29 ஆகஸ்ட் 2023

பாட்டையா நூல்அறிமுகம் -மீ.மணிகண்டன்

 அன்பு நண்பர்..

Mee Manikandan பார்வையில் பாட்டையா -!

மகிழ்ச்சி மிக்க நன்றியும் அன்பும் தோழரே.!

+++++

நீண்ட நாட்களுக்குப்பிறகு பொள்ளாச்சி அபி அவர்களின் எழுத்து வாசிக்கக் கிடைத்தது. தொகுப்பின் தலைப்பு பாட்டையா. தலைப்புக் கதையை முதலில் வாசிக்க ஆவல் எழுந்தது. வாசித்தபொழுது புரிந்தது வழக்கம்போல மானுட வாழ்க்கையின் ஒரு அங்கத்தை அதில் வரைந்திருக்கிறார் என்பது. ஆட்டம் தாளம் என்ற களத்தில், கோபம், பழிவாங்குதல், அறியாமை, அன்பு, காதல் என்ற உணர்ச்சிகளை அடுக்கி வைத்திருக்கிறார் அபி.


தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போன்ற திரைக்கதைகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் போட்டி என்று பார்த்திருக்கிறோம் ஆனால் பாட்டையாவில் ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் போட்டி. இருவரையும் அனுபவம் மற்றும் அவசரம் என்று வேறுபடுத்திப்பார்க்க முடிகிறது. 


பறை இசையையும் ஆட்டத்தையும் கதையின் முக்கியப்பங்காகக் கையாண்டிருக்கிறார் அபி. ஒண்ணாம் அடி, இரண்டானடி என்று துல்லியமாக இசையையும், இசைப்பதற்குத் தேவையான கருவிகளையும், கருவிகளின் அமைப்பு அவற்றின் தேவை, ஓசையெழுப்ப உதவும் உபகரணங்களாக சிம்புக்குச்சி, உருட்டுக்குச்சி என்று மிக நுணுக்கமாகவும், அவை எந்த விதமான மரத்தில் அமைந்திருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு நுட்பமாகவும் கையாண்டிருக்கிறார். 


முத்துவீரனின் அனுபவம் குறைந்த தொடக்கமும், பின்னர் பல இடங்களுக்கு சென்று இசையைக் கற்றுவருவதும், தீவிர முயற்சியும் தொடர் பயிற்சியும், நிறைவாகப் பாராட்டத்தக்க நிகழ்வும், கற்றல் மற்றும் பயிற்சியினால் விளையும் பயன் என்ன என்பதனைக் கோடிட்டுக்காட்டுகிறது.


ஆட்டத்தையும் இசையையும் ஒளிப்படமாகப் பதிவு செய்வது எளிது ஆனால் அவற்றை எழுத்தில் வடிப்பது ஒரு சவால்.  அபி அந்தச் சவாலில் வென்றிருக்கிறார்.


பாட்டையாவின் நடனத் தொடக்கத்தை கோவில் தேர் கிளம்புவதையும் ஆட்டத்தின் நிறைவை தேர் நிலைக்கு வருவதாகவும் தொடர்நிலையாக உவமைப்படுத்தியிருப்பது அழகு.


செல்வி மற்றும் முத்துவீரனின் உரையாடலில்  காதலும் இருக்கிறது வீரமும் இருக்கிறது. ஆங்காங்கே கதை கொங்கு வழக்குச்சொற்களில் மணக்கிறது, உதாரணம் 'இட்டேரியில் ஆடுகள் மேய்ப்பது'.


வாழ்த்துகள் அபி சார், அடுத்தொரு கதையை வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக