29 ஆகஸ்ட் 2023

பாட்டையா நூல் அறிமுகம்- முகில்நிலா தமிழ்

 பாட்டையா சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்.. 


பொள்ளாச்சி அபி அவர்கள் எழுதிய மூன்றாவது நூல் இது.. "ஆதலினால் காதலித்தேன்" என்னும் நாவலையும், "எங்கேயும் எப்போதும்" என்னும் சிறுகதை தொகுப்பையும் அடுத்து இது மூன்றாவது சிறுகதை தொகுப்பு.. 


அயர்ச்சி தராத கதைத் தேர்வு, சொற்கள், சாமானியர்களை கதை நாயகர்களாக தேர்வு செய்த முறை என பாராட்டுக்களை முன்பே ஆசிரியரிடம் தெரிவித்து விடுகிறேன்.. 


இந்தத் தொகுப்பில் நான் வாசித்து உணர்ந்த வாசிப்பனுபவம் மட்டும் தான் இது.. மற்றபடி இது விமர்சனம் அல்ல.. என் உள்வாங்கும் திறனை மட்டும் கருத்தில் கொண்டு நான் எழுதும் வாசிப்பனுபவம் என்பதை வாசிப்போருக்கு முன்பே தெரிவித்து விடுகிறேன்.. 


இந்தத் தொகுப்பின் 

பாட்டையா தலைப்பில் உள்ள முதல் கதை... அவமானம் குறித்தும் அதிலிருந்து எப்படி மீள்வது என்றும், அவமானப் படுத்தியவரின் பிண்ணனி ,அனுபவம், அவர் பக்க நியாயம் என இரண்டு தரப்பையும் குறித்து எழுதியிருப்பது ஆசிரியரின் பக்குவ மனநிலை என்று நினைக்கிறேன்.. 


இளையராஜா ஒரு மேடையில் பார்த்திபனை அவமானப் படுத்துவார்... இளையராஜாவை பொறுத்தவரை அவர் இசையின் மேலான காதலில்.. அதன் நுட்பம் அறிந்தவர் என்ற விதத்தில், இன்னும் சொல்லப் போனால் தான் அவருக்குச் செய்வது அவமானம் என்ற எண்ணம் கூட இல்லாது செய்துவிடுவார்..


இங்கே பார்த்திபனின் இசை அனுபவம் குறித்த ஒரு கேள்வியும் இருக்கிறது.. என்றாலும் எனக்கென்னவோ இளையராஜா அவர்களின் செயலை ஏற்க முடியவில்லை. கலை மீதான காதலை விட சக மனிதனை காயப் படுத்தி விடக்கூடாதென்ற மனிதம் இருக்க வேண்டுமென கருதுகிறேன்.


அப்படி அவமானப் பட்டவன் அதை தன் வெற்றிக்கான மூலதனமாக இந்தக் கதையில் மாற்றிக் கொள்வது அவமானத்தை எதிர்கொள்ளும் யுக்தி இப்படி இருக்க வேண்டுமென்று ஆசிரியர் சொல்வதாகப் பட்டது.. 


"சஹாபி "

இது மதங்களின் மூலம் பெண் எப்படி அடிமைப் படுத்தப் படுகிறாள் என்பதையும், பெண்ணுக்கான கெளரவம் எதுவாக இருக்க முடியும் என்பதையும், திருமணத்தில் நடக்கும் சடங்குகள் சம்பிரதாயங்களை வரையறை செய்யும் ஆணாதிக்க மனோபாவம் பெண்களை எந்த அளவு மட்டம் தட்டுவதாக  இருக்கிறது என்பதையும் மிக அழுத்தமாக பேசுகிறது.. 


"ஒப்பனைக்காரன்" கதை இந்தத் தொகுப்பில் மிக முக்கியமான கதை, சமூகத்தின் மன வக்கிரங்களை, இயற்கைக்கு புறம்பான செயற்கை தனங்களை, பெற்றவர்கள் பிள்ளையின் மீது காட்டும் கொடூரமுகத்தை, மூன்றாம் பாலினத்தவரின் கண்ணீரை  சிறப்பாக எடுத்துப்பேசும் கதை, அதன் முடிவு தான் இந்தக்கதையின் ஹைலைட்... வாசிச்சு பாருங்க.


"மகிழம்பூ"  ஆண், பெண் நட்பு ஆண்டுகள் கடந்தும் நட்பாகவே நீடிக்கும் கதை.. இந்த காலகட்டத்தில் மிக அவசியமாய் அனைவருமே வாசிக்க வேண்டிய கதை, ஆண் பெண் நட்பில் சலனமின்றி கடக்கவும் அவரவர் ஒத்துழைப்போடு காலம் கடந்து நிலைப்பதும் நடைமுறை சாத்தியமென உண்மையில் நடந்ததை கதையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.


வினைப்பயன் கதை மிக முக்கியமான கதை, சமூகத்தின் சாதி வெறி இன்னும் எப்படி ஊறிக்கிடக்கிறது என்பதையும், விஞ்ஞான வளர்ச்சியில் எல்லாமும் சாத்தியமாகும் போது இந்த சாதியும் ஒருநாள் ஒன்றும் இல்லாது அழிந்து போகும் என்பதையும் மையக் கருத்தாய் வைத்து எழுதப்பட்ட கதை.. 


இந்த நூல் வாசிப்பனுபவம் என்பது ஆரம்பிக்கும் போது எப்படியோ முடிவுவரை அப்படியே எந்தத் தொய்வும் இன்றி வாசிக்க கூடியதாக இருக்கிறது.. எளிய மனிதர்களை எளிய சொற்களோடு  தேவையற்ற கற்பனைகளோ, வர்ணணைகளோ இன்றி நம் எண்ணவோட்டத்தில் காட்சிப் படுத்தும் விதமாக எழுதியிருக்கிறார் அதற்கு என் பாராட்டுக்கள்.. 


சிறுகதை எழுத பழகுவோருக்கு இவரது எழுத்துநடை கதை நகர்த்தும் யுக்தி கதைக்கு அவசியமான காதாப் பாத்திரங்கள் தேர்வு என கற்றுக் கொள்ள வசதியாய்  இருக்கும்.. வாங்கி வாசித்து கருத்துக்களை பகிருங்கள்.. 


அன்புடன் முகில் நிலா தமிழ் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக