02 ஏப்ரல் 2012

எனது முகமூடிகள்.!

அதிகாலைப் பனித்துளியில்
தாகம் தீர்த்துக்கொள்ள-தன்
கோடிக் கைகளை நீட்டிக்
கொண்டிருந்தான் கதிரவன்.

புள்ளினங்கள் மெதுவே
மெதுவே சோம்பல்முறித்தபடி
தம் இறக்கைகளை விரித்தபடி
சிக்கெடுத்துக் கொண்டிருந்தன.

அவற்றின் அமைதியைக்
கெடுக்க மனமில்லாமல்
ஆடாமல் பார்த்துக் கொண்டன
தம் கிளைகளை,மரங்கள்.

உடல்இளைப்பதற்காக
சர்க்கரையைக் குறைப்பதற்காக
நடப்பதும்,சிலர் ஓடுவதுமாக
பூங்காவில் நிறைந்தது சந்தடி.

செய்தித்தாள்கள்,இன்று
எங்கும்குண்டு வெடிக்கவில்லை
என்றபடி தரைக்கும்,மாடிக்குமாக
பறந்து கொண்டிருந்தன.

எல்லாம் இயல்பான வகையில்
இன்னொரு நாளும் விடிகிறது.
வழக்கம்போல் எனது
முகமூடிகளைக் காட்டி
ஏமாற்றவும்,ஏமாறவும்
நானும் கிளம்பிவிட்டேன்

என்னிடம்
சிரிப்பு,கோபம்,ஆற்றாமை
அங்கலாய்ப்பு,வருத்தம்
பாசம்,வலி,கேலி,என
பலவித முகமூடிகள் உண்டு..,
என்ன ஒரு சிரமம்
நினைத்தால் உடனே
அதைக் கழட்டமுடியாது.
அது எப்போதும்
என் முகத்தோடுதான்
ஒட்டிக்கொண்டிருக்கிறது.

பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்
அதுதான் என் முகமென்று..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக