா..பட்டணத்துக்கு வேலைக்குப் போன அவரோட பையன், வேற்றுஜாதிப் பொண்ணை காதலிச்சு,கல்யாணம் பண்ணிண்டான்.இனி அவருக்கு அந்தக்கவலையிலே,நம்மளை எங்கே நெனக்கப்போறார்..?”

“அவருக்கென்ன கவலை..அதான் மனசொத்துப் போயிட்டாங்களே..,நாளைக்கு சாயங்காலம் அஞ்சுமணிக்கு பட்டணத்திலிருந்து நேரா,மகன் மருமகளை அழைச்சுக்கிட்டு கோவிலுக்குத்தான் வர்றார்.அப்புறந்தான் அவரோட ஆத்துக்கு அழைச்சுட்டுப் போறார்.அதனால பூஜையெல்லாம் பலமா இருக்கணுமின்னு என்னன்ட சொல்லிட்டு போயிருக்கிறார்..”

“ஓஹோ..அதும் அப்படியா..?அப்படின்னா நாளைக்காவது கண்டிப்பா கேட்டுடுங்கோ..,சீக்கிரம் ஏற்பாடாயிடுத்துன்னா,சுப்புணி சொன்ன கிளார்க் பையனையே முடிச்சுருவோம்..”

“உம்..உம்..பேஷா கேட்டுர்றனே..”, மகள் படுத்திருந்த அறையின் கதவு திறந்திருந்தது போலும்.இப்போது சத்தமின்றி சாத்தும் முயற்சியில் மெல்லிய கிரீச்சொலி கேட்டது.‘அவள் திருமணத்தைப் பற்றிப்பேசிய பேச்சுக்களை எல்லாம்,இதுநேரம்வரை கேட்டுக்கொண்டிருந்தாளா..? பாவம்,காலாகாலத்தில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் கைகூடாமல் எதிர்பார்ப்பிலேயே காலத்தை தள்ளிக் கொண்டிருப்பதை நினைத்தால்,அவருக்கு மிகுந்த சங்கடமாயும்,துக்கமாயும் இருந்தது.
தர்மு,நிம்மதியாக தூங்கிப்போயிருந்தாள். ‘கவலையில்லாமலா..?’அவளுக்கும் கவலைகள் இருக்கும்.அதனால்தானே புத்திசாலித்தனமாய் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்ள,என்னையும் மீறி வழிசெய்து கொண்டாள்.கணவனின் சம்பாத்தியத்தை அனுசரித்து எதிர்காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டாளோ..,அவளுடைய பொறுப்பை அவள் சரியாக நிறைவேற்றிவிட்டாள். அந்த ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பார்த்துக்கொள்ள கணவன் இருக்கிறானே..,என்ற ஆறுதல் அவளுக்கு இருக்கும்.ஆனால் எனக்கு..? அந்த ஆண்டவன் விட்டவழி..’என்று எண்ணமிட்டவாறே உறங்கிப்போனார்.

இப்போதும் அதுபற்றித்தான் அவரது சிந்தனை சுழன்று கொண்டிருந்தது. ‘இன்று தர்மகர்த்தாவிற்க்கு நினைவூட்டும்படியான சந்தர்ப்பம் அமையுமா..?, இல்லாவிட்டாலும் அமைத்துக் கொள்ளவேண்டும்’என்று வேண்டிக் கொண்ட போதே,அவருடைய மகளின் முகம் நினைவில் ஒருகணம் மின்னியது. ‘இந்த தைமாதம் வந்தால் அவளுக்கு இருபத்திநாலு வயது முடிந்துவிடும்.என்னை மன்னிச்சுக்கம்மா..ஒரு தகப்பனா இருந்து என்னோட கடமையை இதுநாள்வரை நிறைவேத்தாமலிருக்கிறது தப்புதான்.’இந்த ஒரு எண்ணம்தான் யாரிடமும் உதவியைக் கேட்டுப்பெறாத சாமிநாதய்யரை,தர்மகர்த்தாவிடம் கையேந்தச் சொன்னது.அதுவும் கடனாகத்தான்.எப்படியாவது தன்வருமானத்திலிருந்தே தவணையாக கட்டி முடித்துவிடுவதாகவும் வாக்கு கொடுத்திருக்கிறார்.

கட்டிக்கொண்டிருந்த மாலையின் இருபக்கத் திண்டுகளும் சுற்றிமுடிந்தது.குஞ்சம் மட்டும்தான் பாக்கி.கோவிலின் பிரகாரத்தில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.மணி நான்கு.இன்னும் ஒருமணிநேரத்தில் அவர்கள் வந்துவிடுவார்கள். பத்துநிமிடத்தில் மாலையைக் கட்டி முடித்துவிட்டு,சுவாமிக்கு அலங்காரம் தொடங்கவேண்டும்.

அரைமணிநேரத்தில் அலங்காரம் முடிந்தது.தனது கைவேலையினை ரசிக்கும் பொருட்டு,சற்றே தள்ளிநின்று சுவாமியைப் பார்த்தார்.அவரைப் பாராட்டும்படியாக கோபாலகிருஷ்ணன் சிரித்துக் கொண்டிருந்தான். மார்கழி மாதங்களில், கட்டளைப்படி வேண்டுதல் செய்பவர்கள் கொண்டுவரும் மாலைகள், துணிகள், எலுமிச்சை,துளசி போன்றவற்றை வைத்தே சாமிநாதய்யர் செய்யும் அலங்காரத்தை ரசிப்பதற்காகவே,அந்த அதிகாலையில் கிருஷ்ணனை சேவிக்க வரும் பக்தர்கூட்டம் அதிகமாயிருக்கும்.

தர்மகர்த்தா வரும்போது எல்லாம் திருப்திகரமாய் இருக்கவேண்டும் என்று எண்ணியபடியே,பூஜைக்குரியவற்றை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு, கருவறையைவிட்டு வெளியே வந்தவர் ஒருகணம் துணுக்குற்றார்.
கோவிலின் வெளிவாசற்படியின்மேல் தலைவைத்து குப்புறக் கிடந்தது ஒரு உருவம். ‘யாரேனும் குடித்துவிட்டு வந்து,கோவில் என்று அறியாமல் படுத்திருக்கிறார்களா..? யாராயினும் எழுந்து போகச் சொல்லவேண்டும்’ என்று நினைத்து வெளியே வரும்போது,அந்த உருவத்தின் கைகளும்,கால்களும் இருந்த நிலையைப் பார்க்கையில் விழுந்துகிடந்ததைப் போலிருந்தது.
ஆமாம்,விழுந்துதான் கிடந்தது.செருப்பில்லாத கால்களைப் பரப்பிக்கொண்டு, இடதுகை புரண்டு கிடந்ததில் உள்ளங்கை வானத்தைப் பார்த்தபடி,வலதுகை தலைக்குமேல் நீண்டு கிடந்தது.மேல் சட்டையில்லாமல் இடுப்பிலே பழுப்புநிறமாய் ஒருவேட்டி,கருத்தமேனியெங்கும் முதுமை வரைந்த சுருக்கங்கள்..
‘மயக்கமா..,இல்லை..’ அருகில்வந்து நாசியருகே கைநீட்டிப்பார்த்தார்.‘அப்பா.. மூச்சு வருகிறது.அட இதென்ன முகம்முழுக்க சிவப்பாய்,திட்டுத்திட்டாய்
இரத்தமா..?.ஐயோ..வாசலின் நீளக் கல்படியின் விளிம்பில் தலைமோதிவிட்டது போலும்..’ சாமிநாதய்யர் பதட்டத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தார். ‘இவனுக்கு முதலுதவி செய்யவேண்டுமே..ஒத்தாசைக்கு ஒரு ஆளையும் காணோமே,இது என்ன சோதனை..?’
‘இன்னும் சற்றுநேரத்தில் அவர்கள் வந்துவிடுவார்களே..,வரும்போது கோவிலின் முன்பாக இவன் இப்படிக்கிடந்தால்..அபசகுனமாய் நினைப்பர்களே.., அவர்கள் வருவதற்குள் மயக்கம் தெளிவித்து அனுப்பிவிடவேண்டும்.’

உள்ளே ஓடிச்சென்று ஒருசெம்பில் நீர் எடுத்துவந்தார்.இரண்டுமுறை முகம்நோக்கி தண்ணீர் தெளித்த பின்பு அந்த முகத்தில் லேசான அசைவு தெரிந்தது.
ஈரமாய் இருந்த இரத்தத்திட்டுக்கள் நீரினால் கலைந்தபின்பு முகம் நன்றாக அடையாளம் தெரிந்தது. ‘இது..இது..கோவிலுக்கு முறைவாசல் செய்யவரும் மாராக்கிழவியின் சகோதரனல்லவா..? இவனுக்கு புத்திசுவாதீனமும் கிடையாதே. சேரிப்பக்கமிருந்து ஊரைச்சுற்றிக் கொண்டு இங்கே எப்படி வந்தான்..? ஊரின் பார்வையில் பட்டால் விபரீதமாகிவிடுமே..!’

ஆலயப் பிரவேசம் என்பது எங்கெங்கோ நடந்ததென்று செய்தி ஒரு காலத்தில் வந்ததென்றாலும்,இந்த ஊரைப்பொறுத்தமட்டில்,இரத்தத்த்pல் ஊறியிருந்த அடிமைத்தனத்தில்,சேரியின் வம்சாவளிகள்,தம் எஜமானர்களுக்கு சமதையாய், கோவிலின் உள்ளே வந்து சாமி கும்பிடுவதை,அவர்களுக்கு செய்யும் துரோகமாகவே நினைத்தார்கள்.எப்போதோ ஒருவன் கோவிலுக்குள் வந்ததற்காய், இப்போது இருக்கும் தர்மகர்த்தாவின் தந்தை, ஊர்ப்பஞ்சாயத்தில், அவனின் குடும்பத்திற்கு தண்டணையளித்து, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவராம்.

“தண்ணீ..தண்ணீ..” குப்புறக்கிடந்த கிழவனிடமிருந்து லேசான முனகல் வெளிப்பட்டது.
‘இவனுக்கு எப்படி தண்ணீர் புகட்டமுடியும்..?’ஒரு விநாடி யோசித்தார்.கிழவனின் அருகே படிக்கட்டில் அமர்ந்து அவனைப்புரட்டினார்.வயிறு ஒட்டிக்கிடந்தது. ‘சாப்பிட்டு எத்தனை நாளாயிற்றோ..?’அவன் தலையைத் தூக்கி தன்மடியில் இருத்திக் கொண்டார்.செம்பிலிருந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்ட ஆரம்பித்தார்.அவன் நிதானமாக குடிக்க தொடங்கினான்.அப்போதுதான் கோவிலின் முன்பாக அந்தக் கார் வந்து நின்றது.

பின் சீட்டிலிருந்து தர்மகர்த்தாவின் மகனும்,மருமகளும் இறங்கினர்.அவள் உடுத்தியிருந்த பட்டுச்சேலையும்,வெட்டியிருந்த பாப்தலையும்,உதட்டில் தீட்டியிருந்த சிவப்புச்சாயமும் ஒன்றுக்கொன்று பொருந்தாமலிருந்தது.இயற்கையாய் இருந்த முகஅழகை முடிந்தவரை கோரப்படுத்தியிருந்தாள்.பார்வையில் பட்ட சகலத்தின் மீதும் ஒரு அலட்சியம் இருந்தது.அவள் கணவன் அவளுக்கு பின்னால் நின்றுகொண்டான்.
முன்சீட்டிலிருந்து இறங்கிவந்த தர்மகர்த்தா,சாமிநாதய்யரைப் பார்த்ததும் அதிர்ச்சியானார். “அய்யரே..என்ன இது..?.” காட்டுக்கத்தலாய் அவர் வீசிய கேள்வியால் கலைந்து கோபுரத்திலிருந்த புறாக்கள் சில வானத்தில் எழும்பியது.

கிழவன் இன்னும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான்.சாமிநாதய்யர் எழுந்திருக்கவில்லை.நிமிர்;ந்துபார்த்தார்.

எப்போதும் தன்னிடம் பணிவும்,மரியாதையும் காட்டுபவர்,பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது,தர்மகர்த்தாவிற்கு உள்ளம் கொதித்தது. தங்களுடைய பாரம்பரிய கௌரவம் காயப்படுத்தப்பட்டதுபோல உணர்ந்தார். அவருடைய மருமகள் “சே..நாஸ்டி..”என்று வாய்விட்டு முனகியதைக் கேட்டபோது அவருக்கு அவமானமாய் இருந்தது.

“வாங்கோ..!” அய்யரின் வரவேற்பில் சந்தோஷமில்லை. வருத்தமுமில்லை. அம்மாசிக்கிழவனை நிமிர்த்தி சுவரோரமாய் சாய்த்து உட்கார வைத்துவிட்டு எழுந்து நின்றார்.“புத்திசுவாதீனமில்லாதவர்.எப்படியோ வழிதவறி,பசி மயக்கத்தோடு இங்கே வந்து விழுந்துட்டார்.தலையிலே வேறு காயம் பட்டுடுச்சு.அதான் கொஞ்சம் ஜலம் குடிக்கவெச்சேன்.யாராவது வந்தா சொல்லியனுப்பி,இவரைக்கூட்டிண்டு போகச்சொல்லலாம்..”

“நிறுத்தும்யா..ஆசாரமில்லாத வேலையைச் செஞ்சுட்டு காரணம் வேற சொல்றீராக்கும்..யாரோ எக்கேடோ கெட்டுப்போகட்டும்..உமக்கென்ன.., உம்வேலையை நீர் பாக்கறதுக்கென்ன..?”

அய்யர் “நம் கண்முன்னாடி ஒருத்தர் கிடக்கும்போது உதவி செய்யலேன்னா..”, தர்மகர்த்தா குறுக்கிட்டார், “ஆமா..அதுக்குத்தான் எங்க பாட்டன் கட்டிவெச்ச இந்தக்கோவிலில் உம்மை வெச்சிருக்கமா..? பூஜை செய்றது மட்டும்தான் உம்மவேலை.அதுக்குத்தான் சம்பளமும்..” அவரது பேச்சில் எச்சிலோடு ஆணவமும் தெரித்தது.

“மனுஷனுக்கு,மனுஷன் உதவிசெய்யறதிலே என்ன தப்பு..?ஆபத்துக்கு உதவுறதிலே நான் அந்தஸ்தோ,கௌரவமோ பிரதிபலனோ பாக்கறதில்லே..” அய்யரின் வார்த்தைகளில் இருந்த நிதானம்,தொடர்ந்து அவருடைய மருமகளை ஒருநொடி பார்த்துவிட்டு,தன்னைப் பார்த்தது தர்மகர்த்தாவை இன்னும் கோபப்படுத்தியது. ‘பார்வையாலேயே தன்னைக் குத்திக்காட்டுகிறாரோ..?’
“நீர் மனுஷனாய்யா..? ஏற்கனவே ரெண்டு ஊர்லே இப்படித்தான் ஊர்க்கட்டுப்பாட்டை மதிக்காமே,உம்ம மூக்கை நுழைச்சுத்தானே வேலையைத் தொலைச்சீரு..ரெண்டு தடவை பட்டும் உமக்கு புத்தி வரவேண்டாமா..? இப்படி ஆசாரம் மறந்துட்டு கீழ்சாதிலே பொறந்தவனைத் தொட்டுத் தூக்கலாமா..?, தர்மகர்த்தா நாக்கிலே சூட்டுக்கோலை வைத்துக்கொண்டு,சுரீர்,சுரீர் என்று இழுத்தார்.
“அய்யா..மனுஷங்கள்ளே நல்லவன் கெட்டவன்னு ரெண்டு ஜாதியைத்தான் நான் பார்க்கிறேன்.இரண்டு வருஷமா சித்தம் கலங்கிப் போயிருக்கிற இவரும், குழந்தை மாதிரிதான்.குழந்தையும் தெய்வமும் ஒண்ணுண்னு பெரியவங்க சொல்லியிருக்கச்சே,இவருக்கு செய்யற உதவி,அந்த ஆண்டவனுக்கு செய்யற சிசுருக்ஷை மாதிரிதான்.அதுலே நான் பேதம் பிரிச்சு பாக்கவிரும்பலை..” சாமிநாதய்யரின் குரல் அழுத்தந்திருத்தமாக ஒலித்தது.

தர்மகர்த்தாவின் மருமகள் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவள்,தன் கணவனின் காதருகே சென்று கிசுகிசுத்தாள்.அவன் வாயைத் திறந்தான். “அப்பா..கீழ்ஜாதிங்கிற விஷயத்திற்காக,நீங்க இன்னைக்கு அவரைக் கண்டிக்கிறீங்க..நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சினைன்னா வேற ஜாதிங்கி றதுக்காக எங்களையும் குத்திக்காட்ட தயங்கமாட்டீங்கன்னு நாங்க அபிப்ராயப் படறோம்.அதனாலே நாங்க இத்தனை நாள் இருந்த மாதிரியே டவுன்லேயே குடியிருந்துக்கிறோம்.உங்களுக்கு விருப்பமானா,வந்து போயிட்டு இருங்க..” என்றவன் மனைவியிடம் “வா..ரோஸி, போகலாம்” என்று கூறியபடி திரும்பி நடக்கத்துவங்கினான்.

தர்மகர்த்தா,தன் பாசமகனிடமிருந்து இப்படியொரு கோணத்தில் தாக்குதல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.அவருக்கு தமது ஜாதிப்பெருமையை விட்டுக் கொடுப்பதா..?,மகனுக்காகப் பார்ப்பதா..?, சிலவிநாடிகள் யோசித்தார், ‘மகனும் மருமகளுமாய் இரண்டு உயர்ஜாதியிலே உண்டான சம்பந்தமும்,அய்யருக்கும் இந்தக்கிழவனுக்கும் உண்டான சம்பந்தமும் ஒன்றா..?’ அவரால் பின்னதை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தார்.யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.’நல்லவேளை உறவுகளையெல்லாம் வீட்டுக்கு வரச்சொன்னோம்.சரி தற்போதைக்கு சற்று விட்டுக்கொடுப்போம்.பின்னாளில் சொத்துக்கு வாரிசாக வரவேண்டுமெனில்,அந்தப்பெண்ணையும் நம் ஜாதிக்கே மாறச் சொல்ல வேண்டியதுதான்’என்று எண்ணமிட்டவாறே,“நில்லுடா..இப்ப ஒண்ணும் குடி முழகிப்போயிடலை.உன் சந்தோஷம்தான் என் சந்தோஷமும்” என்றவர் அய்யரைப் பார்த்து,அதிகாரத்தோரணையுடன்,“சரி..சரி..இந்தத்தடவை மன்னிச்சுர்றேன்.சீக்கிரம்போயி குளிச்சுட்டு வந்து பூஜையை ஆரம்பியும்.நாங்க பத்துநிமிஷம் காத்திருக்கோம்..”என்று மகனையும்,மருமகளையும் பார்த்தார்.
அவர்களும் ஆமோதித்து தலையாட்டினர்.ஆனால் சாமிநாதய்யர் நகரவில்லை. மூவரும் அவரையே கேள்வியுடன் பார்க்க,அவர் நிதானமாய் சொன்னார்.
“மனுஷ ஸ்நேகம் இருக்கிற இடத்திலேதான் ஆண்டவன் இருப்பான்கிறது என்னோட நம்பிக்கை.அது இல்லாத இடத்திலே ஆயிரம் கோவில்கள் இருந்தாலும்,அங்கே வெறும் சிலைகள்தான் இருக்குமேயொழிய,கடவுள் அருள் இருக்காது.இனிமே இந்த விக்ரகத்தை ஆண்டவனா நினைச்சு என்னாலே பூஜையும் பண்ணமுடியாது. மன்னியுங்கோ..”கிழவனை எழுப்பி,கைத்தாங்கலாய் அணைத்தபடி,சேரியை நோக்கிநடந்தார் சாமிநாதய்யர்.
“அய்யா..உம்ம பேரென்ன..?” சாமிநாதய்யரின் கேள்விக்கு,அந்தக் கிழவன் “கோபால கிருஷ்ணன்” என்று மெல்லியகுரலில் முனகியது மற்றயாருக்கும் கேட்காமலே போயிற்று.


பொள்ளாச்சி அபி

இன்னுமொரு கண்ணி..!

வரதராஜனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் கனவில்கூட நினைத்துப் பார்த்திராத அந்தச் செய்தியை பாலகிருஷ்ணன் சொன்னபோது,பக்கத்தில் குண்டு விழுந்தாற்போல சர்வாங்கமும் நடுங்கியது. ‘இந்தச் செய்தி பொய்யாய் இருக்கக்கூடாதா..?’
பத்துநிமிடத்திற்கு முன்,எப்போதும் போல ஆபீஸ் முடிந்து வந்து கொண்டிருந்தார் வரது.வீட்டுக்குள் நுழையும் சமயம் “டேய் வரது..” பாலகிருஷ்ணன் அழைத்தார். இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள்.நடுவே நாலடி உயர காம்பவுண்ட் சுவர் வீடுகளைப் பிரித்ததே தவிர,இருபது வருட நட்பு பிரியாமலே இருந்தது.
“ஒரு அஞ்சு நிமிஷம் உள்ளே வந்துட்டுபோ..”
“ என்னப்பா அவ்வளவு அவசரம்..? “என்று கேட்டபடியே திரும்பி வந்தார் வரது.பாலு வீட்டில் சந்தடி எதுவும் இல்லாததுகண்டு எங்கே தங்கச்சி எல்லாம் யாரையும் காணோம்..?.
“சொந்தத்துலே ஒரு கல்யாணம்.மதியமே எல்லோரும் திருச்சிக்கு போயாச்சு..”
“நீ போகலியா..?”
“உன்னைப்பாத்து ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்தான் அவங்ககூட நான் போகலை..”
வரதுக்கு ஆச்சரியம். “நீ இப்படி உட்காரப்பா..” என்று வரதுவை சோபாவில் இருத்தியபடியே பாலு சொன்னார், “ நான் சொல்றதை கொஞ்சம் பதட்டப்படாமே கேளு.நேத்து நான் கோயமுத்தூர் போயிட்டு,ராத்திரி பத்துமணிக்கு மேலே திரும்பி வரப்போ,நம்ம வீதிமுனையிலே அந்த பச்சைவீடு இருக்கில்லே..”
‘அது சுந்தரியின் வீடாயிற்றே..அவளுக்கு விபச்சாரம்தான் தொழில் என்று எல்லோருக்கும் தெரியுமே அதை ஏன் பாலு குறிப்பிடவேண்டும்..?’
“ஆமா..சொல்லு..”
“அந்த வீட்டுக்குள்ளே இருந்து நம்ம கணேசன் வெளியிலே வர்றதைப் பார்த்தேம்ப்பா..,வந்து,அப்படி மெயின்ரோடுக்கு திரும்பிப் போனான்..”
வரது நடுங்கிப்போனார்.பதட்டத்துடன் வார்த்தைகள் தந்தியடித்தன. “கணேசனா..?..அவன்தானா..? நல்லாப்பாத்தியா..? இருக்காதுப்பா..”
பாலு,வரதுவின் கைகளை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டார்.“எனக்கும் அப்படித்தாம்பா சந்தேகமா இருந்தது.ஆனா இவன் பொறந்ததுலேருந்து இந்தப் பதினேழு வருஷமா நான் பார்க்க வளர்ந்தவனாச்சே..எனக்கு அடையாளம் தெரியாம போயிடுமா..?”

உண்மைதான்..இருபது வருடங்களாகத் தொடரும் நட்பில்,இருவருடைய குடும்பங்களும் எல்லா சுக துக்கங்களிலும் பங்கெடுத்துக்கொண்டு,தனக்கு வந்ததுபோல் மகிழ்ந்து,வருந்தி, அக்கறை செலுத்தி..,பாலு சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்.

கணேசன்,வரதுவின் ஒரே மகன்.இந்த வருடம் ப்ளஸ் டூ.வீட்டில் அவன் எதுகேட்டாலும் வாங்கித் தருவார் என்றாலும்,அடிக்கடி அதுவேணும், இது வேணும் என்று கேட்காத பிள்ளை.பாக்கெட் மணிகூட அவராக ஞாபகம் வைத்துக்கொண்டு கொடுத்தால்தான் வாங்கிக்கொள்வான்.அம்மாவின் கைவேலையிலும் வலியச்சென்று உதவும் குணம்.வரது பெருமைப்படும்படி பல குணங்களை அவனிடம் கண்டிருந்தாலும்,அவனும் சிறுமைப்பட்டு, தங்களையும் சிறுமைப்படுத்தியதை,இப்போதுதான் கேள்விப்படுகிறார்.
துக்கத்தையும் மீறி அவருக்குள் சுறுசுறுவென கோபம் கூடுகிறது.‘தன் மகன் ஒரு விபச்சாரி வீட்டுக்கு போனான் என்று தெரிந்தால்,லட்சுமியின் மனசு என்ன பாடுபடும்.. அவன் இன்னும் சின்னப்பையன் என்று,அவன் எழுதும்போது சோறு பிசைந்து ஊட்டுகிறாளே..!’
‘வாழும் காலத்திலேயே அனுபவிக்கும் நரகம் என்று எய்ட்ஸ் நோய் பற்றி,நாடெல்லாம் பிரச்சாரம் நடக்கிறது.அதைப்போல இவனும் நோயில் வீழ்ந்தால்..’அதற்கு மேல் வரதுவால் சிந்திக்க முடியவில்லை. ஆத்திரம்,கோபம் என்று கலவையான உணர்ச்சிகளில் தத்தளித்தவராய்,பாலுவின் கையை இறுகப்பற்றிக் கொண்டார்.
“இதோ பார் வரது..நீ ஆத்திரப்பட்டோ,கோபப்பட்டோ வீட்டில்போய் எதுவும் கலாட்டா பண்ணிராதே..,டீன்ஏஜ்ங்கிறது கண்ணாடிப்பாத்திரம் மாதிரி, பக்குவமாத்தான் கையாளனும்.நீ பல்லைக் கடிச்சுகிட்டு இன்னும் மூணுநாள் பொறுத்துக்க..நான் ஊருலேருந்து வந்தவுடனே அவன்கிட்டே பக்குவமா பேசி திருத்திக்கலாம்..அப்படியே நமக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்டேயும் செக்கப் பண்ணிரலாம்.நீ மட்டும் எப்பவும் போல இரு.வீணா தங்கச்சிய கலவரப்படுத்திராதே.தைரியமா இரு. நான் பாத்துக்கிறேன்..”

வரது, தளர்வுடன் தனது வீட்டுப்படி ஏறும்போது,குழந்தைகள் படிக்கும் சத்தம் கேட்டது.படியேறியதும் இடதுபுறம் ஒரு அறை. சென்ற வருடம்வரை அது வரதுவின் தகப்பனாருடைய அறையாக இருந்தது.அவர் காலமானபின் அது கணேசனுடைய அறையாக மாறிவிட்டது.எந்த நேரமும் படிக்க,எழுத வசதியாக இருக்கும்பொருட்டு,வரது செய்த ஏற்பாடுதான் அது. குடும்பம் புழங்கும் அறைகளிலிருந்து தனித்து வெளியே இருந்ததுதான் கணேசனுக்கு வசதியாய் போயிற்றோ..? தனது தலையில் தானே மண்வாரிப் போட்டுக் கொண்ட அசூயை.
கணேசனின் அறைக்குள் பார்வையைச் செலுத்தியபடியே நேராகச் சென்று ஹாலினுள் அமர்ந்தார்.கணேசன்,பக்கத்துவீட்டு சேதுராமனின் குழந்தைகளுக்கு கணக்கும்,ஆங்கிலமும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தான்.பரீட்சை சமயமானால் அவனுடைய அறையில் நிறையக் கழுந்தைகள் கூடிவிடும். எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டு,ஏழு மணிக்குமேல் அவனுடைய பாடங்களைத் தொடர்வான்.’பகல் முழுக்க இப்படி இருந்துவிட்டு,இரவில் அப்படியா..? அதுவும் பதினேழு வயதில்..? இப்படி மாற எண்ண காரணம்..? சினிமா,டீவி, பத்திரிகை என்று சகலத்திலும் பிரதிபலிக்கும் கட்டுப்பாடின்றி வளர்ந்துவரும் நாகரீக சீர்கேடுகளின் பாதிப்பா..?.’

கிச்சனிலிருந்து எட்டிப்பார்த்த லட்சுமி,“அட என்னங்க..,அமைதியா வந்து உட்கார்ந்துட்டீங்க..?” என்று கேட்டுக் கொண்டே வந்தவள்,அவர் முகத்தைப் பார்த்தவுடன் கவலையானாள். “ஏங்க உடம்பு சரியில்லையா…? என்னாச்சு.., வருத்தமா இருக்காப்போல இருக்கே…”

‘தாங்குவாளா..? தன் மகன் ஒரு விபச்சாரி வீட்டுக்கு போனான் என்று தெரிந்தால் இவளால் ஜீரணிக்க முடியுமா..? தனது வளர்ப்பில் ஏதோ குறையென்று மறுகிப் போவாளே..,பின் மீண்டும் அவளிடம் அந்தத் தாய்மைப் பரிவு தோன்றுமா..,மான அவமானத்திற்கு அஞ்சும்,இரக்கம் மிகுந்த,அதிர்ந்து பேசாத,ஒரு குறையும் சொல்ல முடியாதவாறு குடும்பத்தை நடத்தும் பொறுப்பு மிக்க மனைவி,ஒட்ட வைக்க முடியாதவாறு மனம் உடைந்து போவாளே..,பாலு சொன்னபடி இவளைக் கலவரப்படுத்தக் கூடாது..நாமே அந்த தறுதலையைக் கவனித்துக் கொள்ளவேண்டும்..’
“தலை வலிக்கிற மாதிரி இருக்கு லட்சுமி..”
ப்ளாஸ்க்கிலிருந்து காபி ஊற்றிக் கொண்டு,கூடவே ஒரு மாத்திரையையும் கொண்டு வந்த லட்சுமி,இந்தாங்க சாப்பிட்டுட்டு பேசாம படுத்துக்கங்க, அப்புறம் டிபன் பண்ணிட்டு எழுப்புறேன்.அதுவரைக்கும் நல்லா ரெஸ்ட் எடுங்க,..”

வரதுவுக்கும் அப்போது சற்றுநேரம் இடையூறு இல்லாத தனிமை தேவையாய் இருந்தது.

இரவு ஒன்பது மணிக்கு படுக்கை அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்த லட்சுமி,கூரையை அண்ணாந்து பார்த்தபடி,வரது ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.“தலைவலி பரவாயில்லையா.,டிபன் சாப்பிட வரீங்களா..?”
“வர்றேன்.கணேசன் சாப்பிட்டானா..?”
“அவன் சாப்பிட்டுட்டு,படுக்கப் போயிட்டான்..”
‘காலையில் அவனைக் கூப்பிட்டு நாமே பேசலாமா..? கோபம் காட்டாமல்
ஆத்திரப்படாமல்,அவன் தப்பை உணர்கிற மாதிரி நம்மால் புத்தி சொல்லமுடியுமா..? பாலு சொன்னதைப் போல,பக்குவமாய்க் கையாள முடியுமா..? வீட்டிலே பேசினால்,லட்சுமிக்குத் தெரியாமல் எப்படிப் பேச..?..’கேள்வியின் கொக்கிகளில் மாட்டிக் கொண்டு அவர் கொட்டக் கொட்ட விழித்திருந்தபோது,சுவர்க் கடிகாரம் பதினொரு முறை அடித்து ஓய்ந்தது.
சில விநாடிகளில் கணேசனின் அறைக்கதவு திறக்கும் சப்தம் மெலிதாகக் கேட்டது.
வரதுவுக்கு பதட்டம் கூடியது.கணேசா என்று சப்தமாகக் கூப்பிட எத்தனித்தவர், லட்சுமியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கண்டு,குரலை அப்படியே விழுங்கிக் கொண்டார்.அவசரமாய் எழுந்து பெட்ரூம்,ஹால் என அறைக்கதவுகளைத் திறந்து கொண்டு வருவதற்குள் கணேசன் வெளியே போய்விட்டிருந்தான்.
ஓடிவந்து காம்பவுண்ட் கேட் திறந்து தெருவில் இறங்கி அவன் போன திசையைப் பார்த்தார்.ஆள் நடமாட்டமற்ற அந்த வீதியில்,தூரத்தே இன்னாரு பையன் சைக்கிள் ஓட்ட,பின்னே அமர்ந்திருந்த கணேசனின் நீலச்சட்டை தெருவிளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது.

‘கூப்பிட்டால் அவனுக்கு கேட்கும்தான்..ஆனால் இந்த இரவின் அமைதியில் அது பலருடைய கவனத்தையும் ஈர்க்குமே..’ வரது தவித்தார்.இன்றும் அவன் இவ்வாறு வெளியே போவான் என்று எதிர்பார்க்காத தனது மடமையை நொந்து கொண்டு,நிமிடத்தில் ஏமாந்து போனதை எண்ணி,அவருக்கு தன்மீதே ஆத்திரம் பொங்கியது.அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே கணேசன் சென்ற சைக்கிள், சுந்தரியின் வீட்டைக் கடந்து பொள்ளாச்சி கோவை மெயின்ரோடை நோக்கித் திரும்பியது.
‘சுந்தரியின் வீட்டுக்குள் அவர்கள் இறங்கியவுடன் ஓடிச்சென்று கையும் களவுமாகப் பிடித்துவிட வேண்டும்’என்று காத்திருந்த வரது குழம்பிப்போனார். ‘எங்கே போகிறார்கள்..? வேறு எங்கேயேனும் வாடிக்கையா.?’ குழப்பத்துடனே உள்ளே ஓடி,சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு,வெளியே வந்து கதவுகளைச் சாத்தி செருப்பை மாட்டியவர்,கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாக நடந்து தெருமுனையை எட்டினார்.

பொள்ளாச்சி கோவை ரோடு இரவுநேர டிபன்ஸ்டால்களால் சந்தடியாய் இருந்தது.லாரிகளும்,டிரக்குகளும் போகும் திசை பார்த்து வரிசை வரிசையாக நின்று கொண்டிருந்தன.டிரைவர்கள்,கிளீனர்களால் டிபன்ஸ்டால்களும், பெட்டிக்கடைகளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. துரைஸ் தியேட்டரில் புதுப்பட ரிலீஸ{க்காக,ரசிகர்கள் தங்கள் நாயகனுக்கு கட்அவுட்டுகளும்,தோரணங்களும் கட்டிக்கொண்டிருந்தனர். வரது,கணேசனைத் தேடி,கண்களால் நெடுகத் துழாவியபடி நடந்து கொண்டிருந்தார்.

சாந்தி தியேட்டர் வாசலுக்கு நேராய் நின்றிருந்த லாரிக்கருகில்,தோளில் ஒரு ஜோல்னாப் பையுடன் கணேசன்,யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
காக்கிச் சட்டையும் கைலியுமாக இருந்த அவன் முதலில் டிரைவர் சீட்டில் ஏறி அமர,கணேசன் லாரியை முன்புறமாகச் சுற்றிக்கொண்டு,இடதுபுறமாக ஏறிக்கொண்டவுடன்,லாரி புறப்பட்ட ஓசையில்,“கணேசா..கணேசா..”என்று கூப்பிட்டுக் கொண்டே வந்த வரதுவின் குரல் அமுங்கிவிட்டது.லாரி உடுமலை சாலையில் திரும்பி மறைந்தே விட்டது.
வரது செய்வதறியாமல் திகைத்தார்.‘என்ன நடக்கிறது..கணேசன் எங்கே போகிறான்..? தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளை என நட்புக்காட்டியதால், வீட்டைப்பற்றிய பயமே இல்லையா..? இந்நேரத்தில் லாரியில் ஏறிப் போகிறானே..,இவனுடைய சகவாசங்களே சரியில்லையே..பிஞ்சிலேயே பழுத்துவிட்டானா.. எப்படித் திரும்பி வருவான்..நாளை இவனுடைய எதிர்காலம் என்னாவது..எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா.?,’
“என்ன சார்.. உடுமலை வர்றீங்களா..?” யாரோ ஒரு கிளீனர் இன்னொரு லாரியிலிருந்து எட்டிப்பார்த்துக் கேட்டான்.ஒரு கைவீச்சில் மறுத்துவிட்டு,வீட்டைப் பார்த்து நடந்தார் வரது. ‘அவன் வீட்டிற்கு வரட்டும்..அவன் கழுத்தை திருகி வீசிவிட்டுத்தான் மறுவேலை..’அவருக்குள் பொங்கிய ஆத்திரத்தால் தாறுமாறாக யோசித்துக் கொண்டே வீடுவந்து சேர்ந்தார்.
படுக்கையில் உட்கார்ந்தபடியே காத்திருந்தார்.மணி பனிரெண்டு.., பனிரெண்டரை..ஒன்றரை...,கணேசன் வரவேயில்லை.ஆயாசப்பட்ட மனதுடன், அவனைத் தேடிச் சென்ற களைப்பும் சேர வரது உறங்கிப்போனார்.

அவர் கண்விழித்தபோது,காலை ஒன்பது மணி.எழுந்து அறைக்கு வெளியே வந்தபோது..லட்சுமி எதிர்ப்பட்டாள். “என்னங்க இவ்வளவு நேரம் தூங்கிட்டீங்க.. இன்று ஞாயிற்றுக்கிழமை ஆபீஸ் லீவுதானேன்னுதான் உங்களை எழுப்பலே..பல் தேய்ச்சுட்டு வாங்க காபி தர்றேன்..”என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தாள்.
“லட்சுமி...கணேசன் எங்கே..?”
“மளிகைக் கடைக்கு அனுப்பியிருக்கேன்.இப்ப வந்திடுவான்.”
பையன் வீட்டிற்கு வந்துவிட்டிருக்கிறான் என்பதில் அவருக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.இரவு அவருக்கு இருந்த ஆத்திரமும்,கோபமும் உறங்கி எழுந்ததில் சற்று சமனப்பட்டிருந்தது.‘நாளை பாலு வந்து விடுவான்.அவன் எப்படியும் கணேசனைத் திருத்திவிடுவான்.அதுவரை இந்தப்பயல் வெளியே எங்கேயும் போகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.ஆனால் ஒரு முறை உடலுறவு கொண்டாலே எய்ட்ஸ் கிருமிகள் தொற்றிக் கொள்ளுமாமே..இவன் நிலை எப்படியோ..ஆரம்பக்கட்டமாயிருந்தாலும் குணப்படுத்த முடியுமா..?’ கேள்விகள்..கேள்விகள்..நேற்றிலிருந்து‘தகப்பன் மனதை’அறுத்துக் கொண்டிருந்தது.‘ஆனாலும் என்ன செய்ய முடியும்..கடந்து போன ஒரு நொடியைக்கூட,கைப்பற்ற முடியாத மனிதனுக்கு,நடந்து போன சம்பவத்தை இல்லையென்று ஆக்கமுடியுமா..? இனி விதிவிட்ட வழிதான்..’
லட்சுமி,காபியை வரதுவின் கையில் கொடுத்துவிட்டு,“இன்னைக்கு பிரதோஷம்..நான் ஐயப்பன் கோவிலுக்குப் போயிட்டு வந்துடறேன்..”என்றபடியே படியிறங்கிப் போனாள்.அவள் சென்ற சில நொடிகளில் கணேசன்னா..என்று அழைத்துக் கொண்டே சேதுராமனின் மகன் முரளி வந்தான்.காபி குடித்துக் கொண்டிருந்த வரதுவைப் பார்த்து, “மாமா..என்னோட ரூல் பென்சில் அண்ணாகிட்டே கொடுத்தேன்.இப்ப வேணுமே..”
“வா..எடுத்துத் தர்றேன்..”அவனைக் கூட்டிக்கொண்டு,கணேசனின் அறைக்குள் நுழைந்தார். “இதோ..இதுதான்..”என்று மேசையின் மீது கிடந்த பென்சிலை எடுத்துக் கொண்டு ஓடினான் முரளி.வரது சில விநாடிகள் அறைக்குள்ளேயே நின்றார்.ரேக்கில் ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள்.சுத்தமாய் துடைக்கப்பட்ட மேசை,நாற்காலி,சாமிப்படங்கள்..,அசட்டையாக விடப்பட்டது என சொல்ல எந்தக்குறையுமே தென்படவில்லை. ‘இவ்வளவு சுத்தமாய் தனது இடத்தை வைத்துக்கொள்ளத் தெரிந்த கணேசனுக்கு,தனது உடல் மீது மட்டும் அக்கறையில்லாமல்,எப்படி அந்த அறுவெறுப்பான புதைகுழிக்குள் சென்றுவிழும் ஈனப்புத்தி எங்கிருந்து வந்தது..’ வெறுப்பாய் முனகிக் கொண்டே, அறையிலிருந்து வெளியேறத் திரும்பியவரின் கண்களில் திறந்திருந்த கதவின் ஓரம்,சுவரை ஒட்டி,ஒரு சிறிய துணித் துணுக்குத் தெரிய,சட்டென்று கதவை விலக்கிப் பார்த்தார்.அங்கே ஒரு ஜோல்னாப் பை தொங்கிக் கொண்டிருந்தது. அது நேற்று இரவு கணேசனின் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையேதான்.‘இதை எதற்கு ரகசியமாய் கதவின் பின்புறம் மறைத்து வைத்திருக் கிறான்.இதயம் வேகமாய்த் துடித்தது.அவனது இரவுநேரத் தேவைக்காக ரகசிய வியாபாரமா..? போதைவஸ்துக்கள் ஏதேனும் மறைத்துவைத்திருக்கிறானா..’அந்த நினைப்பே உடம்பை நடுங்கச் செய்தது.பதட்டத்துடன் பையை கையில் எடுத்தார்.

வாசற்படியில் கணேசன் ஏறி வருவது தெரிந்தது.அப்பாவின் கையிலிருந்த பையைக் கண்டதும்,‘திடுக்’ என அவன் அதிர்வது துல்லியமாகத் தெரிந்தது. வரது,பைக்குள் கையைவிட்டு,தட்டுப்பட்டதை எடுத்துப் பார்த்தார்.அது புத்தம்புதிய ஆணுறைகள் அடங்கிய ஒரு சின்ன அட்டைப்பெட்டி.ஷாக் அடித்ததைப் போன்ற வேகத்தில்,அப்படியே அதை உள்ளே தள்ளி,பையை அவனுடைய அறைக்குள்ளே வீசி,ஆத்திரத்துடன் கதவைச் சாத்தினார்.
பாலகிருஷ்ணன் சொல்லியதை,லட்சுமியை,டீன்ஏஜை எல்லாம் மறந்தார்.ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து கணேசனின் தலைமுடியை இடதுகையால் கொத்தாகப் பற்றி இறுக்கிய வரதுவின் முகம் கோபத்தில் சிவந்துபோய்,கண்கள் தெறிப்பதுபோல் முறைத்தபடி,“அப்பா” என்ற கணேசனின் குரலைப் பொருட்படுத்தாமல்,“நீ செய்யும் அயோக்கியத்தனத்திற்கு இது ஒரு துணையா..?”என்று பல்லைக் கடித்துக் கேட்டபடி,தனது அத்தனை சக்தியையும் வலதுகையில் தேக்கி,அவன் கன்னத்தில்“பளீரென்று” ஒரு அறை..
கணேசன் நிற்கமுடியாமல் தள்ளாடி அவரைப்பற்றிப் பிடித்துக்கொள்ள கைநீட்டி, முடியாமல் அவனுடைய அறைக்கதவின் மேலேயே விழுந்த வேகத்தில், படீரென்று கதவு திறந்துகொள்ள தொப்பென்று அறைக்குள்ளே சென்று விழுந்தான்.கணேசனைப் புரட்டி எடுக்கும் ஆவேசத்துடன் அறைக்குள் நுழைந்த வரது ஸ்தம்பித்து நின்றார்.உள்ளே..

நூற்றுக்கணக்கான நோட்டீஸ்களும்,ஆணுறைகளும்,சில போட்டோக்களும்,ஒரு காக்கிவண்ண,தடித்த காகித உறையும் பையிலிருந்து அறையெங்கும் சிதறிக் கிடந்தன.
வரதுவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.தட்டுத்தடுமாறி,சுவரைப் பிடித்து எழுந்து நின்ற கணேசனை ஓரக்கண்ணால் பார்த்தபடி,குனிந்து ஒரு நோட்டீஸை எடுத்துப்பார்த்தார்.அது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட பிரச்சார நோட்டீஸ்கள்…

உணர்ச்சிவேகம் தணிந்து,குழப்ப ரேகைகள் முகத்தில் ஓட, “கணேசா..என்னப்பா இதெல்லாம்..?”
‘அப்பாவிடம் இனி ஒன்றையும் மறைக்க முடியாது..’ கம்மிய குரலில் சொல்லத் தொடங்கினான் கணேசன்,“அப்பா..நாங்க சில மாணவர்கள் ஒருகுழுவாக இணைஞ்சு இந்த எய்ட்ஸ் நோய்க்கு எதிரா பிரச்சாரம் பண்றோம்ப்பா..,படிக்கிற வயசுலே இதுசம்பந்தமா தகவல் தெரிஞ்சுக்கறதோ பேசறதோ படிக்கிறதோ தப்புன்னு நிறையப் பெரியவங்க நினைக்கிறாங்க..”
வரதுவுக்கும்‘ஆமா.அதிலென்ன தப்பு..’நினைப்பு ஓடியது.
“அவங்க நினைப்பெல்லாம் தப்புப்பா..படிக்கிற வயசுலேயே ஆபத்தை புரிஞ்சுகிட்டாதான்,வளர்ந்த பின்னாடி தப்பு செய்யாம இருப்பாங்க.. இதப்புரிஞ்சுக்காம பெத்தவங்க எங்களைத் தடுப்பாங்கன்னு,அவங்களுக்கு தெரியாம வாய்ப்பு இருக்கற மாணவர்கள் பிரச்சாரம் பண்றோம்..”
‘சரிதான் நானும் தடுக்கத்தானே இவன் பின்னாலேயே ஓடினேன்..ஆனால் இரவில் இவன் அப்படிப் போகலாமா..?’.. “சரிப்பா.. பிரச்சாரம் பண்றவங்க பகல்லேயே செய்யவேண்டியதுதானே..ராத்திரிலே எதுக்கு வெளியே போகணும்.?”

அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது.கணேசனின் முகத்திலும் தெளிவு. அப்பாவின் முகத்தை நிதானமாகப் பார்த்தபடி,குரலைச் செருமிக் கொண்டான். அவன் குரலில் எட்டிப்பார்த்த பரிவு ஒரு நண்பனுக்கு சொல்வதுபோல இருந்தது. “பகல்லே பண்ற பிரிச்சாரம் பலருக்கு ராத்திரிலே மறந்துடுது போல..,எய்ட்ஸ் நோயாலே பாதிச்சவங்க பட்டியல் அதைத்தான் சொல்லுது.அதனாலே ராத்திரிலே தப்பு எங்கெல்லாம் நடக்கறதுக்கு வாய்ப்பு இருக்கோ..அங்கே போயி,அந்த நபர்களைச் சந்திச்சு,கூடா ஒழுக்கம்..மாறா நரகம்..னு சொல்றோம்.அதையும் மீறினா அவங்களைப் பாதுகாத்துக்க இந்த ஆணுறைகளையும் கொடுக்கறோம்.. இதுக்காகத்தான் சந்தர்ப்பவசமா பாலியல் தொழிலாளியா மாறிப்போன, சுந்தரியக்கா வீட்டுக்குப்போய் இந்த நோட்டீஸ{ம் ஆணுறைகளும் கொடுத்தேன். அதே மாதிரி இந்த ஊர்வழியா போற லாரி டிரைவர்கள்,ஐந்து பேரையாவது தினசரி சந்திக்கிறோம்..”

மகன் மிகச்சாதாரணமாய் பேசுவது கண்டு வரதுவுக்கு சற்று தர்மசங்கடமாய் இருந்தது.ஆனாலும் நேற்றிரவு முதல் கணேசனைப் பற்றி மனதில் பதிந்த ஒரு அசிங்கமான ஓவியம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டே வந்தது. ‘ஆனாலும் இவர்கள் செய்வது தங்கள் வயதுக்கு மீறிய வேலையல்லவா..?’
“இது எங்க வயசுக்கு மீறுன வேலையாக தயவுசெஞ்சு நீங்க நினைக்கக் கூடாதுப்பா..”வரதுவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ‘என்ன இது, ஜோஸ்யம் போல மனதைப் படிக்கிறான்.’
“எங்களுக்கு எல்லாம் தெரியும் மனுஷ உடம்பு,அதன் பாதிப்பு,ஆண்பெண் உறவுங்கிறது மீடியாக்கள் எல்லாம் கற்பிக்கிற மாதிரி கவர்ச்சியோ,ஆபாசமோ இல்லைன்னும் எங்களுக்கு புரியுது.பெரியவுங்க சொல்றதை விட எங்களை மாதிரி பசங்களே இதையெல்லாம் பேசும்போது நிறையப்பேரு இந்தப் பசங்களுக்கு இருக்கற தெளிவு நமக்கும் வரணும்னு திருந்தியிருக்காங்கப்பா..”

மகன் பேசுவதில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டவராய் ஆமோதிப்போடு,‘மேலே சொல்லு’ என்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார் வரது.

அடுத்த அரை மணிநேரம் கணேசன்,“அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா” வாக மாறிப்போனான்.எய்ட்ஸின் ஆரம்பம்,அதன் தீவிரம்,பெற்றோர்கள் செய்த தவறுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களை சமூகம் ஒதுக்குவது, அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய அன்பு அரவணைப்பு,அவர்களோடு பேசுவதோ,பழகுவதோ ஒன்றாக சாப்பிடுவதோ,ஆபத்தில்லாத விஷயமே என்பது பற்றியெல்லாம் தெளிவாக,எய்ட்ஸ் இல்லாத உலகம் காண,ஒவ்வொருவரின் பங்கும் இதுவென..,ஒரு தேர்ந்த பிரச்சாரகனாக அவன் மாறிப் போயிருந்ததையும்,அவன் பேச்சிலிருந்து வரதுவுக்கும் புரிந்தது.தெளிவும் வந்திருந்தது.
“நல்ல விஷயம்தாண்டா பயலே..ராத்திரிலே நீ அந்த மாதிரி இடத்திற்கெல்லாம் போகும்போது ரெய்டிலோ,பாராவிலோ வரும் போலீஸ்காரர்கள் சந்தேகக் கேஸில் உன்னைப் பிடித்துக் கொண்டால்..?”
பதிலேதும் சொல்லாமல்,இறைந்து கிடந்த நோட்டீஸ் குவியிலிருந்து,அந்த காக்கிக் கலர் கவரை தேடி எடுத்துவந்த கணேசன்,வரதுவின் முன்னிலை யிலேயே அதைப் பிரித்தான்.அதில் கணேசனின் போட்டோ ஒட்டப்பட்ட ஒரு கடிதம்.பஜார் போலீஸ் ஸ்டேஷன் முத்திரையோடு இன்ஸ்பெக்டரின் கையொப்பமிட்டிருந்தது.அதன் சாராம்சம் இதுதான்.‘நல்ல நோக்கத்திற்காக செயல்படும் இவர்களுக்கு இடையூறு செய்யவேண்டாம்..’

எதையும் சரியாக செய்யப் பழகிக் கொண்டுவிட்ட கணேசனைப் பெருமையோடு பார்த்தார் வரது.‘என்னை மன்னிச்சுடு கணேசா’இ அவனைக் கைப்பிடித்து தனது அறைக்கு அழைத்துச் சென்றவர், தனது டைரியிலிருந்து அவருடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றை எடுத்து கணேசனிடம் கொடுத்தார்.
“எனக்கும் அதே மாதிரி ஒரு லெட்டர் வாங்கிக் கொடு கணேசா..”
நாடெல்லாம் பரவப் போகும் இயக்கச் சங்கிலியில்,இன்னுமொரு கண்ணி அங்கே கோர்த்துக் கொண்டது.

இதுவும் யுத்தம்..!

பள்ளி;யில் வேலை முடித்து வீட்டுக்கு வந்த லலிதா வியந்துதான் போனாள்.ஐந்துமணிக்கே வீதியிலுள்ள ஜனங்களும்,ஊரிலிருந்து வந்த அவர்களின் உறவினர்களும்,குழந்தைகளுமாய்..,வீட்டின் முற்றம்,கலகலத்துக் கொண்டிருந்தது.‘சென்ற வாரத்தைவிட,இந்த வாரம் கூட்டம் சற்று அதிகம்தான்’

“வாம்மா லலிதா..இப்பத்தான் வர்றீயா..?” இது கோடிவீட்டு ஜானகிஅக்கா. இவள்தான், இந்த அமளிக்கெல்லாம் பிள்ளையார்சுழி போட்டவள். ஒரு புன்னகையை பதிலாய் தந்துவிட்டு உள்ளேபோனாள்.

இடது பக்கத்து பெரியஅறையில் மங்களம் சிறியதாக மாக்கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.நிமிர்ந்து லலிதாவைப் பார்த்தவள்,“கனகு இப்ப வந்துடுவான்.நீ குளிச்சுட்டு,அவன் குளிக்கிறதுக்கும் ஹீட்டர் போட்டுரு.அப்படியே அலமாரிலே இருக்குற பூஜை சாமானையெல்லாம் தட்டுலே எடுத்துட்டு வா..,இப்பவே நேரமாயிடுச்சு..,”
“சரிங்க அத்தை..”

ஆறுமணி ஆனபோது,அந்தப் பெரியஅறையில் அனைவரும் இரண்டு மூன்று வரிசைகளாக அமர்ந்திருக்க,கிழக்குப் பார்த்து வைக்கப்பட்டிருந்த சாமிபடங்கள் மாலைகளால் அலங்கரித்து சந்தனம் குங்குமத்தால் திலகமிடப்பட்டிருந்தது.பெரிய குத்துவிளக்குகள் இரண்டுபக்கமும் எரிந்து கொண்டிருக்க,நடுவில் தட்டுநிறைய விபூதி,குங்குமம்,கற்பூரங்களோடு, பக்கத்திலேயே சாம்பிராணியும் புகைந்து கொண்டிருந்தது.

“தம்பி வந்தாச்சு,வழி விடுங்க..”யாரோ ஒரு அம்மாள் கூற,வழியில் நின்றிருந்தவர்கள் ஒதுங்கினர்.

கனகராஜ் மஞ்சளில் நனைத்த வேட்டியும்,மேலே ஒரு ஈரிழைத்துண்டும் போட்டு வந்தான்.உடலெங்கும் விபூதியில் ஆங்காங்கே பட்டைபோட்டிருக்க,கைகூப்பி எல்லோரையும் சேவித்துவிட்டு சாமிப்படங்களின் பக்கத்தில் போடப்பட்டிருந்த மனைப்பலகையில் அமர்ந்தான்.ஏதோ முணுமுணுப்புடன்,தட்டில் இருந்த கற்பூரங்களை கொளுத்தி படங்களுக்கு காண்பித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.
“சுவாமி தியானம் பண்றார்..”கிசுகிசுப்பான குரல்களைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் எல்லாம் கனகுவையும்,சாமிப்படங்களையும் பார்த்து கைகுவித்து கன்னத்திலும் போட்டுக் கொண்டனர்.
இன்னும் சற்றுநேரத்தில் அவனுக்கு “அருள்” வந்து,வாக்கு கேட்பதற்காக அனைவரும் காத்திருந்தனர்.

இவற்றையெல்லாம் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த லலிதா, ஆயாசத்துடன் படுக்கைஅறைக்கு சென்று நாற்காலியை இழுத்து,மேசையின் அருகேபோட்டு,அமர்ந்து கவிழ்ந்து படுத்துக்கொண்டாள்.மனதுக்குள் மண்டிய துக்கத்தால் நெஞ்சு விம்ம உடல்குலுங்கியதில்,அவள் அழுவது தெரிந்தது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும்,மாலை ஆறுமணிக்கு தொடங்கும் “வாக்கு சொல்வது” முடிவதற்கு,சிலசமயம் ஒன்பதுமணிகூட ஆகும்.அன்றுமட்டும் தன்னுடைய ஃபேன்சி சென்டரிலிருந்து ஐந்துமணிக்கே வந்துவிடுவான் கனகு.அவன் வருவதற்குள் மங்களம் எல்லா ஏற்பாடுகளையும்,தனக்கு திருப்தி ஆகும்வரை சிறப்பாக செய்து வைத்துவிடுவாள்.
தன் மகனுக்கு சாமி வந்து,அவனிடம் அருள்வாக்கு கேட்க நிறையப்பேர் வருவதில் அவளுக்கு ஏக பெருமை.“ஜானகிக்கு பேரன்தான் பிறப்பான் என்றும்,பரமசிவம் செட்டியாரின் பங்காளித்தகராறு பதினெட்டு வாய்தாவிற்குப் பிறகு சுபமாக முடியும் என்றும்,அஞ்சலையின் மகளுக்கு அரசுவேலை கிடைக்குமென்றும்,அவன் சொன்னது அப்படியே பலித்துப்போனதை சிலாகித்து பேசிக்கொண்டிருப்பாள்.
பலன் அனுபவித்தவர்கள் பக்கத்திலிருப்பவர்களுக்கு சொல்லி,அவர்கள் உறவினர்களுக்கு சொல்லி..லலிதாவின் வீட்டில் கூட்டம் வாராவாரம் கூடிக்கொண்டே போனது.
ஆனால்,மகன் பிறந்த ராசி,வியாபாரம்“ஓகோவென்று வரும்”என்று சொல்லியனுப்பிய கணேசன் நொடித்துப்போய் ஊரைவிட்டே போனதும், மல்லிகாவின் ஜாதகப்பொருத்தம்“அபாரம்”என்று சொல்லி,திருமணம் முடித்த இரண்டு மாதத்திலேயே வரதட்சணைத் தகராறில் அவள் பிறந்தவீடு திரும்பியதையும் இந்த ஜனங்கள் சுலபமாக மறந்துவிட்டனர்.மங்களம் அதைப்பற்றி யாரிடமும் பேசவில்லை.
சந்திரனின்‘சஸ்பெண்ட்’ ரத்தாகி வேலைக்கு திரும்புவார் என்று சொல்லி, “சஸ்பெண்ட் இப்ப ‘டிஸ்மிஸ்’ ஆகி,கோர்ட்டு,கேஸ{ என வளர்ந்து கொண்டே போகிறதே..”என்று அவருடைய மனைவி கேட்டபோது,“நீங்கள் அவருடைய ஜாதகத்தை தவறாகக் குறித்துக் கொடுத்திருப்பீர்கள் அதான்,” என சுலபமாகச் சொல்லிவிட்டாள் மங்களம்.அவளுக்கு எப்போதும் இதுபோன்ற காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

கைகுவித்து,கண்மூடி அமர்ந்திருந்த கனகுவின் மேனி,மெதுவாக சிலிர்க்கத் தொடங்கியது.எல்லோரும் கன்னத்தில் போட்டுக்கொள்ள,அவனின் சிலிர்ப்பு அதிகமாகி உடம்பு துள்ளியது.

யாரோ இருவர் சாமியை ஆதரவாக தாங்கிக்கொள்ள,“சாமி..ஜகன்மாதா..என் மகளுக்கு…” என்று கைலாசம் அண்ணன் ஏதோ கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொருவராக தொடர்ந்து ஏதேதோ கேட்க,சிலருக்கு பதில் சொல்லி,பலருக்கு மௌனம் சாதித்து…அனைவரும் சென்று முடித்தபோது மணி எட்டுக்கும்மேல் ஆகியிருந்தது.

கனகு குளிக்கச் சென்றவிட,மாமியார் ஆராதனைத் தட்டில் விழுந்த பணத்தையெல்லாம் அடுக்கிவைத்து விட்டு,அந்த அறையைப் பூட்டிக் கொண்டிருந்தாள்.லலிதா கண்களைத் துடைத்துவிட்டு சமையல்கட்டுக்கு செல்ல எழுந்து கொண்டாள்.

இரவு படுக்கையறைக்குள் லலிதா நுழைந்தபோது,கனகு ஏதோ படித்துக் கொண்டிருந்தான்.“நாளைக் காலையிலே வரதன் வீட்டுக் கல்யாணமிருக்கு..”
“தெரியும்.. நீ மட்டும் போய்ட்டு வந்துடு..”புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமலே பதில் சொன்னான் கனகு.
“என்னங்க, உங்க ஃப்ரெண்டுவீட்டுக் கல்யாணத்திற்கு நீங்க வராமே..”
“நான் சொன்னதைச் செய்..”
“நான் மட்டும் தனியா..”
“சரி அம்மாவைக் கூப்பிட்டுக்கோ..”
“ஏன்,நீங்க வந்தா என்ன.?”
‘பட்’டென்று புத்தகத்தை மூடிவைத்துவிட்டு,கட்டிலுக்கு சென்று முதுகைக் காட்டியபடி படுத்துக்கொண்டான்.
“என்னங்க..”லலிதா இரண்டுமுறை கூப்பிட்டும் அவன் திரும்பவில்லை.இனி என்ன கேட்டாலும் பதில் வராது என்று புரிந்துபோக,மின்விசிறியைப் போட்டுகொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். அறைக்குள் குளுமை பரவினாலும்,லலிதாவின் மனதுக்குள் புழுக்கம்ஏறி, கண்களில் வெப்பமாகக் கண்ணீர் திரண்டது.

திருமணம் முடிந்த இந்த ஐந்து வருடங்களில்,கடந்த மூன்று மாதங்களாகத்தான் கணவன் இந்த‘வாக்கு சொல்லும்’வேலையை தொடங்கியிருந்தான். அன்றிலிருந்து எதுகேட்டாலும் ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே பதில் சொல்வதும்,ஏதேனும் விசேஷங்களுக்குகூட வர மறுப்பதும் தொடங்கி இருந்தது.
அதற்கு முன்புவரை எப்போதும்,எதுபேசினாலும் எனக்கு எல்லாமே அநாயசம் என்பது போலத்தான் வார்த்தைகள் விளையாடும்.செயல்களில் ஒருதுள்ளல் இருக்கும்.சினிமா,பார்க்,ஓட்டல் என்று அடிக்கடி வெளியே சுற்றியதெல்லாம், மங்களம் அன்றொருநாள் துவங்கிய பேச்சில் அடியோடு ஒழிந்தது.

அன்று மதியம் கனகு,சாப்பிட்டுவிட்டு கடைக்குப் புறப்படும்போது, “ ஏம்ப்பா கனகு இப்டியேயிருந்தா எப்படிப்பா..?”
“என்னம்மா..”
“கல்யாயணம் முடிஞ்சு முழுசா நாலு வருஷம் ஆச்சு.ஒரு பேரனோ,பேத்தியோ வேணும்ணு எனக்கு ஆசையிருக்காதா..?”
“என்னை என்னம்மா பண்ணச் சொல்றே..?”
இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தவள்போல,‘பளிச்’சென்று சொன்னாள் மங்களம்.“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேன்.”

சாப்பிட்டு முடித்தவுடன் பாத்திரங்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்த லலிதா ‘திக்’கென அதிர்ந்து,உள்ளிருந்து ஓடிவந்தாள்.“அத்தே..என்னசொல்றீங்க..”
“புதுசா என்னம்மா சொல்லிட்டேன்.வறண்ட நிலத்திலே விதை போட்டா வேர் பிடிக்காதுன்னு தெரிஞ்சுதாம்மா சொல்றேன்.” இரக்கமேயில்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.மகனிடம் திரும்பிச் சொன்னாள். “நிலம் நீச்சோட பொண்ணு ரெடியா இருக்குப்பா..நீ சரின்னு சொன்னா,தரகர்கிட்டே சொல்லி மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்னு இருக்கேன்.இதான் பொண்ணோட போட்டோ..” என்று கையிலிருந்த உறையை பிரித்து எடுத்துக் கொடுத்தாள்.
அதை வாங்கி சற்றுநேரம் உற்றுப்பார்த்தவனின் கண்களுக்குள் ஏதோ பிரகாசம் தோன்றியதுபோல உணர்ந்தாள் லலிதா.
போட்டோவை திருப்பிக்கொடுத்த கனகு ஒன்றும் பேசாமலே வெளியே நடந்துவிட்டான்.

அன்று இரவு, “என்னங்க,நம்ம ரெண்டுபேரும் டாக்டர்கிட்டே போய் ஒரு செக்கப் பண்ணிட்டு வந்தா என்ன..?”மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டாள் லலிதா
அவன் இகழ்ச்சியாய் சிரித்துக் கொண்டே.“கைப்புண்ணை பார்க்க கண்ணாடி எதுக்கு..?”
“என்ன சொல்றீங்க..”
“நமக்கே நல்லா தெரிஞ்ச ஒருவிஷயத்திற்கு டாக்டர் வேற சர்ட்டிபிகேட் தரணுமா..,அப்படியும் உனக்கு சந்தேகமா இருந்தா தாராளமா நீ போய் செக் பண்ணிட்டு வரலாம்..”
“அப்படீன்னா..”
“அம்மா சொன்னதுக்கு நான் சரின்னு சொல்லப்போறேன்னு அர்த்தம்..!
“அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்..”
“உன்னை யார் கேட்டா..கோர்ட்லே கேஸ் போட்டா,விவாகரத்துன்னு தீர்ப்பு வந்துட்டுபோகுது..”
லலிதா மிரண்டாள்.‘கோர்ட்,கேஸ் என்று போய்,தன் யோக்கியதை சந்தி சிரிக்கவேண்டுமா..அதற்கு பிறகு வீதியில் தலைநிமிர்ந்து நடக்கமுடியுமா..? சகஆசிரியர்களிடத்தில் மதிப்புதான் இருக்குமா..?’

“அதுக்கு இஷ்டமில்லேன்னா இந்தக் கல்யாணம் நடக்க,நீ சம்மதிக்கத்தான் வேண்டும்..”ஈட்டியாய் வார்த்தைகளை வீசிவிட்டு படுத்துக்கொண்டான்.

பள்ளியில் மூன்றாவது பீரியட் முடிந்து,நாலாவது பீரியட் ஓய்வறையில், “காலையிலேயே கேட்கணும்னு நெகச்சேன்.ஏன் ரொம்ப டல்லாயிருக்கே..? சக ஆசிரியை தனலட்சுமி கேட்டபோது, “ப்ச்..ஒண்ணுமில்லப்பா..”சலிப்புடன் சொன்னாள் லலிதா.
“அதைக்கூட ஒழுங்கா சொல்ல மாட்டேங்குறியே,என்னடா எங்கிட்டே சொல்லக்கூடாத விஷயமா..?”பரிவுடன் அவள் கேட்டபோது அழுகை முட்டிக்கொண்டு வந்தது லலிதாவிற்கு. முதல்நாள் நடந்த சம்பவம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்.
“ஏய் இதுக்கா அழுகுறே..முட்டாள் மாதிரி பிஹேவ் பண்ணாதே..நெலமை இவ்ளோ தூரம் வந்த பின்னாடி ரெண்டுலெ ஒண்ணு பாத்துரலாம்.நீ சாயங்காலம் எங்கூட ஒருமணிநேரம் வந்துட்டுப்போ,அப்புறம் பார்க்கலாம்.!”
“தனம்..”
“மூச்..போய் டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வா.மத்தவங்களும் சாப்பிட வந்தாச்சு.”
மாலையில் இருவரும் அந்த பிரபலமான மருத்துவமனையில்,தலைமை டாக்டரம்மாவின் முன்பு அமர்ந்திருந்தனர்.
“தென்..மிஸஸ்.லலிதா..உங்களுக்கு எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்டெல்லாம் நாளைக்கு ரெடியாயிரும்.ஈவ்னிங் வந்து வாங்கிட்டுப் போயிடுங்களேன்.டாக்டர் சொல்ல இருவரும் வெளியே வந்தனர்.
“இங்கபாரு லலிதா..,குழந்தை இல்லேங்கிறதுக்காக இப்ப யாரும் டைவர்ஸ் வரைக்கும் போறதுங்கிறது ரொம்பக் குறைஞ்சிடுச்சு.அதுவுமில்லாமே இந்த விஷயத்திற்காக பெண்களை மட்டும் பொறுப்பாக்குறதை இந்தக்காலத்துலே படிச்ச பொண்ணுக யாரும் ஒத்துக்கவே மாட்டாங்க.நாளைக்கு வந்து ரிசல்ட் கேப்போம்.ஒருவேளை உனக்குத்தான் குறைன்னா..ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்துக்க..ஈஸி..”
“அதுக்கு எங்க வீட்லே சம்மதிக்க மாட்டாரே..”
“அப்படின்னா உம் புருஷனுக்கு குழந்தை வேணும்னு இல்லே.இன்னொரு பொண்டாட்டி வேணும்.அதுதான்.அதுவும் சொத்து சொகத்தோடன்னா எவனுக்கும் சபலம் தட்டும்..”பொட்டில் அடித்ததுபோல ஆத்திரத்துடன் சொன்னாள் தனம்.“சரி..நீ வீட்டுக்குப் போ..நாளைக்கு ரிசல்ட் பாத்துட்டு மேற்கொண்டு முடிவு செய்யலாம்..”

மறுநாள் ரிப்போர்ட்டை புரட்டிப்பார்த்த டாக்டர், “யு ஆர் ஆல்வேஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட் மிசஸ் லலிதா..,உங்க கணவர்கிட்டேதான் ஏதோ குறை இருக்கணும். அவரையும் செக்கப் பண்ணி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கச் சொல்லு.ஒருவேளை அடுத்த வருஷமே உங்க கைல ஒரு குழந்தை இருக்கலாம்.!” மனம் குளிர்ந்துபோனாள் லலிதா.. ‘ஆண்டவனே..நன்றி..!’

மனசுக்குள் ஆயிரம் யானைகளின் பலம்வந்தது போல ஒரு உணர்ச்சி.என்னிடம் குறை என்பதற்காக விவாகரத்து என்றவர்,இப்போது என்ன சொல்வார்..? சே.ஆண்கள் என்பதற்காகவே இவ்வளவு சீக்கிரம் முடிவெடுத்து விடுகிறார்களே..ஆண்மை என்ற ஈகோ ஒழிந்து எப்போது பெண்களையும் சமமாக மதிக்கிறார்களோ..அப்போதுதான் உலகம் உருப்படும்..’எண்ணங்கள் எங்கெங்கோ ஓடியது.
‘ஒருவேளை அவரால் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகமுடியாது என்று ஆகிவிட்டால் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள எப்படியாவது அவரை சம்மதிக்க வைக்கத்தான் வேண்டும்.’
வியாபாரவிஷயமாக வெளியூர் சென்றிருந்த கனகு,அன்று இரவு வரவில்லை. மறுநாள் வெள்ளிக்கிழமை,வெளியூரிலிருந்து நேராய் கடைக்குச் சென்றுவிட்டு, மாலை ஐந்துமணிக்குத்தான் ஓய்வெடுக்க வீட்டுக்கு வந்தான்.குளித்து டிபன் சாப்பிட்டுமுடிக்கும்போது,வெளியே ஜானகியின் குரல்கேட்டது.“ஏண்டாப்பா கனகு,இப்பத்தான் வந்தியா..?”கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள்.
“ஆமா..என்ன விஷயம்..?”
“ஒரு ஐநாறு ரூபா கடன் கொடேன்.அவசரமாக ஒருசெலவு.ஒண்ணாம்தேதி வாடகைப்பணம் வந்தவுடனே திருப்பித் தந்துடுறேன்.”
“ஒரு அஞ்சுநிமிஷம் உட்காருங்கக்கா..வந்திர்றேன்..”
படுக்கை அறையில் பீரோவைத் திறந்து பணம் எடுக்கும்போது,காபியை ஆற்றிக்கொண்டே வந்த லலிதாவைப் பார்த்துக் கேட்டான் கனகு. ‘என்ன முடிவு பண்ணிவெச்சிருக்கே.?”
பதிலேதும் சொல்லாமல் மேசையின் மீது காபியை வைத்தவள்,தனது மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.
“என்ன இது..?” புரியாமல் கேட்டவனிடம், “டாக்டர்கிட்டே போனேன்.என்னாலே கண்டிப்பா ஒருகுழந்தைக்கு தாய் ஆகமுடியும்.எங்கிட்டே எந்தக்குறையும் இல்லையாம்.”அழுத்திச் சொன்னாள். “உங்க கணவரையும் கூப்பிட்டுவாங்க அவரையும் செக் பண்ணிரலாம்னு சொன்னாங்க..”

அவன் முகம் பேயறைந்தாற் போல ஆயிற்று. “நெசமாவா சொல்றே..?” அபத்தமாகக் கேட்டான்.ரிப்போர்ட்டைப் பிடித்திருந்த அவனுடைய கைகள் மெதுவே நடுங்கத் தொடங்கியது.ஆத்திரம் பொங்க சிலவிநாடிகள் அவளையே பார்த்தவன்,கைகளில் இருந்த காகிதக்கற்றையை தாறுமாறாக,சுக்குநாறாய் கிழித்துவீசினான்.முகம்சிவந்து தன்வசமிழந்தவனாய் பற்களைக் கடிக்கத்தொடங்கினான்.
கலவையான இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கண்டு,பயந்துபோன லலிதா,சற்றே பின் வாங்க அவளின் கை பட்டு,மேசையின் மேலிருந்த காபிடம்ளரும்,டபராவும் கீழே தலைகுப்புற விழுந்து ஓசையெழுப்பியது.

மகனிடம் ஏதோ கேட்பதற்காக வந்த மங்களம்,கனகுவின் நிலையையும், அறையின் களேபரத்தையும் பார்த்து மருண்டுபோய், “ஐயோ என்னாச்சு..” என்றுகூவ,அதைக்கேட்டு ஓடிவந்து பார்த்த ஜானகி, “ஐயோ நல்லாருந்த புள்ளே..திடீர்னு அருள் வந்தமாதிரி ஆடறானே..”என்று அவள் பங்குக்கு கத்த, ‘சட்’டென்று திரும்பி ஜானகியைப் பார்த்தான் கனகு.அந்தப் பார்வையில் தேடலும்,அதைக்கண்டுகொண்ட பிரகாசமும் இருந்தது.இரண்டே விநாடிதான்..அவன் உடம்பு துள்ளியது.தீப்பற்றிக் கொண்டதைப்போல கைகளையும்,கால்களையும் உதறிக்கொண்டு ஆடினான்.பற்களுக்கு நடுவே கடிபட்ட நாக்கிலிருந்து இரத்தம் சொட்டாய் எட்டிப்பார்த்தது.
“மங்களம்..ஓடிப்போய் குடத்துத் தண்ணீலே மஞ்சளைக் கரைச்சு எடுத்தா..இவனுக்கு சாமிதான் வந்திருக்கு..ஒடு சீக்கிரம்..”ஜானகியின் உத்தரவைத் தொடர்ந்து மங்களம் ஓடிமறைய.. “சாமி..ஐயா.உங்களுக்கு என்ன குறைவெச்சுட்டோமுன்னு சோதிக்கிறீங்க..” ஜானகி வாய்பொத்திக் கேட்க, “எனக்கு எந்தக் குறையுமில்லே..ஒரு நல்ல சேதி சொல்லிட்டுப் போகத்தான் வந்திருக்கேன்.
“சாமி சொல்லுங்க..”
மங்களமும் குடத்தோடு வந்துசேர,“இன்னும் நாற்பத்தியெட்டு வாரத்துலே இந்த வீட்டுலே,குழந்தையோட சத்தம் கேட்கப்போகுது.அதுவும் ரெட்டைக் குழந்தை பொறக்கப்போவுது.அதுவரைக்கும் என்னோட பக்தனை யாரும் சந்தேகப்படவோ, சோதிக்கவோ கூடாது..ஹா..”என்ற சப்தத்துடன் மௌனமானான்.
உடல் சிலிர்ப்பெல்லாம் மெதுவாய் அடங்க,கண்களை மூடிக்கொண்டான். முகத்தில் உக்கிரம் குறைந்து சாந்தம் நிலவ மெதுவே தரையில் சரிந்தான்.

பயந்துபோன மங்களம்,அவனுடைய கால்களைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு மஞ்சள்நீரை குடத்தோடு அவன்மீது ஊற்றினாள்.

திக்பிரமை அடைந்தவளாய் நடப்பதனைத்தையும் பார்த்துக் கொண்டு,செயலற்று நின்றிருந்தாள் லலிதா.கண்முன்னே நடந்தது கனவு போலிருந்தது.
‘கும்பிட்டுக்கோ லலிதா..”ஜானகியின் குரல்கேட்டு அவளும் யந்திரமாய் சேவித்துக் கொண்டாள்.கனகுவிற்கு அருள் வந்து ஆடியது ஊரே பரவியது. ஜானகியின் ‘கணிப்புப்படி’ அடுத்த வெள்ளிக்கிழமையும் ‘அருள்’வந்தது.அதுவே தொடர்ந்தது.

லலிதாவிற்கு புரிந்துபோனது.கண்ணுக்குப் புலப்படாத வேலியொன்றை, தன்னைச்சுற்றி எழுப்பிக்கொண்டு,அதில் சிறையிருந்தாலும்,தன் ஆண்மை என்ற ‘ஈகோவை’க் காப்பாற்ற முனைந்துவிட்டான் கனகு.இதுவும் யுத்தம்தான். அவனுக்கும்,அவனது மனசாட்சிக்கும் நடக்கும் யுத்தம்.இதில் அவன் அழிந்து அவனுடைய மனசாட்சி ஒருவேளை ஜெயிக்கலாம்.ஜெயிக்கும்போது ஒருபுதிய தரிசனம் நிகழலாம்.அதற்கு அவன் சொன்ன நாற்பத்தெட்டு வாரகாலம் பிடிக்கலாம்.அதற்குப்பின் கணவனை சமாதானப்படுத்தி டாக்டரிடம் கூட்டிச் செல்லவேண்டும்.
அவனுக்குள் நிகழும் யுத்தத்தின் கோரத்தைக்கண்டு அவ்வப்போது அழுதாலும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் லலிதா.

-பொள்ளாச்சி அபி-

01 நவம்பர் 2011

புயலின் மறுபக்கம்.!

பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம்.

மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.

மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்..,

வீசிய காற்றில் சாம்பல்புழுதி,வீதிநெடுக இருபுறமும் எரிந்து அடங்கிய பின்னும் கடைகளுக்குள் மிச்சமிருந்த கருகியநெடி…போக்குவரத்தற்ற சாலைகளின் பரப்பில் எழும்பிக் கொண்டிருந்த கானல்..,
‘நகரத்தின் இயக்கத்திற்கும்,தொழிலுக்கும் முதுகெலும்பாய் நேற்றுவரை இருந்தது இந்த இடம்தானா..?’

நொடியில் மாறும் திரைப்படக் காட்சிபோல ஒரேநாளில் இந்நகரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டது எது..?

மதக்கலவரத்தின் கோரமுகம் நிதர்சனமாய் முகம் காட்ட,மேனியெங்கும் சிலிர்த்து அடங்கியது தேவகிக்கு..

காலையில் நடந்த கலவரத்தில் உறவுகளைப் பலி கொடுத்த அப்பாவிமக்களில் ஒருத்தியாக,தனது கணவனைப் பறிகொடுத்தவளாக..இப்போது அரசு மருத்துவமனை வளாகத்தில்,கணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள பிணவறை முன்பு காத்திருக்கிறாள்..

அந்த மருத்துவமனையில்,உயிரற்றுப் போன நகரத்தின் அமைதிக்கு எதிர்மாறாய் சந்தடிகள் நிறைந்திருந்தது.அனால் அதில் உற்சாகக்குரல்களோ, உவகைத் துடிப்புகளோ எதுவுமின்றி திரும்பிய பக்கமெல்லாம் ஒப்பாரியும் கேவல்களுமாய் மனிதர்கள்..

இன்று காலையில் வழக்கம்போல “போய்வருகிறேன்”என்று வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற கணவன் வழயிலேயே மடக்கப்பட்டு,வெட்டிக் கொல்லப்பட்டதும்.கை,கால்,கழுத்து என பல இடங்களும் சின்னாபின்னமாய் இருந்த உடலை அடையாளம் காட்ட போலீசார் அழைத்து வந்ததும்,யாரோ இயக்கிவைத்தது போலஅடுத்தடுத்து நடந்து முடிந்திருந்தது.

வாய்விட்டு கதறி அழுது புரண்டதில் தொண்டையும் உடம்பும் வலித்தது.
பிணவறை முன்பு நின்று வெகுநெரம் அழுது ஓய்ந்தபின்,சற்றுத்தள்ளி பிரம்மாண்டமாய் விருப்பு வெறுப்பின்றி எல்லாதிசைகளிலும் தன் கிளைகளைப் பரப்பியிருந்த அந்த மரத்தின் நிழலுக்கு வந்து,குத்துக்காலிட்டு,அதில் முகத்தைப் புதைத்து அமர்ந்து கொண்டாள் தேவகி.
அவ்வப்போது கணவனின் நினைவுகள் வந்து மனதைப் பிழிய முதுகு குலுங்கி அழுவதும்,சமனப்படுவதுமாயிருந்தாள்.

நாசக்கேடான இப்படியொரு சூழ்நிலை தன் வாழ்வில் விடியும் என்று அவள் கனவிலும் கண்டதில்லை. “நீ நாசமாத்தாண்டி போவே...” அம்மா ஆத்திரம் கொப்பளிக்க கத்தியது நினைவுக்கு வந்தது.
தான் காதலித்தவனையே மணக்கப்போகும் உறுதியை பெற்றோரிடம் தெரிவித்தபோது அம்மா கொடுத்த ஆசீர்வாதம்..அதுதான் பலித்துவிட்டதா..? இப்போது என்நிலையை அறிந்து சந்தோஷப்படுவாளோ..? ஜெயித்தது அவளின் சாபமல்ல..யாரோ சிலரின் சுயநலம்தான் என்று உணர்வாளா..?.”
அப்பாவிற்கும் அம்மாவிற்கும், அண்ணனின் நண்பனாய் அறிமுகமாயிருந்த இவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னது பிடிக்கவேயில்லை.அண்ணாவிடம் சொன்னபோது அவனால் நம்பவே முடியவில்லை. “அவனும் உன்னைக் காதலிக்கிறானா..?”
“ஆமாண்ணா..”
நிஜமாவா..?…ஹ{ம்..படிக்கும் காலத்திலிருந்து அவனை நல்லாத் தெரியும்..” அவன் அப்படி எந்தப் பெண்ணிடமும் பழகமாட்டானே..”அவன் குரலில் நீங்காத ஆச்சரியம்.
“அவரா ஒண்ணும் இதை ஆரம்பிக்கலை..நானாத்தான் அவரை விரட்டி,மிரட்டி என் காலை தெரிவிச்சேன். அவரும் எத்தனையோ காரணம் சொல்லி மறுத்துப் பார்த்தாரு.ஆனா நான்தான் விடாப்பிடியா இருந்து என் காதலை ஏத்துக்கிறதுக்கான நியாயங்களைச் சொல்லி சம்மதிக்க வெச்சேன். இப்ப அவரும் என்னைத் தீவிரமாக் காதலிக்கிறாரு…”
அண்ணன் சில விநாடிகள் என் முகத்தை ஆழமாகப் பார்த்தான்.சாதகமான பதிலை எதிர்பார்த்து படபடப்போடு அவன் கண்களையே பார்த்திருந்தேன். அவனுடைய கொள்கைகளுக்கும்,நேர்மைக்கும் சோதனையாக நான் இப்போது அவன் முன் நின்றிருக்கிறேன்.
அவனுடைய கல்லூரிக் காலத்திலிருந்தே,மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கல்லூரி விழாக்களிலும்.பொதுமேடைகளிலும் கனல்தெறிக்கப் பேசிப் பழகியிருந்தான்.அந்த ஆவேசம் குன்றாதவாறு கடடுரைகளும் எழுதி பத்திரிகைகளுக்கும் அனுப்பிவந்தான்.இவையெல்லாம்தான் எனக்கு தைரியமளித்ததோ.. தெரியவில்லை..,
அண்ணன் என்னை ஏமாற்றவில்லை.ஒரு புன்சிரிப்பு மூலம் என்வயிற்றில் பாலை வார்த்தான்.“வாழ்த்துக்கள்..தேவகி…!” என்றவன் “அதான் அந்த ராஸ்கல் முன்னமாதிரி இங்கே வர்றதில்லையா..? நானா வலியப்போய் பேசினாலும் முகம்பார்த்து பேசாம..எங்கேயோ பார்த்துட்டு பேசறானா..? ஹ{ம் கவனிச்சிக்கிறேன் அவனை..”நட்பின் அதீத உறவில் செல்லமாய் கோபித்துக் கொண்டான்.
“சரி தேவகி..மேற்படி என்ன செய்யப்போறே..?
“நாங்க சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கப்போறோம்.நீதான் சப்போர்ட் பண்ணனும்.”
அண்ணன் ஆதரவாய் என் கையைப்பிடித்துக் கொண்டான்.

அம்மா,அப்பாவின் எதிர்ப்பைமீறி,எனது கல்யாணத்தின்போது ரிஜிஸ்டர் ஆபிசில் சாட்சிக் கையெழுத்தும் போட்டு,சென்னையிலிருந்து கோவைக்கு கூட்டிவந்து நண்பர்கள் மூலமாய் வீடும்,கணவனின் வேலையையும் இங்கேயே மாறுதலாக்கித் தந்தது என மளமளவென்று எல்லா ஏற்பாடுகளையும் அண்ணனே முன்னின்று செய்து தந்தான்.

அம்மாவோ இங்கு வீடுதேடிவந்து,மண்வாரித் தூற்றிப் போனாள். “நீ நாசமாத்தாண்டி போவே…”, அண்ணன்தான் “ கொஞ்சநாள் கழித்து எல்லாம் சரியாகும்.அதுவரை அம்மா அப்பாவை நீ பொருட்படுத்தாதே.”என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனான்.
இப்போது அவனுக்கு சேதி தெரிந்தால் எப்படித் துடித்துப்போவான்.தங்கையின் விருப்பத்திற்காக பெற்றோரிடம் சண்டை போட்டவனாயிற்றே.வாழ்நாளெல்லாம் தேவகியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வான் என்ற உறுதியை தன்கணவன் சார்பாக எடுத்துச் சொன்னவனாயிற்றே..வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்து வாழத்துடித்தவர்கள் இப்படிப்பட்ட கலவரப்புயலுக்குள் மாட்டுவார்கள் என்று அண்ணன் எதிர்பார்த்திருப்பானா..? பாவம்.., நேற்றுவரை..ஏன் இன்று காலைவரை தேவகியேகூட அப்படி நினைத்திருக்கவில்லை.ஆனால் இப்போது திக்குத்தெரியாத காட்டில் தனித்துவிடப்பட்ட குழந்தையாய் மிரண்டுபோயிருக்கிறாள்.

அடுத்தது என்ன..? என்று யோசிக்கக்கூட திராணியற்று மனம் முழுவதும் மரத்துப் போயிற்று.அவளுடைய இரு கன்னங்களிலும் ஒழுகிக் காய்ந்திருந்த கண்ணீர்த் தடங்களில்,அப்பியிருந்த புழுதியை முந்தானையால் துடைத்தவளாய் தன்னைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டாள்.
எவ்வளவு நேரமாயிற்று என்று தெரியவில்லை.காலையில் இந்த அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தபோது,இருந்த மனிதர்களின் எண்ணிக்கை இப்போது பல மடங்கு பெருகியிருந்தது.
அத்தனையும் கலவரத்தில் இறந்தவர்களின் உறவு ஜனங்கள்.குல்லாவும் தாடியும் கைலியுமாய், காவிவேட்டி கறுப்பு வெள்ளை வேட்டி பேண்ட் சட்டைகளுமாய் ஆண்களும்,வண்ணவண்ணப் புடவைகளும்,உடல் மறைத்த அங்கிகளுமாய் பெண்களும், கலந்து நிரவியிருந்த அத்தனைபேரின் முகங்களிலும் ஒரேமாதிரியான இழப்பின்சோகம் மண்டியிருந்தது.

எல்லோரையும் நெருக்கடிக்குள்ளாக்கும் பொது எதிரியாய் வெயில் உச்சிக்கு ஏற,ஏற தேவகி அமர்ந்திருந்த மரத்தின் நிழல் குறுகியது.விலாசமாய் அமர்ந்திருந்த ஜனக்கூட்டமும் அதற்கேற்றவாறு இடைவெளியின்றி நெருக்கமானது.

“ஏம்மா..நானும் அப்போதிருந்தே பாக்குறேன்.நீ தனியா உட்கார்ந்து அழுதிட்டிருக்கிறே..சொந்தக்காரங்க யாரும் வரலையா..?”குரலில் பரிவுடன் உடல் முழுவதும் கறுப்புஅங்கியால் மறைத்திருந்த ஒரு பெண் தேவகியிடம் கேட்டாள்.

“இல்லை.எல்லாரும் வெளியூரு..தகவல் சொல்லியிருக்கு.அவங்களாலே எப்ப வரமுடியும்னு தெரியலே..”
“இங்கே வாழ்க்கைப்பட்டு வந்தியா..?”
“ஆமா”
“உன்புருஷனோட சொந்தம் யாரும் இங்கே இல்லையா..?”
“இல்லை”
அந்தப் பெண்ணின் கண்களில் லேசாசாய் மிரட்சி.ஏதோ உண்மையை யூகித்தறிந்தவள் போல..”அப்போ..இங்கே..இறந்தது…?” குரல் தயக்கத்தோடு தடைபட்டு நின்றது.மீதிக்கேள்வியை கேட்பதில் உள்ள தர்மசங்கடம் தேவகிக்குப் புரிந்தது.
“என் புருஷனைத்தான் கொன்னுட்டாங்க..”சொல்லும்போதே தேவகிக்கு குரல் அடைத்து கண்ணீர் பொங்கியது.
அந்தப்பெண் சட்டென தேவகியின் கையை ஆறுதலாய் பிடித்துக் கொண்டு, “என்னம்மா செய்யிறது,இந்தப்படுபாவிங்க எப்போப் பார்த்தாலும் பழிக்குப்பழின்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வெட்டிச் சாய்ச்சுட்டே இருக்கானுங்க.நம்பளைப் போல பொம்பளைங்க,குழந்தைகள் எல்லாம் இப்படி அநாதியா தெருவிலே நிக்க வேண்டியிருக்கு..? உள்@ரிலேயே பொறந்து இங்கேயே வாழ்க்கை நடத்தறவங்களுக்கு ஏதோ ஆறுதல் சொல்லவும் காப்பாத்தவும் யாரோ நாலுபேர் இருப்பாங்க..ஆனா வெளியூரிலிருந்து பிழைக்க வந்தவங்க கதியெல்லாம் இன்னும் கஷ்டம்..,பரிவுடன் சொல்லிக்கொண்டே வந்தவள்,திடீரென்று ஆவேசமுற்றவளாய்,சற்று இரைச்சலுடன் எந்தப் பக்கத்திலிருந்தும் எந்த நாயாவது இதையெல்லாம் நெனச்சுப்பாக்குதா..? என்னம்மா நான் சொல்லுறது..? மதத்தைக் காப்பாத்தறேன்னு மனுஷங்களை கொன்னுபுட்டா ஆச்சா..?”

“ஹே..பாத்திமா..”ஏதோ ஒரு ஆண்குரல் அதிகாரத்தோடு, ‘வாயை மூடு’ என்ற தொனியில் ஒலிக்க,முனகிக் கொண்டே எழுந்து சென்றாள் அந்த மாது.

அவள் சொல்லிச் சென்றதைக் கேட்டபோது தேவகிக்கு ராமச்சந்திரன் சாருடைய நினைவு வந்தது.தான் ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் வகுப்பெடுத்த வரலாற்று ஆசிரியர்.அவர் ஒருமுறை சொன்னார். “மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த அதே காலம்,மேலும் இருபிரிவு ஆரியக்கூட்டம்,ஒன்று ஈரானுக்குள்ளும்,மற்றொன்று கிரீஸிற்குள்ளும் நுழைந்தது.இந்தியப் பழங்குடி மக்களிடம் போரிட்டும்,இணைந்தும் வாழ்ந்து பழகிய அந்த மக்களின் வாழ்க்கை முறை எப்படி இந்துசமயத்தின் முன்னோடியான வைதீக வேதமதத்தை உருவாக்கிற்றோ,அதே போல் ஈரானுக்குள் நுழைந்தவர்களின் சந்ததியாய்த்தான் கிறித்தவமும்,இஸ்லாமும் உருவாயிற்று.

அப்படியானால் நமக்கெல்லாம் ஒரே மூதாதையர்கள்தான்.எனவே மதத்திற்காக சண்டைபோடுவதும் கொலைபுரிவதும் கூடாது.”என்று சொன்னவர்.மேலும் இந்தியாவில் தோன்றிய மதமான பௌத்த மதத்தை உலகில் பல நாட்டுமக்கள் பின்பற்றி வரும்போது,வேறு பகுதியில் தோன்றிய இஸ்லாமையும், கிறித்துவத்தையும் இங்குள்ள மக்கள் சிலர் தழுவுவதில் தவறு ஏதும் இல்லை.எனவே மதத்துவேஷம் என்பது கூடாது…”

அன்று அவர் சொன்னது மனதில் செதுக்கிவைத்த சித்திரமாயிற்று. நினைவுகளில் மூழ்கியிருந்த தேவகியை, “ஐயோ நசீரு…”என்ற கூக்குரல் திடுக்கிடவைத்தது.
மருத்துவமனையின் பெரியநுழைவாயில் வழியே ஒரு போலீஸ் வேன் வந்து நின்றிருக்க.அதிலிருந்து ஆண்களும்,பெண்களுமாய் கதறிக் கொண்டே பிணப்பரிசோதனை அறைவாயிலை நோக்கி ஓட்டமெடுக்க,எல்லோரின் கண்களும் அவர்களையே பின் தொடர்ந்தன.தொடர்ந்து பரிதாப உச்சுக் கொட்டலும்,பாவிகள் எனத் தொடங்கிய வசவுகளும் காற்றில் கலந்து நிறைந்தன.

தேவகி இங்கு வந்து அமர்ந்தபின்,நான்கைந்துமுறை இதேபோல உறவுக் கூட்டங்களை போலீஸ்வேன் கொண்டுவந்து இறக்கிப்போயிற்று.ஒவ்வொரு முறையும் அதிலிருந்து இறங்கும் மனிதர்கள்..இப்படித்தான் கூக்குரலிட்டுக் கொண்டு,தலையிலடித்துக்கொண்டோ,வாய்விட்டுக் கதறிக்கொண்டோ, பிணவறையை நோக்கி ஓடுகிறார்கள்.அவ்வப்போது அவர்களால் உச்சரிக்கப்படும் பெயர்கள் மட்டும் வௌ;வேறாயிருக்கும்.

காலையில் “அப்படித்தான் செந்திலு..என் ராசாவே..” என்று கதறிக் கொண்டே ஓடிவந்த ஒருதாய்,பதட்டத்தாலோ பட்டினியாலோ..தடுமாறிக் கீழே விழப்போக தேவகிதான் சுதாரித்து,சட்டென எழுந்து தாங்கிப்பிடித்துக் கொண்டாள்.உறவு ஜனத்தில் நான்கைந்துபேர் சுற்றிக் கொள்ள சோடா வாங்கு..தண்ணி எடு..என்று ஆள்ஆளுக்கு கூவ,யாரோ ஒருவர் வெளியே ஓடிப்போக எத்தனித்து..அப்படியே நின்றார். ‘ஒரு கடையும் திறந்திருக்கவில்லை’ என்பது அப்போதுதான் உறைத்திருக்கவேண்டும்.அவர் முகத்தில் ஆத்திரமும் இயலாமையும் கொப்பளிக்க முனகிக்கொண்டே திரும்பினார்.

அதற்குள் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் ஓடிப்போய் சைக்கிளில் மாட்டியிருந்த தன்பைக்குள் கைவிட்டு ஒருபாட்டில் தண்ணீரை எடுத்துவர,அதை ஒருவர் வாங்கி மயக்கமுற்ற பெண்ணின் முகத்தில் தெளித்து,வாயை திறக்கச்செய்து சற்றே புகட்டியபின்,அந்தப் பெண்ணுக்கு உணர்வு திரும்பியது.
“இந்தாங்க பாய்… நன்றி” என்று லேசான புன்னகையுடன் ஒருவர் பாட்டிலைத் திருப்பித்தந்தார்.
புpணவறைக்கு வெளியே நின்றிருந்த கூட்டம் மெதுவாக கலைந்து,நிழலுக்கு ஒதுங்கியது.தேவகி இன்னும் சற்று ஒடுங்கி உட்கார்ந்து கொண்டாள்.

“ஏனுங்க பாய்..பாடியெல்லாம் எப்பக் குடுப்பாங்களாம்..?” தேவகியிடமிருந்து சற்றுத்தள்ளி நின்றிருந்த கறுப்புவேட்டி மனிதர் கேட்டார்.பிணத்தைப் பெற்றுக் கொள்ள வந்த தேவகி உட்பட,பலரது கவனமும் அவருடைய கேள்விக்கான பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தது.

மரத்திற்கு பின்புறமிருந்து பதில்குரல் வந்தது. “ எல்லாம் ஆச்சு சாமி..இன்னும் கொஞ்சநேரத்திலே யாரோ பெரிய அதிகாரி வருவாராம்.வந்தவுடனே பாதுகாப்பா எல்லா பாடியும் கொண்டுபோக ஏற்பாடு பண்ணுவாங்களாம்..”
“சொந்தஊருக்கு பாடியை கொண்டுபோறவுங்க எல்லாம் என்ன பண்றது.? ”
“எங்கே கொண்டுபோறது..அவங்கவங்க சடங்கை முடிஞ்சவரை இங்கேயே பண்ணிட்டு ஒட்டுமொத்தமா ஆத்துப்பாலம் சுடுகாட்டுக்கு கொண்டுபோக வேண்டியதுதான்.அங்கதான் பக்கம்பக்கமாய் எல்லா ஜாதிக்கும் இடம் ஒதுக்கியிருக்கே..”
“ஓஹோ..அப்படியா..ஏற்பாடு.?” ஏதோ சில விநாடிகள் யோசித்த கறுப்புவேட்டி மனிதர், “உயிரோட இருக்கும்போது சாதி மதத்துக்காக சண்டைபோடற மத்தவனெல்லாம், இப்போ ஒண்ணா சுடுகாட்டுக்கு போற பிணங்களைப் பாத்தாவது யோசிப்பாங்களா பாய்..?”அவர் குரலில் அங்கலாய்ப்பும் வருத்தமும் இழைந்தன.

“எல்லாருக்கும் ஆறடி மண்ணு தவிர கடைசியிலே சொந்தமா எதுவுமேயில்லேங்கிறது புரிஞ்சாலே போதுமே..!” அலுப்பும் சலிப்புமாக வந்தது அந்தக் குரல்.
தொடர்ந்து, “ஆமா ஐயப்பசாமியெல்லாம் இந்த மாதிரி இடத்துக்கு வரக்கூடாதே..”
“செத்தது நம்ம நெருங்கிய சொந்தக்காரப் பயலாச்சே..எப்படி வராம இருக்கிறது.இனி மாலையைக் கழட்டிட வேண்டியதுதான் பாய்..அடுத்தவருஷம்தான் மலைக்குப் போகனும்..” தொடர்ந்து அவர்களின் பேச்சு வௌ;வேறு திசைக்குப் பயணிக்க…”தேவகியின் கவனம் அவர்களின் பேச்சுககளிலிருந்து மீண்டது.
வெகு நேரம் ஒரேமாதிரியாக அமர்ந்திருந்ததில், கால்களில் வலி எடுக்கத் துவங்கியது.வெயிலின் உக்கிரம் கண்களைக்கூச,கைகளை தளர்த்திக்கொண்டு மரத்தின்மீது நன்றாக சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.பிணங்களை வெளியே கொண்டுவரும்வரை இப்படியே காத்திருக்க வேண்டியதுதான்… “கணவன் உயிரோடு இருக்கும்போது,இப்படி எதற்காகவும் தன்னைக் காத்திருக்க வைத்ததில்லை.காதலித்துக் கொண்டிருந்த ஒருவருடமும் சரி,மணம் முடித்தபின் இந்த ஆறுமாதங்களும் சரி..இரவு ஒன்பது மணிக்கு வருவேன் என்று சொல்லிச்சென்றால் பத்துநிமிடம் முன்பாகவே வந்து நிற்பான்.
காதலித்த காலத்தில் என்றால் ஒருநாளும் இவள் அவனுக்காக காத்திருந்ததேயில்லை.ஐந்து மணிக்கு சந்திக்கலாம் என்று நேரத்தையும், இடத்தையும் குறிப்பிட்டுவிட்டு,இவள் வேண்டுமென்றே,நாலரை மணிக்கு சென்றாலும் அவன்தான் இவளை வரவேற்றிருக்கிறான்.இப்படி எத்தனையோ முறை.!
கடந்த காலத்தை அசைபோட்டபடியே..நினைவுகளில் மூழ்கிப்போனாள்…
யாருடைய துயரத்தையும்,சந்தோஷத்தையும் பொருட்படுத்தாது நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
தேவகிபோலவே எல்லோரும் எதிர்பார்த்திருந்த அந்தப் பெரிய அதிகாரி மருத்துவமனைக்கு வந்தபோது மதியம் இரண்டு மணியாகிவிட்டது.
அவரைச் சுமந்து வந்த ஜீப் நின்றவுடன்,ஜனக்கூட்டம் ஓடிப்போய் அவரைச் சூழ்ந்து கொண்டது.அவர் எல்லோரையும் கையமர்த்திவிட்டு,உடன் வந்த போலீசாரிடம் ஏதோ சொல்ல,இரண்டு போலீசார் பிணவறையை நோக்கி ஓடினர்.வேறு சில போலீசாருக்கும் ஏதோ கட்டளைகள் பிறப்பித்தார்.
உடனே அங்கு சூழ்நிலை பரபரப்பாயிற்று.பிணவறையிலிருந்து ஒரு பிணத்தை வெளியே கொண்டுவந்து புறநோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் இடத்திற்கு அருகே இருந்த தாழ்வாரத்தில் கிடத்தினார்கள்.
மீண்டும் உள்ளே சென்று இன்னொரு பிணத்தை…,இன்னும் ஒன்று…ஆயிற்று..,மொத்தம் பதினேழு பிணங்கள்..,

உறவினர்களின் அழுகுரல்கள் உச்சத்தைத் தொட்டது.வயிற்றிலும் வாயிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு அலறும் சப்தம்.அந்த மருத்துவமனை முழுக்க எதிரொலித்தது.
அந்தப்பெரிய போலீஸ் அதிகாரி;,அழுது கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்தியபடியே,இறந்தவர்களைப்பற்றிய விபரங்களை தனது கையிலிருந்த நோட்டு ஒன்றில் எழுதிக்கொண்டே வந்தார்.
தேவகியின் முறையும் வந்தது. “ உங்கபேர் என்னம்மா..?”
“தேவகி”
“இறந்தது யாரு..?”
“என் புருஷன்”
“வயசு.?”
“இருபத்தெட்டு”
“பேரு..?”
“அப்துல் காதர்.”
“என்ன..என்ன சொன்னீங்க..?”
“என் கணவர் பெயர் அப்துல் காதர்..”இம்முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் தேவகி.

-பொள்ளாச்சி அபி
1998