29 ஆகஸ்ட் 2023

பாட்டையா நூல் அறிமுகம்-முனைவர்.வா.நேரு

 மதிப்பிற்குரிய தோழர் முனைவர் வா.நேரு அவர்களுக்கு எனது நன்றியும்,அன்பும்..!

+++±+++

MONDAY, 28 AUGUST 2023

அண்மையில் படித்த புத்தகம் : பாட்டையா (சிறுகதைத் தொகுப்பு)...பொள்ளாச்சி அபி

 


அண்மையில் படித்த புத்தகம் : பாட்டையா (சிறுகதைத் தொகுப்பு)


நூல் ஆசிரியர்               : பொள்ளாச்சி அபி


வெளியீடு                   : ஒரு துளிக்கவிதை,புதுச்சேரி,7810098433


முதற்பதிப்பு                 : 2023, பக்கங்கள் : 76,விலை ரூ 125


தோழர் பொள்ளாச்சி அபி அவர்களின் அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு பாட்டையா. ஆறு சிறுகதைகள் மட்டுமே உள்ள தொகுப்பு.ஒரே மூச்சில் படித்து முடிக்க முடிந்த தொகுப்பு.


கதைத் தலைப்பாக இருக்கும் பாட்டையா, இறப்பு வீட்டில் பறை அடிப்பவருக்கும்,அந்தப் பறை இசைக்கு ஏற்ப நடனமாடும் பாட்டையாவுக்கும் ஏற்படும் போட்டியைப் பற்றி விவரிக்கும் கதை.தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகை பத்மினி நாட்டியம் ஆட,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்து பார்த்து நாம்  ரசித்து இருப்போம். திரைப்படத்தில் பார்க்கும் காட்சியைப் போலவே சொற்களால் காட்சியைக் கட்டி நமது கண் முன்னே பார்க்கவிடுகிறார் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி. பறை இசை இசைக்கும் முத்துவீரனுக்கு ஏற்படும் அவமானம்,அந்த அவமானத்தினால் அவர் மிகத் தெளிவாக பறை இசையைக் கற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சிகள்,அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் என மிக விரிவாக இந்தக் கதை விவரிப்பதும்,முடிவில் தன்னுடைய அத்தனை இசைக்கும் ஏற்ப நடனமாடும் பாட்டையாவை,அவரது பெருந்தன்மையை வியந்து பாராட்டுபவராக முத்துவீரன் மாறுவதாகவும் முடித்திருப்பது மிகச்சிறப்பு.வெகு நுட்பமான விவரிப்புகள் அடங்கிய கதை இது. இந்தத் தொகுப்பிற்கே மிகப்பெரும் மெருகூட்டும் கதை இந்தப் ‘பாட்டையா ‘ என்னும் சிறுகதை.

இஸ்லாமிய குடும்பங்களில் திருமணத்தின்போது கொடுக்கப்படும் ‘மஹர்’ என்னும் தொகையைக் கருவாகக் கொண்ட ‘சஹாபி ‘ என்னும் சிறுகதை எனக்கு முற்றிலும் வேறுபட்ட வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது. இந்தச்சிறுகதையில் இருக்கும் பல சொற்கள் இஸ்லாமியக் குடும்பங்களில் புழங்கும் சொற்கள், எந்தவிதமான அருஞ்சொற்பொருள் விளக்கமும் இல்லாமல் கதை ஓட்டத்தின் மூலமாக அந்தச்சொற்களின் பொருளை நாம் புரிந்து கொள்வதுபோல அமைத்திருப்பது இந்தக் கதையின் பலம்.’பாத்திமா’’ன்னுதான் பெயர் வைக்கவேண்டுமென்று ,மருமகள் கூறுவதாக இந்தக் கதை முடிவது வாசிப்பவருக்கு ஒரு நிம்மதியைத் தருகின்ற முடிவு.


அதைப்போலவே ‘நெருப்புக்கு திசையில்லை ‘ என்னும் கதை ,நுட்பமாக அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் சொத்துப் பிரச்சனையை அடிப்படையாக வைத்துப் பேசுகிறது. இந்தக் கதையில் ஒரு இஸ்லாமியப்பெண், அசோக் என்பவரை ,வீட்டினரை எதிர்த்து திருமணம் செய்து வாழ்வதாகவும்,அதே போல மகிழும்பூ கதையில் அக்பர் என்பவர் பிரேமா என்பவரைத் திருமணம் செய்து வாழ்வதாகவும் அமைத்து. இரண்டு கதைகளிலும் பெருந்தன்மையையும் விட்டுக்கொடுத்தலும் மணவாழ்க்கையை எவ்வளவு செம்மைப்படுத்தும் என்பதைச்சொல்வதாக இருக்கிறது.


வினைப்பயன் என்னும் கதை இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான கதை.சந்திரயான் 3 நிலாவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் செய்தியை வெளியிட்டிருக்கும் செய்தித்தாளிலேயே திருப்பூரில் பட்டியலினப்பெண் சமைக்கிறார் என்று சொல்லி தங்கள் குழந்தைகளை திருப்பி அழைத்துச்சென்ற பெற்றோர்களைப் பற்றியும் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த ‘வினைப்பயன் ‘ கதை அறிவியலுக்கும் ,நடைமுறைக்கும் உள்ள முரணை மிக நன்றாகக் காட்டியிருக்கிறது. நவீன மருத்துவவசதிகள் எப்படிக் குழந்தை பெறுவதற்கு உதவுகிறது என்பதையும் அதில் சாதி எப்படி அழிகிறது என்பதையும் இயல்பான மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார் அபி.


இந்தக் கதைத் தொகுப்பில் எனக்கு கொஞ்சம் நெருடலைக் கொடுத்த கதை ஒப்பனைக்காரன்.மூன்றாம் பாலினத்தைச்சார்ந்தவராக மாறும் ராதாகிருஷ்ணன் என்பவரைப் பற்றிய கதை. குடும்பமே எப்படி மாறுகிறது,அதிலும் அம்மாவின் பாத்திரம் எவ்வளவு கொடூரமாக மாறுகிறது என்பதை வாசிப்பவர்கள் மனம் பதறும் அளவிற்குக் கதையைப் படைத்திருக்கிறார். ராதாகிருஷ்ணன் கடவுள் போல வேடமிட்டு தற்கொலை செய்வதாகவும்,அதன் மூலம் எல்லோராலும்  வெறுக்கப்பட்ட  அவர்,எல்லோரும் வணங்கக்தக்கவராக மாறுவதாகவும் கதையை முடித்திருக்கிறார்.மூன்றாம் பாலினத்தவரிடம் நாம் நிறையப் பேசவேண்டும். அவர்களுக்கு உளவியல்ரீதியாக நிறைய ஆலோசனைகளைக் கொடுக்கவேண்டும்.ஆண் பெண்போல உடை உடுத்துவதோ அல்லது பெண் ஆண்போல உடை உடுத்துவதோ அவரவர் விருப்பம்.மூன்றாம் பாலினத்தவர் உடைகள் மூலம் தங்களை ஆணாகவோ பெண்ணாகவோ மாற்றிக்கொள்வது அவரவர் விருப்பம். இன்றைய  நவீன உலகத்தில் மாற்றியே ஆகவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை என்பதையும் நாம் சொல்லவேண்டும். தற்கொலை எந்த நிலையிலும் தீர்வல்ல என்பதை ஒரு கதை சொல்லவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.ஆனால் இந்தக் கதை படித்து முடித்த பின்பும் நிறைய  நேரம் இதைப் பற்றி யோசிக்க வைத்தது.


“உரைநடையின் அற்புதமான வடிவங்களில் ஒன்று சிறுகதை.இதில் நாம் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசமுடிகிறது.கதையின் மையக்கருத்துகள்,வாசிப்பவரின் ஏற்புக்கும் மறுப்புக்கும் உரியது என்றாலும் கதாசிரியனின் சுதந்திரமான கண்ணோட்டத்திற்கு சிறுகதை எவ்வளவு பெரிய இடமானாலும் தருகிறது.அதனையொட்டியே எனது கருத்துகளுக்கு வடிவம் தந்திருக்கிறேன் ‘ என்று என்னுரையில் தோழர் பொள்ளாச்சி அபி குறிப்பிட்டிருக்கிறார். உண்மை.அவரது கருத்துகளை சிறுகதைகளாக ஆக்குவதில் பொள்ளாச்சி அபி வெற்றி பெற்றிருக்கிறார்.


நண்பர்களை நாம் எந்த வயதிலும் சம்பாதிக்கலாம். அப்படி தோழர் பொள்ளாச்சி அபிக்கும் எனக்கும் நாற்பது வயதுக்குப்பிறகு நண்பராக கிடைத்தவர் தோழர் அகன் என்ற அமிர்தகணேசன் அவர்கள். “ நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் தோழர் அகன்(எ) அமிர்தகணேசன் அவர்களின் ஓயாத அன்பின் விளைவாக முகிழ்த்தவை” என்று என்னுரையில் தோழர் பொள்ளாச்சி அபி குறிப்பிட்டிருக்கிறார். வாழ்த்துகள் தோழர்களே இருவருக்கும். நட்பு எப்போதும் வெற்றி பெற வைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த ‘பாட்டையா ‘நூலின்  ஆசிரியர் பொள்ளாச்சி அபி அவர்களும்,பதிப்பாளர் தோழர் அகன் அவர்களும்.

இந்த நூலை வாங்கி வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கும் பிடிக்கும். ‘பாட்டையா’ சிறுகதையைப் பள்ளிகளில்,கல்லூரிகளில் பாடமாக வைக்கலாம்.அவ்வளவு ஈர்ப்பாக இருக்கிறது.இதனை ஆங்கிலத்திலோ அல்லது நமக்குத் தெரிந்த வேறு மொழிகளிலோ மொழி பெயர்த்துக்கொடுத்தும் கூட தோழர் பொள்ளாச்சி அபி அவர்களைப் பாராட்டலாம்.


முனைவர்.வா.நேரு,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக