20 ஜனவரி 2012

மனசு..!

ரிலீசாகி சிலவாரங்கள் கழிந்த,புதிய திரைப்படம் ஒன்று நன்றாக இருக்கிறது என்றும்,நாளை மாற்றப்போகிறார்கள் என்றும் கேள்விப்பட்டு.திரையரங்கிற்கு சென்றேன்.
நான் உள்ளே நுழைந்தபோது,அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் அமர்ந்திருந்தனர்.மின்விசிறியின் காற்றோட்டத்திற்கு வாகாய் இருந்த ஒரு இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன்.எனக்கு நேராக, பின்வரிசையில் ஒரு தம்பதி,அமர்ந்திருந்தனர்.இருவருக்கும் ஐம்பத்தைந்து வயதுக்குமேல் இருக்கலாம். அவர்களிருவரும் மிகநெருக்கமாக தலை குனிந்தபடி,யாரையும் லட்சியப்படுத்தாமல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
லேசான இருட்டில் அவர்கள்,மற்றவர்களைவிட்டு ஒதுங்கி அமர்ந்திருந்ததும் சற்றுவித்தியாசமாகத்தான் இருந்தது. ‘இந்த வயதில் ஜோடி போட்டுக்கொண்டு சினிமா பார்க்க வந்திருக்குதுக..பாரேன்.’எனக்கு தோன்றியது போலவே,அவர்களைக் கடந்த,பலருடைய பார்வையிலும் அந்த விமர்சனம் இருந்தது நன்றாகவே தெரிந்தது.
இடத்தைவிட்டு மாற்றி அமர்ந்து கொள்ளலாமா..? யோசித்தபடியே,சுற்றும் முற்றும் பார்த்தேன்.ஊஹ{ம்..எனக்கு முன்பே பலரும் மின்விசிறிக்காக ஆங்காங்கே சீட்டுக்களை ஆக்ரமித்திருந்தனர்.
“சரி..போகட்டும்..நம்ம பாட்டுக்கு சினிமா பார்த்துட்டுப் போகப்போறோம்.மத்தவங்க எப்படியிருந்தா நமக்கென்ன.?” எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டு
அங்கேயே அமர்ந்து கொண்டேன்.
சில நிமிடங்களில்,விளக்குகள் அணைக்கப்பட்டு,படம் தொடங்கிவிட்டது.ஆனால் பின்பக்கமிருந்து எனக்கு புதுவிதமான தொல்லையொன்று ஏற்பட்டது.
ஏய்..இங்க பாரு.இப்பத்தான் பேரெல்லாம் போடறான்.விஜய் ஸ்டைலா, காரைவிட்டு இறங்குறாரு.அவர் போட்டிருக்கிற,பு@ டிரெஸ் சூப்பரா இருக்கு..” என்று ஒவ்வொரு சீனிலும் நடைபெறுவதை கணவன்,அந்தப்பெண்ணுக்கு கமெண்ட்ரியாக ஓட்டிக் கொண்டிருந்தார்.
எனக்கு செம கடுப்பாகிவிட்டது.இரண்டு,மூன்று முறை திரும்பிப் பாhத்து,உஷ் என்றேன்.ஆனால் அவர்கள் சிலவிநாடிகள் மட்டுமே மௌனமாயிருந்துவிட்டு, பின்பு எனது எச்சரிக்கையை,கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
‘தூ..கருமம்..என்ன ஜென்மங்கடா இது..,இண்டர்வெல்லில் ஏதாவதொரு சீட்டுக்கு மாறிவிடவேண்டும்’ என்று சபதம் செய்துகொண்டேன். ‘அது வரை இந்தத் தொல்லையைப் பொறுத்துத்தானாக வேண்டும்.வேறு வழி.?’
அப்பாடா ஒருவழியாக இடைவேளையும் வந்தது.நான் எழும் முன்பாகவே, அந்த நபர் எழுந்துகொண்டு வெளியேறியிருப்பது தெரிந்தது.‘மனைவிக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பதற்கு என்ன அவசரம் பார்.அதிலிருக்கும் அக்கறை மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்பதிலும் இருக்க வேண்டாமா..?’ எண்ணமிட்டபடியே,வெளியேறினேன்.

இரண்டு கப் காபிகளுடன் அந்த மனிதர் எதிரே வந்து கொண்டிருந்தார்.ஒரு விநாடி என்னைப்பார்த்து தயங்கி நின்றதுபோலத் தெரிந்தது.அவரைக் கடக்க முயற்சிக்கையில், “தம்பி ஒருநிமிஷம் நில்லுங்க..,” என்னைப்பார்த்தா அவர் கூப்பிடுகிறார்.? சந்தேகத்துடன் நான் எனக்குப் பின்.யாரையாவது கூப்பிடுகிறாரோ என்று திரும்பிப்பார்த்தேன், “தம்பி உங்களைத்தான் கூப்பிட்டேன்.”என்று எனக்கு மிகஅருகே வந்துவிட்டார். ‘என்ன.?’என்பதுபோல அவரைப் பார்க்க,எனது கண்ணில் மின்னிய எரிச்சல் வெளிப்பட்டிருக்க வேண்டும். “தம்பி நீங்க படம்ஓடும்போது,சிலதடவை உஷ்..உஷ்.னு சொன்னீங்க..எங்களைத்தான் சொல்றீங்க..ன்னு நல்லாவே தெரிஞ்சாலும்,என்னாலே,அவளுக்கு சொல்றதை நிறுத்தமுடியாது..என்னடா இவன் இப்படி பேசறானேன்னு நினைக்காதீங்க..என்மனைவிக்கு இரண்டு கண்ணுமே தெரியாது.அதான்..!.அவர் குரல் லேசாகக் கலங்கியிருந்தது “உங்களுக்கு அது இடைஞ்சலா இருந்தா தயவுசெய்து என்னை மன்னிச்சு,வேற சீட்டுலே போய் உட்கார்ந்துக்குங்க.!”

எனக்கு திக் கென்று இருந்தது.அவருக்கு பதிலாக எதைச்சொல்வது என்றே,சிலவிநாடிகள் எனக்குப் புரியவில்லை. “பரவாயில்லைங்க.. ஒண்ணும் பிரச்சினையில்லே..”என்று அவசரமாக சொல்லிவிட்டு,அங்கிருந்து நகர்ந்தேன்.
குடும்பம் நடத்தற ஆம்பளைங்க,நல்லா இருக்கற பொம்பளையவே ஆயிரம் குற்றம் சொல்லி,அவமானப்படுத்தறதும்,அதிகாரம் செய்யறதுமா இருக்கிற இந்தக் காலத்திலே,இப்படி ஒரு ஜோடியா..? எனக்கு வியப்பு அதிகமாகி,அவர்மேல் மரியாதை வந்துவிட்டது.

இப்போது,இடைவேளை முடிந்து படம் தொடங்கியவுடன்,அவரும்,மனைவிக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். ‘ஆனால்,இவர் இன்னும் அழகாக இதை விளக்கிச் சொல்லியிருக்கலாமே..!’என்று என் மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

16 ஜனவரி 2012

நீ இல்லாவிடில்..!








மரம் எனும் பெண்
மண்ணுக்கு அணிகலன்

விண்ணிலிருக்கும் மாசுகளை
விரட்டிவிடும் காவலன்

மழையைக் கொண்டுவரும்
மாபெரும் மந்திரவாதி.

மின்னிணைப்பு தேவைப்படாத
இராட்ஷச விசிறி

மண்அரிப்பை தவிர்த்திடும்
மாயநூற் கண்டு.

அமிலவாயுவை உள்வாங்கி
உயிர்தரும் மந்திரக்கோல்.

மூச்சிருக்கும்வரை மரத்தை
நினைக்க வேண்டும்.

இதில்லாவிடில் மூச்சிருக்குமா..?
யோசிக்க வேண்டும்..!

12 ஜனவரி 2012

ஆராய்ச்சி..!

விண்ணில் ஏவும் ராக்கெட்டின்
வேகத்தை அதிகப்படுத்த
விஞ்ஞானிகள் ஆலோசனை..,
அதனால்
விலைவாசியின் வேகத்தைக்
குறித்து ஆராய்ச்சி..!

வாழ்க்கை சூத்திரம்.!

நடக்கவும்,பேசவும்
பெற்றோர் கற்றுத்தந்தபின்
தொடரும் வாழ்க்கை..

வாழும் வகையறிய
மற்றவை கற்க..
கற்றுக்கொடுப்பார் யாருமில்லை..

பின்...
வாழ்க்கை எனும் சூத்திரம்
கற்றுக்கொடுத்து வரப்போவதில்லை

வாழ்பவர்களே பாடம்
அனுபவங்களே குறிப்புகள்.
இதில் கற்பவை கற்கவும்,
அல்லது வெறுக்கவும்
ஆயிரமுண்டு..
அதுவே உனக்குத் தேர்வு..

வரலாற்றைக் கடந்து-நீ
வரலாறு படைத்துவிட்டால்
அதுவே உனது வெற்றி..!
----------------

யார் பெரியவன்..?

கல்லையும் மண்ணையும்
விண்ணையும்,ஒளியையும்
காற்றையும்,நீரையும்
கதிரவனையும்,நிலவையும்
அண்டமுடியாத அண்ட சராசரங்களையும்
படைத்த ஆண்டவன்தான் பெரியவன்..
எனில்..,
அந்த ஆண்டவனையும் படைத்த
மனிதன் அவனிலும் பெரியவனே..!
------------

நான் கடவுளாயிருந்தேன்..!

இதற்கு முன்பு நான்
கடவுளாயிருந்தேன்.!

சூன்யவெளியில்
நிகழ்வதனைத்தும்
சூன்யமாகவே இருந்தது.
சூரியனைப் படைத்தேன்.
கோள்களைப் படைத்தேன்
அதன் இயக்கங்களையும்
படைத்தேன்!
பலகோடி ஆண்டுகள்
கழிந்தது.!

ஓரறிவுமுதல் ஐந்தறிவு வரை
உயிர்களைப் படைத்தேன்..!
உள்ளத்தில் அப்போதும்
முழுமையில்லை..!

ஆறறிவுள்ள மனிதரைப்
படைத்தேன்-அவர்களுக்கு
குடும்பம் என்ற அமைப்பையும்
படைத்தேன்..!

உணவுக்கான உழைப்பைக்
கொண்டுவிடப் பணித்தேன்.
அவனோ..செல்வத்தைப்
படைத்துக் கொண்டான்.

செல்வத்தைப் பாதுகாக்கவென
குழு,கணம்,ஆட்சி,சாதி,
எனப் படைத்துக் கொண்டான்.

பின்னர் அவனின் வரலாறுகள்
அனைத்தும் ரத்தம் சிந்தும்
போர்களாகவே மாறிப்போயிற்று.
அன்பை,அகிம்சையை
போதிக்கச் சொன்ன
என்கைகளிலும்-அவன்
ஆயதங்களைத் திணித்தான்.!

இன்றுவரை அதுவே
தொடர்கிறது..!

இதற்கு முன்புவரை நான்
கடவுளாக இருந்தேன்..!

ஆனால் இப்போது..
நான் கடவுளாக இல்லை
மனிதனின் வார்த்தையிலேயே
சொல்வதெனில்
NON கடவுளாகிவிட்டேன்..!

09 ஜனவரி 2012

மனசு துடிக்குது..!

டீக்கடையில் தனி டம்ளரு.
ஓட்டலிலும் வெளியேதான் சோறு.

பொறந்ததிலேருந்து வேலை
பண்ணாடியோட தோப்புலே
ஆனாஇதுவரை நொழைஞ்சதில்லே
அவரோட வீட்டுலே

கொத்தடிமையா பட்டுவர்ற
கொடுமையெல்லாம் சொல்லிப்புட
கோவிலுக்கும் போனேன்.
கோபுரத்தைத்தவிர ஒண்ணும்
பாக்கமுடியல்லே..!

எப்படியாவது மரியாதை
வேணும்னுங்கிறதுக்காக
சபரிமலை அய்யப்பசாமிக்கு
மாலை போட்டேன்.

மலைக்குபோய்ட்டு வந்தும்
மாற்றம் ஒண்ணும் நடக்கலே..
மரியாதைக்காக வருஷம்பூரா
மாலைபோட செலவு நமக்கு
கட்டுப்படியாகலே..!

மாதாக் கோயிலுக்குப்
போனவங்களுக்கு
மாற்றம் நடக்குதுன்னு
சொன்னாங்க..!

மாதம்பூரா ஜெபத்துக்கு
வரச்சொன்னா பொழப்பு
நடக்குமா..? புரியலே..!

யாரோ சொன்னாங்கன்னு
அப்துல்காதர் ஆகிப்புட்டேன்.
ஆடுதிருடிட்டான்னு கேசு
கொடுத்தது யாருன்னு
தெரியல்லே..

இப்ப அமாவாசையின் மகன்
அப்துல்காதர் ஜெயிலில்
இருக்குறேன்..!

இங்கே எல்லாருக்கும்
ஒரே துணிதான்
பேரே இல்ல-வெறும்
நம்பருதான்..!

வெளிய பாக்காத சமத்துவம்
இங்கேயிருக்குது..
உள்ளேயே இருந்துவிட
மனசு துடிக்குது..!

08 ஜனவரி 2012

அப்ப மட்டும் இனிச்சதா.? –சிறுகதை-பொள்ளாச்சி அபி

“இந்தா சுப்ரமணி,இந்த எல்லைக்கல்லுல இருந்துதான் நம்ம சைட்டு. இந்தப்புதரையெல்லாம் வெட்டிக் கிளீன் பண்ணிடு.அப்புறமா அஸ்திவாரத்துக்கு மார்க் பண்ணி,வேலையை ஆரம்பிச்சிடலாம்..”இஞ்சினீயர் சொன்னதற்கு, “சரிங்க” எனத்தலையாட்டிவிட்டு,புதர்களை சுத்தமாக்கத் தொடங்கினான் சுப்ரமணி.

சுப்ரமணிக்கு இதுதான் வேலை என்றில்லை.கூலிவேலை எதுவானாலும் செய்துகொண்டிருந்தவன்,கடந்த சில மாதங்களாக இந்த இஞ்சினீயரிடம் சேர்ந்ததிலிருந்து,தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டிருந்தது.வெறும் தரையாக இருக்கும் இடத்தை சுத்தப்படுத்துவதிலிருந்து தொடங்கி,அங்கு கட்டிடமாக நிமிரும்வரை,மம்பட்டியாள் வேலை,சித்தாள் வேலை என எதுவாக இருந்தாலும்,மறுபேச்சு இல்லாமல்,சுப்ரமணி சொல்லும் ஒரே வார்த்தை “சரிங்க”.

இதனால் இஞ்சினீயருக்கு சுப்ரமணியை மிகவும் பிடித்துவிட்டது.எப்போதும் அவனுக்கு மட்டும் வேலை இருக்கும்படியாக பார்த்துக் கொண்டார்.
மேலும்,சுப்ரமணியின் மனைவி லட்சுமியும்,கடுமையான உழைப்பாளி.எப்போதும் கணவனுக்கு ஒத்தாசையாக வேலைக்கு வந்துவிடுவதால்,கட்டிடத்தில் அவர்கள் இருவரும்தான் நம்பிக்கையான ஆட்கள்.கட்டுமானப் பொருட்கள் எல்லாம் அவர்களுடைய பொறுப்பிலேயேதான் இருக்கும்.இதுவரை திருட்டு பெரட்டு எதுவும் இல்லை.
சுப்ரமணி வெட்டிப்போட்ட புதர் குப்பைகளை அள்ளி,ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டிவிட்டு வந்தாள் லட்சுமி.

அஸ்திவாரம் தோண்டப்பட்டு,மட்டம் பார்த்து,அடுக்கப்பட்ட செங்கற்களால் சுவர்கள் மெல்லமெல்ல மேலெழுந்து கட்டிடத்திற்கு உயிர் கொடுத்தன.
மூன்று பெட்ரூம்களுடன் கூடிய அந்த வீடு,அழகான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் உரிமையாளரான சுந்தரம்,மிகுந்த அக்கறையோடு,கன்னிமூலை, ஜலமூலை,வாயுமூலை,அக்னி மூலை எனப்பார்த்து,பார்த்து,வாஸ்துப்படி அமையவேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.தினமும் காலையில் பூஜை செய்யாமல் மற்ற எந்த வெளிவேலைக்கும் போகமாட்டார் என்பதால்,பூஜை அறையின் உள்ளேயும்,வெளியேயும்,எந்தக்குறையும் இருக்கக் கூடாது என்று அடிக்கடி இஞ்சினீயரிடம் சொல்லிவந்தார்.

வீட்டைப்பொறுத்தவரை,சுந்தரம் எந்தவிதமான அபிப்ராயத்தை சொன்னாலும், இஞ்சினீயர்,சுப்ரமணியை உடனே கூப்பிட்டுக் கொள்வார்.ஏனெனில் இஞ்சினீயரே,சிலபோது வேலை மும்முரத்தில் ஏதேனும் கவனிக்காமல் விட்டுவிட்டால்,அவ்வாறு நடக்க சுப்ரமணி விடமாட்டான்.வெகு அக்கறையாய் கவனித்துக் கொள்வதில் சமர்த்தன்.
வீடு ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்துவிட்டிருந்தது.இப்போதெல்லாம் சுந்தரமும் இங்குநிறைய நேரத்தை செலவிட்டுப் பார்வையிட்டு வருகிறார்.

இதனிடையில் தங்களுடன் வேலை செய்துவரும்,பாக்கியம் அடிக்கடி லீவு எடுத்துக்கொள்கிறாள்.அந்த நாட்களில் சுந்தரமும் வருவதில்லை.அவ்வப்போது சுந்தரமும்.பாக்கியமும் சிரித்தபடி கிசுகிசுப்பாக பேசிக் கொள்வதும்,இஞ்சினீயர் வந்துவிட்டால்,அவர் போகும் வரை,இருவரும் ஏதும் பேசிக் கொள்வதில்லை என்பதையும் அடிக்கடி லட்சுமி கவனித்துவந்தாள்,அதைப்பற்றி பாக்கியத்திடம் அவள் கேட்பதில்லை.திருமணம் முடித்து,இரு பெண் குழந்தைகளையும் அளித்துவிட்டு,டைபாய்டு காய்ச்சலில் இறந்துபோனான் கணவன்.பாவம் அவள்.!

மேலும் சிலநாட்கள் கழிந்தது.
அந்த வீட்டின் பதினொரு அறைகளிலும்,சுப்ரமணி,லட்சுமியின் கால்கள் படாத இடமில்லை.ஒவ்வொரு அடியிலும் அவர்களின் உழைப்பு இருந்தது. இவர்களைப் போலவே,மேஸ்திரி,மம்பட்டியாள்.சித்தாள் என ஆண்களும் பெண்களுமாக, பத்துக்கும் மேற்பட்டவர்கள்,தொடர்ந்து வேலை செய்ததால், இன்னதேதியில் முடித்துதருகிறோம் என்று,சுந்தரத்திடம்,இஞ்சினீயர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற முடிந்தது.
இங்கு வேலைசெய்த ஆண்களுக்கு வேட்டி,துண்டு,பெண்களுக்கு சேலை ஆகியவற்றை பணத்தோடு வைத்து,வீட்டுஉரிமையாளரான சுந்தரம் வழங்கவேண்டும் என்றும் இஞ்சினீயர் சொன்னதற்கு சுந்தரமும் சரியென்று சொல்லியிருக்கிறார்.
புதுமனைபுகு விழாவிற்கு குறிக்கப்பட்ட நாளும் வந்தது.வீடு அங்கங்கே தீட்டப்பட்ட அழகான வண்ணங்களில்,கம்பீரமாக நின்றிருந்தது.சுப்ரமணிக்கு அந்த வீட்டைப்பார்க்கப் பார்க்க பெருமையாக இருந்தது.பின்னே,அக்கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் அவனது உழைப்பு இருக்கிறதல்லவா..?.

சுந்தரத்தின் வீட்டுவழக்கப்படி எல்லாவிசேஷங்களும் முடிவுற்றதையடுத்து, ஏறக்குறைய வந்திருந்த உறவினர்கள் எல்லாம் கிளம்பிச் சென்றபின் வேலையாட்கள் அழைக்கப்பட்டனர்.
சுந்தரம்,அவரது மனைவி,உறவினர்கள் என இருந்த அந்தப்பெரிய ஹாலுக்குள் நுழைவதற்காக,சுப்ரமணி,லட்சுமி,பாக்கியம் என அனைவரும் சென்றபோது, இவர்களைக் கவனித்த சுந்தரம் திடுதிடுவென்று எழுந்து ஓடிவந்தார்.
“எல்லாரும் ஒரு நிமிஷம் இங்கியே நில்லுங்க..,”என்று கூறிவிட்டு,மீண்டும் உள்ளே ஓடினார்.அந்த இடைவெளியில் யாரோ ஒரு பெருசு,எல்லாம் என்ன ஜாதியோ..கொலமோ..? இதுகளையெல்லாம் எப்படி வீட்டுக்குள்ளே வுடறது..? என்று,இன்னொரு பெருசிடம் சொல்வதும் கேட்டது.

சிலவிநாடிகளில் ஒரு டேபிள் வெளியே தூக்கிவந்து போடப்பட்டு
அதன்மீது வேட்டி,சேலைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டது.ஒவ்வெருவராக அழைத்து,உடைகளின் மீது நூறுரூபாய் வைத்துக் கொடுத்தார் சுந்தரம்.
லட்சுமியின் கையில் உடைகளைக் கொடுத்தபோது,அவளது கையை சிலவிநாடிகள் வேண்டுமென்றே சுந்தரம் தீண்டியது தெரிந்தது.நெருப்புப் பட்டாற்போல கையை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள் லட்சுமி.
இன்னும் சிலர் உடைகளை வாங்கவேண்டியிருந்த நிலையில்,பாக்கியம் அவ்விடத்திலிருந்து சற்று தள்ளி,தனியே நின்று கலங்கியபடி இருப்பதைக் கண்டாள் லட்சுமி.
“ஏய்.ஏண்டி இங்க நின்னு தனியா அழுதுட்டிருக்கிறே..?.”
பாக்கியம் பதில் சொல்லத் தயங்குவது தெரிந்தது.
“சும்மா சொல்லுடீன்னா..,”
“வேலைக்கு வந்த கொஞ்ச நாள்லேயே,இந்த வீட்டு ஓனர்,அடிக்கடி என்னை வெளியே கூட்டிட்டு போவாருக்கா..,அப்புறம் உடுமலை,பழனின்னு அடிக்கடி நிறையதடவை ரூம் போட்டு எல்லாம் தங்கியிருக்கோம்.ஆனா இப்ப நம்மளை வீட்டுக்குள்ளே விடறதுக்குகூட அவருக்கு மனசில்லாமே..,சாதியைச் சொல்லி,வெளியவே நிக்கவெச்சு, பிச்சைக்காரங்க மாதிரி துiணியைக் கொடுக்கிறாரு.அத நினைச்சேன்.அதுதான் அழுகை வந்திடுச்சு.!

விபத்து..! - சிறுகதை-பொள்ளாச்சி அபி

“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒருவாரமா மேட்டுத்தோப்பு பன்னாடிக்கு கண்ணு தெரியறதில்லையாமா..?”
“யாரு சொன்னா..? முந்தாநேத்து அவரு காட்டுலே டிராக்டரு ஓட்டிக்கிட்டு இருந்தாரே..?”

“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒரு வாரமா மேட்டுத்தோப்பு பன்னாடிக்கு பைத்தியம் புடிச்சிச்ருச்சுன்னு சொல்றாங்க அப்படியா..?”

“ஆமாமா..வீட்லேயும் எப்பப் பார்த்தாலும் பொண்டாட்டி,புள்ளைகளோட மல்லுக்கட்டிகிட்டே திரியறாராம்..”

“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒரு வாரமா மேட்டுத்தோப்பு பன்னாடி,ஊருக்குள்ளே வந்தாலும் முக்காடு போட்டுகிட்டுதான் போறாராமா..?

“இல்லையே,நம்ம ஊரைத் தாண்டி,நான் பாக்கும்போது,முக்காடு எதுவம் போடலியே..!”
கடந்த ஒருவாரமாக,அந்தச்சேரி முழுக்க இப்படித்தான் பரபரப்பான பேச்சு நிலவிக் கொண்டிருக்கிறது.நூறு ஏக்கராவிற்கு சொந்தக்காரரான மேட்டுத்தோப்பு பன்னாடியின்,திடீர் மாற்றத்திற்கான காரணம் குறித்து,அந்தச்சேரியில் யாருக்கும் .
உண்மையான தகவல் எதுவும் தெரியவில்லை.ஆளாளுக்கு தெரிந்த காரணங்களைச் சொல்லிக் கொண்டு,வியப்பிலாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறான பேச்சுக்கள் மாரிமுத்துவின் காதுக்கும் வந்தது.
அப்போதெல்லாம்,மாரிமுத்து தனக்குள்ளும்,சில சமயம் தள்ளிப்போய் நின்று வாய்விட்டும் சிரித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவான்.
இப்போதும் அப்படித்தான்,தன்னாசிக் கிழவனும்,முருகேசனும்,இந்த விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே,தன்னைக் கடந்ததில்,அன்றைய தினம் நடந்ததை மீண்டும் ஒரு முறை மனதுக்குள் அசைபோட்டான்.

அன்றைக்கு,உச்சி வெயில் மண்டையைப் பிளந்ததில்,மாரிமுத்துவிற்கு எரிச்சலாய் வந்தது.நிற்க நிழலில்லாத இந்த பஸ் ஸ்டாப்பிற்கு ஒரு கூரையைப் போட்டுக் கொடுக்கச் சொல்லி ஒவ்வொரு திங்கள் கிழமையும் சப்கலெக்டருக்கு மனு கொடுத்து ஓய்ந்ததுதான் மிச்சம்.இதுவே நகர்ப்புறமாய் இருந்தால் தனியார் கம்பெனிகளின் விளம்பரங்களோடு,இரவிலும் எரியும் விளக்குகளோடு எப்போதோ கூரை அமைக்கப்பட்டிருக்கும்.
வெறும் முப்பது குடிசைகள் மட்டுமே உள்ள இந்த ஊரில் வசிப்பவர்களும், எதையும் படிக்காத அன்றாடங்காய்ச்சிகள்..இவர்களை வைத்து,எதை விற்று லாபம் பார்க்கமுடியும்.?
அதனால்,இந்தப்பட்டிக்காட்டுக்கு தனியார் கம்பெனிகளும் வரத்தயாரில்லை.

மாரிமுத்துவின் செருப்பில்லாத கால்களில் சூடு ஏறியது.கால்களை சிலநிமிடங்கள் மாற்றிமாற்றிவைத்து,சமாளிக்கப் பார்த்தும்,வெப்பம் குறையவில்லை..,நல்லவேளை,பத்தாம் நம்பர் தனியார் பஸ், தூரத்தில் வருவது தெரிந்தது.மாரிமுத்து உடனே,தனது ஊருக்குச் செல்லும் அந்த எட்டடி இட்டேரிப் பாதையைத் திரும்பிப் பார்த்தான்.யாரேனும் ஊர்க்காரர்கள் வந்தால் சீக்கிரம் வரச்சொல்லிவிட்டு,பஸ்ஸை நிற்கச்சொல்லலாமே..! யாரும் வரவில்லை.

பேருந்து அவனுக்கு அருகாமையில் வந்தபோது,அதனை நிறுத்தச் சொல்லி கைகாட்ட,நிற்பதற்காக வேகத்தைக் குறைப்பதுபோல் வந்து,விர்..ரென்று, நிற்காமலேயே சென்றது. இத்தனைக்கும் அந்த பஸ்ஸின் கண்டக்டர் படிக்கு அருகாமையில் நின்று தன்னைக் கண்டிப்பாக பார்த்திருக்க முடியும்.ஆனாலும் அந்த பஸ் நிற்கவில்லை.அப்படிப்போகும்போது அந்த டிரைவரின் முகத்தில் ஏதோ கிண்டலான சிரிப்பு இருந்தது போல மாரிமுத்துவிற்கு தோன்றியது.

‘சனியன் பிடிச்சவங்க..ஒத்த மனுசன் நின்னா,பஸ்ஸை நிறுத்தறதுக்குக் கூட சங்கடமா..?.இதுக்கு டீசல் அதிகமாயிடுமா.?..இல்லை.., இவனுகளுக்கு நம்மை ஏத்திட்டுப்போறதுக்கு மனசு இல்ல..அதான்.இவனுகளை...’ எண்ணமிட்ட மாரிமுத்துவிற்கு,வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.இது அவ்வப்போது வழக்கமாய் நடப்பதுதான் என்பதும் அவனுக்கு தெரிந்தே இருந்தது.

‘போச்சு..இந்த வெயில்ல இன்னும் கால்மணிநேரம் நிக்கணும்.பின்னாலே கவர்மெண்ட்டு வண்டி வந்தாதான் உண்டு.அந்த வண்டியில் ஏறினால் அதுபோடும் சப்தத்தில்,எது எப்ப கழண்டு உழுகுமோன்னு தெரியாது.போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு போக முடியுமான்னும் தெரியாது..
உக்கும்.. அந்த வண்டி மொதல்லே வருமான்னே சந்தேகம் அப்புறம்தானே போகுமான்னு பார்;க்கணும்’ மாரிமுத்துவிற்கு பல விதமாய் எண்ணங்கள் ஓடின.வெயிலின் கொடுமை தெரியாமலிருப்பதற்கு,இப்படி யோசித்துக் கொண்டு இருப்பதும் நல்லதாகவே பட்டது.
ஆனாலும்,வெயில் அவனை வறுத்து எடுத்ததில்,உடலெங்கும் வியர்வை பொங்கி,சட்டையின் பின்புறம் முதுகோடு ஒட்டிக்கொண்டது.நெற்றியிலும் முத்துமுத்தாக அரும்பி நின்றன வியர்வைத்துளிகள்.உழைப்பால் கறுத்துத் திரண்டிருந்த உடலில்,நல்ல சதைப்பிடிப்புடன் கூடிய கைகளும்.கால்களும் அவனது ஆரோக்கியத்தை உலகுக்கு அறிவிப்பதாகவே இருந்தன.
இந்த ஊரைச்சுற்றியுள்ள பன்னாடிகளின் காடுகள்,தோட்டங்களில்,அவசரம் கருதி,வெயிலின் உக்கிரத்தை பொருட்படுத்தாமல்,அவன் பலமுறை வேலை செய்திருக்கிறான்.அப்போதெல்லாம் வேலை செய்யும் வேகத்திற்கு,வெயிலின் சூடு உறைத்ததேயில்லை.இப்போது வெறுமனே வெயில் காய்வதுதான் கடுப்பாயிருக்கிறது.
அப்பாடா..மாரிமுத்துவின் நல்லநேரம்.தூரத்தில்,சாலையின் தார்க் கறுப்பில்,கானல்நீருடன் கலந்து உறவாடி ஓவியம்போல அசைந்து வந்துகொண்டிருந்தது கவர்ண்மென்ட் பஸ்.
அருகே வந்ததும் எதற்கும் இருக்கட்டுமே என்று முன்னெச்சரிக்கையாக கைகாட்டினான் மாரிமுத்து.நின்ற பேருந்தில் பின்கேட் வழியாக ஏறிக் கொண்டான்.கண்டக்டர் முன்கேட்டருகே நின்று கொண்டு டபுள் விசிலடித்ததும், திடீரென்று ஒரு தொழிற்சாலையின் கனரக எந்திரங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இயங்குவது போன்று சப்தம் எழும்பியது.டிரைவர் அந்தப்பேருந்தின் கியரைப் போடுகிறாரா..?,அதன்மீது தொங்குகிறாரா..? என்றே தெரியவில்லை.ஆனால் டிரைவர்,“தா..ளிக வேற வண்டியைக்கொடுங்கடான்னா..இந்த ரூட்டுக்கு இதுவே போதும்னு சொல்றானுக..தே…மகனுக” என்று கெட்டவார்த்தையில் திட்டுவதும் தெளிவாகத் தெரிந்தது.அதற்கப்புறமும் சிலவிநாடிகள் கழித்துதான் அந்தப்பேருந்து அங்கிருந்து மெதுவாக நகர்ந்தது.
பேருந்தில் ஏறியவுடன்,மேல் சட்டைப்பபையிலிருந்து,பொள்ளாச்சி போவதற்கான சரியான சில்லறையைப் பொறுக்கி கையில் வைத்துக்கொண்டான். இல்லாவிட்டால்,எரிச்சல் ஊட்டுவதற்காகவே,இந்த வெயிலில்,தான் வீட்டில் உட்காராமல் வந்ததுபோல கத்துவார் கண்டக்டர்.
டிக்கெட் வாங்குவதற்குள்,உட்காருவதற்கான இடத்தை,தேர்வு செய்துவிடலாம் என்று பேருந்தினுள் பார்வையை ஓடவிட்டான்.பேருந்தில் எக்கச்சக்கமாக கூட்டம் இருக்கும்போது,கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொள்ளப் பறக்கும் ஜனங்கள், அதுகாலியாக இருக்கும்போது மட்டும்,எல்லா சீட்டுகளிலும் தனித்தனியாக உட்காருவதைத்தான் விரும்புகிறார்கள்.இப்போதும் அப்படித்தான்.எல்லா சீட்டுகளிலும் ஒவ்வொரு ஆளாக உட்கார்ந்து இருந்தார்கள்.
மிகவும் தாட்டியாக இல்லாமல்,நடுத்தர உடம்புடனிருந்த ஒருவர் அமர்ந்து இருந்த சீட்டினைத் தேர்வு செய்து அமர்ந்து கொண்டான்.பேருந்து நகரத் துவங்கி,சற்று வேகம் கூடியவுடன்,முகத்தின் மீது மோதிய காற்றில் சற்றே ஆசுவாசம் ஏற்பட்டது.இதுவரை வெயிலில் காய்ந்ததற்கு,இப்போது தன்மீது படும் லேசான வெப்பக்காற்று எவ்வளவோ பரவாயில்லை என்றிருந்தது மாரிமுத்துவிற்கு.
வலப்பக்கம் உட்காந்திருந்த ஆள் அதுநேரம் வரை,முன்சீட்டின் கம்பிகள் மீது கைகளைவைத்துக்கொண்டு,தலையை அதன்மீது சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.பேருந்தின் சீரான ஓட்டத்தின் காரணமாக,மெதுவாக தன்பக்கம் சரிந்த அந்தஆளை சற்றே அவன்பக்கமாக நகர்த்திவிட்டான் மாரிமுத்து.அது அவனை விழிக்கவைத்துவிட்டது போலும்.சடக்கென்று விழித்த அவன் முதலில் தனது மேல்சட்டைப்பாக்கெட்டைத் தொட்டுக்கொண்டு,யாரோ அவனிடமிருந்து பணத்தை திருட வந்திருப்பது போன்று,அதன்மீதே தன் இடதுகையை வைத்துக் கொண்டுதான்,மாரிமுத்துவைப் பார்த்தான்.அப்போதுதான் மாரிமுத்துவிற்கும் தெரிந்தது.அது மேட்டுத் தோப்பு பன்னாடி என்பது.

உடனே மாரிமுத்துவின்,மயிர்க்கால்கள் எல்லாம் எச்சரிக்கை உணர்வால்,ஏற்பட்ட பயத்தால் நிமிர்ந்து கொண்டது. ‘இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல், தூங்கிவிட்ட மனுசன் பக்கத்திலே நாம் உட்கார்ந்துவிட்டோமே..! இங்கேயே உட்காரலாமா..? வேண்டாம்,எழுந்து கொள்ளலாம்.’ மாரிமுத்துவின் மூளை செய்த முடிவின்வேகத்திற்கு உடல் கட்டுப்படும் முன்பே..,பளார் என்று விழுந்தது ஒருஅறை.மேட்டுத் தோப்பு பன்னாடிதான் கண்களில் ஆத்திரம் கொப்பளிக்க, “சின்னசாதி நாயி,என்ன தெகிரியமிருந்தா,எனக்கு சமதையா உக்காருவே..?.” எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து விட்டான் மாரிமுத்து.படக்கென்று சீட்டினை விட்டு எழுந்தவன், ‘இப்போது என்ன செய்வது.?’ என்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
பன்னாடிக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லை. “வெள்ளையும்,சொள்ளையுமா எங்களை மாதிரி துணிபோட்டுகிட்டா,நீ எங்காளு ஆயிடுவியாக்கும்..இமருவாதை தெரியாத நாயி..” அவரது வார்த்தைகளில் பலநூற்றாண்டுக் கால, எஜமானத்தனம் தெரித்தது.மாரிமுத்துவின் உடல்வலுவிற்கு,ஓங்கி ஒரேயொரு அறைவிட்டால்கூட போதும்,பன்னாடியின் முகம் முதுகுப்புறமாகத் திரும்பிக் கொள்ளும்தான்.
ஆனால்,தனது தந்தையின் காலத்து அடிமைத்தனம்,அப்படியே ஊறிப் போனதிலும்,கடவுளுக்கு நிகரானவர்கள் எஜமானர்கள் என்று கற்பிக்கப்பட்டிருந்ததையும் விட்டு வெளிவர முடியாமல், அவரது ஏச்சுக்களை வாங்கிக்கொண்டு,மாரிமுத்து இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

பேருந்தில் உள்ளவர்களின் பார்வையெல்லாமே இவர்கள் இருவர் மீதே இருந்தது.மாரிமுத்துவிற்கு அவமானம் பிடுங்கித்தின்றாலும்,அங்கிருந்து நகர்ந்தால் அது எஜமானரை அசட்டை செய்வதுபோல..,அப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதால் வேறுவழியின்றி,தாங்கிக் கொண்டான்.அப்போதுதான் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில்,வழக்கத்திற்கு மாறாக,“கட்ர,கட்ர”என்று விநோதமான,ஏதோ வலுவான ஒன்று உடைவதுபோல ஒரு சப்தம்.. அவ்வளவுதான்.பேருந்து,டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது,சாலையின் இருபுறமும் வேகமாக அலைபாய்ந்தத்pல் பயந்துபோய் பேருந்துக்குள் இருந்த ஆண்களும்,பெண்களும் அலறினர்.பெண்களின் குரலை மீறி பன்னாடியும் ஏதோ பயத்தில் கத்தினார்.
சிலவிநாடிகள் மட்டுமே நீண்ட இந்த களேபரம்,சாலையின் ஓரத்திலிருந்த புளியமரத்தின் மீது, “டொம்”;என்று மிகப்பெரிய சப்தத்துடன் மோதி நின்றதில்,முடிவுக்கு வந்தது.டிரைவர் ஸ்டியரிங்கின் மீதே கவிழ்ந்து விட்டார். முன்புறத்திலிருந்த கண்ணாடி சுக்குநூறாக உடைந்து தெறித்ததில்,ஏராளமான துண்டுகள் டிரைவரின் தலையில் மோதி,ரத்தத்தில் நனைந்து நின்றிருந்தது.
பேருந்துக்குள் இருந்த பலருக்கும் மண்டை உடைந்தது முதல் எலும்பு முறிவு வரை ஏற்பட்டதில்,கூச்சலும்,அழுகையும் மிகுந்தது.மாரிமுத்து ஏற்கனவே நின்று கொண்டிருந்ததால் பேருந்து நிலைதடுமாறத் துவங்கும்போதே,அனிச்சைச் செயலாக,இருபறத்திலுமிருந்த கம்பிகளைப் பிடித்துக்கொண்டு,காயம் படாமல் சமாளித்துக் கொள்ளமுடிந்தது.பன்னாடி,சீட்டின் முன்புறக் கம்பியில் மோதியதில், மண்டை பிளந்துவிட்டது போலிருக்கிறது.முகமெல்லாம் ரத்தம் வழிய மயக்கமாகிக் கிடந்தார்.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை நிறுத்திய சிலர்,பரபரப்புடன் உடனடியாக கையில் கிடைத்தவர்களை எடுத்து பேருந்துக்கு வெளியே படுக்கவைத்தனர். சிலர் போலீசுக்கும்,ஆம்புலன்சுக்கும் போன் செய்தனர்.சில நிமிடங்களில் அங்கு வந்த இரண்டு ஆம்புலன்ஸ்கள்,பன்னாடி உட்பட அனைவரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு,அரசுமருத்துவமனையை நோக்கி விரைந்தன.காயம் பட்டவர்களை ஆம்புலன்சில் ஏற்றிவிட்ட கையோடு, இறக்குவதற்கான உதவிகள் செய்வதற்காக மாரிமுத்துவும் அதில் ஏறியிருந்தான்.

கிடைத்த அறைகளில்,இருந்த பெட்டுகளில் அட்மிட் செய்யப்பட்ட பயணிகளுக்கு, பல டாக்டர்களும் இணைந்து அவசர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். பன்னாடிக்கு முன்மண்டையில் பிளவு ஏற்பட்டதில்,ஒன்பது தையல்கள் போட வேண்டியிருந்தது.கையில் பிராக்சர் வேறு.ஆபரேசனும் தேவையாயிருந்தது. மேலும் ஏராளமான இரத்தம் சேதமாகிவிட்டதால்,அவருக்கு உடனடியாக ஒருயூனிட் ரத்தமாவது ஏற்றவேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட, “இந்த ரூமிலே இருக்கறவரோட வந்தது யாருப்பா..?.”ஒரு குண்டு நர்ஸ் கூவிக்கொண்டே வெளியே வந்தாள்.
அறையின் வாசலருகே நின்றிருந்த மாரிமுத்துவை நோக்கி,யாரோ கைகாட்ட, “இங்க வாங்க..இவருக்கு ஓ.பாசிட்டிவ் ரத்தம் கொடுக்கணும்.இப்போதைக்கு ஸ்டாக் இல்லே.உங்களது என்ன குரூப்னு தெரியுமா..?.”
“தெரியாதுங்க..”
“சரி வாங்க டெஸ்ட் பண்ணிரலாம்..”என்று அவசரமாக மாரிமுத்துவை அழைத்துக் கொண்டு,மருத்துவமனையின் மற்றொரு அறைக்குச் சென்றாள்.
மாரிமுத்துவின் ரத்தம் எடுக்கப்பட்டு,சோதனை செய்யப்பட்டதில்..என்ன ஒரு அதிசயம்.ஓ.பாசிட்டிவ்.
“ஹோ..ஐயாம் லக்கி..”கூவிய நர்ஸ்,அடுத்தபடியாக ஒரு யூனிட் ரத்தம் எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தாள்.அவள் கத்தியதைக் கேட்ட மாரிமுத்து, “ஏங்க,எனக்கு ரத்தம் எடுக்கப்போறீங்களா..? அதுசேருமா..?”

“ஆமாப்பா உன்னோடதும்,அவரோடதும் ஒரே ரத்தம்தான்..”
“நிசமாங்களா..?”
“உனக்கென்ன இப்ப அதிலே சந்தேகம்..?”
“சந்தேகமில்லீங்க..ஒரே ரத்தம்னு சொன்னீங்கல்ல,அத நெனச்சுக்கிட்டேன்.”
“ஏம்ப்பா நீயும் மனுசன்தானே..!” நர்ஸ் கேட்டபோது,பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டான் மாரிமுத்து.

04 ஜனவரி 2012

சபலம்.! சிறுகதை

காலிங்பெல் அழுத்தப்பட்ட சப்தம் கேட்டு கதவைத் திறந்த,சபேசன்.தங்கள் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் ராமகிருஷ்ணன் நிற்பதைக் கண்டு குழப்பமானான். முகத்தில் கேள்விக்குறியுடன், இன்றைக்கு என்ன.? என்பதுபோலப் பார்த்தான்.

தனது கையில் வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளைக் காண்பித்த ராமகிருஷ்ணன்,சார்,மாடியிலேருந்து பறந்து கீழே விழுந்தது.யாருதுன்னு தெரியல்லே.அதான் உங்களைக் கேட்டுட்டு,மேல் வீட்டுக்குபோலாம்னு வந்தேன்.

அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது,செல்போன் ஒலித்தது.அதை எடுத்துப் பேசும்போது,மேல் சட்டைப்பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்திருக்குமோ..?. அவன் தனது சட்டைப்பாக்கெட்டை சோதித்துக் கொண்டான்.பத்துரூபாயாக சில தாள்களும்,சில்லறை நாணயங்களும் கிடந்தன.அதில் நூறு ரூபாயாக வைத்த நினைவே இல்லை.

உதட்டைப்பிதுக்கியபடியே,என்னோடது இல்லையப்பா..என்றான் சபேசன்.
ராமகிருஷ்ணன் படியேறி மேலே சென்றார்.

கிரவுண்ட் ப்ளோரில் முதல் வீடு என்பதால்,எந்தப்பொருள் கையில் கிடைத்தாலும்,சபேசன் வீட்டுக்காலிங் பெல்லைத்தான் எப்போதும் முதலில் அமுக்குவார் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணன் இங்குவந்து ஆறுமாதங்களாயிற்று.இந்த அபார்ட்மெண்ட்டில் யார் என்னவேலை சொன்னாலும் சரி,கார் கழுவிவிடுவதாக இருந்தாலும், காய்கறி வாங்கிவருவதாக இருந்தாலும்,தட்டாமல் செய்துகொடுத்துவிட்டுத்தான் போவார்.பத்து வீடுகளிலும் சேர்த்து தரும் சம்பளம் போக, இந்த வேலைக்கெல்லாம் தனித்தனியே ஒவ்வொரு வீட்டிலும் பணம் கொடுத்து விடுவதால் அவருக்கும் வருமானம்.

காம்பவுண்ட் எல்லைக்குள் எந்தப் பொருள் கிடந்தாலும்,அது குழந்தை போட்டதாயிருந்தாலும்,பெரியவர்கள் தொலைத்ததாக இருந்தாலும் வீடுதேடி வந்துவிடும்.அதேபோல் குடியிருப்பவர்களிடம்,குறிப்பாக பெண்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்.பத்துவீட்டிலும் ஒன்றும்,இரண்டுமாக உள்ள பத்துக்கும் மேற்பட்ட சிறுகுழந்தைகளும்,மாலையில் அவர் வேலைக்கென்று வந்துவிட்டால்,அவருடன் சென்று கொஞ்சநேரம் விளையாடி விட்டுத்தான் வரும்.அந்த வகையில் ராமகிருஷ்ணனை மிகவும் பாராட்டியே ஆகவேண்டும்.

இதற்கு முன்பு இருந்த ஒருவாட்ச்மேனிடம்,இந்தக்குடியிருப்புவாசிகள் பட்டபாடு பெரும்பாடு.பத்துமணிக்குமேல் வீட்டுக்கு யாராவது வந்தால்.மெயின்கேட்டை அவரின் தூக்கம் கலைந்து எழுந்துவந்து திறப்பதற்குள் வந்தவர்களுக்கு போதும்போதும் என்றாகிவிடும்.காரின் ஹாரன்கூட அவரை அசைக்கமுடியாது. அப்படியொரு கும்பகர்ணத்தூக்கம்.வாட்ச்மேன் வேலை என்பதற்கு சிறிதும் பொருத்தமில்லாத குணம்.மேலும் அவ்வப்போது சிறிதும் பெரிதுமாகப் பொருட்களும் திருடுபோனது.இதனால் சிலநாட்களிலேயே அவர் நிறுத்தப்பட்ட பின்னர்,ஒரு ஏஜென்சி மூலம் இங்கு வந்தார் ராமகிருஷ்ணன்.

எப்படியோ..ராமகிருஷ்ணன் இந்த அபார்ட்மெண்ட்டில்,சபேசனின் மனைவி காமாட்சியைத்தவிர,அனைவரிடமும் நல்ல பெயரையே எடுத்திருந்தார். காமாட்சிக்கு,ராமகிருஷ்ணனைப் பார்க்கும்போதெல்லாம்,சோடாபுட்டி கண்ணாடி வழியாக அவரது பார்வை பயமுறுத்துவது போல இருக்கிறது என்றும்,அவர் சேரிக்கு அருகாமையிலிருந்து வருவதால் ஒருவித அசூயை ஏற்படுவதாகவும், அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு திருட்டு,பெரட்டு அதிகம் என்று கேள்விப்பட்டிருப்பதாகவும் சபேசனிடம் காமாட்சி சொல்வதுண்டு.

சே..சே..ஒரு மனுசனிடம் வெறுப்பு காட்டுவதற்கு உனக்கு வேறு காரணம் எதுவும் சிக்கவில்லையா..?, என்று சபேசன் அவ்வப்போது கடிந்து கொண்டாலும்,காமாட்சி தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

மனிதர்களிடம் உள்ள நல்லவிஷயங்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.அதைவிடுத்து குற்றம் சொல்வது தவறு என்பது சபேசனின் கொள்கை.

இதற்கு முன்,குழந்தைகளின் கம்மல் தோடு,பைக்கின் சாவி,மணிபர்ஸ் என்று பலபொருட்களை அவரவர் வீடுதேடி வந்து கொடுத்துவிட்டுப் போவதை யெல்லாம் சொன்னபின்னும்,காமாட்சிக்கு ஏனோ ராமகிருஷ்ணனைப் பிடிக்கவில்லை.அவரிடம் ஏதாவது வேலை சொல்வதாயிருந்தாலும் குரலில் வெறுப்பு தொனிக்கத்தான் சொல்வாள்.அந்த வேலைக்காகப் பணம் கொடுப்பதாயிருந்தாலும் “அவர் வந்ததும் வாங்கிக்கோ..” என்று விட்டேத்தியாக வேண்டுமென்றே சொல்வதும்,சிலநேரம் அதை மறந்துவிடுவதும் காமாட்சிக்கு வாடிக்கைதான்.ஆனால் அதற்காக,ராமகிருஷ்ணன் இதுவரை சலித்துக் கொண்டதாகவோ,சபேசனிடம் சொல்லிப் பணம் கேட்டதாவோ, காமாட்சிக்கும் நினைவில்லை.ஆனாலும்,ராமகிருஷ்ணனின் மீதான வெறுப்பு மட்டும் தணியவில்லை.
சிலநேரம், ‘இதற்காக தன்னை வேறுவழியில் பழிவாங்கிவிடுவாரோ..?’ என்று கூட காமாட்சிக்கு அபத்தமாகத் தோன்றும்.ஆனால் இன்னொருபுறம் ‘தூ..அம்பது வயசுக்கு மேல இருக்கற கிழம்.சோடாபுட்டி கண்ணாடி கீழே விழுந்தா கண்ணுதெரியாத கபோதி..அசைஞ்சு,அசைஞ்சு கப்பல் மாலுமிமாதிரி நடக்கிற இந்த ஆளா நம்மை பழிவாங்கும்..? சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாம் பழிவாங்கிவிடமாட்டோமா..?’ தனக்குத்தானே தைரியமாக ஆறுதலும் சொல்லிக் கொள்வாள்.

அன்றைக்கும் வழக்கம்போல ஐந்துமணிக்கு பணிக்கு வந்துவிட்ட ராமகிருஷ்ணன், அபார்ட்மெண்ட்டிற்கு முன்னுள்ள புற்கள் படர்ந்த மைதானத்தில் பந்து விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்த்தபடி அவ்வப்போது தனக்கு அருகில் வந்துவிழுந்த பந்தை எடுத்து குழந்தைகளுக்கு வீசியபடியும் தனது ஸ்டூலில் உட்கார்ந்திருந்தார்.

வெளிச்சம் குறைந்து,லேசாக இருள் கவியத் தொடங்கியது.

குழந்தைகள் அனைவரும் படிக்கவேண்டும் என்றும்,அம்மா திட்டுவார்கள் என்றும் தாங்களே விளையாட்டை முடித்துக்கொண்டு,வீடு திரும்பினர்.

மெயின் கேட்டின் லைட்டுகளைப் போட்டுவிட்டு,மாடியிலிருக்கும் ஃபோகஸ் லைட்டையும் போடுவதற்காக திரும்பி,அபார்ட்மெண்டை நோக்கிச் செல்லும் போதுதான்,மினுமினுப்பாக தரையில் ஏதோ மின்னியது.அருகில் சென்று குனிந்து எடுத்தபோதுதான் தெரிந்தது.சிறிய டாலருடன் கூடிய தங்கச்சங்கிலி.எப்படியும் ஒன்றரைப் பவுன் தேறும்.இந்தச் செயின் எந்தக்குழந்தையினுடையது.யாருடைய கழுத்திலாவது பார்த்திருக்கிறோமா..?. ராமகிருஷ்ணனுக்கு நினைவுக்கு வரவில்லை.சில விநாடிகள் முயன்றும் அவரால் அனுமானிக்க முடியவில்லை.

மேலம் சிலவிநாடிகள் கழிந்தது.யாரேனும் தன்னைக் கவனிக்கிறார்களா..தேடி வருகிறார்களா..? என்று சுற்றும்,முற்றும் பார்த்தார்.சபேசன் வீட்டுச் சன்னலில், காமாட்சியின் உருவம்,நிழலாடியது போல இருந்தது.அதற்குப்பின் சந்தடி எதுவும் இல்லை.கையிலிருந்த செயினை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு,அபார்ட்மெண்டுக்குள் சென்றார்.

சிறிது நேரம் கழித்து ஃபோகஸ் லைட் எரிந்தது.

சரியாக ஒருமணிநேரம் கழிந்திருக்கும்.திடீரென்று மூன்றாவது ப்ளோரில் குடியிருக்கும் ரமேஷ் அவனது மனைவி ஹேமா,அவர்களது குழந்தையான ஆறு வயது ப்ரியாவை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு,கீழே வந்தனர்.
இவர்கள் வந்த வேகம் பார்த்து பின்னாலேயே இன்னும் சிலர், என்ன,என்ன என்று கேட்டபடியே துரத்திக் கொண்டுவந்தனர்.
பந்து விளையாடிக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்தபின்,இங்கேதாம்ப்பா நின்னு விளையாடிட்டு இருந்தேன்.என்று ப்ரியா காட்டிக் கொண்டிருந்தாள். பின்னாலேயே வந்த குடியிருப்புவாசிகளிடம் ஹேமா விளக்கிக் கொண்டிருந்தாள். ப்ரியாவின் கழுத்திலிருந்து ஒன்றரை பவுன் செயின் தவறிக் கீழே விழுந்து விட்டதாகவும்,இங்கே கிடக்கிறதா..? என்று தேடிவந்ததாகவும்
சொல்ல,அனைவரும் அவரவர் நின்றிருந்த இடத்தில் தேடிப்பார்த்தனர்.

ராமகிருஷ்ணன் நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டு,என்ன செய்வதென்று தெரியாமல் சிலைபோல நின்றிருந்தார்.

“என்ன ராமகிருஷ்ணன்.இங்கே செயின் எதுவும் கிடக்குதான்னு கொஞ்சம் பாருங்களேன்..” செகண்ட் ப்ளோர் முரளி குரல் கொடுக்க,திடுக்கிட்ட ராமகிருஷ்ணனுக்கு, “பாவம் அவரை ஏங்க தேடச்சொல்லி கஷ்டப் படுத்தறீங்க..வெளிச்சம் இருக்கும்போது அவருடைய கண்ணில் பட்டிருந்தால் இன்னேரம் பொருள் வீடு வந்து சேர்ந்திருக்குமே..” மீண்டும் வந்த சபேசனின் குரல் மிகவும் ஆறுதலளிப்பதாய் இருந்தாலும்,ராமகிருஷ்ணனுக்கு அடிவயிற்றில் பிசைந்தது.நெஞ்சு திக்திக் கென்று அடித்துக்கொள்வது தெளிவாகக் கேட்டது.

அபார்ட்மெண்ட்வாசிகள் தம்மீது வைத்திருந்த மதிப்பை,நம்பிக்கையை நினைத்து வேறுஒரு சமயமாய் இருந்தால் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். ஆனால் இப்போது…அவருக்கு பயமாக இருந்தது.‘நடந்த தவறைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாமா.?.என்ன முடிவெடுப்பது.?.’
எப்படி முடிவெடுத்தாலும் அதன் பாதிப்புகளை நினைத்தால்..அதற்குமேல் அவரால் சிந்திக்கவே முடியவில்லை.
அப்போதுதான் அவருக்கு இன்னொரு அதிர்ச்சியும் தொடர்ந்தது.காமாட்சி மெதுவாக,அனைவரும் நகையைத் தேடிக்கொண்டிருக்கும் இடத்திற்கு வந்துகொண்டிருந்தாள்.சுமார் நூறுஅடி தூரத்தில் அவள் வந்து கொண்டிருந்தாலும்,தன்னையே பார்த்தபடி அவள் வருவதாக ராமகிருஷ்ணனுக்கு தோன்றியது.
அருகாமையில் அவள் வருவதற்குள்ளாகவே,சரி விடுங்க..இப்ப தேடுறதுக்கு போதுமான வெளிச்சம் பத்தாது.இவ இங்N;க தொலைச்சாளா..ஸ்கூல்லேயே தொலைச்சிட்டாளா இல்லே வீட்டுக்குள்ளே எங்கியாவது கிடக்குதோ.. தெரியலை.அங்கியும் போய் தேடிப்பாக்குறோம் என்றபடி ரமேஷ் சொல்ல,அனைவரும் நிமிர்ந்தனர்.
“சரிதான்,போய் தேடிப்பாருங்க..இங்கே எங்கியாவது பார்த்தா,எடுத்துக் குடுத்துரலாம்.அதுவுமில்லாம ராமகிருஷ்ணன் இருக்கும்போது உனக்கென்னப்பா கவலை..?,
“அப்படியும் கிடைக்கலேன்னா,முப்பத்தியஞ்சாயிரம் ரூபாயை திருப்பதி உண்டியல்ல போட்டதா நினைச்சுக்கோ..” என்று யாரோ சொல்ல,சூழ்நிலையின் இறுக்கத்தை மறந்து நிறையக்குரல்கள் சிரித்தாலும்,ஹேமாதான் பாவம், சிரிக்கிறாளா, அழுகிறாளா என்றே தெரியவில்லை. அனைவரும்,வீடுகளுக்கு செல்ல திரும்பினர்.அந்தக் கூட்டத்தில் காமாட்சி மட்டும் ராமகிருஷ்ணனை மீண்டும்,மீண்டும் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்வது தெரிந்தது.

அவள் ஏதாவது சபேசனிடம் சொல்லி..அதற்குப்பின் என்னவெல்லாம் நடக்கும்..? போலீஸ் நடவடிக்கை வரை போகுமா..? போலீஸ் வந்து விசாரித்தால் என்ன சொல்வது எப்படி சொல்வது..தீராத குழப்பம் ராமகிருஷ்ணனைப் பிடித்து ஆட்டியது.திடீரென்று உடலில் உள்ள சக்தியை எல்லாம்,யாரோ உருவிக்கொண்டதைப்போல உடல் தளர்ந்துபோய்,தனக்கான ஸ்டூலில் தொப்பென்று உட்காந்தார் ராமகிருஷ்ணன்.லேசாக நெஞ்சு வலிப்பதுபோல இருந்தது.
அன்று இரவு,விடிந்தபின்னும்,ராமகிருஷ்ணன் லைட்டுகளை அணைக்கவில்லை.தான் எப்போதும் தூங்கும் இடத்தில் அசையாமல் கிடப்பதைக் கண்டு,சந்தேகமுற்ற அபார்ட்மெண்ட்வாசி ஒருவர்தான் முதலில் கத்தினார். “ராமகிருஷ்ணன் செத்துப்போயிட்டாரு.”

அதற்குப் பிறகு போலீசும்,டாக்டரும் சம்பவஇடத்திற்கே வந்து பார்த்து,அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததை உறுதிப்படுத்திவிட்டு சென்றனர். பின்னர் அவர் வீட்டுக்கு தகவல் சொல்லப்பட்டு வந்த அவருடைய மனைவியும்,இன்னும் திருமணம் முடிக்காமல் இருந்த பெண்பிள்ளையும் கதறி அழுததைக்கண்ட அபார்ட்மெண்டவாசிகள் அனைவருக்கும் கண்கள் கலங்கியது.

“ஏங்க முடிஞ்சவரைக்கும் இவங்க குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்யலாங்க..” காமாட்சியும் அழுதுகொண்டே சொன்னபோது,என்னதான் கரித்துக்கொட்டினாலும்,இவ்வளவு இரக்ககுணம் அவளுக்கு இருப்பது,சபேசனுக்கு இப்போதுதான் தெரிந்தது.

வழக்கம்போல தன்வீட்டுக் காலிங்பெல்லை முதலில் அழுத்திய ராமகிருஷ்ணன் காட்டிய நகை தன் பிள்ளையுடையதுதான் என்று கூறி ஒரு சபலத்தில் வாங்கியதும். அபார்ட்மெண்ட்வாசிகளிடம் அதைச் சொல்ல வாய்ப்பிருந்தும், சொல்லாமல் தனது கௌரவத்தைக் காப்பாற்றிய ராமகிருஷ்ணன்,தன்னுடனே அந்த ரகசியத்தைப் புதைத்துக்கொண்டதும்,காமாட்சிக்கு மட்டும்தானே தெரியும்.!

02 ஜனவரி 2012

அவன்,அவள்,அது..!

தனது தூக்கத்தை கலைக்கமாட்டானா..என்ற ஏக்கத்தில் அவள்.அவளது தூக்கம் கலைந்துவிடுமே.., என்று அவன்..,நாட்கள் ஓடுகின்றன.

ஓரே வீட்டிலிருந்தாலும்,ஒவ்வொரு இரவும்,அவர்கள் நிலை இப்படியே தொடர்ந்தது.

ஒரு ஆவேசத்தில் தொடுத்த வழக்கிற்காக. கோர்ட்டிலிருந்து விவாகரத்து என்று தீர்ப்பு வரும்வரை..!.


அவ்வளவுதான் கதை..,இதைப்படிக்கும் உங்களுக்கு நேரமிருந்தால்.கடைசி வரியின் தொடர்ச்சியாக,மீண்டும் முதல் வரியிலிருந்து படித்துப்பாருங்கள்.