29 ஆகஸ்ட் 2023

பாட்டையா நூல் அறிமுகம் அசரப் அலி


 அன்புத்தோழன் அசரப் அலி Asraf Ali யின் பார்வையில் "பாட்டையா'' சிறுகதை தொகுப்பு குறித்து...

+++++++++


இலக்கிய வட்டத்தில் பொள்ளாச்சி அபி என்று அறியப்படும் அன்பிற்குரிய தோழர் அக்பர் அவர்கள் தனது முதல் படைப்பான ஆதலினால் காதலித்தேன், எங்கேயும் எப்போதும் தொடர்ந்து மூன்றாவது படைப்பாக  #பாட்டையா என்ற 'சிறுகதை தொகுப்பை படைத்துள்ளார்.


புத்தகத்தின் பெயரை தாங்கி நிற்கும் #பாட்டையாசிறுகதை ஒடுக்கப்பட்ட மக்களின் இசைக்கருவியான பறை குறித்தும், விசேஷ நாட்களில் திருவிழாக்களில், இல்லங்களில் இசைக்கப்படுகிற கருவியும் அந்த இசைக்கு ஏற்ப தங்கள் நளினமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய நபர்களின் திறன் குறித்தும், பாட்டையா என்கிற ஒரு பாத்திரத்தின் மூலமாகவும், முத்து வீரன் என்ற பாத்திரத்தின் வழியாகவும் நம்முள் கடத்தி விடுகிறார்.

அதை படிக்கும்போது அந்த இசையோடு, அந்த ஆட்டத்தோடு நாமும் கலந்து விடுகிற நிலையை ஏற்படுத்துகிறது.


ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்கிற ஆணாதிக்க மனப்போக்குகள் குறித்தும், இஸ்லாத்தில் திருமணம் ஆகக்கூடிய பெண்களுக்கு மணமகன் சார்பில் கொடுக்கக்கூடிய மகற் குறித்தும் #சஹாபி என்ற சிறுகதை மூலம் விரிவாக பேசியிருக்கிறார்.


திருநங்கைகளாக,திருநம்பிகளாக நம் மத்தியில் வாழ்ந்து வரக்கூடிய மூன்றாம் பாலினத்தவர்களின் வலிகள், வேதனைகள், அவமானங்கள் குறித்து பேசக்கூடிய #ஒப்பனைக்காரன் சிறுகதை அப்படிப்பட்டவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக மாறக்கூடிய சமுதாயப் போக்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. 


ஆணும்-பெண்ணும் நண்பர்களாய் இருப்பதை, திருமணத்திற்கு பின்பு நண்பர்களாக நீடிப்பதை இச்சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆனால் , ஆணும் - பெண்ணும் 40 ஆண்டுகளாக நண்பர்களாக நீடிப்பதை  தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தினுாடே அக்பர் பதிவு செய்திருந்த #மகிழம்பூ.


இன்றைய சூழலில்,  பெண்கள் அதிக அளவில் படித்து வேலைக்கு செல்லக்கூடிய நிலையில் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்கள், வெவ்வேறு மதங்களை பின்பற்றுகிற குடும்பங்களில் திருமணங்கள ஏற்படுத்துகிற தாக்கங்கள், ஆனாலும் உண்மைநிலை என்ன என்பது குறித்து #நெருப்புக்குதிசையில்லை என்ற கதை மூலம் வெளிப்படுத்துகிறார்.


நவீன உலகில் ஏற்பட்டு வரக்கூடிய விஞ்ஞான மாற்றங்கள் அதனால் விளையும் நன்மைகள் குறித்து, 

குறிப்பாக இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளக்கூடிய குழந்தையின்மை பிரச்சனையை மையப்படுத்தி, அதோடு போகிற போக்கில் சாதிய பெருமிதம், சாதிய வெறி, சாதிய பாகுபாடு பேசுகிறவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்தார் போல் சொல்லப்படுகிறது #வினைப்பயன் என்கின்ற சிறுகதை, 


வேறு வேறு பரிமாணத்தில் ஒவ்வொரு சிறுகதைக்கான கதைக்களத்தை அமைத்து இத்தொகுப்பை தோழர் பொள்ளாச்சி அபி  தந்துள்ளார். 


தோழர் பொள்ளாச்சி அபிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக