08 அக்டோபர் 2023

நிலாசூரியன் பார்வையில் பாட்டையா

 பாட்டையா சிறுகதை தொகுப்பு பற்றிய கவிஞர் நிலாசூரியன் -தச்சூர்   அவர்களின் 

கருத்து.

--------------------------------


முதலில், முனைவர் ஐயா அகன் அவர்களுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இது விமர்சனமல்ல, ஒரு வாசகனாக எனது கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். 


அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்களின் எழுத்துக்களை வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் நான், ஏனெனில், ஒப்பனை வார்த்தைகளால் கதையை அலங்கரிக்காமல், சாதாரண வார்த்தைகள் மூலம் யதார்த்தங்களை விளக்குவதில் அவருக்கு நிகர் அவரே...


ஒரு வாசகனை சிரமபடுத்துவதையோ, ஒரு வாசகன் அதிகப்படியான நேரத்தை தனக்காக செலவிடுவதையோ அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. அதுபோலவே தனது கதையை வாசிக்கும் யாரும் உறங்கிவிடக்கூடாது மாறாக உள்ளுணர்வில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்குமென்று நம்புகிறேன். அதற்கு இந்த பாட்டையா சிறுகதை தொகுப்பேச் சான்று. 


நூறு இருநூறு என்று பக்கங்கள் நீளாமல் ஆறு சிறுகதைகளை எழுபத்தைந்து பக்கங்களில் கச்சிதமாய் நிரப்பி வைத்து இருக்கிறார்கள். அதனால் உற்சாகம் குறையாமல் வாசிக்க முடிந்தது.


மனிதன் முதன்முதலில் கண்டுபிடித்த இசைக்கருவி பறை, அந்த பறையிலிருந்து இசைக்கப்படும் ஒத்த அடி, ரெட்ட அடி, மூன்றாம் அடி என்று மொத்த அடிகளைப் பற்றியும், அதற்கான நடனங்களைப் பற்றியும் எனக்கு தெரியாத நிறைய செய்திகளை பாட்டையா சிறுகதையில் அறியமுடிந்தது,  பறையிசை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் இசைக்கும் இசையாகவோ, குறிப்பிட்ட சடங்கிற்கு மட்டுமே இசைக்கும் இசையாகவோ இல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனைவராலும் முழங்கப்பட வேண்டிய இசையாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆவல். 


ஆடி ஆடி உடம்பெல்லாம் உரமேறி வைரம் பாய்ந்த கட்டையான பாட்டையாவை வீழ்த்துவதற்கு மூன்று மாதங்களாக ஊர் ஊராய் திறிந்து, பறையிசை முழங்கிய பல திறமைசாலிகளிடம் நிறைய நூணுக்கங்களை கற்று அந்த நுணுக்கங்களை எல்லாம் தனது பறையிசையில் புகுத்தி பாட்டையாவை வீழ்த்த முயற்சித்த முத்துவீரனின் எண்ணம் குறுகியதென்றாலும் அவனது முயற்சி மிகவும் போற்றதக்கது.  உண்மையிலேயே பறையிசையில் காலத்திற்கு தகுந்தாற்போல் பல நுணுக்கங்களை புகுத்தி அந்த இசையை மேலும் செம்மையடையச் செய்ய பறையிசை அறிந்த மேதாவிகள் முன்வர வேண்டியது அவசியமாகும்.


சஹாபி..


மணமகன் பெண்ணுக்கு வழங்க வேண்டிய மஹர் தொகையாக ஐம்பதாயிரம் தருகிறேன் என்று பாத்திமா சொன்னதை ஏற்க மறுத்த ஆணாதிக்க கூட்டம், அவளை பொருட்படுத்தாமல் போன அன்றுமுதலாகத்தான்  அவள் மெளனமாகிப் போயிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 


ஆணாதிக்கம் என்பது ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு சாதிகளிலும் வேரோடி விரவி கிடக்கிறது, அந்த வேரை அறுக்கும் ஆயுதமாக இக்கதையில் அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்களின் எழுதுகோல் வினையாற்றி இருகிகிறது, பெண்ணை அடிமைபடுத்துவது ஆணாதிக்கம் என்றாலும் அதே ஆண் சமூகம்தான் பெண் விடுதலைக்காகவும் போராடுகிறது என்பதை இங்கு நான் நினைத்துப் பார்கிறேன். 


சஹாபி கதையின் நாயகி பாத்திமாவின் செயல்பாடுகள் நெஞ்சில் நெகிழ்வை தருகிறது, கதையின் முடிவில் தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு நான்தான் பெயர் வைப்பேன் நீங்க சும்மா குதிக்காதீங்க என்று தன் கணவன் முகமது அலியை அடக்கிவிட்டு, தன் குழந்தைக்கு தனது மாமியார் பெயரான பாத்திமா என்ற பெயரை சூட்டி ஒரு நொடி பொழுதில் நெஞ்சில் ஆழமாக பதிவாகிவிடுகிறாள் ரகமத்துன்னிச்சா. 


முற்போக்கு சிந்தனையும் சமூக அக்கறையும் கொண்ட அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்களின், இந்த பாட்டையா சிறுகதை தொகுப்பு சமூக அவலங்களை தோலுரிப்பதோடு சமூக அக்கறையும், மனிதகுல மேன்மையையும் வெளிபடுத்துவனாக இருக்கிறது. 


சஹாபி கதையின் முலம் பெண்ணடிமை தனத்தை அம்பலபடுத்திய ஆசிரியர், ஒப்பனைக்காரன் சிறுகதை மூலம் திருநங்கையாக மாறிவரும் ஒரு இளம்வயது சிறுவனை அவனது பெற்றோர்களே இழிவாகப் பேசி அடித்து விரட்டுவதும், அதனால் அவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதும் என்று இந்த சமூக இழிவை கதையின் மூலம் தோலுரித்து காட்டுகிறார். 


மகிழம்பூ சிறுகதை மூலம் நட்பின் உன்னதத்தை உயர்த்தி பிடிக்கும் ஆசிரியர் அவர்கள், நெருப்புக்கு திசையில்லை என்ற சிறுகதையில் மனங்கள் இனைந்துவிட்டால் மதங்கள் (மார்க்கங்கள்) தடையில்லை என்ற சமத்துவ கோட்பாட்டை முழங்கி, கலப்பு திருமணம் தேசகுற்றமோ சமூக குற்றமோ அல்ல என்பதை யதார்த்த எழுத்தின் மூலம் அழுத்தமாக நிறுவுகிறார்.


மேலும் வினைப்பயன் என்ற கதையின்மூலம் சாதியலின் கோரமுகத்தில் கரியள்ளிப்பூசி சமத்துவப் பறையை நன்றாக ஓங்கி அறைந்து இருக்கிறார் ஆசிரியர். 


இன்னும் இதுபோன்ற பல நூல்களை அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்கள் இந்த சமூகதீதிற்கு படைத்தளிக்க வேண்டும், அதற்கு அவரது உடல்நலம் நல்ல வலிமைபெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். 


முற்போக்கு சிந்தனையும் சமூக அக்கறையும் உள்ள அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் பாட்டையா. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக